கடந்த வாரத் திண்ணையில், அமரராகி விட்ட சுந்தர ராமசாமி(சு.ரா)யைப் பற்றி ஜெயமோகன் (ஜெமோ) எழுதி வெளியாகவுள்ள நூலிலிருந்து ஒரு பகுதியும், ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. சு.ரா இறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் இப்படி அவசர அவசரமாக ஒரு நூல் எழுதப்பட்டு வெளியிடப்படுவதற்கான நியாயம், காரணங்கள் என்ன? ஏன் பலர் பங்களிக்கும் ஒரு நினைவுமலர் முதலில் வராமல் ஒருவர் அவசர அவசரமாய் எழுதும் நூல் முதலில் வருகிறது? சு.ராவைப் பற்றி நூல் எழுதுபவர் எப்போதுமே ஒரு ஆதரவான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறாரா? அவரது பெயருக்கும், புகழுக்கும் பங்கம் விளைவிக்காத வகையில் எப்போழுதுமே நடந்து கொண்டிருக்கிறாரா?. இது போல் பல கேள்விகள் எழுவது நியாயமானதே!

Jeyamohanசு.ராவை கடந்த சில ஆண்டுகளாக ஜெயமோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறு செய்திருக்கின்றனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணங்களாக ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

மருதம் இணைய இதழில் சூர்யா என்ற பெயரில் வெளியான கட்டுரை. இதில் மாயியைக் குறித்து சு.ரா. கூறியதாக பிரமீள் எழுதியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு சு.ரா.வின் ஆளுமையைக் கேவலமாக சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டது. இதற்கு துணையாக ஆர்.டி.லெய்ங் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. நாச்சார் மட விவாகாரங்கள் கதை வெளியானபின் ஜெமோ தந்த விளக்கம் சாதுர்யமாக பழியை வாசகர்கள் மீது போடுகிற உத்தியாக இருந்தது. வருத்தம் என்பது வெறும் கண்துடைப்புதான் என்பது வெளிப்படையானது. சு.ரா. மற்றும் அவர் குடும்பத்தினர், காலச்சுவடு குறித்து திண்ணையில் தன் தரப்பு விளக்கமாக எழுதிய கட்டுரையில் செய்யப்பட்ட மறைமுகமான அவதூறுகள், அசோகமித்திரன் கதைகள் குறித்து சு.ரா. ஆற்றிய உரையை விமர்சித்து ஜெமோ எழுதியதும், அதற்கு காலச்சுவட்டில் வெளியான பதில் குறித்து ஜெமோ உயிர்மையில் எழுதியதில் ஜெமோ, சு.ரா.வின் விமர்சன நேர்மை குறித்து வைத்திருந்த கருத்து மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

சு.ரா. தான் படித்த கதைகளின் அடிப்படையில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தும் கூட அவர் பேச்சைத் திரித்து பொருள் கூறி அவர் மீது அவதூறு பரப்பியது ஜெமோதான். நானறிந்த வரை அசோகமித்திரன் கூட சு.ரா.வின் பேச்சிற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இதுதவிர நான் அறியா உதாரணங்கள் பல இருக்கக்கூடும். சு.ரா. மிகக் கடுமையாக விமர்சித்த இடதுசாரிகள் கூட அவர் மீது வீண் அவதூறு பரப்பவில்லை. அவர் குடும்பத்தினை சர்ச்சைகுட்படுத்தவில்லை. அவர், அவர் குடும்பம பற்றி சிறுகதை என்ற பெயரில் கீழ்த்தரமாக எழுதவில்லை. இதை செய்தவர்கள் யார் என்பதை நாம் அறிவோம். ஒரு மனிதர் வாழும் போது அவர் மீது அவதூறு பரப்பி, விமர்சனம் என்ற பெயரில் தன் மனதில் இருக்கும் வன்மத்தினை வெளிப்படுத்தியவர், அவர் இறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஒரு நூல் எழுதி வெளியிடுகிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?

சு.ரா.வின் மரணத்திற்குப் பின் அவர் மீது அதிக கவனம் உருவாகியிருக்கிறது. அவர் பெயரை மட்டும் கேள்விப்பட்டவர்கள், அவரது ஒரு சில எழுத்துக்களைப் படித்தவர்கள் என்ற பலவகையான வாசகர்கள் அவர் எழுத்துக்களை தேடிப் படிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு வாசகர் கவனம் சு.ரா.வின் எழுத்துக்களில் குவிந்திருக்கும் போது, அவர் ஆளுமை குறித்த பிறர் எழுதியுள்ளவற்றிலிருந்து அறிந்து கொள்ள முயலும் போது இதை பயன்படுத்திக் கொண்டு தான் உருவாக்கியிருக்கும் பிம்பத்தினை அவர்கள் முன் வைத்து தன்னையும், தன் கருத்தினையும் முன்னிலைப்படுத்துகிற ஒரு முயற்சிதான் இது. இங்கு வெளிப்படுவது பச்சையான சுயநலன் தான்.

தன் நூல் மூலம் வாசகர் மனதில் சில கருத்துக்களை விதைக்கிற, பரப்புகிற முயற்சிதான் இது. இந்த நூல் சு.ரா. மறைந்த 2 மாதங்களுக்குள் வெளியாக வேண்டிய தேவைதான் என்ன? மக்களைப் பாதிக்கிற ஒரு திட்டம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் ஒரு சட்டம் இவை போன்றவை குறித்து பிரச்சாரம் செய்வதற்காக அவசர அவசரமாக நூல்கள் எழுதப்படுவதில் நியாயமும், தேவையும் இருக்கிறது. ஜெமோ நூல் வெளியாகித்தான் சுரா என்று ஒருவர் இருந்தார் என்ற நிலையா இருக்கிறது?

சு.ரா. குறித்து பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நினைவுமலருக்கும், ஜெமோவின் நூலிற்கும் வேறுபாடு உண்டு. முன்னதில் ஒரு ஆளுமையின் பன்முகத்தன்மையும், பலர் முன்வைக்கும் கருத்துக்களும் வெளிப்படும். இதன் மூலம் வாசகர் மனதில் ஒரு விமர்சகர் அல்லது எழுத்தாளர் கருத்து பிரதான இடம் பெறுவதும், ஒரு சில கருத்துக்களே முன்னிறுத்தப்படுவதும் தவிர்க்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால் ஒரு எழுத்தாளர் எழுதும் நூலில் அவரது கண்ணோட்டமே முதன்மை பெறத்தான் வாய்ப்புகள் அதிகம். காலச்சுவடு சார்பில் சு.ரா. குறித்த நூல் ஏதாவது வெளியாகும் முன்னர் சந்தையில் இடம் பிடிக்கிற உத்திதான் இது. சு.ரா.வின் மகத்தான ஆளுமையை அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக இந்த நூல் மூலம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதன் தேவை என்ன? அப்படி இல்லாவிட்டால் அந்த ஆளுமை இல்லை என்றாகிவிடுமா அல்லது இரண்டு மாதங்கள் கழிந்து போனால் வாசகர்கள் சு.ரா.வை மறந்து விடுவார்களா? அப்படியெல்லாம் ஏதுமில்லை. கிட்டதட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் செயல்பட்ட ஒருவரின் ஆளுமையை இரண்டு மாதங்களுக்குள் ஒருவர் நூல் எழுதித்தான் நிலை நிறுத்த வேண்டுமா? இங்கு சு.ரா. ஒரு விற்பனைக்கான குறியீடாக மாற்றப்பட்டு, பயன்படுத்தப்படுகிறார். அவ்வளவுதான். சுடச்சுட விற்பனையாகும் என்பதை மனதில் வைத்தே இந்நூல் எழுதப்பட்டதோ என்ற சந்தேகம்தான் அந்நூல் குறித்த குறிப்பினை படிக்கும் போது எழுகிறது.

Sundararamasamyஅந்த மகத்தான ஆளுமையைப் பற்றி சு.ரா உயிருடன் இருக்கும் போது எத்தகைய கருத்துக்களை ஜெமோ முன் வைத்திருக்கிறார், வைக்க உதவியிருக்கிறார் என்பதற்கான சான்றுகளை நான் காட்டியிருக்கிறேன். ஒருவர் உயிருடனிருக்கும் போது வசைபாடுவது, அவதூறு செய்வது, இறந்து இரண்டு மாதம் கூட ஆகும் முன்னர் அவர் குறித்து அவசர அவசரமாக ஒரு நூல் எழுதி, அதை வெளியிடுவதைப் பார்க்கும் போது சு.ரா. இறந்த பின் அவரை பயன்படுத்திக் கொண்டு சில உன்னதமற்ற நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியாகத்தான் இந்நூலினை பார்க்க வேண்டியுள்ளது.

இந்நூலில் தான் செய்த அவதூறுகளுக்கு ஜெமோ மன்னிப்புப் கோரியிருக்கிறாரா அல்லது வருத்தம் தெரிவித்திருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சில உணர்ச்சிப் பூர்வமான நாடகக் காட்சிகள் வெளியீட்டு விழாவின் போது அரங்கேறினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை. எனவே நூல் வெளியீட்டு விழா கூட்டதிற்கு செல்பவர்கள் கூடுதலாக கைக்குட்டைகளையும், காதுகளை அடைத்துக் கொள்ள பஞ்சும் கொண்டு போகலாம். அரசியல்வாதிகள் கூட இந்த விஷயங்களில் ஜெமோ போன்றோரிடம் பிச்சை வாங்க வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது, இறந்த பின் உயிர் நண்பர் என்பது, கண்ணீர் உகுப்பது இந்த ரீதியில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கும். இறந்த உடன் அவசர அவசரமாக 200 பக்க நூல் எழுதுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் நேருவோ, அண்ணாத்துரை இறந்த போது கலைஞரோ 60 நாட்களுக்குள் நூல் எழுதவில்லை. அப்படி எழுதி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. உண்மையில் நெருக்கமாக இருப்பவர்களால், இருந்தவர்களால் இப்படி அவசர அவசரமாக நூல் எழுதி அதை வெளியிடவும் முடியுமா என்பது குறித்து யாருக்கேனும் சந்தேகம் எழுந்தால் அதில் நியாயம் இருக்கிறது.

சு.ரா உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமே ஜெமோ நூல் எழுதத் துவங்கி விட்டாரா என்ற ரீதியில் ஒரு வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் இருந்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். இங்கு சு.ரா. இறந்த பின் விற்பனைக்கான ஒரு குறியீடாக மாற்றப்பட்டிருக்கிறார். இனி சு.ரா நினைவுக்கூட்டங்களில் சு.ரா.வின் படம் போட்ட பனியன்கள், டிஷர்ட்கள் போன்றவையும் விலைக்கு கிடைக்கலாம். இப்படி அவசர அவசரமாக நூல் எழுதி விற்பதை விட அது மிகவும் நேர்மையான செயல். 

- கே. ரவி ஸ்ரீநிவாஸ்

Pin It