பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை மாவட்டத்தில் - ஒவ்வோர் ஆண்டும் ‘ஜல்லிக்கட்டு’ எனும் நிகழ்ச்சி மிகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ‘ஜல்லிக்கட்டு’ பார்ப்பதற்கென்றே தொலை தூரங்களிலிருந்து மதுரைக்கு வந்து குவிகிறார்கள்.

முரட்டுத்தனமான மாடுகளோடு வீரம் நிறைந்திருப்பவர்களாகக் கருதப்படும், வீரர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் மனிதர்கள் மல்லுக்கட்டி மோதிக்கொண்டு மிதிபடுவதையே ஜல்லிக்கட்டு என்கிறார்கள். இது தமிழ் மரபின் வீரவிளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கம் போலவே இவ்வாண்டும் பொங்கல் விழா ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான காளை மாடுகளைக் கொழுக்க வைத்து அவற்றின் கொம்புகளைக் கூர்மைப் படுத்துகிற வைபவம் தமிழகத்தின் பல ஊர்களில் நிகழ்கிறது. பொங்கல் விழா என்பது தமிழர்களின் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக விளங்கிவரும் மாடுகளை வணங்குவதா? (ஜல்லிக்கட்டு என்ற பெயரில்) அடக்குவதா? அல்லது இரண்டுமா என்பது விளங்கவில்லை.

மரபு என்றாலும், வீரம் என்றாலும் ஓர் இனக்குழு மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்றாலும் சமூக அறிவியல் பார்வையில் ஜல்லிக்கட்டு என்பது கடைந்தெடுத்த அறியாமையின் வெளிப்பாடேயாகும். இதே அறியாமையும் மாடுகளின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித்தனமும் ஸ்பெயினில் ‘புல் ஃபைட்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் அரங்கேறி வருவது உலகறிந்த ஒன்றாகும். அதற்குத் தடை விதிக்கக் கோரி 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் விலங்கு உரிமை அமைப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகத் தெருக்களில் ஓடி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாம் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே அவர்கள் அவ்வாறு செய்தனர். அதன் விளைவாக அந்நாட்டின் பார்சிலோனியா நகரில் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்து அந்நகரின் மாமன்றத்தில் 7-4-2004ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டாரங்களிலும் - குறிப்பாக அலங்காநல்லூரிலும் - ஆண்டுதோறும் பொங்கல் விழாவில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர விளையாட்டு என்று வர்ணிக்கிற, எழுதுகிற எவரும் இதுவரை அம் மாடுகளின் கூரிய கொம்புகளால் குத்தப்பட்டுக் கொலையுண்டதில்லை. மாடுகளும் மாடுகளைப் போன்ற அறியாமை நிறைந்த மனிதர்களும் மோதிக் கொண்டு குடல் சரிந்து, மரண ஓலமிடுவது பாதுகாப்பான பலகைகளால் ஆன பால்கனியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு வீர விளையாட்டாகத் தெரிகிறது போலும்.

கொலை செய்யும் ஆற்றல் மிகுந்த வகையில் கொழுக்க வைக்கப்பட்டு கொம்புகளைக் கூர்மைப்படுத்தி பல நேரங்களில் சாராயத்தையும் குடிக்க வைத்து, கட்டவிழ்த்து விடப்படும் காளை மாடுகள் யார் யாரை மிதித்துத் துவைத்து எந்தெந்த வீரனைக் கொன்று தூக்கி வீசுகிறது என்பதை மதுரையின் மருத்துவமனைகள் நமக்கு ஆண்டுதோறும் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டு வரலாற்றில் இதுவரை மாடுகளால் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களும் அவற்றால் மிதிக்கப்பட்டுச் செயலிழந்து போன அப்பாவி மக்களின் குடும்பங்களும் இப்போது எப்படியிருக்கின்றன என்பது குறித்து யாரும் கவலைப்படுவதே யில்லை.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் ஒரு வெள்ளைக்கார மாவட்ட அதிகாரி ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்ததாகவும், மக்கள் பொங்கியெழுந்து அந்த விளையாட்டு உரிமையை மீண்டும் பெற்றதாகவும் ஒரு தகவல் மூலம் தெரியவருகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுதந்திரம் இல்லாமல் அடிமையாக இருக்கலாம். ஆனால் ஓர் ஆண்டு கூட ஜல்லிக்கட்டு இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு ‘வீரம்’ நம்மைப் பாடாய்ப்படுத்தி வருவதை இதன் வாயிலாக அறிய முடிகிறது.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், “டேய் செங்கோடா... என் மாட்டை நீ பிடித்து அடக்கு பார்க்கலாம். சாகாமல் இருப்பாயெனில் உனக்கு நூறு ரூபாய் வீரப்பரிசு தருகிறேன்” என்று அறிவிக்கின்ற ஆதிக்க வர்க்கத்தின் குரல் இவ்விளையாட்டிற்குள் புதைந்திருப்பதைக் காணமுடியும். போலியான மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் தம்மை ஆளாக்கிக் கொண்ட மக்கள் கூட்டத்தை அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டுத் தேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்பதற்கும் இந்த ஜல்லிக்கட்டு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பெயரில் இவ்விளையாட்டு அனுமதிக்கப்படுகிறது. கோதுமை, அரிசி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையும்தான் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அவ்விருப்பங்களை நிறைவேற்ற முடிகிறதா?

பசியில் கொலை வெறியோடு இருக்கும் புலியை விட்டு அடிமைகள் கொல்லப்படுவதை மாடங்களில் இருந்து ரசித்த அந்தக் காலப் பிரபுக்களுக்கும், பால்கனிகளில் அமர்ந்து ஜல்லிக்கட்டு பார்க்கும் இந்தக் காலப் பிரபுகளுக்கும் அப்படியொன்றும் வித்தியாசமில்லை. சாராய போதையோடு தாறுமாறாக மிரண்டு ஓடும் காளைகளின் காலடியில் வயிற்றுக்கில்லாத மக்கள் சிக்கிச் சீரழிவதையும், அற்பப் பணத்துக்காகத் தன் உயிரையே பணயம் வைத்துக் காளைகளோடு கட்டிப் புரண்டு குடல் சரிந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் சாவதையும் வீரவிளையாட்டு என்று காலங்காலமாக நமக்குப் போதித்து வருகிறார்கள்.

இதை வீரவிளையாட்டு என்று எழுதியும், பேசியும், வாதிட்டும் வருகிறவர்களில் எத்தனை பேர் காளைகளை அடக்கக் களத்தில் இறங்கியிருப்பார்கள்? இந்த விளையாட்டில் பல நூற்றுக்கணக்கான மாடுகள் அமைதியாக வாழும் உரிமையும் பாதிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போலவே அதை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களும் வேதனைகளை விதைத்து வளர்க்கின்றன. அந்த விளையாட்டின் துணை நிகழ்வுகளாகச் சாதிச் சண்டைகளும், கோஷ்டிப்பூசல்களும், சாராய வியாபாரமும் கொடிகட்டிப் பறந்து வன்முறைகளுக்கு வழி வகுக்கின்றன. விளையாட்டின் நோக்கம் பலப்பரீட்சையாக இருப்பதால் மாடுகளை விட்டுவிட்டு எதன் பொருட்டாவது மனிதர்கள் மோதிக்கொள்வதும் இயல்பான ஒன்றாகக் காணப்படுகிறது. பார்வையாளர்களும் பாதிப்புள்ளாகி சில நேரங்களில் மரணமடையும் வாய்ப்புள்ள ஒரே விளையாட்டு, உலக அளவில் அனேகமாக ஜல்லிக்கட்டாகத்தான் இருக்க முடியும்.

பல்வேறு வகையான அநீதிகளைத் தட்டிக் கேட்க வீரம் இல்லாத சூழலில் ஆண்டுக்கொருமுறை மாடுகளிடம் ‘வீரம்’ காட்டுவதோடு நமது வீர உணர்வு நிறைவடைந்து விடுகிறது.

“நீ மாடுகளை அடக்கும் வீரன். எங்கேனும் உனது வாழ்வுரிமைக்காக வீரம் காட்டினால் தொலைத்துக் கட்டப்படுவாய்” என்று யார் யாரோ மறைமுகமாக எச்சரித்து வருவதை ஜல்லிக்கட்டு வீரர்கள் என்றைக்குப் புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டது முதல் அதன் வரலாறு நெடுகிலும் ஆண்டுதோறும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலைத் தயாரித்துப் படித்தால் நாகரிகமடைந்த எந்தச் சமூகமும் வெட்கித் தலைகுனியவே நேரிடும். “காளையின் கூரிய கொம்புகள் என் வீரமகனின் வயிற்றில்தான் குத்தியிருக்கின்றன; முதுகில் அல்ல” என்று எந்தத் தாயும் பெருமைப்பட்டுக் கொள்வது கிடையாது. ஜல்லிக்கட்டுச் சாவுகளால் ஆண் துணையற்று அனாதைகளான குடும்பங்கள் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கின்றன.

மனிதர்களின் கூட்டத்தைப் பார்த்து மாடுகளும், மாடுகளைப் பார்த்து மனிதர்களும் மிரண்டு ஓடி, மிதிபட்டுச் சாவதை வீரவிளையாட்டாகப் பார்த்து ரசிக்கும் எவரையும் வீரம் மற்றும் விளையாட்டு குறித்த பார்வையற்றவர்களாகக் கருத வேண்டியிருக்கிறது.

- ஜெயபாஸ்கரன்

Pin It