யதேச்சையாக
கடக்கும் அவளை
எங்கோ பார்த்த ஞாபகம்...

வலப்புருவத்தின் மேல்
கொப்பளித்துக் கிடக்கும்
கருவண்ண மச்சத்தை
தொட்டு பழகிய விரல்
நீள முயற்சிக்கையில்
அடக்கிக் கொள்கிறேன்...

வண்ணம் மாற்றி போட்ட
கைவளையலின் தேர்வில்
அவளென்று முடிவு செய்தாலும்
தொங்கு கம்மல் இப்போது
தோடாகிப் போனதில்
சந்தேகம் உதித்தது கொஞ்சம்...

முறுக்கிக் கொண்டேயிருக்கும்
தாவணி முனைக்குப் பதிலாய்
சேலையில் முடிச்சுட்டு
அவிழ்தவண்ணம் இருப்பதில்
அவளேதானென
அடித்துச் சொல்கிறதென் மனம்...

கருவளையத்திலிருந்து
எட்டிப் பார்க்கும் விழிகளுக்கு
அவளின் சாயல்...

ஒவ்வொரு சொற்களுக்கும்
பொருத்தமான கையசைவில்
நிறைந்து கிடக்கிறது
அவளின் அநேக அசல்...

இத்தனை என் யோசனைக்கும்
முற்றுப்புள்ளி வைப்பதுபோல்
அடுத்த நிறுத்தத்திற்கு
தயாராகிறாள் அவள்...

மறந்து போனாளா?-இல்லை
மறந்ததுபோல் நடித்துப் போகிறாளா?

உயிர்த் தோழியாக இருந்தவளை
உலுக்கியாவது கேட்டிருக்கவேண்டும் நான்...

ஆறுதலுக்கு தோள் தந்தவளை
அரற்றியேனும்
கேட்டிருக்க வேண்டும் நான்...

மீண்டுமொரு ரயில்பயணத்தில்
அவளெதிர் இருக்கையில்
தேடக்கூடும் என்னை...

பகிரக் கதை ஆயிரம் இருக்கிறது
கிடைக்கவேண்டும் நான்...!

- கனகா பாலன்