இலங்கை இந்திய கடற்பரப்பில் மீனவர்கள் கைதாவது, துப்பாகிச் சூட்டுக்கு இலக்காவது, துன்புறுத்தப்படுவது, சித்திரவதைக்கு உள்ளாவது என்பன நீண்ட நெடுங்கால தொடர்நிகழ்வு. 

தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, சிறுதோப்பு, வங்காலைப்பாடு, நடுக்குடா, புதுக்குடியிருப்பு, கரிசல், பள்ளிமுனை என எல்லா கரையோரக் கிராமங்களுமே இக்கடல்பரப்பின் மீன்பிடித்தொழிலை நம்பி வாழும் கிராமங்கள். வாடை, கோடை என இரு பருவங்களும், வடகடல், தென்கடல் என்ற திசைப்பிரிவுகளில் காலத்திற்கு ஏற்ப சிறுமோட்டார்படகுகள், தோணிகள், மிதவைகள் துணையுடன் மீன்பிடித்தொழிலை மேற்கொள்வார்கள். கோடை வைகாசி முதல் புரட்டாதி வரை வாடை ஐப்பசி முதல் சித்திரை வரை.

இதே கடற்பரப்பில் இந்திய பெரும்படகுகளின் வருகை பலகாலமாகவே இருந்தது. தற்போதைய இலங்கை அரசின் கடற்படை நடவடிக்கைகள் முன்பு கடினமாக இல்லாத காலங்களில் பெருந்தொகையான இந்தியப்படகுகள் இக்கரையோரப்பிராந்தியங்களில் மீன்பிடித்தொழிலை மேற்கொள்வார்கள். இக்கரையோரக்கிராமங்களில் பாடு என்ற ஒரு ஒழுங்குமுறை, அதாவது ஒருவரின் மீன்பிடிக்கும் வரிசை முறையிலோ அல்லது இடத்திலோ மற்றொருவர் அத்துமீறமாட்டார். இந்தியப்படகுகள் மாலைவேளைகளிலேயே இப்பிராந்தியங்களை முற்றுகையிட்டு பெரிய மடிவலைகள் உதவியுடன் இரவில் ரோலிங் செய்வார்கள். இதனால் கரையோரக் கிராமச் சிறுபடகுகள், மிதவைகள், தோணிகள் தொழிலில் ஈடுபடப் பயந்து இந்தியப் படகுகள் காலையில் புறப்பட்ட பின்புதான் மீன்பிடிக்கச் செல்வார்கள். அதுமட்டும் அல்லாது புறொப்பெலரில் சிக்கும் வலையைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஒன்றில் வலையை வெட்டிவிடுவார்கள் அன்றேல் இழுத்துச்சென்று எங்காவது வெட்டிவிடுவார்கள். சிறுதொழில் மீனவர்கள் பலபேர் பலமுறை இவ்வாறு தங்கள் வலைகளை இழந்துள்ளார்கள். அப்பிராந்தியங்களில் ஏற்கனவே மீன்பிடிக்கப்பட்டதால் இவர்களுக்குக் கிடைக்கும் மீன்களின் அளவு சொற்பமே. வலைகளும் இல்லை வருமானமும் இல்லை.

தெனிலங்கை சிங்களமீனவர்கள் வருடம் முழுவதும் தலைமன்னாரில் வாடிபோட்டு தங்கி மீன்பிடித்தொழிலை மேற்கொள்வது வழமை. இக்கிராம மீனவர்கள் இந்த பிராந்தியத்தைத் தவிர எங்கும் போக வாய்ப்போ அனுமதியோ இல்லை.

இந்தியப்படகுகள் வருகைக்காலத்தில் கரையிலிருந்து வெகு அண்மையில் வரிசையாகப் போவதைப் பார்த்து “வந்திற்றான் இந்தியாக்காரன்” என வயிற்றெரிச்சலுடன் முணுமுணுப்பார்கள். வலையை இழந்த மீனவர் யாரிடம் நியாம் கேட்பது? யாரிடம் நட்டஈடு கோருவது? இந்திய மீனவர்களிடம் நியாயம் கேட்டால் அரிவாளைக் காட்டி மிரட்டுவார்கள் என்று முன்பு நடந்ததாகச் சொல்லுவார்கள்.

இன்றைய இலங்கை கடற்படையினரின் நியாயமற்ற செயலில் வேறு ஒரு நியாயத்தை இப்பகுதி மீனவர்கள் பார்க்கிறார்கள். அடி உதை கொலை சிறை இதனை இவர்கள் ஏற்காவிடினும் தங்கள் கடற்பரப்பில் பெரும்படகுகளின் வாரல்கள் இல்லாதிருப்பதே நல்லது என்பது இவர்கள் நியாயம். தென்பகுதி மீனவர்களுடன் பங்குபோட்டுக்கொள்வது நியாயமில்லை என்றாலும் இக்கடலோடிகளுக்கு வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை என அங்கலாய்க்கிறார்கள்.

வறுமை செழிப்பாகவே இக்கிராமங்களில் வளர்கிறது. தான் தின்று மிகுதியை விற்ற மீனவர், இன்று நல்லதை விற்று முன்பு தேவையில்லை என்று வீசியதை சாப்பிட்டு உயிர்வாழ்கிறார்கள். தனி மீனவர்களுக்கு தங்கள் தோணிகள் வலைகளைப் பழுதுபார்க்க கையில் பணமில்லை. தொழிலில் பணம் முதலீடு செய்யும் சம்மாட்டிகள் வருவாய் குறைவால் புதிய முதலீடுகளுக்கு துணிவதில்லை. எல்லோருமே இருப்பதை வைத்து காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையும் தன் பங்கிற்கு கடல் அரிப்பாக கரையோர நிலப்பரப்பில் எல்லைவிரிவாக்கத்தில் மிக மும்முரமாக தன் பங்கினை விடாது நடாத்துகின்றது. காலப்போக்கில் நிலமும் இன்றி தொழிலும் இன்றி இக்கிராம மக்கள் வறுமையுடன் போராட வேண்டிய காலத்தை நோக்கி வெகுவிரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

- தேவா

Pin It