பர்வீனா காணமற்போன குழந்தைகளின் பெற்றோர்கள் அமைப்பின் தலைவி. புல்வாமா கிராமத்தவர்களை ஒருவிதமாக சமாளித்து அனுப்பி விட்டோம் என நிம்மதி அடைந்தாள். ஆனாலும் அவளுக்கு நன்றாகத் தெரியும் சமதுல்லாஹ்வும் குலாம் நபி வானியும் கிடைக்கவே மாட்டார்கள் என்பது. ஆனால் அந்த கிராமவாசிகளிடம் அதைப்பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டால் அவர்கள் துவண்டு போவார்கள் என்பதை பர்வீனா நன்றாக அறிவாள்.
அப்படித் துவண்டு போகாமல் அவர்கள் வெகுண்டெழுந்தால் அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். ஆகவே அனுப்பி விட்டது ஒரு பெரும் செயலாகவே தெரிந்தது பர்வீனாவுக்கு.
ஆனால் நெஞ்சம் கனத்தது. கண்கள் பனித்தன. அந்த அப்பாவிகளிடம் நீங்கள் தேடும் சமதுல்லாஹ் கனானெய்யும் குலாம் நபிவானியும் கிடைக்கவே மாட்டார்கள். இது என் அனுபவம் என்று சொல்லமுடியவில்லை. அந்த வகையில் அந்தக் கிராமத்தவர்களை நாம் ஏமாற்றி விட்டோம் என்றே மனம் புழுங்கினாள். அதனால் கண்கள் பணித்தன. அவள் மனசாட்சி அவளை துழைத்தெடுத்தது
பர்வீனாவை பிரிதொரு நினைப்பும் வாட்டியெடுத்தது. அது அவர்கள் காட்டிய அந்த பிணங்கள் யாருடையவை? எந்த குடும்பத்தை சார்ந்தவை? அவர்களை இழந்தவர்கள் யார்? அவர்களின் குடும்பங்கள் எங்கே? இவர்கள் இந்த இராணுவத்தைச் சார்ந்தவர்கள் யாருக்கெல்லாம் இந்த பிணங்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்? ஒரு பக்கம் நெஞ்சம் குமுறியது. இன்னொரு பக்கம் மக்களின் அவலங்கள் குறித்து ஆதங்கம் அனைத்தையும் விஞ்சி வந்தது. இந்த பிணங்களின் சொந்தக்காரர்களின் முகவரிகளைக் கண்டாக வேண்டும் இராணுவத்தின் கொலைபாதங்களை அம்பலப்படுத்தியாக வேண்டும். அதனூடே சமதுல்லாஹ்வையும் குலாம் நபியையும் தேடும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என கங்கணம் கட்டினாள்.
அடுத்த நாளே காணாமல் போனவர்களின் பெற்றோர் குழுமத்தைக் கூட்டினாள். அவர்களிடம் இராணுவத்தின் பித்தலாட்டங்களை விளக்கிச் சொன்னாள். அனைவரும் வைத்தக்கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சோகம் சொட்ட கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் கொட்ட எடுத்துரைத்தாள் பர்வீனா. எல்லோருடைய கண்களும் கலங்கின. முடிவில் பர்வீனா என்ன செய்யலாம் எனக்கேட்டாள்.
இந்த கேள்விக்கு மட்டும் யாரும் பதில் சொல்லிடவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் அறிவார்கள் கஷ்மீரில் இதுபோல் தினம் தினம் நடக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் இல்லை என்பதை.
அழுவதைத் தவிர அங்கே வேறெதும் செய்திட இயலாது. அதனால் அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்து முடித்து விட்டார்கள். அழுகை. அவ்வளவுதான்
இராணுவத்தின் கொட்டடியில் இருப்பவர்களை மீட்க ஒரு வழி இருந்திருந்தால் அன்றளவும் அவர்கள் 10, 000 சமதுல்லாஹ் களையும் குலாம் நபி வானிகளையும் மீட்டிருப்பார்கள். அந்த குடும்பங்களின் வாழ்க்கை அவ்வளவுதான் என்றே எல்லோரும் அமைதி காத்தார்கள்.
காணாமற் போனவர்களின் பெற்றோர்களின் குழுமத்தைச் சார்ந்த ஒருவர் வழக்கம் போல் முதல் தகவல் அறிக்கை ஒன்றைப்பதிவு செய்து நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்திட வேண்டியது தான் என்றார்.
இன்னொருவர் ஆயுதம் தாங்கிய படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்துசெய்துவிட்டால் ஏதாவது நடக்கும். அதிலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று எல்லோருடைய விரக்தியையும் ஒட்டு மொத்தமாக வெளிப்படுத்தினார். அத்தோடு கலைந்துவிட்டார்கள். அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பி நின்றன.
ஆமாம் அவர்களில் ஒவ்வொருவரும் அதுபோல் பாதிக்கப்பட்டவர்களல்லவா?
அனைவரையும் போல் பர்வீனாவினால் அத்துணை விரைவாக விடைபெற்றுச் சென்றிட இயலவில்லை. அந்த அப்பாவி கிராமவாசிகள் அவசியம் அடுத்த நாள் வருவார்கள். அவர்கள் இரண்டு குடும்பத்தைச் சார்ந்தவர்களோடு வருவார்கள்.
என்ன செய்யலாம் எனக்கேட்பார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? ஒரேயடியாக எங்களால் எதுவும் ஆகாது எனச் சொல்லிட இயலாது.
அப்படிச்சொன்னால் அந்த இருவரின் மனைவியருக்கும் ஏதாவது ஆகிவிடும். அதன் பின் எல்லாம் கெட்டுவிடும். உண்மையைச் சொல்லாமல் இழுத்தடித்தால் அவர்களை ஏமாற்றுவது தான் அது. அதைவிட ஈனச்செயல் எதுவுமிருக்காது. இப்படி அடுக்கடுக்கான எண்ணங்கள் பர்வீனாவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த இருவரின் மனைவியரில் சமதுல்லாஹ்வின் மனைவி ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள் என்பது பர்வீனாவுக்கு அப்போது தெரியாது. அதனால் அவள் அவர்கள் இருவருக்கும் கஷ்மீரின் யதார்த்த நிலையை எப்படிப் படிப்படியாக புரியவைப்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் பர்வீனாவைத் தேடி கிராமத்து வாசிகள் வந்தார்கள். ஜெமிலாவும் குலாம் நபி வானியின் மனைவியும் உடன் வந்தாள்.
கணவன் இறந்துவிட்டான் என எண்ணிய அவள் இத்தா என்ற காத்திருக்கும் காலத்திற்குள் புகுந்தாள். இப்போது கணவன் இறக்கவில்லை என்பதனால் அவனை எப்படியெனும் கண்டுபிடித்துவிட இயலும் என்ற உறுதியில் அந்த கிராமவாசிகளோடு பர்வீனாவைப் பார்க்க வந்தாள்.
இனி பர்வீனாவோடு இணைந்து சமதுல்லாஹ் கனானெய்யும் தனது கணவன் குலாம் நபிவானியையும் தேடிடுவதே தனது பணி என முடிவு செய்தாள். கிராமவாசிகளின் உதவியோடு இராணுவம் தூக்கிச் சென்றவர்களை மீட்டுவிடலாம் என்றும் நம்பினாள் ஜமீலா.
பர்வீனாவுக்கு ஜமீலாவை அறிமுகப்படுத்தினார்கள். இவர்தான் இராணுவத்தினர் கடத்தி வந்தவர்களில் குலாம் நபிவானி என்பவரின் மனைவி என அறிமுகப்படுத்தினார்கள். சற்றும் தாமதிக்காமல் பர்வினா சமதுல்லாஹ்வின் மனைவி என்றாள்.
அவளுக்கு மனநிலையில் பிரச்னை. சிரித்துக்கொண்டே இருக்கின்றாள் என்றார்கள். பர்வீனாவும் அவளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாள். ஜெமீலாவிடம் நீ உறுதியாக இரு, நாம் முயற்சி செய்வோம் என்றாள். ஜெமீலாவை உறுதிபடுத்திடத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாளே அல்லாமல் அவளுக்கே அந்த வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.
சமதுல்லாஹ் கனானெய் இன் மனைவி வஹிதாவின் நிலை அவளுக்கு வந்துவிடக் கூடாது என்பதனால் தான் பர்வீனா அப்படி பேசினாள்.
ஜெமீலா பர்வீனாவிடம் நாம் எடுக்கும் முயற்சி இருவருக்காகவும் இருக்கட்டும். ஒரு முறை தன் கணவனை நேரில் பார்த்துவிட்டால் வஹிதா சீராகிவிடுவாள் என்றாள் ஜெமீலா.
பர்வீனா ஜெமீலா காட்டும் உறுதியால் சற்றுப் பதறியே போய்விட்டாள். ஏனெனில் இனி வரும் நாள்கள் ஜெமீலாவுக்கு ஏக்கம் ஏமாற்றம் இவை நிறைந்ததாகவே இருக்கும் என்பதை அவள் நன்றாக அறிவாள்.
நாட்கள் நகர்ந்தன. இராணுவத்தினர் நாற்பதாயிரம் ரூபாயை வாங்கியதாகவோ புல்வாமா கிராமத்திலிருந்து இரண்டு பேரை அழைத்து வந்ததாகவோ காட்டிக் கொள்ள வில்லை. அதனால் இராணுவத்தினரின் முழு அக்கிரமத்தையும் கொடுமையையும் அப்படியே விழுங்கிட வேண்டியதாயிற்று. ஜெமீலாவால் அது முடியவில்லை.
அடுத்து முதல் தகவல் அறிக்கை ரூபாய் ஐந்தாயிரம் செலவில் பதிவு செய்யப்பட்டது. வழக்கம்போல் நீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றம் பத்தோடு பதினொன்று அத்தோடு இஃதொன்று என வாங்கி வைத்துக்கொண்டது.
இப்போது நாள்களல்ல, கிழமைகள் நகர்ந்தன. பர்வீனாவால் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை என்பதை ஜெமீலா இப்போது நன்றாக உணர்ந்தாள். அதனால் தனக்கொரு பாதையை வகுத்துக்கொண்டு தேட தொடங்கினாள்.
மாதங்களும் வருடங்களும் நகர்ந்தன. ஜெமீலாவுக்கு மூன்று குழந்தைகள், ஒரு மகன், இரண்டு மகள்கள். இவர்களை பள்ளிக்கு அனுப்புவதைப் பற்றியோ அவர்களை ஆளாக்குவதைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லை. இருந்ததையெல்லாம் விற்று கணவனை தேடிடும் முயற்சியில் செலவு செய்தார்கள்.
கிராமத்தவர்கள் எத்தனைக்காலந்தான் இப்படி அலைவாய். இன்னொரு திருமணத்தை முடித்துக்கொண்டு பிள்ளைகளைக் கவனி என அறிவுரைக் கூறினார்கள். எந்த நிலையிலும் மறுமணம் என்பதில்லை. என் கணவனை உயிருடன் அல்லது பிணமாகப்பார்க்கும் வரை ஓயமாட்டேன் எனச் சொல்லிவிட்டாள் ஒற்றை வரியில் ஜெமீலா.
இப்போது இருந்ததெல்லாம் முடிந்தது. நாலு வீட்டில் வேலை செய்து வாழ்ந்திட வேண்டும் என்ற நிலை. கிடைத்தக் கூலி காய்ந்திடும் குழந்தைகளை காப்பாற்றிடவே போதுமானதாக இல்லை. கணவனை தேடிட திரும்பும் திசையெல்லாம் பணத்தை அள்ளி இறைத்திட வேண்டியதிருந்தது. அதை அவளால் சமாளித்திட இயலவில்லை.
தன் வயிற்றை இயன்ற மட்டும் கட்டிப்போட்டு விட்டு குழந்தைகள், கணவன் இவர்களுக்கே கையில் கிடைத்ததையெல்லாம் செலவிட்டாள்.
இப்போது ஒரு வயிற்றுவலி அவளைத் தொற்றிக்கொண்டது. அதனை அலட்சியம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. காரணம் கணவன் கிடைத்துவிட்டால் மொத்தப் பிரச்னையும் தீர்ந்து விடும் என்ற உறுதியில் இருந்தாள் அவள்.
ஒரு நாள் அவளை வயிற்றுவலி கீழேயே தள்ளிவிட்டது. துடித்துபோனாள் வலியால். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். சிறுநீரகம் ஒன்று முற்றாக செயல்படவில்லை. அடுத்த கிட்னியும் ஆபத்தான நிலையில் தாம் இருக்கின்றது என்றனர் மருத்துவர்கள்.
ஆபத்தான கிட்னி அடுத்து நின்றது. அவள் பிணமானாள். குழந்தைகள் அனாதைகளாயின. ஸ்ரீநகரில் இந்தக் குழந்தைகள் தட்டழிவதைக் கண்ட எழுத்தாளர் குழந்தைகளைப் பற்றி விசாரித்ததன் விளைவே இந்த உண்மைகள் நமக்கு வந்து கிடைத்தன.
காணமற் போனவர்களின் பர்வீனா இப்போது வேறொரு வேலையை செய்து கொண்டிருந்தாள்.
அதுதான் கிடைக்காத பிணங்களின் மனைவியருக்குப் பதில் சொல்லி பயனற்றுப் போனதால் கிடைத்தப் பிணங்களாம் மன்சூர் அஹ்மத் திராலி முஹம்மத் யூசுஃப் ஆகியவற்றின் சொந்தக்காரர்களை தேடிக் கொண்டிருந்தாள் முடிவில்லாமல்...
- தொடர் முற்றும்
கஷ்மீர் மக்களின் இந்த அவலங்களை முடிந்த மட்டும் சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இதுவே அந்த கஷ்மீர் மக்களுக்கு நீங்கள் இப்போது செய்யும் உதவி!!
- மு.குலாம் முஹம்மது