ஆதியின் இசையை சற்றுமுன்
என் அந்தரங்கத்தின் அழுகிய
பக்கங்களில் இருந்து மீட்டெடுத்தேன்.
நீண்ட நாட்களாக என்
செவிப்பறையில் முடிவற்று
ஒலித்துக் கொண்டிருந்த
அந்தக் குரலை ஒரு
வண்ணமற்ற பிண்டமாக
இன்று பார்த்தேன்
அதன் வடிவத்தை என்னால்
சொல்ல முடியவில்லை
அதன் மனத்தை என்னால்
கனிக்க முடிவில்லை
ஆனாலும் அது என்னை
கிரங்கச் செய்கின்றது
என் உயிரின் மூடியை
உடைத்து ஓர் பீரை போல
உணர்ச்சிகளை பொங்கச்
செய்கின்றது அதை பிடித்து
வைத்துக் கொள்வதற்கான
கொள்கலன் எதுமே என்னிடம்
இல்லை. என் வெற்றிடம்
எங்கும் ஏற்கெனவே
துயரத்தால் நிரப்பப்பட்டுவிட்டன.
ஆதியின் இசை ஒரு நாயைப்
போல என்னையே சுற்றி சுற்றி
வருகின்றது
அதை கடந்து வெகு தொலைவு
ஓடுகின்றேன் இன்னும்….
இன்னும்…. இன்னும்…..
ஆனாலும் அது என்னை
விடவில்லை… அதோ அடியற்ற
ஒரு பெரும் பள்ளத்தாக்கில்
வெள்ளைத் துணி
போர்த்தப்பட்ட
என் உடல் ஒரு
இறகைப் போல மிதந்து சென்று
கொண்டிருக்கின்றது ஆதியின் இசையை
கேட்டுக்கொண்டே…
முடிவில்லாத பயணத்தில்….
முடிவில்லாத இசையை…

- செ.கார்கி

Pin It