ஆதிச்சநல்லூர் குறித்த செய்திகள் கடந்த வாரம் வந்தபொழுது, தமிழர் நாகரீகத்தின் நிரூபிக்கப்பட்ட காலம் கி.மு 1000 வரையிலும் என பெருமிதப்பட்டுக் கொண்டவர்களைக் காண முடிந்தது.

சமகாலத்திலேயே நாம் எத்தனைத் தகவல்களை மறந்து கடந்து இருக்கிறோம். தொல்லியல் துறையும் கடலாய்வுத் துறையும் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவைத்திருப்பதால், நம் வரலாற்றை நாம் காணக் கூட, தேடக் கூட, எல்லாவற்றுக்கும் இந்திய நடுவண் அரசிடம் கையேந்தும் நிலையிலேயே நமது காலம் கடந்துவிடுகிறது!

இப்படித்தான், பூம்புகார் குறித்த செய்திகளும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் படிப்படியாக மறைக்கப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் பெங்களூரில் இருக்கும் இந்திய கடலியல் ஆய்வு மையத்திற்கு வந்த கிரஹாம் ஹன் காக் என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர், இரண்டு விதமான கடலியல் ஆய்வில் ஆர்வம் கொண்டி ருந்தார். ஒன்று, துவாரகா இன்னொன்று பூம்புகார். பூம்புகாரில் கடலாய்வு மேற்கொள்ள இந்திய நடுவண் அரசு சம்மதித்தாலும் நிதி ஒதுக்க ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால், துவாரகாவிற்கான நிதி வழங்கப்பட்டது. தன் சொந்த முயற்சியிலும் சானல்4 தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவியாலும் பூம்புகார் ஆய்வினை மேற்கொண்டார் கிரஹாம். பூம்புகாரின் இன்றைய கடல் எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் ஆழத்தில் புதைந்த நகரத்தையும் வணிக, கப்பல் போக்குவரத்துத் தளம் இருந்ததற்கான அடையாளத்தையும் காட்சிப் படுத்தினார். அப்பகுதியைச் கடந்து இன்னும் இன்னும் நகரக் கட்டமைப்புகள் இருக்க வாய்ப்புண்டு எனினும் ஆழமான கடலுக்குள் சென்று ஆய்வு நடத்த கால அவகாசமும் நிதியும் தேவைப்பட்டதால் அவர் அங்கிருந்து பின் வாங்கினார்.

ஆனாலும், அதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளின் படியே அப்பகுதிக்கான வயது இன்றிலிருந்து 10000-11000 ஆண்டுகள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது.

இதனை டர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் க்ளன் மில்னே கடலியல் ஆய்வுகளின் தரவுகள் அடிப்படையில் உறுதியும் படுத்தினார்.

கிரஹாம் ஹான் காக் தன்னுடைய இணையத் தளத்திலும் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

என்ன வியப்பென்றால், அன்றைய பாஜக அரசாங்கம் துவாரகாவின் வயது 10000 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கூறியது, பூம்புகாரைப் பற்றி எங்குமே பேசியதாகத் தெரியவில்லை. செய்திகளும் வடநாட்டு ஆங்கில ஊடகங்கள் எதிலுமே வரவில்லை. தமிழகத்திலும் பிபிசி ஆங்கில இணையச் செய்திகளில் மட்டுமே தென்படுகின்றன.

இப்படித்தான் நம் கண் முன்னே நம் வரலாறுகள் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கிமு.500-1000 வரை மட்டுமே இருக்கும் கால அளவுகளில் வரும் வரலாறுகளை மட்டுமே இப்பொழுது வெளிவரும்படியும் இந்திய நடுவண் அரசு கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. ஆதிச்சநல் லூரிலும் கிடைத்த அனைத்து வகையான புதைப் பொருள் களை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அதே போன்றுதான் கீழடியிலும்.

இவ்வளவு ஏன், மதுரையை நாம் இன்னும் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தவேயில்லை. அதேப் போலத்தான், சிந்து சமவெளிக்கும் தமிழர் நாகரீகத்திற்கும் தொடர்புண்டு என ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ஃபாதர் ஹென்றி ஹீராஸ் அவர்களும் எடுத்துக் கூறி வந்தார். இன்னும் தன் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆனாலும் இந்திய நடுவண் அரசு வட இந்திய அடையாளமாகவே கருதி கூறி வந்தது. சிந்து சமவெளி நாகரீகத்தை வட இந்தியாவின் அடையாளம் என பெருமைபொங்கச் சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது வரை சிந்து சமவெளி நாகரீகச் செய்தி அடிக்கடித் தென்பட்டதும், நிறைய ஆய்வுகள் அதற்கு நேர்மாறாய் வரத் தொடங்கியதும் அச்செய்திகள் அதோடு காணாமல் போனதையும் நிகழ்காலத்திலேயே பார்க்கிறோம்.

இந்திய வரைப்படத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக எத்தனை எத்தனை வரலாற்று துரோகங்களை நாம் சுமப்பது..

நாம் இணைந்தது, இப்புவிசார் மண்டலத்தின் கூட்டுப் பலத்திற்காக இருக்க வேண்டுமே தவிர, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தவோ, ஒருவர் வரலாற்றை இன்னொருவர் அழிக்கவோ, ஒருவர் மொழியை, பண்பாட்டை இன்னொருவர் மீது திணிக்கவோ இருக்கக் கூடாது!

Pin It