வழக்கமாக அறிவியல் கட்டுரைகளை எழுதும் நான் என் வாழ்நாளில் ஒரு சிறிய நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். இப்பொழுது ஆந்திர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெருநகரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு, உடல் கோளாறு காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அங்கு மருத்துவரைப் பார்க்க ஒரு 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பின் மருத்துவரின் அறையினுள் சென்றேன். அது ஒரு சிறிய மருத்துவமனை. ஒரே ஒரு மருத்துவர். அவர் தனியாக நடத்திக் கொண்டு இருக்கிறார். நான் சென்ற பொழுது இருவர் எனக்கு முன் இருந்தனர். இந்தப் பெருநகரத்தின் முக்கிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

states in South Indiaடாக்டர் என்னிடம் முதலில் "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார்." நான் " சீனிவாசன்" எனக் கூறினேன். அதற்கு அவர் "சீனிவாசன்....." என இழுத்தார். நான் " சீனிவாசன்" என முடித்துக் கொண்டேன். உடனே அவர், "நீங்கள் தமிழியானா?" என்று கேட்டார். உடனே நான், "ஆமாம் நான் தமிழன் தான்" எனக் கூறி முடித்து விட்டேன். பிறகு நான் வந்த உடல் கோளாறு சம்பந்தமாகப் பேசி விட்டு, அவரின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டு, மருந்து சீட்டினை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். உடனே அவரின் உதவியாளர் "சார் , மருந்தை நீங்கள் உள்ளிருக்கும் கடையில் பெற்றுச் செல்லுங்கள். அங்கிருந்து பக்கத்து அறையில் ஒரு சிறிய மருந்தகம். அதில் ஒரு சில அளவே மருந்துகள். அவற்றை மட்டுமே டாக்டர் எழுதித் தருகிறார் என பட்டவர்த்தனமாகப் புரிகிறது.

டாக்டர் கட்டணம் ரூபாய் 300 , மருந்துகள் ரூபாய் 1200 என பர்ஸைக் காலி செய்து விட்டு வெளியே வந்தேன்.

இங்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இரு குறிப்புகள் - ஒன்று சாதாரணமானது. டாக்டர்கள் சில மருந்துகளை விற்பனை செய்யும் தந்திரம். தனிப்பட்ட மருந்தகம் வேண்டுமானால், வரும் நோயாளிகளின் வசதிக்காக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது அவர் என்னிடம் என் பெயரை வினவியபொழுது " சீனிவாசன் ....." என இழுத்தார். இதிலிருந்து அவர் என் குடும்பப் பெயர் அல்லது சாதிப் பெயரை தெரிந்து கொள்ள விழைகிறார் என்பது புரிகிறது.
இங்கு எனக்கு சாதியக் கொடுமைகள் நடந்தது எனக் கூறவில்லை. இந்தியாவில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு குடும்பப் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்ற போர்வையில் சாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டும். அது எதுவானாலும் சரி. அரசு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் அது உங்கள் பெயரின் பின்னால் இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் யாரென்றே தெரியாது என்கின்றனர். ஆனால் நம் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை.

எனக்கு என் சாதிப் பெயர் தெரியும். அதை எனக்குச் சொன்னது என் தாய். ஆனால் நான் என் பிள்ளைகளுக்கு அதைக் கூற மாட்டேன். ஏனெனில் அது அடையாளம் என என் தாயால் வரையறுக்கப்படுகிறது. உண்மையில் அடையாளம் என்பது வாழும் பகுதி, இனம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தது என்பது என் கருத்து. அந்த டாக்டருக்கு என்னால் சாதி ஒழிப்பு பற்றி விவரித்திருக்க முடியும். ஆனால் அது தேவையற்றது. ஏனெனில் அந்த சாதி ஒழிப்பு என்பது அரசின் முறையில் இருந்து வர வேண்டும். இங்கு சாதி என்பது அனைத்து அரசு ஏடுகளிலும் அழிக்க முடியா மையினால் எழுதப்பட்டுள்ளது.

சுற்றி இவ்வாறு இருக்கும் தருவாயில் என் தமிழகத்தில் சாதியக் கொடுமைகளும். சாதிப் பெயரை உபயோகிப்பதும் மிகக் குறைவாக உள்ளது. எனினும் அடிக்கடி நாம் சில சாதியக் கொலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் அவை அனைத்தும் இன்னும் ஓரிரு தலைமுறைக்குள் அழிந்து விடும் என நம்புகிறேன். அதற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மக்கள் தெலுங்கு மொழி சமஸ்கிருத மொழியின் தழுவல் என நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரியே அதைத் தான் கூறுகிறார். நான் அவர்களுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறி விட்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை திராவிட மொழிகள், நாம் அனைவரும் பூர்வ குடிகள், சமஸ்கிருதம் என்பது வெளியில் வந்த மொழி என்று. ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே சமஸ்கிருதம் மலையாள மொழியை ஆக்கிரமித்து விட்டது. அம்மொழியின் பல நிறைகளை தனதாக்கிக் கொண்டது. மற்றும் ஒரு திராவிட மொழி என் கண் முன்னே அழிந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக நான் கருதுவது பெரும்பாலான வழக்கு சொற்கள் சமஸ்கிருத்தைத் தழுவி உள்ளன. நம் தமிழிலும் அவ்வாறு சில உள்ளன. ஆனால் நம் பாக்கியம் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்களால் அது ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டு நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கிறோம்.

நாம் தற்போது வட இந்திய மொழிகளின் தாக்கத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கிறோம். ஆனால் என் ஆசை நம் சகோதரர்களின் மொழிகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே. இங்கு ஹிந்தி மொழி மிக சாதாரணமாகி விட்டது. பள்ளிகளில் கூட ஹிந்தி ஒரு கட்டாய பாடம் ஆக்கப்பட்டுள்ளது. அது ஆந்திர அரசின் மாநிலப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தும்.

"ஓர் இனம் அழிய வேண்டும் என்றால், அதன் மொழி சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தனக்குப் பொருந்தும்படி மாற்றி, பிறகு அதனை தன்னுடையது என சப்புக் கொட்ட வேண்டும்." இது தான் இப்பொழுது இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது.

இது என் அனுபவத்தில் நான் கண்ட காட்சிகளை வைத்து எழுதப்பட்ட ஒரு சிறிய கட்டுரை. ஏதேனும் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் தெரியப்படுத்தவும்.

- வி.சீனிவாசன்

 

Pin It