பறிக்கப்படும் தமிழர் நிலங்கள் 

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பியுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.

15.08.2016 அன்று மருதமடு மாதா கோவில் திருவிழாவில் மன்னார் மறை மாவட்ட பரிபாலகர் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்கள் “நாட்டின் இப் போதையை நடைமுறைச் செயல்பாடுகளும் எழுந்துள்ள பிரச்சினைகளும் முரண்பாடான அறிக்கை களும் நம்பிக்கை தருவனவாக இல்லை. மாறாக நல்லாட்சியும் நல்லிணக்கமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதையே தெளிவாக காட்டுகின்றன. இதனால் நாம் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார். ஈழமக்களின் கோரிக்கை களையும் உரிமை களையும் சிங்கள பேரினவாத அரசு கொடுக்காமல் ஈழத்தமிழ் மக்களை விரக்தியில் தள்ளுகிறது. ஈழத்தமிழர் களின் வரலாற்றுத் தொன்மையையும்

தமிழ் இனக் குழுவின் எண்ணிக்கையை சிங்களபேரினவாத அரசு திட்டமிட்டு குறைத்து அழிக்கிறது. அது கையாளுகின்ற வழிகளை நேரில் பார்த்தவன் என்ற முறையில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

நில ஆக்கிரமிப்பு ஒரு வரலாற்று அழிப்பு

நிலம் என்பது பண்பாடு, மரபு, மொழி, உறவு, உயிர், திறன், வளர்ச்சி, வாழ்வு, வரலாறு ஆகியவற்றின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிட மாகவும் இருக்கிறது. தாயான மண்ணுக்கும் சேயான மக்களுக்கும் தொப்புள்கொடி உறவு இருக்கிறது. மண்ணிலிருந்து மக்கள் உயிர் பெறுகின்றனர். மண்ணைப் பிடுங்குவது மக்களின் உயிரைப் பிடுங்குவதற்கு சமமாகும். நிலப்பறிப்பு அல்லது நில ஆக்கிரமிப்பு ஒரு மிகப்பெரிய வன்முறையாகும் அல்லது இனக் குழு அழிப்பாகும். வடக்கிற்கான மீள் குடியேற்ற செயலணி என்ற அமைப்பை அரசு கடந்த சூலை திங்கள் உருவாக்கியது. இந்த அமைப்பு 5,554 சிங்கள குடும்பங்களையும் 6,120 இசுலாமிய குடும்பங் களையும் வடக்கு மாகாணத்தில் குடியமர்த்த வேண்டுமென்று 30.07.2016 அன்று அறிவித்தது. இந்த அமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வடக்கு மாகாணஅவைக்கு கட்டுப்பட்ட தல்ல.

வடக்கு மாகாணஅவையை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி பெறாமல் நேரடியாக ஈழத்தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அல்லது பறித்து சிங்களர் களுக்கு கொடுக்க அதிகாரம் பெற்றிருக்கிறது. அதுபோல மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு வரும் திட்ட முள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மகாவலி அதிகார அவை ஒன்றை சிங்கள அரசு உருவாக்கியிருக்கிறது. இந்த தண்ணீரை கொண்டு செல்லும்போது சிங்கள குடும்பங்களை கொண்டு சென்று குடியமர்த்த இந்த அமைப்புக்கு அதிகாரமுள்ளது. இலங்கை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் கிடைத்த அற்ப சொற்ப அதிகாரங்களையும் மகாவலி அதிகார அவை மீறுவதுடன் எமது நிலங்களின் அதிகாரங்களையும் அது அபகரிக்கின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார். 

அதுபோல சிங்கள காவல்துறையின் உதவி யுடன் தமிழ் மக்கள் வாழ்ந்த கொக்கு தொடு வாய் என்ற ஊரில் கடந்த மார்ச் திங்கள் 25 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தியது. அதுபோல காவல்துறையினர் தங்களுக்கு தேவையான தலைமன்னார் போன்ற தமிழ் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக் கின்றனர். அதுபோல யாழ்ப்பாணம்  வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 63 ஏக்கர் நிலத்தை காவல்துறையினர் எவரது அனுமதியின்றி கையகப்படுத்தி வைத் துள்ளனர் என்று கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணன் கூறினார். தமிழர்கள் வாழ்ந்த கொக்கிளாய் என்ற ஊரில் சிங்கள மீனவர்களை குடியமர்த்தியது. தற்போது தமிழ் மீனவர் களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் சண்டை நடக்கிறது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழர்கள் முழுமையாக வாழ்ந்த கொக்கச்சான் என்ற ஊர் இப்போது சிங்கள ஊராக மாற்றப்பட் டுள்ளது.

தமிழ் ஊர்களின் பெயர்களை சிங்கள பெயர்களாக அரசு மாற்றியது. (எ-டு) பதிவில் குளம் பதவியாக்குளம் என்றும், முதலிக்குளம் மெறாவேவ என்றும், பெரியகுளம் நாமல்வத்த என்றும், பட்டிப்பளை கல்லோயா என்றும் புடவைக்கட்டு சாகரபுர என்றும், அம்பாள் ஏரி அம்பாறை என்றும் மணலாறு வெலியோயா என்றும் குமரக்கடவை கோமரங்கடவெவ என்றும் பொரிய விளாங்குளம் மகா திவுல்வெவ என்றும் பனிக்கட்டி முறிப்பு பனிக்கட்டியாவ என்றும் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. இரண்டு. இராணுவம்.

இதில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளும் அடங்குகின்றன. கிளிநொச்சியில் பரவி பாஞ்சான் என்ற ஊரில் 13 ஏக்கர் நிலத்தை தரைப்படை ஆக்கிரமிப்பு செய்து வைத் துள்ளது. சிங்கள அரசும் நீதிமன்றமும் இடத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டு மென்று ஆணை பிறப்பித்தும் தரைப்படை வெளியேறவில்லை. இதனால் மக்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

அதுபோல ஒட்டுச் சுட்டான் கற்சிலைமடு சிவன் கோவில் நிலத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் பௌத்தர்கள் வாழ்ந்தனர் என்று இராணுவம் அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறது. புதுக்குடியிருப்பு ஒட்டியிருக்கும் கடற்கரை பகுதியையும் முல்லைத்தீவு பகுதிகளையும் கப்பற்படை ஆக்கிரமிப்பு செய்து வைத் துள்ளது. ஆணையிறவு, முள்ளிவாய்க்கால் அந்தோணியார்புரம் போன்றபகுதிகளை விமானப்படை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது. சில இடங்களை இராணுவம் விட்டுவிட்டது. ஆனால் வழிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எடு. தையிட்டி தெற்கை என்ற ஊரை விட்டுவிட்டு முக்கிய வழியை அடைத்து வைத்திருக்கிறது. இதனால் மக்கள் பல மைல்கள் சுற்றிச் செல்ல வேண்டும். இலங்கையில் மொத்தமுள்ள 21 படைப்பிரிவுகளில் 19 படைப்பிரிவுகள் தமிழர்பகுதியில் இருக்கின்றன.

ஒரு கல் தொலைவில் ஓர் இராணுவ முகாம் உள்ளது. இந்த இராணுவ அடர்த்தியால் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறு கிறது. ஆணையிறவு, முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் சிங்கள இராணுவ வீரர்களின் சிலைகளையும் அவர்களின் வெற்றிகளாக கருதப்படும் கோழைத்தனச் செயல்பாடுகளை திரையிடுகின்றனர். அருங் காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் சாதனைகளையும் தமிழ் மக்களின் வரலாற்றையும் அழித்து புதிய சிங்கள வரலாற்றை எழுதுகின்றனர்.

இராணுவக் குறியீடுகளாகிய துப்பாக்கி, இராணுவ உடை, பீரங்கி, படகுகள், கப்பல், இறந்த வீரர், இராணுவக் கொடி போன்ற வற்றை அதிகார, ஆக்கிரமிப்பு குறியீடுகளாக உருவாக்கி வைத்திருந்தனர். ஒவ்வொரு இராணுவ முகாம் ஆயிரத்துக்குமேற்பட்ட ஏக்கர்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. வேலையில்லா இராணுவத்தினர் தமிழ் பெண்களின்மீது பாலியல் வல்லுறவை நடத்துகின்றனர். சிங்கள பேரினவாத அரசு இராணுவ வீரர்களின் குடும்பங்களை இராணுவ முகாமிற்குள்ளோ வெளியோ குடியமர்த்த திட்டமிட்டுள்ளது. இன்னும் அதிக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பருத்தித்துறை, அந்தோணியார்புரம், கீரிமலை, காங்சேன்துறை போன்ற ஊர்களின் சிறு பகுதியை விட்டுவிட்டு பெரும் பகுதியை இராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

முல்லைத்தீவில் உள்ள முன்றிக்குளத்தில் 150க்கு மேற்பட்ட வீடுகளை இராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வடக்கு மாகாண பகுதியில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

(தொடரும்)

Pin It