தொல்காப்பியமும்
வள்ளுவமும்
நெறியாய்க் கொண்ட
தமிழர் வாழ்வில்
வகையாய் வருணத்தைத்
திணித்து

சாதிச் சாக்கடையில்
நீந்த வைத்த
பார்ப்பனியத்தை
உடைத்து

சமூகநீதி, சமத்துவத்திற்கு
இவரே உரியர் தமிழர்
மண்டையில்
உரைத்த சூடு
தந்தை பெரியார்

சூத்திர இழிவுச் சடங்கு,
சாத்திரப் பிதற்று; பசு
மூத்திரப் பழக்கம்; குல
கோத்திர வழக்கம் -
இடித்தவர் பெரியார்

சாதி நஞ்சைச்
சுவாசித்த மூடர்களுக்கு
உயிர்வளி தந்த
தனிக் காடு
தந்தை பெரியார்

பெண் கல்வி
உரிமையை மறுத்து
கல்விக்குக் கடவுள்
பெண்ணாய்ப் கொண்டமதத்தில்
பெண் விடுதலையைச்
சமூகத்தின்
விடுதலை யாக்கியவர்
தந்தை பெரியார்

பகுத்தறிந்த வாழ்வுக்கும்
பொதுமைச் சமூகம்
தழைக்கவும்
புதுமை அறிவியல்
நோக்கிற்குக்
கதவைத் திறந்த
திறவு கோல்
தந்தை பெரியார்

இந்தியா ஒரு நாடா?
இல்லை பல நாடுகள் என்றுரைத்தார்
இந்தியை எதிர்த்து
சமற்கிருதத்தின் வாலறுத்த கூர்வாள்
தந்தை பெரியார்

இந்தியாவின் உறவறுக்க
உயிர் கொடுக்கும் தன்னுரிமைத் தேசம்
காசுமீரின் உரிமையைக் குலைத்த
பாசிச மோதியின் கொடுஞ் செயலைக்
குழியில் மூடும் வரலாறு நாளை
உன் இறுதி முழக்கத்தை
இறுகப் பற்றுகிறோம்

Pin It