இந்திய ஜனநாயகத்தின் பொருள் பல ஆண்டு காலமாக எதிர் நிலையிலிருந்து நம் மூளைகளில் திணிக்கப்படுகிறது. இதிலிருந்து மீண்டு ஜனநாயகத் தின் உள்ளார்ந்த பொருளை அறிய முற்படுவோமேயானால் நம் கண் முன்னே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கட்டமைப்பின் அனைத்து முகங்களும் பாசிசமாகத்தான் காட்சியளிக்கும். உரிமை என்று தனி நபர்களோ அல்லது அமைப்புகளோ குரல் எழுப்பினால் தேச விரோதிகளாகவே கருதப்படுவர். ஆக யார் ஜனநாயகவாதிகள்?
பிரிட்டிசாரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்திய பெரு முதலாளிகள் அவிழ்த்து விடும் புளுகு வரலாற்றையும் சட்டங்களையும் "கீதையைப் போல்மனப்பாடம்' செய்பவர்கள் மட்டுமே ஜனநாயகவாதிகள். இதை மீறி முரண்பட்ட அடையாளங்களையும் மக்கள் வரலாற்றையும் முன்னிருத்தும் அனைவருமே தேச விரோதிகள் ஆவர். இன்று இந்து இந்தியா, ஒரே தேசம் என்று முழங்கும் ஆளும் கும்பலுக்கும் முரண்பட்ட தேசிய அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கும் பல்லாயிரம் ஆண்டு காலமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில காலங்களில் அது அரசியல் களத்திலும் சமூகத் தளத்திலும் போர் களத்திலும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக 1945ல் பிரிட்டிசார் இந்திய துணைக் கண்டத்தில் நேரடி ஆட்சியை விலக்கிக் கொள்வது என்ற முடிவை எடுத்தபின் இந்த யுத்தம் மேலும் தீவிரமடைந்தது. "வெள்ளையனுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்துவோம். பிறகு சுய பிரதேசங்களை கொண்ட ஆட்சி முறையை உருவாக்குவோம்'' என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால் 1946ல் காங்கிரஸ் தன் நிலைபாட்டினை மாற்றிக் கொண்டது. நேருவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மாநில சீரமைப்புக் கமிட்டி மொழி வாரியாக மாநிலம் அமைத்தால் சற்றுமுன் பிறந்த இந்திய தேசிய குழந்தைக்கு எதிராக அமைந்து விடும் என்று எச்சரித்தது. வருத்தத்திற்கு உரியது என்னவெனில் “பிறந்த இந்திய தேசிய குழந்தைக்காக வளர்ந்த பிள்ளைகளாக இருந்த தேசிய இனங்களின் உரிமைகள் பலியிடப்பட்டன.'' பிரிட்டிஷ் மூலதனம் மற்றும் இந்திய வைதீக இந்து மதக் கலாச்சாரத்தின் ஆதிக்கம் கலந்த தமிழகம், வங்காளம், மராட்டியம் போன்ற பகுதிகளில் தேசிய இன உரிமைகள் அழிக்கப்பட்டு இந்து இராஜ்யத்தின் ஒரு அங்கமாக மாற்றப்பட்ட நிலையில் பிரிட்டிஷ் நேரடி மூலதனம் மற்றும் இந்துப் பண்பாட்டிற்கு உட்பட்டதாக பின்தங்கிய வடகிழக்கு தேசங்களைச் சார்ந்த பழங்குடிகள் இந்து (இந்தியா) அரசில் கட்டாயமாக இணைந்திருப்பது சோகத்திலும் சோகம்.
வடகிழக்கு பழங்குடி இன மக்கள் மத ரீதியாகவும் மரபின ரீதியாகவும் மொழிக் குடும்ப ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், மைய நீரோட்ட(?) இந்திய / இந்து / வைதீக/ வரலாற்றுடன் எந்த வகையிலும் உறவுடையவர்களாக இருந்ததே இல்லை.
இன்று வடகிழக்கு தேசங்கள் என்பன அசாம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களே ஆகும்.
கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) வடகிழக்கு தேசங்களை ஆக்கிரமிக்க பின்வரும் காரணங்களே முக்கியமானவை.
1. அசாமில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.
2. அசாமின் இந்த வளங்களை மற்ற பகுதிகளுக்கு வணிகம் செய்து கொள்ள பழங்குடி பகுதிகளை தனதாக்க வேண்டியிருந்தது.
3. பிரிட்டிஷ் இந்தியா தன் அண்டை நாடுகளில் வணிகம் செய்து கொள்ள தன் எல்லைப் பகுதிகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
4. இந்தோ பர்மா யுத்த காலங்களில் பல பழங்குடி பகுதிகளை தன் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியிருந்தது.
5. பர்மா ஆதிக்கத்தில் இருந்த சில குறுநில மன்னர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் உதவியை நாடினார்கள்.
இப்படியாக பிரிட்டிஷ் ஆளுமைக்கு உட்பட்ட வடகிழக்கு தேசங்கள் தத்தமது விடுதலைக்காக வீர தீரப் போராட்டங்களை நடத்தின. பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களும் தாங்கள் தேசமாக வளர வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் பிரிட்டிசார் இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய பின் வல்லபாய் பட்டேல், நேரு போன்றவர்கள் அம்மக் களின் உரிமைகளை எவ்வாறு பறித்தனர் என்பதை இன்று மாநிலமாக அடைபட்டிருக்கும் வடகிழக்கு தேசங்களின் சோகத்தை தேச வரலாறைப் பார்ப்போம்.
எரிமலையாக அசாம்:
கி.பி.19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்து வந்த அஹேம் ராஜ வம்சம் தோற்கடிக்கப்பட்டு பர்மாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது. அதன் பிறகு முதலாவது ஆங்கிலோ பர்மா யுத்தம் (1824 1826) முடிவில் யாண்டோபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கீழ் அசாம் பகுதி பிரிட்டிஷாரின் வசம் ஒப்படைக் கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த யுத்தங்களின் முடிவில் 1839ம் ஆண்டு அஸ்ஸாம் முழுமையாக பிரிட்டிஷாரின் ஆளுகைக்கு உட்பட்டது. 1826ல் இருந்து 1873 வரை வங்காள ஆட்சிக்குட்பட்ட பிரதேசப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டது. 1873ல் இருந்து 1905 வரை தலைமை மாகாண ஆணையருக்கு உட்பட்ட தனி பிரதேசமாக செயல்பட்டது.
1906ல் இருந்து 1911 வரையிலான வங்காளப் பிரிவினைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கிழக்கு வங்கதேசத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டது.
1918 1920ல் தனி அஸ்ஸாம் ஆட்சி மன்றக் குழு செயற்பட்டது. 1921 1937ல் இரட்டை ஆட்சி முறை இருந்தது. 1938 1947ல் அசாம் சட்டமன்ற ஆட்சிக்குழு உருவாக்கப்பட்டு இதுவரை கொடுக்கப்படாத அதிகாரங்கள் உள்ளூர் அசாமியர்களுக்கு வழங்கப் பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை (1935) தாண்டி இந்த சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 1947க்குப் பிறகு சுதந்திரம் அடைந்திருக்க வேண்டிய அசாமின் விடுதலைக் கோரிக்கையானது மறுதலிக்கப் பட்டு இந்திய இராம அரசின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டது. அசாமில் பரந்து கிடக்கும் இயற்கை வளங்கள் அசாமியர்களுக்கும் பின்தங்கிய பழங்குடி யினர்களுக்கும் பயன்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் தின்று கொழுப்பேறிய இந்திய பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியது. வளர்ந்திருக்க வேண்டிய அசாமில் அசாமியர் மற்றும் பழங்குடியினரின் பண்பாடு இந்து இந்தியா என்ற அரசியல் மற்றும் பண்பாட்டில் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது என்று புரிதலுடன் அசாம் விடுதலைக் கோரிக்கையை பார்க்க வேண்டும். தங்கள் விடுதலைக் காக கொதித்தொழுந்த மக்களை ஒடுக்குவதற்காக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா கொண்டு வந்த கருப்புச் சட்டங்கள் பின்வருமாறு:
பஞ்சாப் பாதுகாப்புச் சட்டம் (1953), அசாம் மக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1958).
1977ல் அசாம் விடுதலையை முன்னிறுத்தி உல்ஃபா வின் (ULFA) தலைமையில் ஆயுதப் போராட்டம் துவங்கப்பட்டது. இது இந்திய அரசை நடுநடுங்க வைத்தது. 1980களின் இறுதியிலும் 1990 களின் தொடக்கத்திலும் உல்ஃபாவின் தலைமையிலான அசாம் விடுதலை போராட்டமும் அசாமில் வாழும் போடா பழங்குடி அமைப்பின் ஆயுதப் போராட்டமும் இந்திய அரசை உலுக்கியதால் அது ஒரு புறத்தில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு மறுபுறத்தில் சரணடைந்த உல்ஃபாக்களின் செயல் வீரர்களைக் கொண்டு உல்ஃபாவின் உறுப்பினர்களைக் கொன்றது. 2003ல் பூடானை மிரட்டி உல்ஃபாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை எடுக்க வைத்தது. கடந்த சில ஆண்டுகளில் அண்டை நாடுகளை (பூட்டான், வங்காளதேசம், மியான்மர்) இந்தியா தன் வசப்படுத்தியதன் மூலமாகவும் உளவு வலைப் பின்னலை உருவாக்கியதன் மூலமாகவும் இப்போது ஒட்டு மொத்த உல்ஃபா தலைமை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தப்பட்டிருக் கின்றார்கள் ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில்.
வெற்றிப் பெற வேண்டிய திரிபுரா தேசிய கோரிக்கை
19ம் நூற்றாண்டில் இருந்து சந்துரு மாண்டிய பகதூர் தெபராம பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டு திரிபுரா அரசராக செயல்பட்டு வந்தார். 1949ல் அசாமின் ஒரு பகுதியாக திரிபுரா இணைக்கப்பட்டது. திரிபுரா பழங்குடியினர் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை என்னவெனில் வங்காள மேட்டுக்குடிகளின் ஆதிக்கமே. ஜூலை 01, 1969ல் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. தொடர்ச்சியான போராட்டத்திற்கு பின் ஜனவரி 21 1972ல் முழு மாநில உரிமைப் பெற்றது. "சுதந்திர திரிபுராவைப் படைப்போம்! வங்காள ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' என்று முழங்கி திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா புலிகள் போன்ற அமைப்புகள் செயற்பட்டு வந்தன. இப்போது அவை ஒடுக்கப்பட்டு மயான அமைதி நிலவி வருகிறது.
அருணாசலப் பிரதேசம்:
சீன இந்திய எல்லைப் பிரச்சினை மூலமாக அருணாசலப்பிரதேசத்தின் மீதான ஆதிபத்திய உரிமை உலகிற்கு தெரிய வருகிறது. 1888ல் பிரிட்டிசாரின் பகுதியாகும் வடக்கு அருணாசலப்பிரதேசப் பகுதி யானது திபெத் மற்றும் பூடான் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.
1913 1914 ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியா சீன எல்லைப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டது. அவ்வண்ணம் சர் ஹென்றி மக் மோகன் எல்லை வரைபடம் தயாரித்தார். இவ்வெல்லைக்கோடு திபெத் பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் 1949ல் திபெத், சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்ட நிலையில் சீனா மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்க மறுத்துக் கொண்டு வருகிறது. 1962ல் சீன இந்திய யுத்தம் ஏற்பட்டு அருணாச்சலப் பிரதேசப் பகுதிகள் சீன இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இருந்தபோதும் சீனா மக்மோகன் எல்லைப் பகுதிக்கு திரும்பிச் சென்றது. 1986ல் அருணாச்சலப் பிரதேசம் முழு அங்கீகாரம் பெற்ற மாநிலமாக ஆனது.
போராட்டங்களின் தாயாக நாகலாந்து
பெரும்பாலும் வடகிழக்கு தேசங்களில் போராடும் ஆயுதக் குழுக்களின் தாயாக விளங்குவது நாகாலாந்து விடுதலைப் போராட்டமே.
1883ல் இருந்து பிரிட்டிசார் நாகலாந்து மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கினர். முதலில் நாகலாந்தை ஆட்சி செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்ப வில்லை. அசாமில் இருக்கும் வளங்களை மற்ற பகுதிக்கு கொண்டு செல்வதற்கு நாகலாந்து பழங்குடிப் பகுதியை கடக்க வேண்டியிருந் தது. மேலும் தொடர்ச்சி யான பழங்குடியினரின் வழிப்பறிகளை தடுத்து நிறுத்த வேண்டி யிருந்ததால் நாகலாந்தை பிரிட்டிஷார் ஆக்கிரமித்தனர். பிறகு அம்மக்களின் வளங்களை சுரண்டும் கட்டத்திற்கு பிரிட்டிசார் நகர்ந்தனர். வெள்ளையன் ஆட்சிக் காலத்தில் பழங்குடிகள் தங்களின் சொந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். பிரிந்து கிடந்த பழங்குடிகள் நாகலாந்தாக ஒன்றிணைந்தனர்.
ஆனால் 1946க்குப் பிறகு நிலைமைகள் வேறு விதமாக மாறின. விடுதலையை நேசித்த நாகலாந்து பிரதிநிதிகள் அடங்கிய நாகா தேசிய கவுன்சிலும் (NNC - Naga National Council) இந்திய பிரதிநிதியான கவர்னர் சர் அக்பர் ஐதருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு ஜூன் 27, 1947ல் 9 அம்சத் திட்டத்தில் கையெழுத்திட்டனர். 10 வருடத்திற்குப் பிறகு நிரந்தர முடிவெடுக்கப்படும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்று வரையிலும் இம்முடிவுகள் கிடப்பில் கிடக்கின்றன.
நாகா விடுதலையில் தீவிர எண்ணத்தைக் கொண்ட பிசோ போன்ற தலைவர்கள் மேற்கூறிய 9 அம்சத் திட்டத்தை ஏற்க மறுத்தனர். விடுதலை பெற்ற நாகலாந்து அரசாங்கம் உருவாக்குவதற்கு திட்டங்களை வகுத்தனர்.
மே 1951ல் நாகா தேசிய கவுன்சிலால் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 99 சதவீதத்தினர் சுதந்திர நாகாலாந்திற்கே வாக்களித்தனர். நாகா தேசிய கவுன்சிலின் தலைமையை கைப்பற்றிய பிசோ போன்றவர்களால் 1954ல் நாகலாந்து சுதந்திர இராணுவம் உருவாக்கப்பட்டது.
மார்ச் 22ன் சுதந்திர ஐக்கிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு பிஷோயானாவில் சுதந்திர நாகலாந்து கொடி ஏற்றப்பட்டு முறையாக அமைச்சர்கள் மற்றும் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு தொடர்ச்சியான இயக்கத்தில் பல உடைவுகள், இணைப்புகள் என காலம் உருண்டோடி இறுதியாக பலம் மிக்க அமைப்பாக நாகலாந்து சோசலிச தேசிய கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப் புக்கும் இந்திய அரசுக்கும் கடந்த 13 ஆண்டு காலமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்பேச்சுவார்த்தையை குலைக்கும் வண்ணமாக கடந்த மாதம் இவ்வமைப்பின் வெளியுறவுச் செயலாளர் (அந்தோணி ஜெஷர்மே) இந்திய உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதின் மூலம் 13 ஆண்டு கால பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் மோசடி என்று புரிந்து கொள்ளலாம்.
ஆக்கிரமிக்கப்பட்ட மணிப்பூர்:
இன்று பெரும்பாலும் இந்தியர் என்று கருதிக் கொள்பவர்களுக்கு 1947ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து மணிப்பூர் சுதந்திரமடைந்து மணிப்பூர் அரசர் தலைமையில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பதவியேற்றதையோ அதன் பின் 1947ல் இந்தியா தன் இராணுவ பலத்தின் மூலமாக மணிப்பூரை ஆக்கிரமித்து வருவதையோ அறிந்திருப்பதில்லை.
இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் மணிப்பூர் மக்களை ஒடுக்குவதற்காக 1958ல் கொண்டு வரப்பட்ட சிறப்பு ஆயுதப் படை அதிகாரச் சட்டம் இன்று வரை அமலில் இருக்கிறது.
மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்கும் இச்சட்டத்திற்கு எதிராக கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம் உலகில் உள்ள பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அம்பலப் படுத்துகிறது.
மணிப்பூர் விடுதலையை பிரதானமாக முன்னிறுத்தி செயல்படும் அமைப்பு இரண்டு ஆகும். அவை கங்லேப்பா கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) சில மாதங்களுக்கு முன் வங்கதேசத்தில் UNLF தலைவர் இந்திய "ரா' உளவுத் துறையால் கடத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு பீகாரில் கைது செய்யப்பட்டார் என்று அறிவித்தது. இது இந்திய அரசின் நய வஞ்சகத்தை உலகிற்கு உணர்த்துகிறது.
காலம் கடந்து மாநில அரசை பெற்ற மிசோரம்:
மிசோரத்தில் பெரும்பாலோர் குக்கி பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்கள். 1895ல் இப்பகுதி பிரிட்டிஷ் ஆளுமைக்கு உட்பட்ட பிறகு அசாமில் உள்ள லுசாய் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 1919ல் பிரிட்டிசாரால் இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என அறிவிக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
1955ல் கிழக்கு இந்திய சங்கம் என்ற அமைப்பு அனைத்து அசாம் மலைப்பகுதிகளையும் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்று போராடியது.
1961ல் லால்டெங்காவின் தலைமையில் மிசோ தேசிய முன்னணி உருவாகி சுதந்திர மிசோரத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடியது. இதை நீர்த்துப் போக செய்வதற்காக இரும்பு மங்கை இந்திரா காந்தி செய்த சதியின் விளைவாக ஜனவரி 21, 1972ல் மிசோரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகும் ஆயுதப் போராட்டம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்ததால் பிரதமர் இராஜீவ்காந்தியின் ஆட்சியில் பிப்ரவரி 20, 1987ல் புதிய மாநிலமாக மிசோரம் அறிவிக்கப்பட்டு லால்டெங்கா முதலமைச்சராக்கப்பட்டார்.
மறுக்கப்படும் மேகலாயாவின் உரிமைகள்
இரண்டு அசாம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மேகாலயா மாநிலம் உருவாக்கப்பட்டது. 21 ஜனவரி 1972 ல் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் காசி, ஜெயந்தியா, காரோ போன்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.
1919ல் பிரிட்டிசாரால் அசாமில் இருந்த இப்பகுதிகள் பிரிட்டிசாரால் மிகவும் பின்தங்கிய பகுதி என்று அறிவிக்கப்பட்டு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தமது சந்தை நலனுக்காக வடகிழக்கு பழங்குடி / தேசிய இன மக்களின் உரிமைகளையும் விருப்பங்களையும் காலில் போட்டு நசுக்கியது மட்டும் இல்லாமல் 1947ல் அதிகாரத்திற்கு வந்த இந்திய ஆட்சியாளர்களும் இதையே தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டங்கள் நடந்தால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என்ற உத்தியை கடைபிடித்து வருகின் றனர். அத்துடன் அக்கம்பக்கமாக சில சலுகைகள் (பெயரளவிலான சுயாட்சி கவுன்சில், யூனியன் பிரதேசம், தனி மாநிலம் போன்றவை) எலும்புத் துண்டுகளாக வீசுவர்.
இன்னொரு புறத்தில் போராடும் அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்வது (அ) விலைக்கு வாங்குவது (அ) கொல்வது (அ) அவர்களை வைத்தே அமைப்புகளை பிளவுபடுத்துவது (அ) வெவ்வேறு பழங்குடி மக்களிடையே மோதல்களை உருவாக்கி இனவெறி / இனவாத ரத்தக் களறி நிறைந்த சூழலை உருவாக்குவது என்ற பார்ப்பனீய சாணக்கியத் தனமான நயவஞ்சக வேலையை வெற்றிகரமாக செய்து வருகின் றனர். கடந்த பத்து ஆண்டுகளாக தனது விரிவாதிக்க அரசியலை / பலத்தைக் கொண்டு பூட்டான், வங்காள தேசம், மியான்மர் போன்ற நாடுகளை நிர்பந்தம் செய்து உல்ஃபா, போடோ விடுதலை அமைப்பு, நாக லாந்து விடுதலை அமைப்புகள் மணிப்பூரின் UNLF ஆகியவற்றின் தலைவர்களை கைது செய்து வருகின்றனர்.
இன்று உல்ஃபாவின் தலைவர்களின் ஒருவரை தவிர அனைவரும் கைது செய்யப்பட்டு பேச்சுவார்த் தைக்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பேச்சுவார்த்தை நடக்கப் போகிறது.
நாகலாந்து சோசலிச தேசிய கவுன்சிலுடன் 13 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தி இயக்கத்தை நீர்த்துப் போக செய்துவிட முடியும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு தேசிய இன பிரச்சினைகளுக்காக தமிழக மக்கள் கண்ணீர் விட வேண்டுமென்று நாம் கூறவில்லை. நம் உரிமைக்காகவே ஒருங்கிணையாத நிலையில் ஏதோ ஒரு வகையில் அம்மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்கு, நாமும் காரணமாக இருக்கிறோம்.
வடகிழக்கு தேசங்களுக்கு மட்டுமில்லை, ஈழம், காஷ்மீர், மத்திய இந்திய பழங்குடியினருக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில் இந்திய பெருமுதலாளிகளுக்கு எதிராக சமத்துவத்தை உடைய மக்கள் ஜனநாயக தமிழகத்திற்காக போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பதே இம் மக்களுக்கு உதவிகரமாக அமையும்.
அழுத்தமாகக் கூறுவதெனில் இந்திய பெரு முதலாளிகள் சுழற்றி விடும் ஜனநாயகச் சூதாட்ட சக்கரத்தில் சிக்கிக் கொள்ளாமல் புதிய தமிழகத்தை படைக்க உறுதியான இயக்கங்களை கட்டியமைப்போம்.