கொடிய வறுமை, பஞ்சம், பட்டினி, சாதிக்கொடுமை, நிலவுடைமையின் கோரத்தாண்டவம் இதுதான் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலை, நிலவுடைமையாளர்களும் வட்டிக்கடைக்காரர்களும், வணிகர்களும் சாதி வெறியர்களும் மத, மூட நம்பிக்கையின் காவலர்களும் தமிழக மக்களை கசக்கிப் பிழிந்தக் காலமது.

                இலங்கையை முற்று முழுவதாக ஆங்கிலேயர் தம் ஆதிக்கப் பிடியில் கொண்டு வந்ததும் இக்காலக் கட்டத்தில்தான். கண்டி இராச்சியத்தை 1815ல் கைப்பற்றியதோடு முழு இலங்கைத் தீவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. இதனைத் தொடர்ந்து 1823ல் கம்பளை, சின்னப்பிட்டிய தோட்டத்தில் தொடங்கி கோப்பி (coffee) பயிர்ச் செய்கை விரைந்து பெருகியது. இத்தோட்டங்களுக்குத் தேவையானத் தொழிலாளர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இடைத் தரகர்களான கங்காணிகள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

malaiyaga makkal

                இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் வரும் வழியிலேயே பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்ததும், தோட்டங்களில் அவர்கள் பட்டத் துன்பங்களும் அளவற்றவை, கோப்பிப் பயிர் “ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ்(Hemila vestarix)” என்ற நோயினால் அழிய, தேயிலையும் அதனைத் தொடர்ந்து ரப்பரும் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன. இவ்வாறு 1823ல் தொடங்கி 1931 வரை இலட்சக்கணக்கானோர் தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி இலங்கை சென்றனர். இலங்கைத் தீவின் காடு, மேடுகளை வெட்டித் திருத்தி, உழைப்பையும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி செல்வம் கொழிக்கும் தேயிலை, ரப்பர் தோட்டங்களாக மாற்றினர்.                         

  1931 1981
சிங்களவர் 65% 74.2%
இலங்கைத் தமிழர் 12% 12.6%
முஸ்லிம்கள் 10% 7.7%
மலையக மக்கள் 13% 5.5%

முதல் தொழிற்சங்கம்

                ஒரு நூற்றாண்டுக்கு மேல் கடந்த பின்னர்தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சங்க அமைப்பு கோ. நடேசய்யரால் 1931ல் உருவாக்கப்பட்டது. “இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளமனம்” என்ற பெயரில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தோட்டத் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தப் போராட்டம் 17-04-1929ல் கொட்டியகல தோட்டத்தில் நடைபெற்றது.

குடியுரிமை பறிப்பு:

                இலங்கையின் அன்னிய செலாவணியில் 66மூயும் ஏற்றுமதியில் 80மூயும் ஈட்டித் தரும் தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படை வாழ்வாதாரங்களை வழங்காமல் அவர்களை அரைக் கொத்தடிமை நிலையிலேயே ஆங்கில ஆட்சியாளர்கள் வைத்திருந்தனர். இலங்கை 1948ல் சுதந்திரமடைந்தபோது ஆட்சிக்கு வந்த டி.எஸ். சேனநாயக்க அரசு ஒரே கையெழுத்தில் பத்து லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக மாற்றியது. அச்சமயத்தில் இலங்கைப் பாராளுமன்றத்திற்க்கு 8 உறுப்பினர்களை தோட்டத் தொழிலாளர்கள் தெரிவு செய்து அனுப்பியிருந்தனர். இது தவிர இடதுசாரிக் கட்சிகளுக்கே அவர்கள் பெருமளவில் ஆதரவளித்தனர்.

                இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை இந்தியா தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தங்கள் கடின உழைப்பால் செல்வங்களை உருவாக்கியவர்களுக்கு இலங்கை மண்ணில் வாழ முழு உரிமையுண்டு என்பதை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு மலையக மக்களை கை விட்டு, இலங்கை அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது.

சிறிமா – சாஸ்திரி உடன்பாடு இம்மக்களுக்கு வாழும் உரிமைகளை வழங்க மறுத்து, பண்டங்களைப் போல இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கை 1964ல் செய்து கொள்ளப்பட்டது.    

                இந்த உடன்படிக்கையானது இரு நாட்டு பிரதமர்களும் எழுதிக் கொண்ட கடிதங்கள் மட்டுமே. இதற்கெனத் தனியான ஆவணம் எதுவும் இரு நாட்டு அரசுகளால் உருவாக்கப்படவில்லை. அடிமைகளுக்கு எதற்கு ஆவணம் என்று இரு நாடுகளும் முடிவு செய்திருக்கலாம்.

                பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் 1948ன் பிரிவு15ன் படி ஒவ்வொருவருக்கும் அவருடைய நாட்டு அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அரசியல் மற்றும் குடியுரிமைகளைப் பறித்தது இலங்கை அரசு. இந்திய அரசோ இதற்கு பக்கத் துணையாக இருந்து இம்மக்களைப் பங்கு போட்டுக்கொள்ள முன் வந்தது.

                இவ்வுடன்படிக்கைக்கு இந்தியப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு எழுதிய 1964 அக்டோபர் 39ம் தேதியிட்ட கடிதந்தான் சான்றாக உள்ளது. இந்திராகாந்தி – சிறிமா பண்டாரநாயக இடையில் 1974ல் மற்றொரு உடன்படிக்கை உருவானது. இக்கடிதங்கள் பின்வருமாறு:

இந்தியப் பிரதம மந்திரி புதுடெல்லி, 30.10.1964

எண் 446/பி.எம்.ஓ./64

மாட்சிமையுடையீர்,

                உங்களது கடிதம் எண். சி.ஐ.டி./ஐ.சி.பி./ தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றதைத் தெரிவிக்கும் பேறு பெற்றுள்ளேன்.

“இலங்கையில் இந்திய வம்சாவளியினரின் நிலை பற்றியும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் 1964 அக்டோபர் 24ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை நம் இருவருக்குமிடையில் நடைபெற்ற விவாதங்கள், இருவருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியக் கருத்துக்கள் சம்பந்தமாக இங்கு குறிப்பிடும் பேறு பெற்றுள்ளேன்.

1.            அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கத்தின்படி, இந்திய அல்லது இலங்கைப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாத இலங்கையிலுள்ள எல்லா இந்திய வம்சாவழிகளும் இலங்கை அல்லது இந்தியப் பிரஜைகளாக ஆக வேண்டும்.                     

2.            இத்தகையவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 9,75,000. இந்த எண்ணிக்கையில் கள்ளத்தனமாக குடிபெயர்ந்தவர்கள், இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் சேர மாட்டார்கள்.

3.            இவர்களில் 3,00,000 பேர்களும் அவர்களின் இயல்பான பிறப்புகளும் இலங்கை அரசாங்கத்தில் பிரஜைகளாக்கப்படுவர்கள். இவர்களில் 5,25,000 பேர்களும் அவர்களின் இயல்பான பிறப்புகளும் இந்திய அரசாங்கத்தில் இந்தியப் பிரஜைகளாக்கப்படுவர்கள்.

4.            மீதியிருக்கும் 1,50,000 பேர்களின் நிலையும், எதிர்காலத்தில் இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படும் இன்னொரு ஒப்பந்தம் மூலம் தீர்மானிக்கப்படும்.

5.            இந்திய அரசாங்கம் தாயகம் திரும்பியவர்களை இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட 15 வருடங்களுக்குள்ளாக ஏற்றுக் கொள்ளும். இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு செயல் திட்டத்தின்படி இது நடந்தே தீர வேண்டும்.

6.            இலங்கைப் பிரஜா உரிமை அளிக்கப்படுதல் தொடர்பாக 3-வது பாராவின்படியும், மறுவாழ்வு அளித்தல் தொடர்பான 5-வது பாராவின்படியும், 15வருடங்களுக்குள் இது நடைபெற வேண்டும். பிரஜா உரிமை அளித்தலும், மறுவாழ்வு அளித்தலும் முடிந்த அளவு சரியான விகிதாச்சாரப்படி நடந்தேற வேண்டும்.

7.            இந்தியா செல்லவிருக்கும் நபர்கள் தாயகம் திரும்பும்வரை இலங்கையில் தொடர்ந்து தங்கும் காலங்களில் இலவச விசா உட்பட மற்ற இலங்கைப் பிரஜைகளுக்கான வசதிகளையும் (திருப்பி அனுப்பம் வசதியைத் தவிர) மற்ற இயல்பான வசதிகளையும் இலங்கை அரசாங்கம் வழங்கும். இத்தகைய நபர்கள் ஒப்பந்தம் ஏற்பட்டக் காலத்தில் ஏற்கனவே இருக்கும் லாபகரமான வேலைகளிலும், மறுவாழ்வுத் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் அல்லது அவர்கள் 55 வயதை அடையும் வரையில் இதில் எது குறைவோ அதுவரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொள்கிறது.

8.            இந்தியாவிற்குச் செல்லவிருக்கும் நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற தற்போது அமலில் இருக்கும் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளின்படி இந்தியா செல்பவர்களின் சேமநல நிதி, கிராஜீவிட்டி உட்பட எல்லாச் சொத்துக்களையும் இந்தியா கொண்டுசெல்ல அனுமதிப்பதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.    

9.            தாயகம் திரும்பவிருக்கும் குடும்பங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் அதிகபட்ச சொத்துக்களின் மதிப்பு ரூ 4,000க்கும் குறையாது என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.

10.          இலங்கைப் பிரஜா உரிமை அளிக்கப்படவிருக்கும் நபர்களின் பெயர்கள் அடங்கிய பதிவேடு ஒன்றும், இந்தியப் பிரஜா உரிமை அளிக்கப்படவிருக்கும் நபர்களின் பெயர்கள் அடங்கிய பதிவேடு ஒன்றும் - ஆக இரண்டு பதிவேடுகள் தயாரிக்கப்படும், இந்தப் பதிவேடுகளைத் தயாரித்து முடிப்பதானது இலங்கை பிரஜா உரிமை அளிக்கப்படுவதையோ தாயகம் திரும்புதலையோ கட்டுப்படுத்தாது.

11.          இந்தத் தேதியிலிருந்து ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் இரண்டு அரசாங்கங்களும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும், எடுப்பதிலிருந்து இரண்டு அரசாங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒரு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை எடுக்கும்.

மேற்கண்ட பகுதிகள் நம்மிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை சரியாக விளக்கியுள்ளது. எனது கடிதமும், உங்களது பதிலும் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அங்கமே.

தங்கள் மேலான கவனத்திற்கு இதை எடுத்துக் கொண்டு, ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

மேன்மை தங்கிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா        தங்கள் உண்மையுள்ள

இலங்கை பிரதம மந்திரி, இலங்கை.              (லால்பகதூர் சாஸ்திரி)

1974ஆம் ஆண்டு இந்திரா -ஸ்ரீமா உடன்படிக்கை பின்வருமாறு:

               sirima shastri pact இந்தியா பிரதம மந்திரி

மேன்மைமையுடையீர்,

                உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றேன் என்று குறிப்பிடுவதில் பெருமை கொள்கிறேன். உங்களது கடிதம் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

1.            மீதமுள்ள மக்களில் 50% பேருக்கு அதாவது 75,000 பேர்களுடன் அவர்களின் பிறப்புகளுக்கும் பிரஜா உரிமையை இலங்கை அரசாங்கம் வழங்கும். 50% பேருக்கு அவர்களின் பிறப்புகளுக்கு இந்திய அரசாங்கம் மறுவாழ்வு அளிக்கும். அத்துடன் இந்திய பிரஜா உரிமையும் அளிக்கும்.  

2.            75,000 பேருக்கு இந்தியாவில் மறுவாழ்வு அளித்தல் என்பது 1964 ஒப்பந்தத்தின் 3-வது சரத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 5,25,000 பேருக்கு மறுவாழ்வு அளித்தபின் செய்யப்படும். இது இரண்டாண்டுகளில் செய்யப்படும்.

3.            75,000 பேருக்கு இலங்கை பிரஜா உரிமை அளித்தல் 1964 ஒப்பந்தத்தின் 3-வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3,00,000 பேருக்கு இலங்கை பிரஜா உரிமை அளித்தபின் செய்யப்படும். இது இந்தியாவில் மறுவாழ்வு அளிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் 1:1 என்ற விகிதாச்சாரத்தில் இருக்கும்.

4.            மீதியிருக்கும் 1,50,000 பேர்களின் நிலையும், எதிர்காலமும் இரண்டு அரசாங்களுக்கிடையில் ஏற்படும் இன்னொரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.

5.            இந்திய அரசாங்கம் தாயகம் திரும்பியவர்களை இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட 15 வருடங்களுக்குள்ளாக ஏற்றுக்கொள்ளும். இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு செயல் திட்டத்தின்படி இது நடந்தே தீர வேண்டும்.

6.            1964 ஒப்பந்தத்தின்கீழ் அடங்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்ட வசதிகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடங்கும் நபர்களுக்கும் அளிக்கப்படும்.

1964 ஒப்பந்தம் இலங்கை அல்லது இந்தியப் பிரஜைகளாக அங்கீகாரம் பெறாத இலங்கை வாழ் இந்திய வம்சாவளிகளின் பிரச்சினை சம்பந்தமான இந்த ஒப்பந்தமும் முழுக்க நிறைவேற்றப்படுவதானது நம் இரு அரசாங்கங்களுக்கும் திருப்தி அளிக்கும் வி~யமாகும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்மிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மேற்கண்டபடி, சரியானது என்பதை உறுதி செய்வதில் நான் பெருமை கொள்கிறேன். என்னுடைய கடிதமும் உங்களது பதிலும் இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தை உறுதி செய்கின்றன. மேன்மையுடையீர், எனது மேலான ஒப்புதலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மேன்மை தாங்கிய திருமதி ஸ்ரீமாவோ ஆர். பண்டாரநாயக்கா

இலங்கை குடியரசு பிரதம மந்திரி.

சிறிமா –சாஸ்திரிஉடன்படிக்கையைத் தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் 1967ல் அமுலாக்கச் சட்டம் 14(Implimentation Act 14) நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசு 1968ல் மறுவாழ்வுத் திட்டங்களை அறிவித்தது.    

எனினும் 7.5லட்சம் பேர் இலங்கைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர். தாங்கள் பிறந்து வளர்ந்து வளப்படுத்திய மண்ணை விட்டுச் செல்ல அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால் இலங்கை அரசு பெரும்பாலானோரின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்தது. இலங்கைக் குடியுரிமை வழங்கவில்லை. இந்தியக் குடியுரிமை கோரி மிகக் குறைவானவர்களே விண்ணப்பித்திருந்தனர்.

1964 முதல் 1977 வரை

இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள்   18,549

இலங்கைக் குடியுரிமை பெற்றவர்கள்            7,459

இந்தியா சென்றவர்கள்                                  8,723

வெளியேற்றும் முயற்சிகள்

                தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக பல்வேறு மறைமுக நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டன. 1972ல் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது சிங்களவர்கள் தோட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

                கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கு தொடர் வண்டிகளிலும் தலைமன்னாரிலிருந்து இராமேசுவரம் வரையிலும் “இராமானுஜம்” என்ற கப்பலிலும் பயணித்து இந்தியாவுக்கு வந்தனர். அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்களும் நண்பர்களும் பிரிவுத் துயர் தாங்காது கதறிக் கதறி அழும் காட்சிகள் நினைத்தே பார்க்க முடியாத துயரமாகும். இதனால் இந்த தொடர் வண்டிக்கு “அழுகை கோச்சி” என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது

விளைவுகள் - இலங்கையில்:

                இலங்கையின் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்த மலையக மக்களின் எண்ணிக்கை இவ்வுடன்படிக்கையின் மூலம் மக்கள் இந்தியாவிற்குச் சென்றதால் நான்காவது இடத்திற்கு தாழ்ந்து போனது.

மலையக மக்கள் தொகை                    

 

ஆண்டு எண்ணிக்கை மாறுபாடு
1911 5,31,000 ---
1921 6,102,700 +13.5
1931 8,18,500 +35.8                                                  7
1946     78,060 -   4.6
1953 9,74,100 +24.8
1963 1,12,300 +15.3
1971 1,17,400   +4.6
1981 8,18,700  - 30.3
1989 8,73,100     +6.6
2001 8,55,000      -2.1
2011 8,42,323      -2.5

இப்புள்ளி விபர அட்டவனையை கூர்ந்து நோக்கினால், பின்வரும் உண்மைகள் தெளிவாகும். சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கை 1964ல் செய்யப்பட்டபோதும் 1977க்குப் பிறகே அதிக எண்ணிக்கையிலான மக்கள் இலங்கையை விட்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். 1971ம் ஆண்டின் மக்கள் தொகையை விட 1981ம் ஆண்டின் மக்கள் தொகையானது 30 சதவீதம் குறைந்துள்ளதே இதற்கு சான்றாகும். ஏனெனில் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறிய போதும் இம்மக்களில் பெரும்பாலானோர் இலங்கையை விட்டு வெளியேற விரும்பவில்லை.

கலவரங்கள்

                இம்மக்கள் இலங்கையை விட்டு வெளியேறும் மன நிலையை ஏற்படுத்தும் வகையில் 1977ல் மலையக மக்களுக்கெதிராக மிகப் பெரிய அளவிலான கலவரங்கள் அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டன. மக்கள் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1981;ல் சிங்களவர் 80 சதவீதத்திற்கு மேல் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் (சபரகமுவா மாகாணம்) கொடிய வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ‘உயிரோடு இருக்க வேண்டுமானால் ஓடிவிடுங்கள் இந்தியாவுக்கு” என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல இச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து 1983, 1984 கலவரங்களின்போதும் பெருந்தொகையான மலையக மக்கள் தாயகம் திரும்பினார்.                 8

                இதன் விளைவாக மிகப் பெரும் எண்ணிக்கையில் மலையக மக்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்பதை விட, அடித்து விரட்டப்பட்டனர் என்பதே உண்மையாகும். இதன் மூலம் மலையக மக்களின் எண்ணிக்கை நான்காம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டது. ஒட்டு மொத்தத் தமிழர்களின் எண்ணிக்கையும் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது. இவை அனைத்தும் இலங்கை - இந்திய அரசுகளின் திட்டமிட்ட சதியே என்றால் அது மிகையாது.

தோட்டப்புற சனத் தொகை

1871 1,23,654 1931 7,90,376
1881 2,06,495 1946 8,51,359
1891 2,62,262 1953 10,08,653
1901 4,41,601 1963 11,48,470
1911 5,13,467 1968 12,34,284
1921 5,68,850    

               

இதனைத் தொடர்ந்து பல தோட்டங்கள் பிரிக்கப்பட்டு சிங்களவருக்குக் கொடுக்கப்பட்டன. தோட்ட அலுவலர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் தோட்டப்புறங்களில் தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ வேண்டிய அவலம் ஏற்பட்டது.

விளைவுகள் -இந்தியாவில்:

                சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி ஏழு பேர் இந்தியாவிற்குச் சென்றால் 4 பேருக்கு இலங்கைக் குடியுரிமை கொடுப்பது என்பதே நடைமுறையாக இருந்தது. இதன் அடிப்படையில் 1985வரை இலங்கையை விட்டு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தாயகம் திரும்பியோர் எண்ணிக்கை 4,59,327 பேர். 115,400 குடும்பங்கள். இவ்வாறு தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தின.

                தாயகம் திரும்புவதற்கான கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் இலங்கை, கண்டியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் உள்ள மறு வாழ்வுப் பிரிவில் வழங்கப்படும் குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.                      

இக்குடும்ப அட்டையில்தான் மறுவாழ்வு உதவிகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். மொத்தமாக ரூ.10,000 இலங்கை ரூபாவுக்கு மேல் பணம,; சொத்து கொண்டு வருபவர்களுக்கு எவ்வித மறுவாழ்வு உதவிகளும் அளிக்கப்படமாட்டாது.

வழங்கப்படும் மறுவாழ்வு உதவிகள்

1.            வங்கிக் கடன் ஒரு குடும்பத்திற்கு மொத்தம் ரூ.5000 இந்திய ரூபா

2.            சுய வேலை வாய்ப்பு

3.            தொழில் வாய்ப்பு தேயிலை ரப்பர் தோட்டங்கள், நூற்பு ஆலைகள், அரசு பண்ணைக் கூட்டுறவு சங்கங்கள், ரெப்கோ வங்கி மூலம் வேலை வாய்ப்புகள்.

4.            வேளாண் திட்டங்கள் அரசுத் திட்டங்கள், தனியார் திட்டங்கள், கூக்கால் திட்டம்.

5.            இந்தியாவில் தொழிற் பயிற்சிகள் அரசு தொழிற் பயிற்சி பள்ளிகளில் (ITI) சிறப்பு அனுமதிக்கான தனிப்பயிற்சி அளிக்கப்பட்டது.

6.            இலங்கையிலிருந்தபடியே இந்தியாவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு.

7.            இலங்கையிலிருந்தபடியே ரயில்வே, வங்கிப் பணி போன்ற பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்.

8.            வீட்டுக் கடன் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு

இவ்வாறு மறுவாழ்வு உதவிகள் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ் நாட்டில் வழங்கப்படுவதற்கானத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மறுவாழ்வு உதவிகள்

                இலங்கையிலிருந்து புறப்பட்டு தலைமன்னார் வரை தொடர் வண்டியிலும் பின்னர் தலை மன்னாரிலிருந்து இராமேசுவரம் வரை “ராமானுஜம்” என்ற கப்பலிலும் பயணித்து இந்தியாவுக்கு வருகின்ற தாயகம் திரும்பியோர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் அவரவர் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு அனுப்படுகின்றனர்.

மறுவாழ்வு உதவி பெற்றோர் விபரம் - தமிழ் நாட்டில்

திட்டம்                                                                                    குடும்பங்கள்

1.            வணிகக் கடன்                                                            77,445

2.            வேளாண் கடன்                                                          3,275        10

3.            தேயிலைத் தோட்டக் கழகம்                          3,445

4.            இரப்பர் தோட்டக் கழகம்                                           285

5.            சிங்கோனா தோட்டம்                                     125

6.            கூட்டுறவு நூற்பாலைகள்                                           3,942

7.            ரெப்கோ வங்கி உதவித்திட்டம்                                  4,918

8.            சுய வேலை வாய்ப்பு                                       526

9.            வீட்டுக் கடன்                                        57,461

பிற மாநிலங்களில்

மாநிலம்                                                                                   குடும்பங்கள்

1.கர்நாடகம்                                                                            988

2.கேரளம்                                                                                1,599

3.ஆந்திரா                                                                                1,962

4.குஜராத்                                                                                1

5.புதுச்சேரி                                                                              25

6.அந்தமான் நிக்கோபார்                                                        64

                                மொத்தம்                                             4,639 + 9872 = 14611

வணிகக் கடன்

                இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களில் 77,445 குடும்பங்களுக்கு (மொத்தக் குடும்பங்களில் 66% வணிகக் கடன் ஆரம்பத்தில் ரூ.3000 வழங்கப்பட்டது. பின்னர் ரூ.5000மாகவும் ரூ.7500 ஆகவும் இரு தவணைகளில் வழங்கப்படுவதாக திட்டமிடப்பட்டது.

                எனினும் மண்டபம் முகாமிலிருந்து வெளியேறும் போது முதல் தவணைத் தொகை மட்டுமே வழங்கப்பட்டது. இதுவரை இரண்டாவது தவணைத் கடன் எவருக்கும் வழங்கப்படவில்லை.

மொத்தக் கடன் முதல் தவணை 2ம் தவணை
ரூ.3000 ரூ.2000 ரூ.1000
ரூ.5000 ரூ.3000 ரூ.2000
ரூ.7500 ரூ.5000 ரூ.2500

                இலங்கையில் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த இவர்களுக்கு வணிகம் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   

மேலும் புதிய சூழலில் எத்தகைய வணிகம் செய்வது? எங்கே செய்வது என்ற குழப்பம் எல்லோரிடமும் இருந்தது. வழங்கப்பட்டத் தொகையும் எவ்வித வணிகமும் செய்வதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. இந்நிலையில் வணிகக் கடன் பெற்ற அனைவருமே அத்தொகையை செலவு செய்து விட்டு, கூலி வேலைகளைத் தேடி புறப்பட்டு விட்டனர். உறவினர்களுடன் தொடர்பு இருந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்குச் சென்ற போதும் அங்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பெரும்பாலானோர் நீலகிரி, கொடைக்கானல், ஈரோடு, திருப்பூர், கோவை, ஓசூர், கரூர், சிவகாசி போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர். நீலகிரியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த தேயிலைத் தோட்டத் தொழில் வாய்ப்பு கிடைத்தால் சுமார் 25மூத்திற்கு மேற்பட்டோர் நீலகிரியில் குடியேறினர்.

                இவ்வாறு எவ்வித நிரந்தர வாழ்வாதாரமும் இன்றி கூலித் தொழிலை நம்பி, குடியிருக்க வீடோ, வீட்டு மனையோ இன்றி, இலங்கையில் தோட்டங்களில் வாழ்ந்த நிலைமையை விட மோசமான நிலையில் சுமார் 75% தாயகம் திரும்பியோர் மற்றும் அவர்களது வாரிசுகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 20 இலட்சம் வரை இருக்கலாம். இவர்களில் 15 லட்சம் பேரின் நிலை துயரம் நிறைந்ததாகவே உள்ளது. நீலகிரியல் சுமார் 4 லட்சம் தாயகம் திரும்பியோர் வாழ்கின்றனர். இவர்கள் வாழ்கின்ற லயன்கள் இலங்கையில் வாழ்ந்த தோட்ட லயன்களை விட எந்த வகையிலும் சிறந்தவையாக இல்லை. இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் வெறும் கண்துடைப்பாக ஒரு சிறிய தொகையை மறுவாழ்வு உதவி என்ற பெயரில் வழங்கிவிட்டு இம்மக்களை கைவிட்டு விட்டது.

                கூட்டுறவு நூற்பாலைகள், அரசு தேயிலை, இரப்பர் மற்றும் சிங்கோனா தோட்டங்கள், அரசு வேலைகள் பெற்றுச் சென்றவர்கள் ஓரளவு நல்ல நிலையில் நிரந்தரத் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையின் புள்ளி விபரங்களின்படி 14,611 குடும்பங்களாகும். இது மொத்தத் தாயகம் திரும்பியோரில் ஏறக்குறைய பத்து சதவீதம் மட்டுமே. (மொத்தம் 115,400 குடும்பங்கள்)

                வேளாண் திட்டங்களில் மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்ட போதும் அந்த நிலத்தைச் சீர்த்திருத்தி பயிர் செய்வதற்கான நிதி வசதி இல்லாததும் விவசாயத் தொழிலில் அனுபவம் இல்லாததும் பெரும்பாலானத் தாயகம் திரும்பியோரை இத்திட்டத்தை விட்டு வெளியேறச் செய்துவிட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நிலங்களை விட்டுவிட்டுக் கூலி வேலை தேடிச் சென்று விட்டனர்.      

                கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்ட மிக சிறிய அளவிலான இட ஓதுக்கீடுகளில் மிகச் சிறிய எண்ணிக்கையானவர்கள் மட்டுமே பயன் பெற்றனர். இந்த ஓதுக்கீடுகள் 1984 உடன் நிறுத்தப்பட்டுவிட்டன.

சான்றிதழ் பிரச்சினைகள்

                பொதுவாக இந்திய, தமிழக அரசு அலுவலர்களுக்கு இலங்கை கல்விச் சான்றிதழ்கள் குறித்து எவ்விதத் தெளிவும் இருக்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டனர். இந்திய, தமிழக அரசுகள் இலங்கை கல்விச் சான்றுகளை எவ்வாறு அணுகுவது என்று எவ்வித அறிவுறுத்தலும் இந்திய அரசு அலுவலர்களுக்கு அளிக்கவில்லை. இதனால் இந்திய, தமிழகக் கல்வி முறையின் அடிப்படையில் அணுகியதால், பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.                                            

எடுத்துக்காட்டாக: இலங்கையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை க.பொ.த சாதாரண தரம் (GCE O/L) என்றும் மேல்நிலை பொதுத் தேர்வை க.பொ.த (உயர்தரம்) என்றும் (GCE A/L) குறிப்பிடுவர். இடையில் 1975-1976 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வை எழுதும் முறையை சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சியில் கொண்டு வந்தனர். இந்தத் தேர்வை NCGE என்றும் இதன் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளைக் கொண்ட மேல்நிலைத் தேர்வை HNCE என்றும் குறிப்பிட்டனர். எனினும் இம்முறை 1977ல் ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்தபோது நீக்கப்பட்டு பழைய முறையே மீண்டும் அமுலுக்கு வந்தது.

                GCE O/L தேர்வில் மொத்தம் 8 பாடங்கள். இவற்றில் தமிழ் மட்டுமே கட்டாயப் பாடம், ஆங்கிலம் கட்டாயப் பாடம் அல்ல. NCGE  தேர்வில் மொத்தம் 10 பாடங்கள். இதில் தமிழ் உள்பட ஏதேனும் எட்டுப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. ஆங்கிலம் கட்டாயப் பாடம் அல்ல. இந்நிலையில் NCGE  யில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெறாதவர் ஏதேனும் எட்டுப்பாடங்களில் தேர்ச்சி பெற்ற நிலையில் அவர் உயர்தர வகுப்புக்குச் செல்ல தகுதியானவர். எனினும் இந்திய – தமிழகக் கல்வித் திட்டங்களில் ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்பதாலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் தேர்ச்சி என்பதாலும் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக இந்திய, தமிழக அரசு அலுவலர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இது போன்ற காரணங்களால் வேலை வாய்ப்புகளை பல்லாயிரக்கணக்கானோர் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.      

பயண ஆவணங்கள்

                வணிக மற்றும் வீட்டுக்கடனுக்காக கடவுச்சீட்டு, குடும்ப அட்டை முதலிய ஆவணங்களை தனிவட்டாட்சியர் அலுவலகங்களிலும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெரும்பாலானோர் கொடுத்துள்ளனர். இந்த ஆவணங்கள் மக்களிடம் திருப்பித் தரப்படவில்லை. இவை காணாமல் போய் விட்டதாக அரசு அலுவலர்கள் கை விரித்து விட்டனர். இதனால் பெரும்பான்மையான தாயகம் ரெப்கோ வங்கியில் “அ” வகுப்பு உறுப்பினராக சேர்ந்து உதவிகளைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

                இதற்கு மாற்றாக பிற சான்றிதழ்களைப் போல வட்டாட்சியர்கள் மூலம் “தாயகம்” திம்பியோர் சான்றிதழ்” வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசால் இதுவரை ஏற்கப்படவில்லை. கண்டியிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டாலும் அத்தகைய சான்றிதழை பெறுவது என்பது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்கு சாத்தியமற்றது. தமிழக அரசே சான்றிதழ் வழங்குவதுதான் முறையானது.

ரெப்கோ வங்கி (Repco Bank)

                தாயகம் திரும்பியோர் நிதி, கூட்டுறவு மேம்பாட்டு வங்கி (Repartiates Co-operative Finance and Development Bank) எனப்படுகிற ரெப்கோ வங்கி, இந்திய அரசின் உள்துறையின் கீழ் அமைக்கப்பட்டது. இவ்வங்கி தற்போது வணிக வங்கிய மாற்றப்பட்டு விட்டது. இவ்வங்கியின் வருவாயில் வெறும் 3% மட்டும் வழங்கப்பட்டு, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை

                தொடக்கக் காலங்களில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவருக்கு வேலை வழங்கினால் அந்த நிறுவனத்திற்கு ரெப்கோ வங்கி ரூ.25,000 வழங்கியது. இவ்வாறு 4918 பேருக்கு வேலை வழங்க ரெப்கோ வங்கி நிதி வழங்கியுள்ளதாக தமிழக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (Repartiates Welfare trust) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் மிகக்குறைவான பேருக்கு சொற்ப உதவிகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

வீட்டுக்கடன்

                மாநில அரசின் மூலம் வீட்டுக்கடன் தொடக்கத்தில் ரூ.4000மும் பின்னர் ரூ6000மும் வழங்கப்பட்டன. வெளி நாட்டிலிருந்து வந்த, அறிமுகம் இல்லாத இம்மக்களால் மனை வாங்கி வட்டாட்சியர் அலுவலக நடைமுறைகளை முடித்து கடனைப் பெற்று வீடு கட்டுவது என்பது இயலாத ஒன்றே.       

இந்நிலையில் அரசு அலுவலர்கள் ஆசியுடன் இடைத் தரகர்கள் தாயகம் திரும்பியோரின் ஆவணங்களைப் பெற்று, குடியிருப்புகளாக வீடுகளைக் கட்டினர். போதிய அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத இந்த வீடுகள் கட்டிய இடங்கள் தமிழகம் முழுவதும் “சிலோன் காலனிகள்” என்று அழைக்கப்படுகின்றன.

                தங்கள் ஆவணங்களை இடைத் தரகர்களிடம் கொடுத்துவிட்டு, எங்கோ பிழைப்பு தேடிப் போன பல்லாயிரக்கணக்கானோருக்கு தங்களது வீடுகள் எங்கே கட்டப்பட்டிருக்கின்றன என்றே தெரியாது, தேடிப்பிடித்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலனி வீடுகளும் மனைகளும் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடப்பதையே காண முடிந்தது. இவற்றை மீட்டுத் தர அரசு அலுவலர்களை அணுகியவர்களுக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை.

தொடரும் துயரங்கள்:

மாத்தூரில் (புதுக்கோட்டை மாவட்டம்) அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேல்நிலைப்பள்ளி, தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சிறப்பு மேல்நிலைப்பள்ளி, தொழில் பயிற்சி நிலையங்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் முதலிய அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. கல்வி, வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்ட சிறிய அளவிலான இட ஒதுக்கீடுகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையுடைய பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு அரசின் உதவிகள் அதிக அளவில் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக: மருத்துவக் கல்லூரியில் பர்மாவிலிருந்து வந்தவர்களுக்கு 4 இடங்களும் இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டன.

                இலங்கைக்கு இங்கிருந்து சென்றவர்களில் 75% தாழ்த்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் நிலமற்ற விவசாயக் கூலிகளும் தான். இவர்கள் மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒருங்கிணைந்த சக்தியாக

                தாயகம் திரும்பியோர் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே செறிவாக வாழ்கின்றனர். மற்ற மாவட்டங்களிலும் பிற தென் மாவட்டங்களிலும் பரவலாகவே உள்ளனர். இதன் விளைவாக ஒரு மக்கள் சக்தியாக ஒன்று திரள்வது சாத்தியமாகவில்லை. சாதி மற்றும் அரசியல் கட்சிகளாகவும் அவர்கள் பிளவுண்டு கிடக்கின்றனர்.

                இது தவிர, இந்திய, தமிழக அரசு அலுவலர்கள் காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் முதலியோருக்கு அகதிகளுக்கும் தாயகம் திரும்பியோருக்கும் உள்ள வேறுபாடு புரிவதில்லை. எதையும் ஆழ்ந்து நோக்கமால் ஆதிக்க மனப்பான்மைமிக்க அரசு அலுவலர்களும் காவல் துறையினரும் தாயகம் திரும்பியோரை “சிலோன் அகதிகள்” என்றே அழைக்கின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம் நடந்தபோது, இலங்கை அகதிகள் என்று கருதி தாயகம் திரும்பியோரையும் காவல் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர்.

                தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகளாகக் கருதும் போக்கு இன்னும் உள்ளது. இது அரசு அலுவலர்களிடம் குறிப்பாக காவல் துறையினரிடம் உள்ளது. தாயகம் திரும்பியோர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் என்ற தெளிவில்லாத நிலையில் “இலங்கை அகதிகளாக” கருதும் போக்கு இன்றும் காணப்படுகிறது.

                மொத்தத்தில் இலங்கையில் இந்தியத் தமிழர்களாகவும் இந்தியாவில் “சிலோன்காரர்களாகவும்” அந்நியப்படுத்தப்படுகின்ற அவல நிலையையே தாயகம் திரும்பிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே, தாயகம் திரும்பிய மக்களை ஒரு பேரியக்கமாக ஒன்று திரட்டி, இந்த அவலங்களையெல்லாம் போக்கவும், மீண்டும் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய மறுவாழ்வுத் திட்டங்களைப் பெறவும் குரல் கொடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.     

- வழக்கறிஞர் தமிழகன், ஆசிரியர், தமிழ்க்காவிரி, முத்தரசநல்லூர், திருச்சி 620101