சிரிமா-சாஸ்திரி உடன்படிக்கை என்பது இலங்கை மலையகத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. 1948ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை நாடற்ற நிலையில் இருந்த பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்காவும் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் செய்து கொண்ட ஒப்பந்தமே அது.
இலங்கையில் 1948ஆம் ஆண்டு ‘விடுதலை’க்குப் பின் முதலாவதாக நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரான ஏழு உறுப்பினர்கள் மலையகத் தமிழர்களால் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பின்பு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அரசு, 1948ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் குடியுரிமை தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் பத்துலட்சம் பேர்களின் குடியுரிமைப் பறிப்புக்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது..
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமுதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களிருந்து இலங்கையில் உள்ள மலைப் பகுதிகளில் புதிதாக உருவாகவிருக்கும் காபிப் பயிர் உற்பத்திக்காக இலட்சகணக்கானோர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழகத்தில் நிலவிய கொடும் பஞ்சத்தை காலனிய ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு,.தங்களின் அதிகாரத்தில் உள்ள காலனி நாடுகளுக்குக் கூலிகளாக இவர்களை அழைத்துச் செல்லத் தொடங்கினர். தாய் மண்ணிலிருந்து குடிபெயர நிர்ப்பந்திக்க வைத்த அவலநிலை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையும் நடந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தொடக்கக் காலத்தில் சென்ற பலரும் தமது தாய்மண்ணுக்குத் திரும்பவே இல்லை. அந்த மண்ணோடு மண்ணாகிப் போனதால் இவர்களின் சந்ததிகள் மலைபகுதியோடு இரண்டற மானார்கள். பெருந் தோட்ட உருவாக்கத்திற்காகவும், நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளிலும் தங்களது உழைப்பையும் உயிரையும் வழங்கியவர்களின் சந்ததிகள், நூறு ஆண்டுகள் கடந்த பின், தங்களின் தேசியத்தைப் பற்றிய கேள்விகள், பேரினவாத அரசியல் களத்தில் உருவெடுத்துள்ளதை எதிர்கொண்டனர்.
1927ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டொனமூர் குழுவினர் முன்மொழிந்த சர்வசன வாக்குரிமையை இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என சிங்களத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு முகெலும்பாக உள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினருக்கு வாக்களிக்கும் உரிமையை டொனமூர் குழு வழங்கியது
1880களில், பௌத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலமாகத் தொடங்கிய மதவாதம், சிங்கள பெரும்பான்மைவாதத்திற்கும், ஏனைய மதச்சிறுபான்மை இனங்களுக்கெதிரான உணர்வுகளை உருவாக்கவும் காரணியானது.
1920களில் வெளிப்பட்ட சிங்களப் பெரும்பான்மை இனவாதம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கெதிரான செயல்பாட்டுத் தடத்தை வடிவமைக்க தொடங்கியது. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தால் விதைக்கப்பட்டுள்ள இனவாத வித்துக்களின் வேர்கள் இடையறுந்து போகவில்லை என்பதை, 1936ஆம் ஆண்டு சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய மந்திரி சபையினரின் நடவடிக்கை வெளிப்படுத்தியது.
1936ஆம் ஆண்டுக்குப் பின்பு, இனவாதம் தீவிரத் தன்மையைப் பெற்றது. தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் நாடு விடுதலையடைவதற்கு முன்பே தொடங்கி விட்டதை, 1920 காலம் முதல் தொடர்ந்து வரும் இனரீதியிலான ஆதிக்க நிகழ்வுகள் அரசியல் களத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளதைக் காணலாம்..
1956ஆம் ஆண்டு நடந்த செல்வா-பண்டாரநாயக்க உடன்படிக்கையை எதிர்த்து, பௌத்த பிக்குகள் நடத்திய போராட்டங்களும், பண்டாரநாயக்கா படுகொலையும், பௌத்த மத அமைப்புகளுக்குள் இனவாதம் உள்வாங்கப்பட்டுள்ளதன் உச்சத்தை இது வெளிப்படுத்தியது..
மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்க்கான சட்ட விதிகளை, அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சோல்பரி ஆணைக் குழுவினருடன் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்ட டி.எஸ். சேனநாயக்கா, ”இலங்கையருக்கான குடியுரிமை சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் உருவாக்கிக் கொள்ளும்” என்று, அரசியல் அமைப்பு. சட்ட விதிகளில் இடம்பெறும் வாய்ப்பை சோல்பரி ஆணைக் குழுவினருடன், ஏற்படுத்திக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 தொகுதி களில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது.
குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதும், குடியுரிமைப் பறிப்பு ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கெதிரானது என்று கூறிய தந்தை செல்வா, “இன்று மலையகத் தமிழர்களுக்கு நாளை நமக்கு” என்று எச்சரித்தார்.
சிரிமா – சாஸ்திரி உடன்படிக்கை என்பது, சம்பந்தப்பட்ட மக்களிடம் கள ஆய்வு நடத்தாமல் இரு நாடுகளுக்கிடையில் நிறைவேற்றப்பட்ட பண்ட மாற்று உடன்படிக்கையைப் போல் நடந்தேறியது.
இந்த உடன்படிக்கையின் படி 9,75,000 பேர்கள் நாடற்றவர்களாக இனங்காணப்பட்டனர். இதில் 5,25,000 பேர்களை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதென்றும், 3 லட்சத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டு உடன்படிக்கை நிறைவேறியது. மிகுதியாகவுள்ள 1,50,000 பேர்களின் குடியுரிமையைப் பின்வரும் காலங்களில் தீர்மானித்துக் கொள்ள இரு அரசுகளும் இணங்கின.
1974 ஆம் ஆண்டு நடந்த இந்திரா - சிரிமா உடன்படிக்கையின் படி, 1964 ஒப்பந்தத்தில் உட்படுத்தாத 1,50,000 பேர்களை இரு நாடுகளும் 75,000 ஆயிம் வீதம் ஏற்றுக் கொள்வதென்று முடிவானது.
1966ஆம் ஆண்டு முதல் மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் நடைபெற்ற கப்பல் போக்குவரத்து மூலம், தாயகம் திரும்புவோர் என்ற அடையாளப்படுத்தலுடன் .இவர்கள் தமிழகம் வரத் தொடங்கினார்கள்..1976ஆம் ஆண்டுகளில் தொடங்கிய தனி ஈழம் கோரிய ஆயுதப் போராட்டம். 1983ஆம் ஆண்டு காலத்திற்குப் பின்பு, தீவிரமடையத் தொடங்கியது.
மலையகப் பகுதியிலிருந்து மன்னார் வரையும் தொடர்ந்த தொடர்வண்டி சேவையை 1984ஆம் ஆண்டில் அரசு நிறுத்திக் கொண்டது. அது வரை நடத்தப்பட்டு வந்த மன்னார்-இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்படும் நிலை உருவானதால், . உடன்படிக்கையின்படி தாயகம் திரும்புவோரின் பயணமும் நிறுத்தப்பட்டது.
உடன்படிக்கையின் படி இந்தியாவிற்கு வர வேண்டிய ஆறு லட்சம் பேர்களில், 1984 ஆம் ஆண்டு இறுதி வரையும் 4,45,591 பேர்கள் மட்டுமே தாயகம் திரும்பி இருந்தனர் (1964 முதல் 1984 வரையும் இவர்கள் மத்தியில் உருவாகியுள்ள இனப்பெருக்கத் தொகையும் இதில் அடங்கும்) என்ற புள்ளிவிவரம் உள்ளது.
இந்தியா வந்து சேர வேண்டிய 6,00,000 பேர்களில் 1,54,409 பேர்களும் இலங்கையில் தங்கி விட்டனர். (இனப்பெருக்கத்தை முறையாகக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை அதிகமாகும்)
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றதில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் நாடற்றவர்களாக இருந்த அனைவரும் இலங்கையர்களுக்கான குடியுரிமையைப் பெறும் வாய்ப்பை இலங்கை அரசு உருவாக்கியது.
1977 முதல் 1983 காலப்பகுதி வரையும் தொடர்ந்து நடத்தப்பட்ட இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கில் குடியேறும்படி, ஈழத் தமிழர் தலைவர்கள் கோரினார்கள். இதை ஏற்று, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டகளப்பு போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் குடியேறினார்கள்
தொடக்கத்தில் இப்பகுதி பாதுகாப்பான நிலப்பகுதியாக தோன்றிய போதும் சில ஆண்டுகளில் இதுவும் பாதுகாப்பற்ற பகுதியாக மாறியது. இப்படிக் குடியேறியவர்களில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களும் இந்திய கடவுச்சீட்டுப் பெற்றுள்ளவர்களும் அடங்கியிருக்கக் கூடும். குடியேறிய இடங்களில், தங்களது இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்து கொள்ள முடியாமல் போன பலர் தமிழகத்தை நோக்கிப் படகுகள் மூலம் வரத் தொடங்கினர். இப்படி வந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைக் கடந்தது.
1983ஆம் ஆண்டுகளில் நடந்த இன வன்முறையில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக, இலங்கை அரசு வழங்கிய ‘அவசரகால’ கட்வுசீட்டைப் பெற்று விமான மூலமாக தமிழகத்திற்கு வந்த பலர் பல்வேறு மாவட்டங்களில் குடியேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் என்ற அடையாளத்தோடு தமிழக முகாம்களிலும் வெளியிலும் இவர்கள் (மாவட்ட காவல் தலைமை நிலையங்களில் இருப்புக்கான அனுமதியை நீடித்துக் கொண்டு) வாழ்ந்து வருகிறார்கள்
ஈழத்தமிழர்களுடன் முகாமில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களில் சிலர் மதுரை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று தங்களது குடியுரிமை தொடர்பாக வழக்குத் தொடுத்துள்ளனர். நீதிமன்றமும் இவர்களின் பிரச்சனையை மனிதநேயத்தோடு அணுகும்படி அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்துச் சென்றவர்களாலும் போதிய ஆவணங்களை சேகரித்து வழங்கமுடியாமல் போனது வருந்தத்தக்கது.
சிரிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி சட்டபூர்வமாக இந்நாட்டுக்கு வந்து சேரவிருந்த பலரும் தங்களது ஆவணங்களை வன்முறையின் போது இழந்து விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் 1964ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி இந்தியக் குடியுரிமை கோருவது முறையாகும். ஆனால்,முறையான ஆவணங்கள் இவர்களிடம் இல்லாத நிலையில், எப்படிக் கோருவது.?
“இலங்கை பாராளுமன்ற தொடர் இல 6. தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கை பிரசா உரிமை வழங்கும் பொருட்டு 2003ஆம் ஆண்டில் 35ஆம் இலக்க பிரசா உரிமை சட்டத்தை திருத்துவதற்கும் ஏனைய வசதிகளும் ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக் குழுவை (அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட 22 பேர் அடங்கிய குழுவை) இலங்கை நாடாளுமன்றம் கடந்த 2007 ஆகஸ்ட் 21ஆம் நாள் அமைத்தது.”
இந்தக் குழுவின் அறிக்கை “இலங்கையில் பிரசா உரிமை பெற முடியாதுள்ளவர்களும் எமது நாட்டுப் பிரசா உரிமைக்காகக் கோரிக்கை விடுத்துள்ளவர்களும் தற்போது “நாடற்றவர்களாக” உள்ளவர்களுமான ஏறத்தாழ 28,500 பேர்களுக்கு பிரசாவுரிமை வழங்க இயலுமாகக் கூடிய விதத்தில்” எனக் குறிப்பிடுகிறது.
“2008 பெப்ரவரி 14 அன்று உள்ளவாறு தமிழ் நாட்டிலுள்ள 117 முகாம்களில் 95,219 இலங்கை அகதிகள் வசித்து வருவதாகவும் அவர்களுள் 28,489 பேர்கள் நாடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கைப் பிரதி உயர் ஸ்தானிகர், இக்குழு முன்னிலையில் தெரிவித்தார்” (பாராளுமன்றத் தொடர் இல.06 ப.8) தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள 28,489 பேர்கள் நாடற்றவர்கள் என்பதை இலங்கை நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட பிரதிநிதிக் குழுவால் இனம் காணப்பட்டுள்ளதை அறியலாம்.
சிரிமா- சாஸ்திரி உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களும் தமிழக முகாம்களில் தற்பொழுது அகதிகளாக உள்ளனர் என்பதை இந்த அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியா வர வேண் டிய 6,00,000 பேர்களில் 4,45,519 பேர்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், ஆவணங்கள் ஏதுமின்றி முகாம்களின் உள்ள இந்திய வம்சாவளி இன மலையகத் தமிழர்களின் குடியுரிமை குறித்த ஆய்வை மத்திய மாநில அரசுகள் 1964ஆம் ஆண்டு உடன்படிக்கையோடு இணைத்தே அணுக வேண்டும்.
இவர்களின் குடியுரிமை குறித்த விருப்பத்தை அறிவதன் மூலம் நாடற்றவர்களாக முகாமிலும், முகாமிற்கு வெளியிலும் உள்ளவர்களை சிரிமா-சாஸ்திரி உடன்படிக்கைக்கு உட்படுத்தி, தாயகம் திரும்பியவர்கள் என்ற அடையாளத்துக்குள் இவர்களை, நடுவண் அரசு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் நாடற்றவர்களாக உள்ள இவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்பலாம்.