‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ எனும் சு.ரா.வின் இரண்டாவது நாவல் அவரது எழுத்து வாழ்வில் மிகவும் ஹிட்டான ஒரு படைப்பு. சு.ரா. எனும் இலக்கிய விக்கிரகத்தை சிற்றிலக்கியக் கோவிலில் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் குடமுழுக்கு நடத்துமளவுக்கு மிகவும் பேசப்பட்ட படைப்பு இந்த நாவல். கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுப்பதே ஒரு இலக்கியவாதியின் முதலும் முக்கியமுமான தகுதி என்பதைச் சிறுபத்திரிக்கையுலகில் அழுத்தமாக நிலைநாட்டிய நாவலும் கூட. தான் ஒரு மாபெரும் உலக எழுத்தாளர் என்பதையும், மானுடப் பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொறுப்பினை காலம் தன்மீதுதான் சுமத்தியிருக்கிறது என்ற மாயையும் சு.ரா.வுக்கே கூட இந்த நாவல் கற்பித்திருக்கக்கூடும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கெதிரான உலக மக்கள் மனநிலையில் இந்த நாவலை வாசிக்கும் போது மிகச் சாதாரணத் தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் சிற்றிலக்கியவாதிகளின் இதயத்தைக் கவ்விக் கவர்ந்திழுத்தது என்கிறார்கள்.

Sundara Ramasamyஇந்த நாவலை ஒரு வாக்கியத்தில் சுருக்குவதென்றால் போலி கம்யூனிஸ்டுகளை, அதிலும் குறிப்பாக போலி கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியவாதிகளை வெறுக்கும் ஒரு போலியான இலக்கியவாதியின் போலியான ஆன்மீகப் பிரச்சினைகளை, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட வார்த்தைகளின் உதவி கொண்டு பேசக்கூடிய ஒரு போலியான நாவல் என்று சொல்லலாம். ஒரு நாவலுக்குள் இத்தனைப் போலிகள் இருப்பதால் அதை இலேசாக எடுத்துக் கொண்டுவிடலாம் என்பதல்ல. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது போலிகள் அசலைப்போலத் தோற்றம் கொண்டு விடுகின்றன. உண்மைகள் சமாதியாக்கப்பட்ட மயானத்தில் பொய்கள் மட்டும் ஆனந்தக்கூத்தாடுவதால், நிழல் நிஜமாகிவிடுகிறது.

நாவலின் நாயகன் ஜே.ஜே., சு.ரா.வின் இலட்சிய நாயகன். சு.ரா. என்ற உன்னதத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே சலித்துப் புடைத்துப் பிழிந்து உருவாக்கப்பட்ட கதாநாயகன். அவன், உலகின் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தன் மூலமே அறியப்படவேண்டும் என்பதால், தன்னைத்தானே அறிவாளியாகவும், உலகின் அசிங்கங்கள் அருவெறுப்புக்கள் தன் கண்ணில் தென்படக்கூடாது என்பதால், தன்னை ஒரு தூய்மையான அழகியல்வாதியாகவும், சிறுநீர் கழிக்கும் நேரத்தில்கூட அவன் வாய் இலக்கியத்தின் உன்னதத்தைப் பேசும் என்பதால் தன்னை ஒரு இலக்கியவாதியாகவும், அச்சிலேற்றப்படும் தாள்கள் அவனது எழுத்தைத் தரிசனம் செய்வதற்காகவே காலந்தோறும் காத்திருந்து ஏங்கித் தவித்துத் தவம் செய்து வருகின்றன என்பதால், தன்னை ஒரு எழுத்தாளனாகவும், எழுதவரும் இளைஞர்கள் அவனது உரையாடலை மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், தான் மட்டுமே ஒரு ஆசிரியனாகவும் மனிதவாழ்வு குறித்த பெரும் புதிரை அவன் மட்டுமே தீர்க்கவேண்டும் என்று தத்துவ உலகம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருப்பதால், தன்னை ஒரு தத்துவவாதியாகவும், பன்றிகளின் மந்தைகளாய் வாழும் மக்கள் மத்தியில் அவன் உடல் மட்டும் எப்போதும் அணையாத விளக்காய் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு மாமனிதனாகவும் கருதிக் கொள்கிறான், வெளிப்படுத்துகிறான், அறைகூவுகிறான். இதை சு.ரா.வின் உதவியுடன் நவரசங்களிலும் பதிவு செய்கிறான்.

இதுவரை யாரும் கண்டு கேட்டிராத ஒரு மகத்தான மனிதனைப் படைத்ததாக சு.ரா.வும் அவரது அபிமானிகளும் புல்லரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வரலாறு அவர்களைப் பார்த்துச் சிரித்தவாறு, “இவன்தானா இவனை நான் நீண்டகாலமாக பார்த்து வருகிறேனே” என்று ஒரு வரியில் முடித்துக் கொள்கிறது. ஆம். இந்தப் பண்புகளைக் கொண்டவர்கள் கேரள வரலாற்றில் நம்பூதிரிகள் என்றும் இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தின் தலைமைச் சித்தாந்தவாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே ஜே.ஜே. சில குறிப்புகளை கம்யூனிச வெறுப்பு நாவல் என்பதைவிட காலந்தோறும் அவதரிக்கும் பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தனம் கொண்ட நாவல் என்று சொல்லலாம்.

சு.ரா.வின் மொழியில் சொன்னால், ஜே.ஜே என்பவன் யார்? அவன், “உலகமே குரங்குகளின் வாத்திய இசை போல் இருக்கிறது. அவை எழுப்பும் கர்ண கடூரமான அபசுரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.” பார்ப்பனியத்தின் மேலாண்மையை நெஞ்சிலேந்தி முனகிக் கொண்டிருந்தவர்கள், உபநிடதக் காலம் தொட்டு ‘உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி கணேசன் வரையிலும் இப்படித்தான் கத்திக் கொண்டிருந்தார்கள். குரங்குகளின் கர்ண கடூர அபஸ்வரத்தில் உழைக்கும் மக்கள் வாழ்வின் அவலக்குரலும், அந்த அவலத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கும்போது போராட்டத்திற்கான உயிர்ப்புக் குரலும், பல சமயங்களில் அந்த உயிர்ப்பு நசுக்கப்படும் போது கேட்கக் கிடைக்கும் மயானக்குரலும், இத்தகைய குரல்கள் கேட்காத தூரத்தில் அரியாசனங்களில் வசதியாக அமர்ந்து கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்பவர்களின் அதிகாரக்குரலும், அதிகார நேரம் போக அவர்கள் சுருதி சுத்தமாகப் பாடும் கேளிக்கைக் குரலும் கலந்துதான் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே இவை குரல்களின் பிரச்சினையல்ல, வாழ்வை உள்ளது உள்ளபடி உணரமறுத்து, கீழே வாழ்ந்து கொண்டு மேலே பளிச்சிடும் வாழ்வை இதயத்தில் பொதிந்து கனவு காணும் நடுத்தர வர்க்கக் காதுகளின் பிரச்சினை. ஜோசப் ஜேம்ஸ் எனப்படும் ஜே.ஜே. தனது நாவலில் வெற்று இலக்கிய நயத்துடன் கூறும் இந்தப் படிமத்தின் அன்றாட மொழிபெயர்ப்பினை ஹிந்து பேப்பரில் வரும் வாசகர் கடிதங்களில் - தொழிலாளர்களின் ஊர்வலம் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது, கூவம் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மழை நிவாரணத்திற்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று - விதவிதமாகப் பார்க்கலாம். அவ்வகையில் இந்த நாவல் ஹிந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் இதயங்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

நாவலின் கதைதான் என்ன? சு.ரா. தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். தமிழ் இலக்கியச் சூழலை வெறுக்கும் பாலு என்ற தமிழ் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது மற்றொரு பாதியான ஜே.ஜே. எனும் இலட்சிய கேரள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளாவிற்குப் பயணம் செய்து அவனுடன் பழகியவர்களைச் சந்தித்து ஜே.ஜே.வைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரிக்கிறார். பாலு சந்தித்தவர்களில் சூப்பர்மென் குவாலிட்டி கொண்டவர்களும் சு.ரா.வின் மறு பிறவிகள்தான். அவ்வகையில் சிவாஜி கணேசனின் நவராத்திரியைப் போன்று சு.ரா. பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நாவலென்றும் சொல்லலாம்.

நாவலில் சு.ரா.வின் புகழ் பெற்ற கருத்துக்கள் சுற்றிச் சுற்றி வரும் சொற்றொடர்களின் மூலமும், உப்ப வைக்கப்பட்ட படிமங்களின் வழியாகவும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை வழக்கம் போல வருகின்றன. தனது உலகை வடிவாக உருவாக்க விரும்பும் ஜே.ஜே.வின் அழகுணர்ச்சிக்கு அளவே இல்லை. அவன் வசிக்கும் நகரில் இருக்கும் மைதானம் ஒன்றை தான் அரசனானால் எப்படி மாபெரும் பூங்காவாக, வெட்டுவதற்கு மனம் வராத மரங்களையும், குழந்தைகள் சுற்றுச்சூழலை அறியும் வண்ணமும் அமைக்கப் போவதாக வரைபட விளக்கத்துடன் தன் டயரியில் குறித்து வைத்திருக்கிறான். (இந்த வேலைகளைச் செய்ய கவுன்சிலர் ஆனால் போதும் என்ற விசயம் அந்த மாபெரும் அறிவாளிக்குத் தெரியவில்லை.) அவன் நகரில் ஏழைகளும், குடிசைகளும் நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ மழை ஒழுகாத கூரையாவது மாற்றித் தரலாம் என்பதற்கெல்லாம் அவன் அழகுணர்ச்சியில் இடம் இல்லை போலும். ஒருவேளை இவன் இந்தியாவின் அரசனாகியிருந்தால் நகர்ப்புறச்சேரிகள் அனைத்தும் அழகின்மை காரணமாக ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டிருக்கக் கூடும்.

அவன் காதலி ஓமனக்குட்டி எழுதிய வாரமலர் தரத்திலான கவிதைகளை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இலக்கியத்தில் அவனால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் அந்தக் கவிதை நோட்டுக்களை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிகிறான். அத்துடன் காதலியை விட்டுப் பிரியவும் செய்கிறான். இது ஜே.ஜேயின் திமிரான இலக்கிய மேட்டிமைத்தனம்.

கதையும், கவிதையும் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் எழுத முடியும். ஏன் சு.ரா.வும், ஜே.ஜேயும் அப்படித்தானே ஆரம்பித்திருக்க முடியும். ஒருவேளை அவன் ஆசிரியராகியிருந்தால் தப்பும் தவறுமாக எழுதும் முதல் தலைமுறை ஏழைக் குழந்தைகளின் கைகளை ஒடித்திருப்பானோ? சிற்றிலக்கியவாதிகள் பொழுதுபோக்காய் இலக்கியம் பக்கம் திரும்பியது ஒருவகையில் நல்லதுதான். இவர்கள் சற்றே அரசியல் பக்கம் வந்திருந்தால் மக்களின் கதி என்ன? நம்மைப் பொறுத்தவரை ஓமனக்குட்டியின் கவிதைகள் சு.ரா.வின் கவிதைகளை விடப் பரவாயில்லை என்றே கருதுகிறோம். அவரது நினைவுச்சின்ன கவிதையின் சின்னத்தனத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

அவரது மற்ற கவிதைகள் என்ன சொல்கின்றன? சு.ரா. தனது அசட்டுத்தனத்தையே ஆழமான சமாதிநிலையாக உணர்வது, அவர் சிந்திக்கும் போது லாரியின் இரைச்சல் வந்து கெடுத்த பிரச்சினைகள், அப்புறம் ஜன்னல் எப்போதும் வானத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றதாகவும், மின் விசிறிக்கு அந்தப் பேறு இல்லை என்பதான துயரமான தருணங்கள்... இந்த பினாத்தல்களை செம்பதிப்பாக வெளியிட்டதற்காக காலச்சுவடு ஆபீசை குண்டு வைத்தா தகர்க்க முடியும்? இதுதான் அவருடைய கவிதை உலகம். இது அவருடைய உலகம் மட்டுமல்ல, இன்றைய சிறு பத்திரிக்கைகளின் அனைத்துக் கவிஞர்களின் உலகமும் கூட. நீர்த்துப்போன தங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கி நோக்கி புதிதாக எதையும் காண இயலாத நிலையில், ‘வாட் இஸ் நியூ?’ (புதிதாய் என்ன) என்ற கேள்விக்கு விடையாக சொற்களிலும், மோஸ்தர்களிலும் சரணடைபவைதான் அவர்களது கவிதைகள்.

நாவலின் ஓர் இடத்தில் மாட்டின் முதுகில் ஒருவன் வெற்றிலை எச்சிலைக் குறி பார்த்துத் துப்புவதை ஜே.ஜே. பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. இதை ஸ்கேன் செய்த ஜே.ஜேயின் அழகுணர்ச்சி உடனே மனிதனின் கீழ்மை அல்லது விலங்குணர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறது. அவன் காலத்தில் பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது குறித்தோ, தலித்துக்கள் எரிக்கப்படுவது குறித்தோ, வரதட்சணைக்காகப் பெண்கள் எரிக்கப்படுவது குறித்தோ அவன் கேள்விப்பட்டதே இல்லை போலும்! அவனுடைய அழகுணர்ச்சிதான் கொடூரமான எதையும் பார்க்காதே. மனிதனின் விலங்குணர்ச்சியை ஆய்வு செய்யுமாறு அவனை எது தூண்டுகிறது பாருங்கள்!

இந்த எச்சில் பிரச்சினையை வைத்து மனிதன் விலங்காக வாழ்வதற்கே பணிக்கப்பட்டவன், மரபும் பண்பாடும் அவனைத் தடை செய்கின்றன என்று அவன் ஆய்வு பயங்கரமாக எங்கோ போகிறது. இறுதியில் மனிதன் விலங்குணர்ச்சிக்கும், மனித உணர்ச்சிக்கும் இடையில் தத்தளிப்பதாக ஒரு புதிய விசயத்தை ஜே.ஜே. கண்டுபிக்கிறானாம். உண்மையில் இந்த எச்சில் பிரச்சினையில் தத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு வெங்காயமும் இல்லை. மனிதனின் விலங்குணர்ச்சி எனப்படுவது, ஏற்றத்தாழ்வாய்ப் பிரிந்திருக்கும் இந்தச் சமூகத்தின் வர்க்க முரண்பாட்டின் வழியாக வெளிப்படுகிறதேயன்றி மாட்டின் முதுகில் எச்சில் துப்பும் அற்ப விசயத்தில் அல்ல. இதே எச்சிலை பன்றியின் மீது துப்புவதாக சு.ரா. எழுதவில்லை. எச்சில் துப்பும் எல்லாவகைகளையும் அவர் பார்த்திருந்தாலும், மாடு புனிதம் என்ற கருத்து, மரபில் இருப்பதால் வாசகருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்து தன் தத்துவப் பாடத்தை விளக்க அவர் நினைத்திருக்கலாம். இந்த நாவலின் போலியான ஆன்மீக அவஸ்தைக்கு வேறு சான்று தேவையில்லை.

மற்றொரு இடத்தில் ஒரு தொழுநோயாளியைப் பார்த்த ஜே.ஜே., அவனுக்கு காசு போடலாமா வேண்டாமா என்று ஒரு ஓட்டலில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் யோசிக்கிறான். இதுவரையிலான மனிதகுல வரலாற்றின் வள்ளல் குணம், தானம், அறம், மனிதாபிமானம் மற்றும் இன்னபிற ‘ம்...’களைக் குறித்து ஆய்வு செய்கிறான். இறுதியில் ஒரு ஐம்பது காசைப் போடலாம் என்று முடிவெடுத்து வெளியே வருகிறான். தொழுநோயாளியைக் காணவில்லை. சில மணிநேரம் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்துக் காசைக் கீழே வீசுகிறான். காசைப் போடும் போதுதான் கை மழுங்கிய தொழுநோயாளி அதை எப்படி எடுக்க முடியும் என்பது அவனுக்கு உறைக்கிறது. உடனே அவனது மனிதாபிமான அழகுணர்ச்சி ஒரு புதிய விசயத்தைக் கண்டுபிடிக்கிறது. அதன்படி மனிதன் இதுவரை உருவாக்கிய தானம் தர்மம் தத்துவம் அனைத்தும் தன்னை மட்டும் மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டதே ஒழிய, எதிரிலிருக்கும் மனிதனது பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு அறியப்பட்டவையல்லவாம். அப்படிக் கணக்கில் கொண்டிருந்தால் ஜே.ஜே. அந்தக் காசை தொழுநோயாளியின் கையில் கொடுத்திருப்பானாம்.

இப்படி தன் மனிதாபிமானத்தைத் தள்ளாட வைத்த மனித குலத்தின் மீது கோபம் கொண்டு ஜே,ஜே. தனக்குள்ளேயே துன்புறுகிறான். வரலாற்றையும், தத்துவத்தையும் அடிமுதல் நுனி வரை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்து விட்டு நம்மையும் அதற்கு விளக்கம் எழுதுமாறு துன்புறுத்துகிறார் சு.ரா. விசயம் மிகவும் எளிமையானது. சு.ரா. எங்கேயோ ஒரு தொழுநோயாளிக்கு காசை விட்டெறிந்திருக்கிறார். காசைக் கையில் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் மழுங்கிய கைகளைத் தொட்டால் வரும் அருவெறுப்புதான். அதற்கு ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பார் போலும். அதனால் தான் பெற்ற குற்றவுணர்வைப் பெறுக இவ்வயைகம் என்று முழு உலகத்தையும் தன் நாவலில் தண்டித்துவிட்டார். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கும் போது இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது சு.ரா. நமக்கு அளித்திருக்கும் தண்டனை போலும்!

நாவலில் ஜே.ஜேவை சினிமாக் கதாநாயகன் போலச் சித்தரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நம்பியார் போன்ற வில்லன் பாத்திரம் முல்லைக்கல் மாதவன் நாயர். இந்த முல்லைக்கல்லை ஜெயகாந்தன் என்றும் சொல்லுகிறார்கள். இருக்கலாம். நாவலில் சித்தரிப்பு அப்படித்தான் வருகிறது. முல்லைக்கல் நம்மூர் த.மு.எ.ச. போன்ற கேரளத்தில் இருக்கும் போலி கம்யூனிச கலை இலக்கிய அமைப்பில் இருப்பவன். இந்த வில்லன் பசி, பட்டினி, வேலையின்மை, வறுமை இன்னபிற சமூகப் பிரச்சினைகளை அந்த மக்கள் வாழ்க்கை மற்றும் மொழியில் எழுதிப் பெயரெடுத்து, புகழ், பணம் சம்பாதித்து செட்டிலாகிறான்.

இதற்குத் தோதாக கம்யூனிசக் கட்சியும் முதலாளிகளைப் போல வாழ்ந்து கொண்டே தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுவதாக நடிக்கும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிடுகிறது. ஆனால் ஜே.ஜே.யின் விமர்சனம் கட்சியின் அரசியல், திட்டம், நடைமுறையின் மீதெல்லாம் இல்லை. கட்சியின் கலைஞர்கள் மீதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபமும் உலகில் சோசலிசமும், சமதர்மமும் வரவேண்டும் என்ற குறைந்தபட்ச அற உணர்விலிருந்து வரவில்லை. ‘தன்னைப்போன்ற அறிவாளிகளுக்கு இந்த உலகில் மதிப்பு இல்லையே’ என்ற பச்சையான சுயநலத்திலிருந்தே ஆவேசமாக வருகிறது.

போலிகளின் சாயம் வெளுத்துவிட்ட சாதகமான நிலையில் “நான்தான் உன்னதமானவன்” என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்திற்காகவே அவனுக்கு கம்யூனிசத்தின் மீதான விமரிசனம் தேவைப்படுகிறது. அந்த உன்னதமும் பொதுவில் சமூகத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும் கேலி செய்யும் திண்ணைப்பேச்சு வேதாந்திகளின் தனிமனித அரட்டைதான். நாவலில் நோயால் இளம் வயதில் இறந்து போன ஜே.ஜேவின் நினைவுகளைத் தேடித்தான் எழுத்தாளர் பாலு கேரளம் செல்கிறான். நாயகன் ஜே.ஜே., எம்.ஜி.ஆரைப் போன்று சித்தரிக்கப்பட்டாலும் முடிவில் சிவாஜி படங்களைப் போல செத்துப்போவதற்கு வாசகர்களின் சென்டிமெண்டைப் போட்டுத் தாக்கும் நோக்கம்தான் காரணம். மற்றபடி நாவலை வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி விளக்குவதற்கு அல்வா போல ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தாலும் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60

Pin It