அணுவாற்றல் தேவையான தீங்கு என்றும் தூய எரிபொருள் எனவும் மீண்டும், மீண்டும் வலிந்து நம் தலையில் கட்டப்படுகிறது.

பசுமையழிப்பு வெப்ப வாயுக்களை உருவாக்காததால் மட்டுமே அணுவாற்றலைத் தூய ஆற்றல் எனக் கூறுவது மிகத் தவறான சொல்லாடல். இந்தியாவின் அணு உலைகளின் ஆயுட்காலம் வெறும் 35 ஆண்டுகள்தான். ஆனால் அணுவாற்றல் உற்பத்தியில் உருவாகும் அணுக் கழிவுகளின் ஆயுட்காலமோ ஒப்பீட்டளவில் நிரந்தரமானது, அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து கதிரியக்கத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும். ஆகையால் அவற்றைப் பாதுகாப்பாக முதலில் தற்காலிகமாக  75-100 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் (Interim storage), பிறகு நிரந்தரமாக பூமிக்கு அடியாழத்தில் ஆழ்நிலைக் கருவூலத்தில் (Deep geological repository) புதைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனிதர்களுக்கு அபாயம் ஏற்படுத்தாத வகையில் அணுக் கழிவு களைப் பாதுகாப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

அணு உலைகள் உள்ள நாடுகள் யாவும் வளர்ந்த நாடுகள். எவ்வாறு அணுக் கழிவுகளைப் பாதுகாக்கின்றன எனப் பொறுத்திருந்து பார்க்கும் கொள்கையையே கொண்டுள்ளன (wait and see policy). உலகளவில்இதுவரை ஃபின்லாந்தில் மட்டுமே உலகின் முதல் ஆழ்நிலைக் கருவூலம்  2004இலிருந்து அமைக்கப்பட்டு வருகிறது, பூமிக்கு அடியில் 450 மீ ஆழத்தில் சுற்றிலும் 70கிமீ சுரங்கப் பாதைகளையும், பல அடுக்குப் பாதுகாப்பு அரண்களைக் கொண்ட இந்தக் கருவூலம்  100 ஆண்டுகளுக்கான அணுக் கழிவுகளை 1 லட்சம் வருடங்களுக்கு சேமிக்கும் வகையில் 27 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வளவு ஆடம்பரமான ஆபத்தை அவசியம் விலை கொடுத்து வாங்க வேண்டுமா?  ஃபின்லாந்திலோ, மற்ற மேற்கத்திய நாடுகளிலோ மக்கள் அடர்த்தி குறைவு, அங்கே மக்கள் வசிக்காத பகுதிகளில் அணுக் கழிவு களை சேமிக்க முடியும் என வைத்துக் கொண்டாலும், மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள இந்தியாவில் அணுக் கழிவு களுக்கு எங்கே இடம் இருக்கிறது?

ஒரு புறம் நெகிழிகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம்  அணு ஆற்றலையும் அணு உலைகளையும் ஆதரிப்பது முரண் இல்லையா? நெகிழிகளைக் காட்டிலும் அதிக அழிவேற்படுத்தும் அணுக் கதிரியக்கக் கழிவுகள் அபாயகரமானவை.

நம் முன்னோர்கள் சங்க இலக்கியங்களைத் தந்து நம்மைப் பெருமையடையச் செய்துள்ளார்கள். நம்முடைய வருங்காலச் சந்ததியினருக்கு நாம் என்ன விட்டுச் செல்லப் போகிறோம்? பேராபத்திற்குரிய அணுக் கழிவு களையா? அவ்வளவு பொறுப்பற்றவர்களாகத்தான் நாம் அறிமுகமாக வேண்டுமா?

சரி. இவ்வளவு ஆபத்தான தொழில்நுட்பத்தால் நாட்டின் மின்தேவையாவது கணிசமான அளவிற்கு நிவர்த்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.

நாட்டின் மொத்த மின் தேவையில் 3.22% மட்டுமே 6780 மெகாவாட் அணுவாற்றல் அளிக்கிறது. மற்ற மின்சார உற்பத்தி முறைகளைக் காட்டிலும் அணு மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைவா என்றால் அதுவும் இல்லை. பாதுகாப்பு வசதிகள் அதிகமாக அதிகமாக நவீன அணு உலைகளுக்கான செலவும் மிக அதிகமாகிறது. 22 அணு உலைகளில் உற்பத்தியாகும் ஒரலகு மின்சாரத்தின் சராசரி விலை ₹2.8  நவீன உலைகளில் ஒவ்வொரு மெகாவாட்டுக்கும் ₹15-20 கோடி ஆவதால் ₹7 குறைவாக விற்பனை செய்ய முடியாது.

இந்தியாவில் மின்கடத்திகளின் மின்தடையால் ஏற்படும் மின் இழப்பைத் தவிர்க்க மெல்லிழை மின்கடத்திகளைத் தரைக்கடியில் புதைத்தாலே 30-40%  மின்சாரத்தை சேமிக்க முடியும்.

அணுவாற்றல் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் அல்ல. இன்று உற்பத்தி செய்யும் வீதத்தில் அணு ஆற்றலை உற்பத்தி செய்தால் இன்னும் 160 ஆண்டுகளிலே அணு ஆற்றலின் பிரதான மூலமான யுரேனிய வளம் தீர்ந்து விடும். யுரேனிய வளம் உலகிலே அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில் ஒருஅணு உலை கூட இல்லை என்பது  ஆச்சரியமளிக்கிறதா? சுவிட்சர்லாந்து 2034க்குள் எல்லா அணு உலைகளையும் மூடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ 2027ல் இன்று போல் இன்னும் 117% அணுவாற்றலை அதிகப்படுத்தவே திட்டமிட்டுள்ளது.

அணு உலைகள் இல்லாத நாடுகள்: 

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெலிஸி, கம்போடியா, கொலம்பியா, கொஸ்டாரிகா, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லிதுவெனியா, நேபாளம், நியூசிலாந்து, பெரு, லிச்டென்ஸ்டெய்ன்

அணு உலைகளை மூட இருக்கும் நாடுகள் அல்லது 

அணு ஆற்றலுக்கு விடைகொடுக்க உறுதியெடுத்த நாடுகள்:                            

பெல்ஜியம், டென்மார்க்,ஜெர்மனி, ஜப்பான், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து.

குடிசார் அணுவாற்றல் ஒப்பந்தங்கள்?

இந்தியா ஆக்கவழியில் அணு ஆற்றலை ஊக்குவிப்பதாகப் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு இறக்குமதி செய்யும் அணு உலைகள் மக்களுக்கு ஆற்றலை விட அச்சுறுத்தலையே தருகின்றன. சமீபத்தில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து 6 புதிய அணு மின்நிலையங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்திய அரசு இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, ஐக்கியமுடியரசு, வடக்கு அயர்லாந்து, ஃபிரன்ஸ், அர்ஜெண்டினா, சிறிலங்கா, கஜகஸ்தான், வடகொரியா, பங்களாதேஷ், வியட்நாம், ஜப்பான், மங்கோலியா, நமீபியா,‎ தென்கொரியா ஆகிய நாடுகளுடன் அணுவாற்றல்  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

2008இல் ஐக்கிய அமெரிக்க நாட்டுடன் மேற்கொண்ட ’123’-அணுவாற்றல் ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியாவிற்குப் பிற நாடுகளிடமிருந்து அணுவாற்றல் தொடர்புடைய எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வணிகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத போதும் அணுவாற்றல் வணிகம் செய்ய அனுமதிக்கப்படிருக்கும் முதல் அணுவாயுத நாடாக இந்தியா அறியப்படுகிறது.

இந்தியா அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தில் உறுப்பு நாடாகவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அணுவாற்றலால் நன்மை என்பதைக் காட்டிலும் தீமைகளே ஓங்கி நிற்கின்றன.  புதிப்பிக்கத்தக்க மின்னாக்கத் தொழில்நுட்பங்களால் சூரியஒளி, காற்றாலை,  இவை இரண்டையும் ஒருங்கிணைத்த புதிய தொழில்நுட்பம் (Solar-wind hub), கடலலை, கரிமக் கழிவுகள், எரிவாயு, எனப் பல்வேறு மின்னாக்க மூலங்கள் உள்ள போது ஏன் இந்தக் காலாவதியான ஆபத்திற்குரிய அணு மின்சாரத் தொழில்நுட்பத்தைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும்?.

அதற்கும் ஒரு முக்கியமான காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா அணுவாற்றல் திட்டங்களை அதிகமாக ஊக்குவிப்பதே அணுஆயுதத் தயாரிப்பிற்காகத்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்தியாவின் அணுவாயுதக் கொள்கை:

1957இல் ஜவஹர்லால் நேரு முதலில் அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் தொடங்கிய போது அமைதி நோக்கத்துக்காகவே அணுவாற்றல் பயன்படுத்தப்படும் என உறுதிமொழி கொடுத்தார். 

ஆனால் இந்நிலை அதிக காலம் தொடரவில்லை என்பதை அடுத்து நிகழ்ந்த அணுவாயுத சோதனைகளே மெய்ப்பித்து விட்டன. அமைதியை விரும்பும் அணிசேரா நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்தியா அணுவாயுத சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? 1971 முதல் அணுவாயுத (அணுவெடி அல்லது அணுசாதன) சோதனையின் போது பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அணுவாற்றல் என இந்திராகாந்தி அறிவித்தார். மேலும் அணுவாயுதத் தயாரிப்பிற்காகத்தான் அணுக் கழிவு  (spent fuel) மீள்பயன்பாட்டிற்கு (reprocessing மீள்பதனீடு) உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் மேல் வேறு நாடுகள் இராணுவத் தாக்குதல் நடத்தாத போது அணுவாயுத சோதனையை மேற்கொண்டு அதை இந்தியாவின் பாதுகாப்பிற்காகத்தான் செய்தோம் என நியாயம் கற்பிப்பதில் ஏதாவது நியாயம் (ஏரணம்) உள்ளதா?

1974இல் ராஜஸ்தானின் பொக்கரானில் புத்தர் சிரித்தார் என அணு ஆயுத சோதனை செய்து மீண்டும் ஒரு முறை புத்தர் கொல்லப்பட்ட போதிலிருந்தே புத்தரின் நாடு அணுவாயுத நாடாகவே அறியப்படுகிறது. பிறகு மீண்டும் அதே பொக்கரானில்  1998இல் பாஜக ஆட்சியில் சக்தி என்ற பெயரில் அணுவாயுத சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அணுவாயுத சோதனைகள் மேற்கொண்ட போதிலும் அணுவாயுதத் தாக்குதலை முதலில் தொடுக்கும் நாடாக இந்தியா இருக்காது. இந்தியாவின் அணுவாயுதங்கள் அச்சுறுத்தும் நோக்கம் மட்டுமே கொண்டவை. தாக்கப்பட்டால் திருப்பித் தாக்குவது என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கும் என்பதே இந்தியாவின் அணுவாயுதக் கொள்கையாக இருந்தது..

அண்மைக் காலமாக, அணுவாயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கு பா.ஜ.க அரசு முனைப்புக் காட்டுகிறது. இதற்கான முன்னெடுப்பு மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் போதே மேற்கொள்ளப்பட்டது. ”இந்தியாவுக்கு எதற்கு இந்த ‘முதலில் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதில்லை’ என்ற கொள்கை” என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். இந்தியாவின் அணுவாயுதக் கொள்கையான "முதல் பயன்பாட்டுக் கொள்கையை பின்பற்றுவதில்லை" என்றும் தெரிவித்தார். (முதல் பயன்படுத்தாமைக் கொள்கை?)

தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுவாயுதக் கொள்கை மாறலாம் என்று சொல்லித் தெற்காசியப் பிராந்தியத்தில் அணுவாயுதப் போருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். 

இந்தியாவில் அணுவாயுதம்:

இந்தியா அணுவாயுத சோதனைத் தடை ஒப்பந்தத்திலோ, அணுவாயுதப் பெருக்கத்திற்கு எதிரான ஒப்பந்தத்திலோ இது வரை கையொப்பமிடவில்லை.

இந்தியா 0.54 டன்னுக்கு மேல் அணுவாயுதத்தர புளூடோனியம் வைத்துள்ளது. இது குறித்த விவரங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வருவதால், நாம் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

உயர்நிலை அணுக் கழிவுகளின் மீள்பயன்பாட்டில் புளூடோனியம் பெற்று அணுவாயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது

இந்தியாவில் இரண்டு அணுவாயுத உலைகள் உள்ளன.  

  1. சிரஸ் – 1963இலிருந்து 2010 வரை செயல்பட்ட இந்த அணுவாயுத உலையில் ஆண்டுதோறும் 4 - 7 கிகி புளூடோனியம் உற்பத்தி செய்யப்பட்டது. 
  2. துருவா – 1988இல் ஏற்படுத்தப்பட்ட இந்த அணுவாயுத உலையில் ஆண்டுதோறும் 11 - 18 கிகி புளூடோனியம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  3. மேலும் விசாகப்பட்டினத்தில் மூன்றாம் அணுவாயுத உலை அமைக்கத் திட்டம் உள்ளது.

அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள்:

இந்தியாவிடம் ஐ.என்.எஸ். அரிஹந்த், ஐ.என்.எஸ். சக்ரா என்று இரண்டு அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. மேலும் அடுத்த தலைமுறை அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்திய அரசால்  1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் – 1945இல் - அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோசிமாவில் போடப்பட்ட ‘சின்னப்பையன்’ 'என்ற யுரேனிய அணுகுண்டாலும், நாகசாகியில் போடப்பட்ட ‘குண்டுமனிதன்' என்ற புளூட்டோனிய அணுகுண்டாலும் அந்த இடங்களே மயானமாயின, இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், தப்பிப் பிழைத்தவர்கள் கடுமையான உடல்நலக் கேடுகளால் வதைபட்டனர், குழந்தைகளும் ஊனமாகவே பிறந்தன. இது போன்ற பேரழிவு இன்னொரு முறை ஏற்படாமல் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என உறுதியேற்போம்.

அணுவுலைகள்:

அணுவாயுதம்தான் பேரழிவு ஏற்படுத்தும், அணுவுலைகள் பாதுகாப்பானவை என்று ஒருவராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. நம்மிடமிருந்து தொலைதூரத்தில் உள்ள சூரியன் மட்டுமே பாதுகாப்பான அணுவுலையாக அறியப்படுகிறது. இது வரை உலகெங்கும் 11 பெரிய அணுவுலை விபத்துகள் நேர்ந்துள்ளன. அணுவுலை விபத்துகளைப் பற்றி அறியுமுன் அணுவுலைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கதிரியக்கம்:

முதலில் கதிரியக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். நிறை எண் அதிகம் கொண்ட தனிமங்கள் இயற்கையிலேயே கதிரியக்கத் தனிமங்களாக உள்ளன. இத்தனிமங்களின் அணுக்கரு நிலைத்தன்மையற்று அணுக்கருப் பிளவு ஏற்பட்டு அதிக அளவு வெப்பத்தையும் கதிரியக்கத்தையும் (ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள்) வெளியிடுகிறது. எடுத்துக்காட்டு: யுரேனியம், தோரியம், ரேடியம்.

அணு மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

அணுக்கருப் பிளவின் போது ஏற்படும் வெப்ப ஆற்றலிலிருந்தே அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு மின்சாரம் பெருமளவில் யுரேனிய எரிகோல்களிலிருந்தே பெறப்படுகிறது.

இந்த எரிகோல்கள் யுரேனிய ஐசோடோப்புகளின் (யுரேனியம் 235, யுரேனியம் 238) கலவையாக உள்ளன. யுரேனியம் 235 கதிரியக்கத் தன்மை கொண்டது. யுரேனியம் 238 கதிரியக்கத் தன்மை  அற்றது. அணு உலையின்தொடர்வினையின்போது, யுரேனியம் 238 ஒரு நியூட்ரானை ஏற்று புளுடோனியம் 239 ஆக மாறுகிறது. புளுடோனியம் 239ஐப் பிரித்தெடுத்து அணுவாயுதம் தயாரிக்கலாம்.

அணு உலையின் எரிகோல்களில்  அணுக்கருப் பிளவை நியூட்ரான் மூலத்தின் மூலம் ஊக்குவிக்கும் போது வெப்பமும் புதிய நியூட்ரான்களும் உருவாகும் அவை மீண்டும் அணுக்கருப் பிளவையும், நியூட்ரான்களையும் உருவாக்கித் தொடர்வினையாகும். இதனால் கிடைக்கும் அபரிதமான வெப்பம் நீராவியாக்கப்பட்டு மின் உற்பத்தி டர்பைன்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அணு உலையின் வெப்பத்தையும், நியூட்ரான்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையேல் அணு உலை வெடித்து விடும். இதற்காக வெப்பத் தணிப்பான்களும் (வெப்பக்கடத்தி), நியூட்ரான் தணிப்பான்கள் (மிதவாக்கி), நியூட்ரான் அழிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

மூன்று கட்ட அணுவாற்றல் திட்டம்:

ஹோமிபாபாவால் இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியத்தை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் மூன்று கட்ட அணுவாற்றல் திட்டம் 1950களில் உருவாக்கப்பட்டது

முதல் கட்ட அணு உலைகள்: 

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள எல்லா அணுமின் உலைகளும் யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட முதல் கட்ட அணு உலைகளே.

இரண்டாம் கட்ட அணு உலைகள்:

முதல்கட்ட அணு உலைக் கழிவில் கிடைக்கும் புளுடோனியத்தையும், இயல் யுரேனியத்தையும் எரிபொருளாகப் பயன்படுத்தும் வேகப் பெருக்க உலைகள்.

மூன்றாம் கட்ட அணு உலைகள்:

இரண்டாம் கட்ட அணு உலையிலிருந்து கிடைக்கும் புளூடோனியமும், தோரியமும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.

இந்தியா மூன்று கட்ட அணுவாற்றல் திட்டத்தின் முதல் கட்டத்தில்தான் உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான பரிட்சார்த்த முயற்சிகள் முழுமையாக வெற்றியடையவில்லை.

இந்தியாவில் தற்போது 7 அணுமின் நிலையங்கள், 24 அணு உலைகள் (22 அணுமின் உலைகள், 2 அணுவாயுத உலைகள்) உள்ளன. இவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 

1) கொதிநீர் அணுமின் உலை (boiled water reactor) 

இவை முதல் தலைமுறையைச் சேர்ந்தவை. இவ்வகை அணு உலையே அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரில் முதலில் நிறுவப்பட்டது. இதில் எரிபொருளாக 2% செறிவூட்டப்பட்ட யுரேனிய எரிகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண நீரே மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உலையிலே நேரடியாக நீராவி உருவாவதால் கதிரியக்கத்திற்கு உள்ளாக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கனநீர் அழுத்த உலை (pressurized heavy water reactor)

இவ்வகை அணு உலைகள் கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டவை.  இதில் எரிபொருளாக இயல்வள யுரேனிய எரிகோல்களும், மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் கனநீரும் பயன்படுகிறது. இந்த வகை அணு உலைகளே கல்பாக்கத்தில் உள்ளன.

3) அழுத்த மிதநீர் (மென் நீர்) உலை (pressurized light water reactor)

இவ்வகை அணு உலைகளில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த விவிஇஆர் (vver) வகை அணு உலைகளே கூடங்குளத்தில்உள்ளன. இதில் செறிவூட்டப்பட்ட யுரேனிய எரிகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சாதாரண நீரே வெப்பக்கடத்தியாகவும், மிதவாக்கியாவும் உள்ளது. இதில் கொதிநீர் அணுமின் உலையில் உள்ளது போல் உலைக்கலனில் நேரடியாக நீராவி உருவாகாமல், அதற்குப் புறத்தே உள்ள வெப்பக் கடத்தியின் மூலம் உருவாக்கப்படுவதால் கதிரியக்கத்திற்கு உள்ளாகும் (direct contamination) வாய்ப்புக் குறைவு. வெப்பத் தணிப்பானாக அழுத்தத்திற்குட்படுத்தப்பட்ட நீரைப் பயன்படுத்துவதால் நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது.

4) வேகப்பெருக்க உலைகள் (fast breeding reactors) :

இவ்வகை உலைகளில் வேக நியூட்ரான்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நியூட்ரான் மிதவாக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை. சோடியம், குளிர்ப்பானாகப் பயன்படுகிறது. சோடியம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.இவை அதிக ஆற்றல் தரும் திறன் வாய்ந்தவை. இவ்வகை வேகப்பெருக்க முன்மாதிரி உலைகள் கல்பாக்கத்தில் இரண்டும் கூடங்குளத்தில் ஒன்றும்உள்ளன. மேலும் நான்கு புதிய வேகப்பெருக்க உலைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2004இல் கல்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட முன்மாதிரி வேகப்பெருக்க உலை இன்னும் முழுச் செயல்பாட்டிற்கு வரவில்லை. கூடங்குளத்திலும் முதல் மாதிரி வேகப் பெருக்க உலை தொழில்நுட்பப் பிரச்சனைகளால் செயல்பாட்டிற்கு வரவில்லை.

அணுக் கழிவுகள்:

அணு உலையிலிருந்து வெளிவரும் கழிவுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் யுரேனியம், புளுடோனியம், இரத்தக் கசிவை ஏற்படுத்தும் சீசியம், எலும்பை உருக்கும் ஸ்ட்ரான்சியம், கடும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் ஆக்டினாய்டுகள் உள்ளன.

அணு உலையின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள்தான்

அணுக் கழிவுகளின் அரை ஆயுட்காலத்தைப் பாருங்கள்:

யுரேனியம் 235 - 704 மில்லியன்ஆண்டுகள்

யுரேனியம் 238 - 4.47 பில்லியன்ஆண்டுகள்

புளூடோனியம் 239 - 24000 ஆண்டுகள்

புளூடோனியம் 240 - 6560 ஆண்டுகள்

தோரியம்232 - 14.05 பில்லியன்ஆண்டுகள்

தீர்ந்த எரிகோல்கள் (spent nuclear fuel) :

அணுவாற்றல் உற்பத்திக்குப் பின் எஞ்சிய எரிகோல்கள் தீர்ந்த எரிகோல்கள் (spent fuel) எனப்படுகின்றன. அவை அதிகக் கதிரியக்கமும், வெப்பமும் (8000 பாகை) கொண்ட வீரியமான உயர்நிலைக் கழிவுகள் (high level waste).

தீர்ந்த எரிகோல்கள் மூன்று நிலைகளில் சேமிக்கப்படுகின்றன.

அணு உலைகளிலேயே சேமித்தல் (At reactor) :

தீர்ந்த எரிகோல்களை 5 - 7 ஆண்டுகள் வரை உலையிலேயே அதற்கான நீர்க் குளத்தில் ஆறப் போட வேண்டும். இந்த அமைப்பு தொடர்ந்து நீரினால் குளிரூட்டப்படும். ஓரளவு வெப்பம் தணிந்த பின்புதான் அவற்றை உலைக்கு வெளியே எடுத்துச் செல்வார்கள்.

அணு உலைக்கு வெளியே தற்காலிகமாக சேமித்தல் (Away from reactor) :

அணு உலையில் சேமிக்கப்பட்ட தீர்ந்த எரிகோல்களைத் தற்காலிகமாக அதற்கான கட்டமைப்பில் 70 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். இதில் இருமுறைகள் உள்ளன.

ஈரநிலைச் சேமிப்பு:

அதிக செலவேற்படுத்தும் இம்முறையில் தீர்ந்த எரிகோல்கள் ஆழமான உலோக நீர்க்குளங்களில் சேமிக்கப்படும். இதைக் குளிரூட்ட, வெளியிலிருந்து மின்சாரம், தண்ணீர் தேவை. இம்முறையில் உலோகம் துருப்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது, இதை இடப் பெயர்ச்சி செய்ய வேண்டுமென்றால் வேறு கலனுக்கு மாற்ற வேண்டும் அதனால் கதிரியக்கம் பரவ வாய்ப்புள்ளது. மேலும் தண்ணீரின் தூய்மை, வெப்பம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

உலர்நிலைச் சேமிப்பு:

இம்முறையில் தீர்ந்த எரிகோல்கள் உலோக பீப்பாய் அல்லது கான்கிரீட் பீப்பாயில் சேமிக்கப்படும். வெப்பச் சலன முறையில் குளிரூட்டப்படுவதால் தண்ணீரோ, மின்சாரமோ, தேவையில்லை என்பதால் துருப்பிடிக்க வாய்ப்பில்லை. பீப்பாய்களை அப்படியே இடம் பெயர்க்கலாம், வேறு கலனில் மாற்ற வேண்டியதில்லை என்பதால் கதிரியக்க அபாயம்  குறைவு, இதற்கான செலவும் குறைவு.

அணு உலைக்கு வெளியே சேமிக்கும்  மையங்கள் (AFR):

இந்தியாவில் தீர்ந்த எரிகோல்களை அணு உலைக்கு வெளியே சேமிக்கும் அணுக் கழிவு ச் சேமிப்பகங்கள் இரண்டு இடங்களில் உள்ளன. ஒன்று தாராபூரிலும், இரண்டாவது ராவத்பட்டாவிலும் உள்ளது. ராவத்பட்டாவில் இன்னொரு சேமிப்பகம் கட்டுமானப் பணியில் உள்ளது.

ஆழ்நிலைக்கருவூலம் (Deep geological repository):

உலகின் முதல் ஆழ்நிலைக் கருவூலம் ஃபின்லாந்தில் கட்டப்பட்டு 2020ல் செயல்பாட்டிற்கு வருகிறது. இம்முறையில் அணுக் கழிவு கள் மனிதர்களுக்கு நேரடியாக ஆபத்து ஏற்படுத்தாத வகையில்

பூமிக்கு அடியாழத்தில் பல பாதுகாப்பு அரண்களுடன் நிரந்தரமாகப் புதைக்கப்படுகிறது.

தீர்ந்த எரிகோல்களின் மீள்பயன்பாடு: (மீள்பதனீடு)

இந்த முறை அதிகச் செலவை ஏற்படுத்தும். தீர்ந்த எரிகோல்களை மீள்பயன்பாட்டிற்கு உட்படுத்தி அதில் உள்ள புளுடோனியமும், யுரேனியமும் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை ஆற்றலுக்கும்  அணுவாயுதத்திற்கும் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் கல்பாக்கம், ட்ராம்பே,. பாபா அணு ஆய்வு மையம் ஆகிய மூன்று இடங்களில் தீர்ந்த எரிகோல் மீள்பயன்பாட்டு மையங்கள் உள்ளன.

அணு உலை விபத்துகள்:

மூன்று-மைல் தீவு விபத்து

1979இல் அமெரிக்காவில் அணு உலையின் குளிரூட்டும் சுற்றில் ஏற்பட்ட சிறிய பிழையால், வெப்பம் அதிகமாகி அணு உலை தானாகவே செயல்பாட்டை நிறுத்திய போதும், ஒரு வால்வு மூடாததை கண்காணிப்புக் கருவி காட்டாததால், முதன்மைக் குளிர்விப்பான் ஆவியாகி, உலையின் அதிக வெப்பத்தால் யுரேனிய எரிகோல்கள் உருகியதால் விபத்து நேர்ந்தது.

செர்னோபிள் விபத்து: 

1986இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபிள் அணு உலையில் மின்வெட்டு ஏற்பட்டதால் அணு உலையின் வெப்பத்தைத் தணிக்கத் தேவையான மின்சாரத்தை அதன் மின்னாக்கியிலிருந்தே பெறுவதற்கான சோதனை முயற்சியைத் தானியக்கக் கட்டுப்பாட்டை முழுவதும் நீக்கிய நிலையில் செய்ததால் நேர்ந்தது. நியூட்ரான் மிதவாக்கியாக திரள்கரியின் அதிக வெப்பம், நீரிலிருந்து வெளிவரும் ஹைட்ரஜன் தீப்பற்றி வெடிக்கக் காரணமானது. அணு உலைக்கு கான்கிரீட் அரண் இல்லாததால் கதிரியக்கம் சுற்றுவெளியெங்கும் பரவியது. இந்த விபத்தால் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 பேர் இறந்துள்ளனர்.

புகுஷிமா விபத்து: 

pookushma 3502011இல் ஜப்பானில் 9 ரிக்டர் நிலநடுக்கத்தாலும், சுனாமித் தாக்குதலாலும் புக்குஷிமாவில் இருந்த 4 அணு உலைகளும் நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி மூன்று உலைகளில் யுரேனிய எரிகோல்கள் உருகின. நீராவியின் ஹைட்ரஜன் வாயுவால் வெடிப்புண்டாகி அணு உலையின் மேல்தளங்கள் நொறுங்கின. மேலும் தீர்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட குளத்தின் நீர்மட்டம் குறைந்ததாலும், தீயும் வெடிப்பும் நேர்ந்தன. இந்த விபத்தில் 1600 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெளியே அணுவாற்றல் ஆக்கத் திட்டங்களுக்காகத்தான் செயல்படுத்தப்படும் என்று கூறினாலும் உண்மையில் அவை அழிவுத் திட்டங்களுக்கு வழிவகுப்பனவாகவே அமைகின்றன. போதி சத்துவரின் கையிலிருந்தால் மட்டும் அணுகுண்டு வெடிக்காமல் போய் விடுமா என்ன? நல்ல நோக்கங்களின் அடிப்படையில் மட்டும் திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல விளைவுகளே ஏற்படும் என்ற கருத்தியப்  பார்வையில் சமூகத் திட்டங்களைச் செயல்படுத்துவது அறிவியலாகுமா? விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கங்களை செயல்படுத்துவதே தொலைநோக்கு. அணு மின்சாரத்தின் மறுபக்கம் அணுவாயுதமாகவே அச்சுறுத்துகிறது.

ஒரு பக்கம் அணு உலையாகப் பார்த்தாலும் சரி, மறு பக்கம் அணுகுண்டாகப் பார்த்தாலும் சரி, அதில் எஞ்சும் அணுக்கழிவாகப் பார்த்தாலும் சரி, எல்லாப் பக்கத்திலும் அணுவாற்றல் அழிவாற்றலாகவே அச்சுறுத்துகிறது. எட்டாத காலத்தை எட்டிப் பார்த்தாலும் சரி, கிட்டப் பார்த்தாலும் சரி, ஆக்க அணுவாற்றல் நம்கைமீறி அழிவுஅணுவாற்றலாகவே விளைகிறது . இந்த அடிப்படையில்அணுவாற்றலை நாம் புரிந்துகொண்டால்தான் பேரழிவுகளிலிருந்து நம்மை, நம் புவியை, நம் வருங்கால சந்ததிகளைப் பாதுகாக்க முடியும்.

கூடங்குளம் அணுக் கழிவு மையம்:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும், அறப் போராட்டங்களையும் மீறி ரஷ்யத் தொழில்நுட்பத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இன்னும் நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அணுவாற்றல் ஒழுங்காற்று வாரியத்திடம் உரிய உரிமம் பெறுவதற்கு ஆறு மாதங்கள் முன்பாகவே கூடங்குளம் அலகு 1இன் வர்த்தகச் செயல்பாட்டைத் தொடங்குவதாக இந்திய அணுவாற்றல் நிறுவகத் தலைமையகம் டிச 31, 2014இலேயே அறிவித்துள்ளதாகத் தணிக்கையர் அறிக்கை கூறுகிறது.

கூடங்குளம் அணு உலை 1, 2இல் உருவாகிய அணுக் கழிவுகள் இதுவரை அணு உலைஅருகிலே சேமிக்கப்பட்டுள்ளன.  தற்பொழுது அந்த அணுக் கழிவுகளை அணு உலை வளாகத்திலேயே 75 ஆண்டுகள் தற்காலிகமாக சேமிப்பதற்கான அணுக் கழிவு சேமிப்பகத்தை 538 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு தொட்டிக்குள் அமைந்த உலோகம் பூசிய தண்ணீர்த் தொட்டியாக இதன் வடிவமைப்பு இருக்கும். இந்தத் தண்ணீர்த் தொட்டியிலேயே தீர்ந்த யுரேனிய எரிகோல்கள் சேமிக்கப்படும். அந்த வளாகத்திலேயே 0.35 ஹெக்டேர் பரப்பு நிலத்தில் இந்த சேமிப்பகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

5.4 கிமீ நீளமும், 2.5 கிமீ அகலமும் கொண்டு 13.5 ச.கிமீ மொத்தப்பரப்பு கொண்ட கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கெனவே 6 அணு உலைகள், மீள்பயன்பாட்டு நிலையம், டீசலைனேசன் பிளாண்ட், நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. முதல் இரண்டு அணு உலைகளுக்கும் அடுத்த இரண்டு அணு உலைகளுக்கும் இடையே 804 மீ. இடைவெளியே உள்ளது. அதேபோல் 3 - 4 உலைகளுக்கும் 5 - 6 உலைகளுக்கும் இடையே 344 மீ. இடைவெளியே உள்ளது. இந்த நெருக்கடியில் அணுக் கழிவு  சேமிப்பகம் வேறு கட்ட எங்கே இடம் உள்ளது என்று அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலாவது அணு உலை 2013இல்செயல்பாட்டுக்கு வந்ததால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (2018) தற்காலிக அணுக் கழிவு  மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 2018ஆம் ஆண்டிற்குள் அணுக் கழிவு மையம் அமைக்கப்படாததற்கு காரணம் என்ன? என்று 2018 ஏப்ரல் 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்ட போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூடங்குளம் அணுமின்உலைகள் மென்நீரில் இயங்கக் கூடியவை என்பதால் தற்காலிகஅணுக் கழிவு மையத்திற்கான தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது, அது இன்னும் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றே கூறியிருக்கிறார் எனப் பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் 2022க்குள் அணுக் கழிவு கள் சேமிப்பு மையத்தைக்கட்டி முடிக்க இறுதிக் கெடு விதித்துள்ளது. கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, அணுக் கழிவுகள் சேமிப்பு மையம் கட்ட ஆகஸ்டு 10இல் ராதாபுரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. 

இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர். மக்களுக்குக் கருத்துக் கேட்பு கூட்டங்களில் நம்பிக்கை இல்லை, 99%மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட, ஆளுநர் மத்திய அரசுக்கு இசைவளித்து அறிக்கை அனுப்பியதைச் சுட்டிக்காட்டி, அதனாலே அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் எல்லா அரசியல் கட்சிப் பிரதி நிதிகளும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பங்கேற்று மக்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்றும், மக்கள் கருத்து புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு பன்னாட்டு நோக்கரும் தேவை என்றும் கோரிக்கை விடுத்ததாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மற்ற அணு உலைக் கழிவுகளையும் கூடங்குளத்தில் சேமிக்கப்படலாம் என மக்கள் அஞ்சுகிறார்கள். இத்திட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அபாயமூட்டுவதாகவே அமையும் என்றும் முதலில் அரசு எங்கு நிரந்தரக் கழிவு மையத்தை அமைக்கவிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பதோடு, கூடங்குளத்தின் அணு உலை விரிவாக்கப் பணிகளையும் எதிர்த்து நிரந்தரமாக உலைகளை மூடத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் போராடுகிறார்கள்.

நிரந்தர அணுக் கழிவு  மையத்தை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள சுரங்கங்களில் அமைக்கலாம் என 2012ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அங்கு நிரந்தர மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் புதிய இடம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை 

2011இல் வெளியிடப்பட்ட கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த அறிக்கை அணு உலை விபத்துகளில் ஏற்பட்ட இழப்புகளையெல்லாம் மறைத்தே எழுதப்பட்டுள்ளது. புற்று நோயை உருவாக்கும் பல்வேறு காரணிகளில் கதிரியக்கமும் ஒன்றுதானே தவிர அதுவே புற்றுநோய்க்கான காரணமாகாது என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பானது. அணு உலைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் புற்று நோய்த் தாக்கம் அதிகமானதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என அப்பட்டமாகப்  பொய் சொல்கிறது. கல்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டதற்குப் பின்னால் அதன் சுற்றுப்புறத்தில் கதிரியக்கம் குறைந்தது போன்ற தரவுகளைத் தருகிறது. அந்த அறிக்கையை வாசிப்பவருக்கு மற்ற இடங்களைக் காட்டிலும் அணு உலையே வசிப்பதற்குப் பாதுகாப்பான இடம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்ன் விதத்திலே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இந்திய அணுவாற்றல் திட்டம் மூடிய எரிபொருள் சுழற்சியைப் பின்பற்றுவதால் (closed fuel cycle)  தீர்ந்த எரிகோல்களைக் கழிவுகளாகக் கருதாது என்றும், அவை சேமிக்கப்பட வேண்டிய சொத்துக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடங்குளத்தில் அணுக் கழிவுகள் தற்காலிகமாகவே சேமிக்கப்படும் என்றும் பிறகு மீள்பயன்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது கூடங்குளம் அணுக் கழிவு  சேமிப்பு மையத்திற்கான திட்ட அறிக்கையில் (2019) கூடங்குளத்தின் அணுக் கழிவுகள் மீள்பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் என்பதைப் பற்றியோ, எந்த மீள்பயன்பாட்டு மையத்துக்குக் கொண்டுசெல்லப்படும் என்பதைப் பற்றியோ குறிப்பிடவேயில்லை.. இது குறித்து  2011 அறிக்கையில் உள்ளதை 2019 செயல்பாட்டுத் திட்டத்தில் விரிவாக எடுத்துரைத்துத் தெளிவுபடுத்தாமல், அதைப் பற்றி மௌனம் காப்பதன் பொருள் என்ன? அணுக் கழிவுகளைத் தற்காலிகமாகச் சேமிப்பதற்கும், மீள்பயன்பாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும் உலர்சேமிப்பு முறையே சிறந்ததாகவும், சிக்கனமானதாகவும் பரிந்துரைக்கப்படும் போது எதற்காக ஈரநிலை சேமிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பன போன்ற விடைதெரியா பல கேள்விகள் உள்ளன.

இந்தியாவின் அணுவாற்றல் கொள்கையின் படி கூடங்குளத்தில் உருவாகும் அணுக் கழிவுகளை மீள்பயன்பாடு செய்யாமல் அப்படியே நிரந்தரமாகப் புதைக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் கல்பாக்கம், ட்ராம்பே, பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள தீர்ந்த எரிகோல் மீள்பயன்பாட்டு மையங்களில் எங்கே கூடங்குளத்தின் அணுக் கழிவுகளைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே ஈரநிலையில் சேமிக்கும் திட்டத்தையும், அணு உலை விரிவாக்கப் பணிகளையும் அரசு கைவிட வேண்டும். நிரந்தரமாக அணுக் கழிவுகளுக்கான ஆழ்நிலைக் கருவூலம் எங்கே அமைக்கப்படவுள்ளது என்பதையும் தெரிவித்து அப்பகுதி மக்களின் கருத்தின் அடிப்படையிலே இத்திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு அமைய வேண்டும். அணு உலைக்கு எதிரான கூடங்குள மக்களின் அறப் போராட்டத்தில் நாமும் இணைந்து வலிமை சேர்ப்போம். அணுஅழிவுத் திட்டங்களுக்கு விடைகொடுத்து நம் பூவுலகைக் காப்போம்.