Keeladi 338

இந்த நாட்டின் வரலாறு, கங்கைச் சமவெளியில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது..ஆனால் உண்மையில், இந்த நாட்டின் வரலாறு காவிரிக் கரையில் இருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் ஆய்வை, நீண்ட நெடுங்காலமாகக் கங்கைச் சமவெளியில் இருந்து தொடங்கும் வழக்கத்தைக் கைவிட்டு, கிருஷ்ணா, காவிரி, வைகைச் சமவெளிகளில் இருந்து ஆய்வுகளைத் தொடங்க வேண்டும் என்றார் வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஏ.ஸ்மித்...சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்றும், மனித நாகரிகம் இந்தியாவின் தென்கோடியில் இருந்து வட இந்தியா முழுவதும் பரவியது என்றும் கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஆர்.டி.பானர்ஜி. இவை அத்தனையும் உண்மை..உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என அடித்துச் சொல்கிறது கீழடி.

மதுரையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தென்னந்தோப்புகள் சூழ்ந்த கிராமம்தான் கீழடி. அந்தத் தென்னந்தோப்புகளுக்கு நடுவில், சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் புதைந்து கிடக்கிறது தமிழினத்தின் தொன்மையை அழுத்தமாகச் சொல்லும் வரலாற்றுக் கருவூலம். அதில் ஒரு சிறிது மட்டுமே தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு ஏக்கர் நிலப்பகுதியைத் தோண்டியதிலேயே.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் அள்ளி எடுக்கப்பட்டுள்ளன. அவை அத்தனையும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்றைக் காட்டும் சான்றுகளாக இருக்கின்றன.சங்க இலக்கியங்களில் நாம் படித்துச் சுவைத்த, மனக்கண்ணில் ஓடவிட்டுப் பெருமிதப்பட்ட காட்சிகளை எல்லாம் கீழடி நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பட்டினப்பாலை சொன்ன ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற வரிக்கு. கீழடியில் தோண்டிஎடுக்கப்பட்ட உறை கிணறு உயிர் கொடுத்திருக்கிறது. இப்பூமிப்பந்தின் பல பகுதிகளிலும், மக்கள் இலைதழைகளையும், விலங்குகளின் தோல்களையும் உடலுக்குச் சுற்றித் திரிந்தபோது, இங்கே தமிழர்கள், நெசவுத் தொழிலை அறிந்தவர்களாக, நெய்த ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றத் தெரிந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? கீழடியில் கிடைத்துள்ள ‘தக்ளி’ என்னும் கருவியும், இன்ன பிற பொருள்களும், கட்டிடங்களின் அமைப்புகளும், நம்பித்தான் தீர வேண்டும் என்கின்றன.

சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், கருப்பு சிவப்பு என இரு வண்ணங்களால் ஆன மண்பாண்டங்கள், சூது பவளங்கள் என ஆயிரக்கணக்கில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் இவை போன்ற பல புதைபொருள்கள், ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. என்றாலும் கீழடிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. முதன் முதலாகத் தமிழர்களின் சங்ககால நகரம் ஒன்று இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தது, இனக்குழு நாகரிகம்தான் என்ற கருத்துத் திணிக்கப்பட்டு வரும் நிலையில், இல்லை, இல்லை. தமிழினம் தனித்துவம் மிக்கதொரு தேசிய இனம் என்பதை, வரலாற்றுப் புரட்டர்களின் செவிப்பறையில் அறைந்து சொல்கிறது கீழடி. அதனால்தான் அகண்ட பாரதக் கனவில் இருக்கும், பா.ஜ.க. அரசு கீழடியைக்கண்டு அஞ்சுகிறது. ஆய்வைத் தொடரத் தயங்குகிறது.

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேதக் கலாச்சாரமே இந்தியாவின் கலாச்சாரம் என்றும் கட்டியமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,கூட்டத்தின் அடிமடியிலேயே கை வைப்பதாக இருக்கிறது கீழடி அகழ்வாய்வு சொல்லும் மற்றொரு செய்தி. இதுவரை கீழடியில் கிடைத்துள்ள பொருள்களை ஆய்வு செய்து பார்த்த வகையில், மதம் தொடர்பான சிறு அடையாளம் கூட காணப்படவில்லை. தமிழர்களின் வரலாறு. முன்னோர் வழிபாட்டையும், நடுகல் வழிபாட்டையும் மரபாகக் கொண்டதே தவிர, பெருந்தெய்வ வழிபாடு அதற்குத் தொடர்பில்லாதது என்பதைக் காட்டும் கீழடி, மத அரசியலையும், மாட்டு அரசியலையும் மட்டுமே நம்பியிருக்கும் கூட்டத்திற்குப் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இதேபோல் இன்னொன்றையும் கீழடி உணர்த்தி நிற்கிறது.

மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரு தேசிய இனத்தின் மொழி மட்டும் சார்புடையதாகவா இருக்கும்? தமிழ் ஒரு சமயச் சார்பற்ற மொழி என மொழியியல் அறிஞர் கால்டுவெல் எடுத்துரைத்ததை மெய்ப்பிக்கின்றன கீழடி ஆய்வுகள். செத்த மொழியான சமஸ்கிருதமே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தோற்றுவாய் என சற்றும் கூசாமல் சொல்லி, மொழி வரலாற்றையும் திரித்துக் கூறுவோரின் உச்சத்தலையில் குட்டி, தேவபாஷையான சமஸ்கிருதத்திற்கும், சமயச் சார்பற்ற தமிழினத்தின் தாய்மொழிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறது கீழடி.

2015, 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கீழடி ஆய்வை, இடைக்கால அறிக்கை தயாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, பாதியிலேயே நிறுத்தியது பா.ஜ.க., அரசு. தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தொல்லியில் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.கீழடியிலேயே அவற்றைப் பாதுகாத்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, வரலாற்று அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால் என்ன கொடுமை தெரியுமா? தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அமைச்சர்களோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

குஜராத்திலும் பத்து ஆண்டுகளாகத் தொல் பொருள் ஆய்வு நடந்து வருகிறது.அங்கு புதிய சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இருந்தும் அங்கு ஆய்வுகளைத் தொடர இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியதோடு, பா.ஜ.க.,வின் பாரதப் பிரதமர் மோடி நேரில் சென்று அதைத் தொடங்கியும் வைத்துள்ளார். அதேநேரம் புது வரலாறு படைக்கத்தக்க சான்றுகளை அள்ளித் தருகின்ற கீழடி புறக்கணிக்கப்படுவதை ஏன் என்று கேட்க வக்கற்ற அரசாக, அதிமுக அரசு இருப்பதால், தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தை மண்ணைப் போட்டு மூடத் துணிந்திருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு.

பிள்ளையாருக்கு யானைத் தலைமை ஒட்ட வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை என அறிவியல் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில், சற்றும் கூச்சமின்றி சொன்னவர்தான், பாரதப்பிரதமர் மோடி. என்ன செய்வது அவர்களின் வரலாற்று எல்லை அவ்வளவுதான். புராணங்களோடு நின்று போனவை. ஆனால் தமிழர்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியலோடு இயைந்த நாகரிக வாழ்க்கையைக் கொண்டவர்கள்.

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அதற்கு முன் தெற்கு வாழ்ந்திருக்கிறது.மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறது. என்பதை உலகிற்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லும் தொல்பொருள் ஆய்விடம் கீழடி. ‘தங்கள் இனத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு, கீழடி ஆய்வை மத்திய அரசு பாதியில் நிறுத்தியது ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக உள்ளது என ஒட்டுமொத்த தமிழகத்தின் உள்ளக்கிடக்கையை, மத்தியக் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்குக் கடிதத்தின் வழி வெளிப்படுத்தினார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது கீழடியில் ஆய்வைத் தொடர்வதற்கான நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வந்திருக்கிறதே ஒழிய இன்னும் ஆய்வுகள் தொடங்கப்படவில்லை..இதுவரை ஆய்வினை முன்னின்று நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்து, தன் ‘ராஜதந்திரத்தைக் காட்டியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

சிந்துவெளியில் கிடைத்த, காளைமாட்டின் குறியீட்டையே குதிரையாக்கி, சிந்து வெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லி, இல்லாத சரஸ்வதி ஆற்றைத் தேட 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள ஆரிய மாயையின் ஆட்டம், கீழடியில் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம் என்பதில், தமிழக வரலாற்று அறிஞர்கள் உறுதியுடன் உள்ளனர். மீண்டும் கீழடியில் அகழ்வாய்வுகள் உடனடியாகத் தொடங்கப்பட, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர தொடர் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

Pin It