"பக்தி என்பது தனியுடைமை, ஒழுக்கம் என்பது பொது உடைமை" என்று கூறியவர் பெரியார்.
தான் பொது வாழ்வுக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு கோவில்களில் அறங்காவலராக இருந்து முறையாக கணக்குகளை வைத்திருந்தவர் தந்தைப் பெரியார்.
எந்த சூழ்நிலையிலும் ஒவ்வொரு தனிமனிதர்களின் விடுதலையுணர்வைப் பெரிதும் மதித்தவர். குறிப்பாக அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்றும், குறிப்பாக வட மாநிலங்களில் உள்ளதைப்போல கருவறை வரை யாரும் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தவர். தற்போது கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கச் சட்டம் இயற்றிட அடித்தளமிட்டவர் பெரியாரே.
ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக வாழ்விற்கு தொடக்கமாக ஆலயங்கள் இருக்கிறது என்கிறார்கள் சமயவாதிகள்(ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்கிறார் அவ்வையார்). அப்படிப்பட்ட ஆலயங்கள் தொடங்கி அங்கு ஒலிக்கப்படும் மந்திரங்கள் வரை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றவர் தந்தைப் பெரியார். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பொதுவெளியில் மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தவர். இந்துமதத்தின் ஆன்மீக வாழ்வுக்குப் பெரிதும் இடையூராக இருந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தவர். தமிழ்நாட்டின் கோவில்களில் தமிழ் மொழியும் தமிழ் மக்களும் புறக்கணிக்கப்படுவதை கடுமையாகச் சாடியவர். மக்களுக்குப் புரியாத மொழிகளில் மந்திரங்களைச் சொல்லி மக்களின் ஆன்மீக உணர்வை கேலி செய்த பார்ப்பனியத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் (சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து உள்ளார் என்கிறார் மாணிக்கவாசகர்).
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட திரு.வி.க., தவத்திரு குன்றக்குடி அடிகளார், தனித் தமிழ் இயக்கக் காவலர் மறைமலை அடிகளார் போன்றவர்களிடம் அன்பு பாராட்டியவர். அவர்கள் தனது இல்லத்திற்கு வரும்போழுதெல்லாம் கடவுள் நம்பிக்கையோடு அன்றாட பூசைகளைத் தனது இல்லத்திலேயேச் செய்வதற்கு அனுமதித்தவர். மனித நேயம் மிக்க மனிதராக தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.
ஆன்மீக வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகப்பெரியது (சைவம் வளர்த்த அப்பரின் ஆன்மீக வாழ்வுக்கு துணை நின்றவர் அவரின் தமக்கை மங்கையர்க்கரசி என்று கூறப்படுகிறது) என்று கூறிக்கொண்டாலும் பெண் கல்விக்குத் முட்டுக்கட்டையாக இருந்தது இந்து மதத்திற்குள் ஊடுருவிய பார்ப்பனியம். இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவரை உருவாக்கிய பெருமை நம் தமிழ் நாட்டுக்கே உரியது. அதை தனது வாழ்நாளுக்குள் நடத்திக் காட்டிய பெருமை தந்தைப் பெரியாரையே சேரும். பெண் விடுதலைக்காகப் போராடியதாலேயே அவருக்கு 'தந்தைப் பெரியார்' என்ற பட்டம் பெண்கள் மாநாட்டில் கொடுக்கப்பட்டது.
ஆன்மீகம் தனிமனித வாழ்வோடு தொடர்புடையது. ஆன்மீக முயற்சிக்காக தனிமனிதர்கள் செய்யும் எந்த செயலையும் பெரியார் தடுக்கவில்லை. ஆன்மீகத்தின் பெயரில் பொது வெளியில் நடக்கும் மோசடிகளையே எதிர்த்தார்.
தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டியாக இன்றும் எல்லோராலும் போற்றப்படுபவர் வள்ளலார். அவர் எழுதிய ஆறாம் திருமுறையை முதன்முதலில் பதிப்பித்தவர் பெரியார். இன்றைக்கும் பெரியாரிய நூல்களை பதிப்பித்து வெளியிடும் நிறுவனங்கள் யாவும் வள்ளலாரின் ஆறாம் திருமுறையையும் பதிப்பித்து வெளியிட்டு வருகிறன.
கேரளாவில் வைக்கம் என்ற பகுதியல் ஈழவ மக்கள் கோவில் தெருவில் நடக்கக்கூடாது என்ற நிலையை எதிர்த்துப் போராடிய ஆன்மிகப் பெரியவர் நாராயணகுருவுக்குப் பின் வைக்கம் போராட்டம் நடத்தியவர் தந்தைப் பெரியார். அதனால்தான் பெரியார் 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்படுகிறார்.
உலகத்தின் பொதுமறையான திருக்குறளைப் பரப்புவதற்காக முதன் முதலில் திருக்குறள் மாநாடுகளை நடத்தியவர் தந்தைப் பெரியார். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தை பெரியார் மறுத்தது இல்லை.
தமிழகத்தின் ஆன்மீக விடிவெள்ளியான வள்ளலாரை போற்றிய,
உலகத்திற்கே நீதியை வழங்கிய திருக்குறளைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய,
குன்றக்குடி அடிகளார் தொடங்கி ஆன்மீகப் பெரியவர்களோடு நட்பு பாராட்டிய தந்தைப் பெரியார் எந்த ஆன்மீகத்தை எதிர்த்தார்?
· உயர்வு தாழ்வு கற்பிக்கும் பூணூல் பண்பாடு,
· தமிழர்களை இழிவு படுத்தும் சமற்கிருத மந்திரங்கள்,
· பெண்களை இழிவுபடுத்தும் இந்து மத நம்பிக்கைகள்,
(சமயச் சடங்கு என்ற பெயரிலேயே கோவிலுக்குப் பொட்டு கட்டும் வழக்கம் இருந்துவந்தது. இந்தச் சமயச் சடங்கை எதிர்க்கக் கூடாது என்றார் பார்ப்பனரான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்திய மூர்த்தி)
· சாதியின் பெயரால் ஆலயம் நுழைவதைத் தடுக்கும் மநுதர்மம்,
· தமிழ் மறைகளை அழித்தொழித்த வேத சாஸ்திரங்கள்,
· மனித குல இழிவைக் கொண்டாடும் மூடத்தனமான சமயச் சடங்குகள்,
· வள்ளலாரின் திருமுறையை கேலிபேசிய சங்கர மடத்தின் அரசியல் தந்திரங்கள்,
· வர்ணச் சிந்தனையோடு இராசாசியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம்
இவைகளைத்தான் தந்தைப் பெரியார் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்.
குறிப்பாக, கடவுள் நம்பிக்கையற்ற தந்தைப் பெரியார் தனது வாழ்நாளில் தனது இயக்க தொண்டர்களை கரசேவகர்களாகப் பயன்படுத்தி எந்த சமய கோவிலையும் இடிக்கவில்லை. இதுதான் உண்மை.
பெளத்த நெறி தொடங்கி வள்ளலார் ஈராக ஒளி பொருந்திய ஆன்மீக வாழ்வுக்கு விளக்கமாகவும் பொருளாகவும் வாழ்ந்து காட்டிய சான்றாண்மை மிக்கவர் தந்தைப் பெரியார். இது தந்தை பெரியாரின் மண் என்பதில் பெருமையே!
கடவுள் நம்பிக்கை அடிப்படையில் பெரியாரின் கொள்கைகளை சுருக்கிவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள் பாரதிய சனதா கட்சி உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகள். ஆனால் முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழ் சமூகம் என்றுமே மதவாதத்திற்கு எதிராகத்தான் இருந்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். - பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்கபரிவாரங்கள் கொண்டாடும் ஆன்மீகம் எது ?
· சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட கோவில் வழிபாட்டு முறையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(தீண்டாமை பெருங்குற்றம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிட்டாலும் மரபு என்ற பெயரில் கோவில்களில் தீண்டாமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்கிறது பார்ப்பனியம், நந்தனாருக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது வரலாறு)
· இந்து மநு தர்மப்படி உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படக்கூடியவர்கள் பிராமணர்கள் என்ற கோட்பாட்டை ஏற்க வேண்டும்.
(இன்றும் கர்நாடகா மாநிலத்தில் பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் விழுந்து புரண்டால் தோல் நோய்கள் சரியாகிவிடும் என்ற மூட நம்பிக்கை சமயச் சடங்கு என்ற முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது)
· பெண்கள் குடும்ப வழக்கத்தின்படி படிப்பதோ ஒருவேளை படித்தாலும் வேலைக்குச் செல்வதோ கூடாது.
(வேலைக்குச் செல்லும் பெண்கள் இன்று கலாச்சாரக் காவலர்களால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள்)
· சாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணங்கள் அனுமதிக்கப்படக்கூடாது.
(பல்வேறு ஆனவக் கொலைகளுக்கும் இந்த கொள்கைதான் காரணம்)
· மநு தர்மம் போதிக்கும் குலக் கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
(காமராசர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் எதிர்த்த போதும் 6000 பள்ளிகளை மூடிவிட்டு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார் பார்ப்பனரான இராசாசி)
· சமற்கிருதம் பொது மொழியாக இருக்க வேண்டும்.
(பல்வேறு ஆய்வுகளின் வாயிலாக உலகிலேயே மூத்த மொழி என்று தமிழ் மொழியை அறிவித்த போதிலும் தமிழ் வழிபாட்டிற்கு எதிராக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஓதுவார் ஆறுமுகசாமி திருவாசகம் பாடுவதற்கு பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து சண்டையிட்டனர் பார்ப்பனர்கள்)
· பெளத்த, சமணக் கோட்பாடுகளை புறந்தள்ள வேண்டும்.
(திருக்குறளை யாரும் படிக்கக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியது கூட பெளத்த, சமண எதிர்ப்பே காரணம்)
· ஆன்மீகமாகவே இருந்தாலும் கூட பார்ப்பனியத்திற்கு எதிரான எந்த கருத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
(தீவிர இசுலாமிய எதிர்ப்பு, கிறித்தவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் போன்றவை குஜராத் ஆன்மீக பூமியில் நிலைகொண்டிருந்தது நாம் அறிந்ததுதானே)
· பிற சமய "ஆலயங்களை" அவமதிப்பது, இடிப்பது, தடுப்பவர்களைக் கொலை செய்வது இதுதான் தர்மம் எனக் கொள்ள வேண்டும்.
(கழுவில் ஏற்றி கொன்ற காலம் தொடங்கி துப்பாக்கியால் கொலை செய்யும் இந்த காலம் வரை வேற்று சமய நம்பிக்கையாளர்களை கொலை செய்வது தொடர்கிறது)
· சமய சீர்திருத்த வாதிகளைக் கூட விட்டுவைக்கக் கூடாது.
(வள்ளலார், ஐயா வைகுண்டர், நாராயணகுரு போன்ற ஆன்மீகவாதிகளின் சமயச் சீர்திருத்தங்கள் மண்ணில் நிலைபெறா வண்ணம் மக்களைத் திசைதிருப்பும் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்)
· வேத மறுப்பாளர்களை நாத்திகர்கள் என்று கூற வேண்டும்.
(பொருள் முதல் வாதிகளையே நாஸ்திகர்கள் என்பார்கள் பார்ப்பனர்கள். பொருள், செல்வம் என்று பொருள்படும் ஆஸ்தி என்ற சொல்லுக்கு எதிரானது நாஸ்தி)
· இட ஒதுக்கீட்டு முறையை எதிர்க்க வேண்டும்.
(கடவுள் கொடுத்த தகுதி(?)யை மறுப்பது தர்மமாகாது. எனவே தகுதியின்(?) அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்)
மேற்கண்ட நடைமுறைக்கு ஒவ்வாத சமூக ஏற்றாத்தாழ்வு கொண்ட சமூக நீதிக்கு எதிரானதுதான் சங்க பரிவாரங்கள் சொல்லும் இந்துத்துவ ஆன்மீகம். இந்த ஆன்மீகத்தை பெரியார் சொல் தடி கொண்டு ஒடுக்கினார்.
இந்தியாவில் வேரூன்றியிருந்த சித்தாந்தங்களையெல்லாம் அழித்தொழித்த, மனித குலத்திற்கு எதிரான வேதாந்தத்தை தர்மம் என்பதும் அந்த தர்மத்தை காக்க வெறி கொண்டு எழுவதும் அதற்கு ஆன்மீகம் என்று பெயர் சூட்டிக்கொள்வதும் தமிழர்களால் என்றென்றும் ஏற்றுக்கொள்ளப்படாது. மநுநீதி வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டே வந்திருக்கிறது. ஏனென்றால் இது பெரியாரியம் வளர்ந்த சமூக நீதிக்கான மண்.
உங்களின் ஓட்டு அரசியலுக்காக கோயிலுக்குச் செல்லும் பக்தர்களையெல்லாம், "ஆன்மீகம் வளர்ப்போம் வாருங்கள்" என்று அழைத்தால்... தமிழர்கள் வரமாட்டார்கள்... எங்களுக்கு ஆன்மீகமும் தெரியும்... உங்களின் ஹிந்துத்துவ அரசியலும் தெரியும்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்