தமிழகத்தின் தென்கோடிக் கடற்கரைப் பட்டினம் இராமேசுவரம்.

இங்கு வாழும் மீனவர்கள், அவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடித் தொழிலுக்குச் சொல்லாமல் ‘பிழைப்புத் தேடி’ வெளியூர்களுக்குச் சென்று கொண்டிருப்பதாக நாளிதழ்கள் செய்தி தருகின்றன.

என்ன காரணம்? இம்மீனவர்களுக்கு இந்திய & இலங்கை அரசுகளால் ஏற்பட்ட நெருக்கடிகளும், உயிர் ஆபத்தும்தான் காரணம் என்கிறார்கள் மீனவ மக்கள்.

நட்பு நாடு என்று இந்தியாவால் நீட்டி முழக்கப்படும் இலங்கையின் அமைச்சர் சொல்கிறார், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம் என்று.

இலங்கை அமைச்சரின் இப்பேச்சுக்கு இந்தியா தரப்பிலிருந்து ஒரு மறுப்புகூட வெளிவரவில்லை.

மாறாக, இந்தியா சொல்கிறது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று. அங்கு என்ன ‘மைல்’ கல்லா நட்டு வைத்திருக்கிறார்கள்? கடலில், துல்லியமாகப் பார்த்து எல்லை தாண்டாமல் இருக்க.

சில வேளைகளில் எதிர்பாராமல் எல்லை தாண்டுவது உலக மீனவர்களிடம் இயல்புதான். ஒன்று அவர்களை விட்டுவிடுவார்கள், அல்லது அவர்களைப் பிடித்து மீண்டும் அவர்கள் நாட்டில் ஒப்படைத்து விடுவார்கள்.

சுட்டுக்கொல்வேன் எனும் இந்த இரத்த வெறியை, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய மீனவர்களை, இந்திய எல்லைக்குள் நுழைந்து அவர்களை அடிப்பதும், மீன்களைப் பறிப்பதும், வலைகளை அறுப்பதும், சித்திரவதை செய்வதும், கைது செய்வதும், சுடுவதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் இலங்கைக் கடற்படைதான்.

அதனால் பல்வேறு பொருளாதார இழப்புகள், வாழ்வாதார இழப்புகள், உயிர் இழப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள் தமிழக மீனவர்கள்.

இலங்கை கடற்படைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று போராடினார்கள்.

ஏதாவது ஒரு தீர்வு கிடைக்குமா என்ற நப்பாசையில் இலங்கை மீனவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்திப் பார்த்துவிட்டார்கள் தமிழக மீனவர்கள்.

அனைத்தும் கானல் நீர். இவர்களை மனிதர்களாகக் கூட மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை, ஆதரவுக் கரம்நீட்டவில்லை, உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கைக்கு ஆதரவு நிலையில் இந்தியா. தமிழர்களுக்கு எதிர்நிலையில் பா.ஜ.கவின் மோடி அரசு. பாவம், என்ன செய்வார்கள் மீனவர்கள்.

அவர்கள் மனிதர்கள். வாழவேண்டும். பிழைக்க வேண்டும். பிழைக்க வெளியூர்களுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள்.

கரையோரம் தள்ளாடி மிதந்து கொண்டிருக்கிறது அவர்களின் படகுகள், அவர்களின் வாழ்க்கையைப் போல.

அல்லற்பட்(டு) ஆற்றா(து) அழுதகண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர். இது மோடிக்கு மட்டுமல்ல மக்களின் சிந்தனைக்கும் கூட.

Pin It