- 1 ‍

'மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம்' என்ற தலைப்பில் முனைவர் வே.பாண்டியன் சமீபத்தில் கீற்றில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒருவர் எழுதும் கட்டுரையில் தனக்கு தோன்றும் கருத்தை முன்வைக்க உரிமையுண்டு. அது கட்டுரையாளரின் கருத்து சுதந்திரம். ஆனால் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ஒரு இயக்கத்தின் மீது சேற்றைவாரி இறைப்பது நாகரீகம் அல்ல. அதே போல தான் விரும்பும் நிலைபாட்டை அனைவரும் எடுக்க வேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல.

அவரது அந்த கட்டுரையின் சாரம் இதுதான்.

மார்க்சிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகளின் நிலைபாடுகளை ஆதரிக்க வெண்டும், இலங்கைப் பிரச்சனையில் விமர்சனம் செய்யக்கூடாது. இலங்கையில் தனிநாடுதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தீண்டாமையெல்லாம் ஒரு முக்கிய பிரச்சனையே அல்ல, எனவே இலங்கை பிரச்சனை தீர்ந்தவுடன் அதை பார்த்துக் கொள்ளலாம். இந்த கருத்தைதான் முனைவர் வே.பாண்டியன் சொல்ல வருகிறார். அதை நேரடியாக சொல்லும் நேர்மை இல்லாமல் ஆலயநுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்துகிறார்கள் எனத் துவங்கி அவரும் குழம்பி படிப்பவர்களையும் குழப்புகிறார். முனைவர் அல்லவா?

அவரை போல சுற்றிவலை(ளை)க்க தேவையில்லை, அவருக்கான பதிலை நேரடியாக சொல்லலாம். இலங்கையில் இருக்கும் வஞ்சிக்கப்பட்ட, வாழ்க்கையை இழந்துநிற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்கமுடியுமே அல்லாது புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்கமுடியாது. புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்காதவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள் என்ற குற்றச்சாட்டு மிகவும் பாசிசதனைமை வாய்ந்தது என்பதை இவரைப் போல முனைவர்கள் உணர்வதில்லை. இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட பின் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உலகத்திற்கு இரண்டு வாய்ப்புகளே இருப்பதாகக் கூறினார். ஒன்று அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டும் அதாவது யோக்கியன் எல்லாம் என்பக்கம் வா! அப்படி நிற்காதவர்கள் பின்லேடன் ஆதரவாளர்கள், அதாவது அயோக்கியன் கூட்டாளி என்றார். (தமிழ் தேசியவாதி அய்யா முனைவரே.. சார்சு புசு என்று கூட தங்களை அழைத்துக்கொள்ளுங்கள்) அதேபோல தமிழகத்தில் சில நபர்கள் புலிகளை கேள்வி கேட்காமல் ஆதரித்தால்தான் இலங்கைப் பிரச்சனையை பற்றி பேச முடியும் இல்லையெனில் பேசுபவர்கள் அங்கு நடக்கும் கொலைகளுக்கு ஆதரவான நிலைபாடு எடுப்பதாக முத்திரை குத்துகின்றனர். இந்த உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தனர் என்பது இருக்கட்டும், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள லட்சக்கண‌க்கான அப்பாவி தமிழ்மக்களைவிட இவர்களுக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதுதான் முக்கியமாகப்படுகிறது.

1983 முதல் மார்க்சிஸ்ட் கட்சி என்று ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதேசம்தான் தீர்வு என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போதும்தான். இன்றைய அம்மக்களின் நிலையை முதலில் மாற்ற அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்பதை விடுத்து, போரை முடித்த ராசபக்சே மீள்குடியமர்த்துவதை தாமதப்படுத்துவதை எதிர்த்து, அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீள்குடிய‌மர்த்தப்படும் பிரதேசங்களில் விவசாயம், சுகாதாரம், வேலை, கல்வி போன்ற அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த அரசியல் ரீதியாக நிர்பந்தங்களை உருவாக்குவதை விட இப்போது முதன்மைப் பணி வேறெதுவும் இல்லை. இதற்காக அனைவரும் தமிழகத்தில் போராடுவதுதான் அறிவுடைய செயலாக இருக்கும். இப்படி மாற்றுக் கருத்தை முன்வைத்தால் அதற்கும் ஒரு கூட்டம் இலங்கை கைக்கூலிகள் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் இவர்களால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று சொல்லத் தெரியாது. கொஞ்சம் கூட கூச்சமின்றி இல‌ங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு என்று எழுதுவது கயமையின் உச்சகட்டம். ஆதாரம் இல்லாமல் யாரும் யார்மீதும் குற்றம் சுமத்த முடியும் என்பதை கட்டுரையாளர் உணர்வது நல்லது. ஆக இணைய தளத்தில் இடம் கிடைப்பதாலும், நேரம் கிடைப்பதாலும் ஆதாரமற்ற எதையும் எழுதுவது __________ சமம். கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க. இவர் எழுதுகின்ற கட்டுரையைப் படித்தவுடன் ஆதவன் தீட்சன்யா எழுதிய இது வேறு மழை கவிதைதான் நினைவுக்கு வந்தது.

- 2 -

அடுத்து முனைவரின் அரிய கண்டுபிடிப்புக்கு வருவோம். "மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம்". இதை கண்டுபிடித்து அவர் அடுக்கும் ஆதாரங்களும், தீர்வும் புல்லரிக்க வைக்கிறது. மார்க்சிஸ்டுகளின் குறைந்த பட்ச வரலாற்றைக் கூட தெரிந்துக்கொள்ளாமல், நமது நாட்டின் சாதிய அமைப்பின் அழத்தை, அதன் வெளிப்பாட்டு தளங்களை புரிந்துக்கொள்ளாமல் முனைவர் எழுதியது நகைப்பிற்குறியது. அதே போல மார்க்சிஸ்டுகள் ஏதோ ஆல‌ய நுழைவுப் போராட்டத்தை மட்டுமே நடத்துவது போலவும் அதனால் தமிழகத்தில் சாதிகளுக்கிடையே பகைமை உண்டாகி பழந்தமிழர் ஒற்றுமை சிதைந்துவிடும் என்றும் கவலைப்படுகிறார். இப்போது பழம் பெருமை உள்ள தமிழர்கள் நிலையைப் பார்ப்போம்.

ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், இரட்டை டீ கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட்கார முடியாமல், பொதுக்குழாய்களில், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாமல், குளங்களில் குளிக்க முடியாமல், பொதுப்பாதைகளில் நடக்கமுடியாமல், குடைபிடிக்க முடியாமல், செருப்பு போட முடியாமல், தோளில் துண்டு போடமுடியாமல், பொது மயானத்தை பயன்படுத்த முடியாமல், தனி மயானத்திற்குப் பாதை மறுக்கப்பட்டு, சலூன்களில் முடிவெட்ட முடியாமல், துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமல், பிணக்குழி தோண்ட கட்டாயப் படுத்தப்படுவது, மலம் அல்ல கட்டாயப்படுத்தப்படுவது, சாவு சேதிச் சொல்ல கட்டாயப்படுத்தப்படுவது, தப்படிக்க கட்டாயப்படுத்தப்படுவது, செத்த வில‌ங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்தப்படுவது, தலித் பெரியவர்களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதைப் பகுதியை அழைக்காமல் விடுவது, தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அவர்களை துன்புறுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித் தரும் பணத்தை கையால் தொடாமல் இருப்பது, தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிகளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத்துவது, கிராம பொது சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்தாமல் தடுப்பது, தலித்துகள் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் - அரசு அலுவலங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை செய்துதர மறுப்பது, தலித் மக்களிடம் காவல் துறையின் பாரபட்சம் என தொடர்கிறது.... அதாவது பச்சைத் தமிழன் மற்றொரு பச்சைத் தமிழன் மீது தொடுக்கும் தாகுதல்களில் குறைந்தபட்ச பட்டியல் இது.

இது ஏதோ கற்பனையில் பட்டியலிடப்பட்டது அல்ல. தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து, தீண்டாமை குறித்த சர்வே எடுத்தது. உண்மை நிலையை பட்டியலிட்ட பின்பு தமிழக அரசு ஏழாயிரம் கிராமங்களில் தீண்டாமை நிலவுவதை ஒப்புக்கொண்டது.

குடும்பத்தில் பெண்களை அடுக்களைக்குள் ஒதுக்கி வைப்பது எப்படி இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ அப்படி ஊருக்கு வெளியே சேரி என்ற பெயரில் தலித் மக்களை ஒதுக்கி வைப்பதும் சமூக பொது புத்தியில் இயல்பாய் இருக்கிறது. இந்தியாவில் ஒரு அமெரிக்க அளவும், தமிழகத்தில் பாதி இல‌ங்கை அளவும் மக்கள் தொகையில் உள்ள தலித் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த மண்ணில் வர்க்கம் இருக்கிறது. அதற்குப் பக்கதிலேயே சாதியும் இருக்கிறது. இங்கு காற்றுக்கும், பாசன கால்வாய்க்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளிக் கட்டிடத்திற்கும், ஊர் பொது இடத்திற்கும், உண்ணும் உணவிற்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும்மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயான‌த்திற்கும், சாமிக்கும், பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.

இந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட பின்பு நடந்த முதல் மாநாட்டில் சாதிய வேற்றுமைகளை எதிர்த்துப் போராட அறைகூவல் விடப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் பெயர் "பறையன் கட்சி". காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று இயக்கம் கண்டதுதான். அதே போல அந்த மக்களுக்காக வாழ்ந்து மறைந்த சீனுவாசராவ் பார்ப்ப‌னர் என்பதைவிட உழைக்கும் மக்கள் தலைவராகவே அடையாளம் காணப்பட்டார். விழுப்புரம் மாவடத்தில் 1988ல் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அரசூர் சேட்டு (முனைவர் ஊருக்குப் பக்கம்தான்) கொலை செய்யப்பட்டதும், அங்கு 152 குடிசைகள் கொளுத்தப்பட்டதும் திரவுபதி அம்மன் ஆலைய நுழைவு உரிமைக்கான போராட்டம் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. திருப்பூர் ரத்தினசாமி கொலை செய்யப்பட முதல் காரணம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார் என்பதுதான். சாதி திரட்சிக்கான போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் எப்போதும் ஆதரித்தது இல்லை. ஏனெனில் அது கலவரங்களையே உண்டாக்கும் எனத் தெரியும். ஆனால் தலித் மக்கள் எழுச்சியை வரவேற்றது. ஏனெனில் அது காலகாலமாக அடக்கப்பட்ட கோபம்.

கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி சென்னை அண்ணாசாலையிலிருந்து கோட்டையை நோக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் பேரணி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட அந்தப் பேரணியில் தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்களில் சரிபாதி பேர் தேவர்களும், வன்னியர்களும் உள்ளிட்ட தீண்டாமையை கைக்கொள்ளும் ஆதிக்க சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியால் இது எப்படி முடிந்தது எனில் அனைத்து சாதியில் இருக்கிற உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டியதால்தான் சாத்தியப்பட்டது. இது ஒரு சிறிய முயற்சிதான் செல்ல வேண்டியதூரம் அதிகம் என்பதை அறிவோம்.

- 3 -

பல ஆண்டுகலாய் களத்தில் கிடைத்த அனுபவத்துடன் தான் தீண்டாமை எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. இதனால் ஆதிக்க சாதியினர் கோபித்துக்கொள்வார்கள் என்பதும் அவர்களுக்கு வகுப்பெடுத்து, விய‌ர்த்தால் துடைத்து விட்டு அவர்கள் முழுமன சம்மதத்துடன்தான் தீண்டாமையை ஒழிப்பது என்பது பம்மாத்து வேலை.

முனைவர் அய்யா என்ன சொல்கிறார்..

"........தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும், அது கண்ட பெருமிதங்களையும், அந்தப் பெருமிதங்களில் பங்கேற்ற அனைத்து மண்ணின் மக்களையும், இந்த மண்ணின் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அபாயங்களும், அந்த அபாயங்களை எதிர்கொள்ள இந்த மண்ணின் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தங்களையும், அக்குவேறு ஆணி வேறாக எடுத்தியம்பினால், இம்மக்கள் விரைவில் மனமுதிர்ச்சி அடைவார்கள்." என அப்பாவித்தனமாக எழுதுகிறார்.

நாம் எல்லாம் ஒரே தமிழருப்பா என சாதி வெறிபிடித்த ஆதிக்க சக்திகளிடம் சென்று பேசிப்பார்த்தால் தெரியும் "அக்குவேறு ஆணிவேறாக" கிழிவது எது என்று. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடிகள் தான் பார்ப்பனிய சிந்தனைகளை தூக்கித் திரிகின்றனர் என்பதை மறக்கிற அல்லது மறைக்கிற வாதம் இது. ஒருவர் பிறப்பால் பார்ப்பனராய் இருந்தாலும் அவர் உழைப்பாளி மக்களுக்காக நிற்பதை கொச்சைபடுத்துகிற முனைவர்தான் ஆதிக்க சாதியினருக்கு வகுப்பெடுக்கச் சொல்கிறார். மற்றொரு இடத்தில்

"..........பார்ப்பனீய வர்ணாசிரமக் கோட்பாட்டால் செயற்கையாக சிதைக்கப்பட்ட, தனித்துவமான, பழம்பெரும் இந்திய நிலப்பரப்பின், சாதிய வேற்றுமைகளை இவர்கள் திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு, சாதிய வேற்றுமைகளைக் களையவேண்டிய ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை நேர்மையுடன் முன்னெடுக்காமல், வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர்" என எழுதுகிறார். அதாவது மார்க்சிஸ்டுகள் திடீரென ஆல‌ய நுழைவுப் போராட்டம் நடத்துகிறார்கள், தலித் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று எழுதிவிட்டு, மேற்கண்ட பத்தியில் இங்கு உள்ள சாதிய ஆபத்தை புரிந்துகொள்ளவில்லை, வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அவரது கூற்றில் கூட அவரால் உண்மையாய் இருக்க முடியவில்லை.

முனைவரின் பிரச்சனை மிகவும் எளிதானது. தான் கட்டமைக்கின்ற தமிழ் தேசிய கருத்தில் சாதி பிரச்சனைகளை கண்டும் காணாமலிருக்க வேண்டும் என்பதுதான். இதற்கு இவர் மார்க்சிஸ்டுகளை வசைமாரிப் பொழிகிறார். முல்லை பெரியாறு பிரச்சனை முதல் மேற்குவங்கம் வரை உதாரணம் காட்டுகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை பேசி தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைபாடு. ஏனெனில் அது மற்றொரு தேசிய இனத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரே தேசிய இன மக்களான பாண்டிச்சேரி தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு டி.எம்.சி தண்ணீரை தமிழ் தேசிய இனம் கொடுக்காமல் ஏமாற்றுவது குறித்து தமிழ்த் தேசியவாதிகள் வாய்திறக்க மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. அதற்கும் ஒரு கட்டுரை எழுதி இலங்கைப் பிரச்சனையை அதில் நுழைத்து திசைத் திருப்பினாலும் திருப்புவார்.

- 4 -

மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பன தலைமையில் சிக்கி இருப்பதாக அந்த கட்சி உறுப்பினர்களை விட முனைவர்தான் மிகவும் கவலைப்படுகிறார். அவருக்கு இந்தக் கவலை தேவையற்றது. ஏனெனில் இந்தத் தலைமைதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்பணித்துள்ளது. தமிழக உழைக்கும் மக்களின் உரிமைக்காக நிறைய போராடி உள்ளது. ஒருவரை கொச்சைப்படுத்த அவரது சாதியைப் பயன்படுத்துவது அறிவுடைய செயலா என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவில் ஆதிக்க‌ சாதி என்று அழைக்கப்படுகிற நம்பூதிரி சாதியில் பிறந்த ஈ.எம்.எஸ் என்கிற வரலாற்று மனிதன் முதலமைச்சரானபோது போட்ட‌ கையெழுத்து தலித் மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கும் சட்டத்திற்குப் பயன்பட்டது என்பதை மறந்துவிடகூடாது. தான் ஒரு தலித் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி இன்று வரை தமிழகத்தில் உள்ள ஐம்பது லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை ஒடுக்கப்பட்ட நிலமற்ற மக்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்.

சமீபத்தில் மட்டும் மார்க்சிஸ்டுகளின் தொடர்சியான போராட்டத்தினால், அருந்தியர்களுக்கு 3 சதம் உள் ஒதுக்கீடு கிடைத்தது. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில், நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வநாதர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில், விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில், நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில், ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது. தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன.

மார்க்சிஸ்டுகள் இப்படிப்பட்ட ஆலயங்களை கடவுள் இருக்கும் இடமாக பார்க்கவில்லை, அது தீண்டாமை என்ற அதிகாரத்தை ஆதிக்க‌சாதிக்கு வழங்கும் இடமாக இருப்பதால் அதில் நுழைந்து அதிகாரத்தை கேள்வி எழுப்ப விரும்புகிறது. இந்தப் போரட்டங்களில் ஏராளமான ஆதிக்க‌சாதியைச் சார்ந்த மக்களும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளைக்காரர்கள் தலித் மக்களுக்கு கொடுத்த பஞ்சமி நிலம் இன்று அந்த மக்கள் கையிலிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கட்சி. ஆக..

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் தலித் மக்கள் விடுதலையை நிலம் என்ற வாழ்வியல் உரிமை சார்ந்த, உழைக்கும் வர்க்கம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுகிறது. வர்க்கப் போராட்டத்திற்கான அணி திரட்டல் தாமதப்பட காரணம் இங்கு வர்க்கம் சாதியாய் பிளவுபட்டு நிற்பதுதான். அதனால்தான் சாதியப் பிரச்சனைகளையும், வர்க்க அணி திரட்டலையும் இணைத்து நடத்துகிற கடினமான பணியை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது.

அதே நேரம் உலகமயம், அது விதைக்கிற தாராள‌மயம் தனியார்மயம் நிதிமூலதனம் போன்றவை இன்று அனைத்துப் பகுதி மக்களையும் வீதியில் நிறுத்துகிறது. தேசங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, இனங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, மொழிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது, சாதிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது ஆகவே தமிழ் முதலாளியும், பார்பன - பனியா முதலாளிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாய்த்தான் இருக்கின்றனர். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சாதியத்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்று உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து போராடுவதுதான் அதற்கு முதல் நிபந்தனை சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதுதான். அந்தப் பணியை செய்யும் மார்க்சிஸ்டுகளுடன் தமிழ்த் தேசியவாதிகளும் கைகோர்ப்பதுதான் இன்றைய தேவை. முனைவர்கள் விழித்துக்கொள்வார்களா?

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

Pin It