ஈழப் போராளிகள் இப்போது தான் முதன்முதலாக விமானத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர். அதனைக் கண்டு வன்முறை, பயங்கர வாதம் என்று ராஜபட்சேக்கள் மட்டுமல்ல, இங்குள்ள அதிமேதாவிகள் சிலரும் ஆர்ப்பரிக்கிறார்கள். தினம் தினம் ஈழத்து மக்களைப் பலி கொள்ள எந்த விமான தளத்திலிருந்து இலங்கை ராணுவப் போர் விமானங்கள் பறந்த செல்கின்றனவோ, அந்தப் பயங்கரவாதப் பாசறையைத்தான் அவர்கள் தாக்கினர். சிங்கள மக்களைத் தாக்கவில்லை. அந்த விமான தளத்திற்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சேதப்படுத்தவில்லை.

தினம் தினம் அப்பாவி ஈழ மக்களை இலங்கை ராணுவ விமானங்கள் குண்டு போட்டு அழிப்பது பயங்கரவாதமல்லவா? அந்த அரசாங்க பயங்கரவாதத்தை ஏன் இவர்கள் கண்டிப்பதில்லை?

ஈழப் பிரச்சினைக்குப் போர் முனையில் தீர்வு காண முடியாது. பேசித் தீர்த்துக் கொள்க என்று எத்தனை முறை இந்தியா இலங்கை அதிபர்களுக்கு புத்திமதி கூறி யிருக்கிறது? அந்த அறிவுரையை அவர்கள் கேட்க மறுத்தனர். போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஈழப் போராளிகளின் அரண்களை அழிக்க முனைந்தனர்.

தமிழினப் படுகொலையை வேகப்படுத்தினர். கிழக்கு மாநிலத்தில் சம்பூர் கிராமத்தைக் கைப்பற்றி விட்டோம். வாகரையைக் கைப்பற்றி விட்டோம். மட்டக்களப்பு மாவட்டமே தங்கள் வசம் தான் என்று ராஜபட்சேக்கள் பெருமை பேசினர். சம்பூரிலிருந்தும் வாகரையிலிருந்தம் ஈழப் போராளிகள் பின் வாங்கினர் என்பதும் உண்மை. அந்தப் பின் வாங்கல் அநியாயமாக ரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்த் தந்திரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை ராணுவம் மூன்று மாதங்களாகப் போர் நடத்தியது. 95 சதவிகிதப் பகுதிகளைக் கைப்பற்றி விட்டதாக அறிவித்தது. அந்த வெற்றிச் செய்தியை உலகிற்குத் தெரிவிக்க விரும்பியது. கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதர்களை அழைத்துச் சென்றது. அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர், மட்டக்களப்பு பள்ளி மைதானத்தில் இறங்கும் நேரம் பூமியிலிருந்து குண்டுகள் பறந்து வந்தன.

வருவது பல்வேறு நாட்டுத் தூதர்கள் என்று செல்போனில் ஒரு தூதர் தகவல் தந்தார். போராளிகள் மன்னிப்புக் கேட்ட னர். முன்னறிவிப்பின்றி வரலாமா என்று வருத்தம் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உணர்த்துவது என்ன? மட்டக் களப்பு என்றும், போராளி களின் கட்டுப்பாட்டில் தான் என்பதனை வெளிநாட்டுத் தூதர்களே நேரடியாகத் தெரிந்து கொண்டனர்.

கொழும்பு ராணுவ விமான தளத்தைத் தகர்த்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், மட்டக்களப்பின் இலங்கை ராணுவ முகாமைத் தாக்கினர். அந்த முகாமிற்கு அரணாக கருணாவின் கூடாரம். இன்னொரு பக்கம், பொடி டப்பா அளவிற்குக் கட்சி வைத்திருக்கும் டக்ளஸ் தேவானந் தாவின் கூடாரம். அந்த டக்ளஸ்தான் ஈழ மக்களின் ஏகப் பிரதிநிதியாம். அந்த மனிதரையும் அமைச்சர் என்று இலங்கை அரசு ஜிகினா கிரீடம் சூட்டியிருக்கிறது. இந்த மூன்று முகாம்களையும் ஒரேயொரு போராளி இன்னுயிர் தந்து துவம்சம் செய்து விட்டான்.

கொழும்பு ராணுவ விமானதளம் அரசாங்க பயங்கரவாதத்தின் ஆணி வேர். மட்டக்களப்பு ராணுவ முகாம் அந்தப் பயங்கரவாதத்தின் இன்னொரு பாசறை. தமிழ் மக்களைத் தினம் தினம் ரத்த நீராட்டும் இந்தப் பயங்கரப் படுகுழிகள் தான் அழிக்கப்பட்டன. சாமானிய சிங்கள மக்களுக்கு எந்தச்சேதமும் இல்லை.

ஈழப் போராளிகளின் கடற்படை வலிமை வாய்ந்தது என்பதனை ஏற்கெனவே ராஜபட்சேக்கள் அறிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே கொழும்பிற்கு அருகிலுள்ள கப்பற்படைத் தளத்தைத் தாக்கி, கடல் போராளிகள் தங்கள் வல்லமையை மெப்பித்திருக்கிறார்கள்.

விடுதலை வேட்கைக்கு முன்னால், ஆயுதங்களும் குண்டுகளும் போராளிகளின் கால் தூசுகள் என்பதனை எத்தனையோ நாடுகளில் எத்தனையோ விதமாக சரித்திரம் மெய்ப்பித்திருக்கிறது.

ஈழப் போராளிகளின் விமானத் தாக்குதல் உணர்த்துவது என்ன? ஒரு பக்கம் நவீன ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்கி இலங்கை அரசு குவிக்கிறது. அதனையும், தங்கள் சிட்டுக் குருவி விமானங்களால் எதிர் கொள்ள முடியும் என்று போராளிகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். எனவே, இலங்கையில் இனவாத அரசுகள் தொடங்கிய போர், புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்சே அவசர அவசரமாக டெல்லி வருகிறார். இனி இந்தியா - இலங்கை கடல் கூட்டு ரோந்து என்று ஆரம்பிப்பார். காரணம், ஈழக் கடற்புலிகளைச் சந்திக்கும் ஆற்றல் இலங்கை கப்பற்படைக்கு இல்லை. எனவே, ஈழப் போராளிகளுடன் இந்திய ராணுவத்தை ஜெயவர்த்தனே மோதவிட்டது போல் இன்னொரு மோதலுக்கு வழி தேடுகிறார்கள்.

ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா எவ்வளவோ ஆலோசனை களைத் தெரிவித்திருக்கிறது. ஏன்? தமிழக முதல்வர் கலைஞர்கூட தம்மைச் சந்தித்த வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனனிடமும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்று வரை இலங்கை அரசு எந்த ஆலோசனையையும் செயல்படுத்தவில்லை. அது மட்டுமல்ல, ஆழ் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவதையும் இலங்கை ராணுவம் நிறுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை நமது அரசு ராஜபட்சேக்களிடம் கேட்க வேண்டாமா?

(‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் (12.4.2007) பிரபல எழுத்தாளர் சோலை எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி)

Pin It