karunadhini 350எந்த ஒரு பிரச்சனை என்றாலும், அதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா.

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கருணாநிதி - கருணாநிதி என்று வசை பாடித் தப்பித்துக்கொள்ள முயல்பவரும் அவர்தான். நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் இதைக் காணமுடிந்தது.

நான் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்பேன் என்று சொல்லியே முதல்வர் ஆகும் அவர், நாற்காலியில் அமர்ந்தவுடன் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர, வேறு எந்த முயற்சியையும் அக்கறையாகச் செய்வதாக இல்லை.

கடந்த 21.06.2016 அன்று பேரவையில் கச்சத்தீவு குறித்த விவாதம் எழுந்தது. உடனே ஜெயலலிதா, ‘கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்’  என்று சொன்னார். அதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கொடுத்த தெளிவான விளக்கத்தைக்கூடக் கேட்பதாக இல்லை ஜெயலலிதா. கச்சத்தீவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

கொஞ்சம் அதைப் பின்னோக்கிச் சென்று பார்த்துவிட்டு நம் கதைக்கு வரலாம்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில், தென்மேற்குக் கரையில் ஏழு தீவுகள் இருக்கின்றன. அவை அனலைத்தீவு, ஏழவைத் தீவு, நயினார் தீவு, புங்குடுத்தீவு, நெடுந்தீவு, மண்டைத்தீவு, லெய்டன் தீவு.

இதில் நெடுந்தீவில் இருந்து பதினெட்டு மைல் தூரத்திலும், இராமநாதபுரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தூரத்திலும், இருக்கும் சிறுதீவு- தான் கச்சத்தீவு. இதன் நீளம் ஒன்றரை கிலோ மீட்டர், அகலம் 350 மீட்டர், பரப்பளவு 285-.2 ஏக்கர்.

இத்தீவில் குடிநீர் இல்லை. அனலைத்தீவில் இருந்து தான் கொண்டுவரப்படுகிறது. திருவாடானையைச் சேர்ந்த மீனவர் சீனிக்குப்பன் கட்டியது தான் இங்குள்ள அந்தோணியார் கோயில். நாயக்க மன்னர்களால் சேதுபதி அரசர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கச்சத்தீவும் ஒன்று.

இந்தியாவும் இலங்கையு-ம் சுதந்திரம் பெற்ற பின்னர், இராமநாதபுரம் சேதுபதியின் அதிகாரம் பெற்ற திவான் பொன்னுச்சாமி பிள்ளையிடம், கே.என்.முகமது மீர்சா மரைக்காயர் கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தார்.

அந்தக் குத்தகைப் பத்திரத்தில் இராமநாதபுரம் ஜில்லா இராமே-ஸ்வரம் சார்பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இருக்கும் சம-ஸ்தானத்துக்குப் பாத்தியமான கச்சத்தீவு என்று எழுதப்பட்டுள்ளது.

1936&40 ஆம் ஆண்டுகளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரிஸ், இதை ஒப்புக் கொண்டு, கச்சத்தீவு இலங்கைக்கு உரியது இல்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

1955ஆம் ஆண்டுகளில் சிங்கள மொழி மட்டும் என்பது உச்சத்தில் எழுந்தபோது, தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த, கச்சத்தீவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிங்களக் கடற்படையினர், கச்சத்தீவை நெருங்கி, பயிற்சி மேற்கொள்ள முனைந்தனர்.

1974ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்த போது, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்.

கச்சத்தீவு தமிழக மீனவர் வாழ்வாதாரத்தின் பகுதி என்பது ஒருபுறம் இருக்க, நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில்,கடற்படை அரண் அமைத்தல், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான பயிற்சித்தளம் அமைத்தல், போர் விமானங்களுக்கான இறங்குதளம் அமைத்தல், ரேடார் நிலையங்கள் அமைத்தல் போன்றவைகளில் முக்கியத் தளமாகவும் அமைகிறது. இன்று சீனாவின் துணையுடன் இது இலங்கைக்குச் சாதகமாக இருக்கிறது.

இவைகளை எல்லாம் கருதித்தான், “கச்சத்தீவை இலங்கைக்குச் சொந்தம் என்று அறிவித்தார்கள், பதைத்தோம், துடித்தோம்!” என்று கழகத்தின் ஆற்றாமையை அறிவித்தார் அன்றைய முதல்வர் கலைஞர்.

அது மட்டும் அல்லாமல் 1974 ஜுன் 29 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் கலைஞர். இக்கூட்டத்தில் பொன்னப்பநாடார் (ப.காங்), ஏ.ஆ.மாரிமுத்து, ஆறுமுகசாமி (இ.காங்), திருப்பூர் மொய்தீன், அப்துல் வகாப் (மு.லீக்), அரங்கநாயகம் (அதிமுக), ம.பொ.சிவஞானம், இ.எஸ்.தியாகராஜன் (தமிழரசுக் கழகம்), ஏ.ஆர்.பெருமாள், காந்திமோகன் (பா.பிளாக்) மணலி கந்தசாமி (கம்யூனிஸ்ட்), ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கியகட்சி) ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்கு எதிராகத் தீர்மானம் இயற்றக் கலைஞரே காரணமாக இருந்திருக்கிறார்.

இதில் அதிமுக உறுப்பினர் அரங்கநாயகம் கையெழுத்து இடாமல் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் எங்கும் பொதுக் கூட்டங்கள் நடத்திக் கண்டனங்கள் தெரிவிக்கச் செய்தவர் கலைஞர். 1974 ஆகஸ்ட் 21ஆம் நாள் சட்டமன்றத்தில் கச்சத்தீவுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவரும் கலைஞர்தான்.

இவரைப் பார்த்து வாய் கூசாமல் ஜெயலலிதா சொல்கிறார், கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார் என்று! சரி ஜெயலலிதா என்ன செய்தார்?

அவர் முதல்வராக வரும் போதெல்லாம் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு சரி. ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ததாக இல்லை.

23-07-2003-ல் பிரதமர் வாஜ்பேயிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே நல்லுறவு- பேணப்பட வேண்டும் எனவும், கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்த செய்தியை கலைஞர் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் கச்சத்தீவில் இலங்கை நாட்டின் இறையாண்மையைக் கலைஞர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார் என்றால், தமிழக அரசால் இலங்கைக்குத் தாரை வார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படிச் செய்ய முடியாது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் தான்.

இந்தியாவின் தலைநகர் டில்லியும், இலங்கையின் தலைநகர் கொழும்புவும் தான் நேரடியாகப் பேச முடியும். இது அயல் நாட்டு விவகாரம்.

கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று வாஜ்பேயிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தைக் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு அவர்தான் இனி விளக்கம் தர வேண்டும்.     

Pin It