சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மதுரையில் இருந்து தென்கிழக்கில் 13 கி.மீ. தொலைவில் வைகை நதிக் கரைக்கு அருகில் கீழடி என்னும் ஊர் அமைந்துள்ளது. 95129 வடக்கு அட்சரேகைக்கும் 781169 கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையே அமையப்பெற்ற ஊர் இதுவாகும். கீழடியின் எல்லை யாகக் கிழக்கே மணலூர், மேற்கே கொந்தகை, தெற்கே அகரம், வடக்கே வைகை ஆறு ஆகியவை அமைந்துள்ளன.

இவ்வூரில் 110 ஏக்கர் பரப்பில் பழந்தமிழர் வாழ்விடம் இந்தியத் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டு கி.பி.2014-15 2015-16 ஆகிய ஆண்டுகளில் தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் தலைமையிலும் 2016-17ஆம் ஆண்டில் ஸ்ரீராமன் அவர்கள் தலைமையிலும் அகழாய்வு செய்து பழந்தமிழர் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைக் காட்டும் பல்லாயிரக் கணக்கானத் தொல்லியல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களை வெளிக்கொண்டு வந்தனர். 2015 முதல் 2017 வரை மூன்று கட்டங்களாக நடந்த அகழாய்வின் ஆய்வு அறிக்கையினை இன்னும் இந்தியத் தொல்லியல் துறை வெளியிடவில்லை. 2017 முதல் 2019 வரை இரண்டு கட்டங்களாக அகழாய்வு செய்த தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அகழாய்வின் சுருக்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

2017-19ஆம் ஆண்டுகளில் அகழாய்வு நடத்திய தமிழ்நாடு தொல்லியல் துறையினர் பல்லாயிரக்கணக்கான பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். அவை கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் ரௌலட்டட் மற்றும் அரிட்டின் வகைப் பானை ஓடுகள், தங்க அணிகலன்கள், செப்புப் பொருள்கள், இரும்புக் கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், சுடுமண் காதணிகள், அகேட் சூதுபவள மணிகள் ஆகியன கிடைத்துள்ளன. மேலும் செங்கற் கட்டுமானங்கள், உறைகிணறுகள், வடிகால் அமைப்புகள், கூரை ஓடுகள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இவ்அகழாய்வின்போது கண்டறிந்த ஆறு கரிம மாதிரிகளை காலக்கணிப்புச் செய்வதற்கு அமெரிக்காவில் புளோரிடா மாநிலம் மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பினர். இவ் ஆறு கரிம மாதிரிகளில் 353 செமீ ஆழத்தில் கிடைத்தக் கரிமத்தின் காலம் கி.மு.580 என அறிவியலாளர்கள் காலக்கணிப்புச் செய்துள்ளனர். ஆதலால் கி.மு.6ஆம் நூற்றாண்டு அதாவது 2600 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர்கள் நகர நாகரிகத்தில் வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. அக்காலம் சங்க காலமாகும்.

கட்டடமும் கட்டுமானப் பொருட்களும்:

இங்கு மக்கள் வாழ்ந்த வீட்டின் கட்டட அமைப்பில் 13 மீ. நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இச்சுவற்றில் 38 X 23 X 6 செமீ. அளவுள்ள செங்கற்களும் 38 X 26 X 6 அளவுள்ள செங்கற்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இங்குள்ள கட்டடம் சிலிக்கா மண் சுண்ணாம்பு செங்கல் ஆகியவை கொண்டு கட்டப்பட்டுள்ளன. வீட்டின் தரைத்தளம் நன்கு சன்னமான களிமண்ணைக்கொண்டு அமைத்து செங்கற்களால் பக்கச்சுவர்களை எழுப்பியுள்ளனர்.

கட்டடம் - அடித்தளப்பகுதி

வீட்டிற்குச் சுடுமண்ணாலான கூரை ஓடுகள் பயன்படுத்தியுள்ளனர். மேற்கூரை மீது விழும் மழைநீர் எளிதில் கீழே விழும் வகையில் கூரை ஓடுகளில் பள்ளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மரச்சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையின்மீது கீழிருந்து மேலாக சுடுமண்ணாலான ஓடுகளைக் கொண்டு வேய்ந்து கட்டப்பட்டுள்ளன. இக்கட்டட அமைப்பு சங்க காலத்தைச் சேர்ந்ததாகும்.

உறைகிணறு :

பண்டைக்காலத்தில் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படும் நீரை மணற் பாங்கான இடங்களில் உறைகிணறுகளை அமைத்து சேகரித்துப் பயன்படுத்தினர். இதுபோன்ற உறைகிணற்றைக் கீழடியில் 8 உறைகள் கொண்ட ஓர் உறைகிணற்றைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்தனர். உறைகிணறு உறைகள் ஒவ்வொன்றும் 93 செமீ. விட்டமும் 80 செமீ. உயரமும் 4 செமீ. தடிமனும் கொண்டுள்ளன. இந்த உறைகிணற்றின் ஆழம் 2.02 மீ. ஆகும். இது அக்கால நீர்மட்டத்தின் அளவினைக் குறிப்ப தாகும். இந்த உறைகிணற்றின் உறைகள் ஒவ்வொன்றும் சுடுமண்ணால் செய்யப் பட்டதாகும்.

மட்கலன்களும் சுடுமண் உருவங்களும் :

சங்ககாலத்தில் மக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்திய மட்கலன்கள் பல இவ் அகழ்வாய்வில் கிடைத்தன. இவைகளில் சில உடையாமலும் பல உடைந்தும் காணப்பட்டன. இங்கு கருப்பு சிவப்பு, சிவப்பு கருப்பு ஆகிய ஆகிய நிறங்களைக் கொண்ட பானையோடுகள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் 17 வகை ஓடுகளை இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைக்கு அனுப்பப் பட்டு பானைகளின் கனிமங்கள் பானைத் துகளின் தன்மை ஆகியவை கண்டறியப் பட்டன. மேலும் இப்பானைகள் தனித்த பானை வனைவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே வனையப்பட்டது என்பதினையும் கண்டறிந்தனர். மட்கலன்கள் இங்கு கிடைத்த கருப்பு சிவப்பு பானைகளில் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப்பொருளான ஏமடைட்டையும் கருப்புநிறத்திற்கான தாதுப் பொருளான கரியையும் பயன்படுத்தி உள்ளனர். பொதுவாக கருப்பு சிவப்பு பானைகளில் உட்பகுதி கருப்பாகவும் வெளி ப்பகுதி சிவப்பாகவும் காணப்படும். கருப்பு நிறம் வெப்பத்தைக் கிரகித்து வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. கருப்பு நிறப் பானைகளிலும் சிவப்பு நிறப் பானைகளிலும் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் வெப்பமாகக் கெடாமல் பாதுகாக்கப் படும். இங்கு கிடைத்த பானைகள் 11100ஊ வெப்பநிலையில் சுட்டு உருவாக்கப்பட்ட வையாகும். இப்பானைகளின் காலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகும். மேலும் சுடுமண்ணால் 13 மனித உருவங்களும் 3 விலங்கின உருவங்களும் கிடைத்துள்ளன.

சுடுமண் உருவங்கள் பானைகளில் குறியீடுகள் :

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கரூர், தேருவேலி, உறையூர், பேரூர், பேருர் கீழடி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வில் சிந்துவெளி எழுத்தை ஒத்த குறியீடுகள் பானைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி எழுத்து வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. கீழடி பானைக்குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகள் தமிழ்நாட்டில் கிடைத்த சங்க கால கல்வெட்டுகள் பானைப் பொறிப்புகள் தொன்மைத் தமிழ் எழுத்து (தமிழ்பிராமி எழுத்து)க்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் கந்தரோடை மாந்தை திசமகரம ரிதியாகாமா போன்ற இடங்களில் நடத்திய அகழாய்வில் பானைகளில் இதுபோன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன.

தொன்மைத் தமிழ் எழுத்துகள் :

பண்டைத் தமிழ் எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்பிராமி என்றும் தமிழி என்றும் அழைக்கின்றனர். தமிழைத் தமிழ் என்றே அழைக்கவேண்டும். ஆகையால் பழந்தமிழ் எழுத்தைத் தொன்மைத் தமிழ் எழுத்து என்று அழைப்பதே சிறந்ததாகும். தமிழகத்தில் இதுவரை தொன்மைத்தமிழ்க் கல்வெட்டுகள் (தமிழ்பிராமி) 110 கிடைத்து உள்ளன. அகழாய்வில் பானையோடுகளில் ஏராளமான தொன்மைத்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன் ஆதன் ஆதன் முதலிய மக்கள் பெயர்களும் முழுமைப் பெறாத பெயரோ அல்லது சொற்றொடரோ பொறிக்கப்பெற்ற பானையோடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு ஆதன் என்னும் பெயர் அதன்என்றே பொறிக்கப்பட்டுள்ளது. காலத்தால் முந்திய தொன்மைத்தமிழ் எழுத்துகளில் உயிர்க்குறில் வடிவத்திலிருந்து உயிர்நெடிலை வேறுபடுத்திக் காட்டும் வழக்கம் இல்லை என்று தொல்லியல் அறிஞர் கா. இராசன் அவர்கள் கூறுகிறார். ஆகவே கீழடியில் கிடைத்தப் பானைப் பொறிகள் காலத்தால் முந்தியவையாகும். பெரும்பாலும் பானைப் பொறிப்புகள் பானையின் கழுத்துப் பகுதியில் பொறித்து உள்ளனர். அரிதாகச் சில பானையின் உடற்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. பானை வனையும்போது ஈரநிலையில் அல்லது பானை உலர்ந்தபின் கூர்மையான ஆணியைக்கொண்டு தமிழர்கள் எழுத்துகளைப் பொறித்தனர். கீழடியில் கிடைத்தப் பானைப் பொறிப்புகளின் எழத்தமைதி வேறுவேறாக உள்ளதால் பானை வனைவோரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தியப் பயனாளர்கள் தங்களுடையப் பெயர்களை அல்லது செய்திகளைப் பொறித்தனர். இங்கு வாழ்ந்த தமிழர்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டளவிலே சிறப்பான எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்பதினை அறியமுடிகிறது.

உழவும் கால்நடை வளர்ப்பும் :

மக்களின் உயிரைக் காக்கும் தொழில் உழவுத்தொழில். கீழடியில் உழவு தொடர்பான செய்திகள் பல கிடைத்துள்ளன. அகழாய்வில் கிடைத்த விலங்குகளின் எலும்புத்துண்டு களைப் புனேவிலுள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி ஆகியவற்றின் எலும்புகள் என அடையாளம் காணப்பட்டன. இவற்றில் பெரும்பகுதி எலும்புகள் காளை, பசு, எருமை, ஆடு ஆகியவையுடையதாகக் காணப்பட்டன. ஆகையால் இவ்விலங்குகளை உழவுக்கும் கால்நடைக்கும் தமிழர்கள் வளர்த் தனர் என்பதனை அறியமுடிகிறது. இவ்விலங்கு எலும்புகளில் கலைமான், வெள்ளாடு, பன்றி ஆகியவற்றில் வெட்டுத் தழும்புகள் காணப் படுவதால் தமிழர்கள் இவைகளை உணவிற் காகப் பயன்படுத்தி உள்ளனர் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நெசவு :

பண்டைத் தமிழர்கள் உழவுத்தொழிலுக்கு அடுத்து நெசவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஏனென்றால் மனிதனின் மானம் காப்பது ஆடையாகும். ஆடையை நெய்யும் தொழில் நெசவு ஆகும். தக்களி எலும்பினா லான வரைகோல் நெசவில் நூல்களை நூற்கப் பயன்படும் தக்களி துணி களில் உருவம் வரைய உதவும் எலும்பினாலான தூரிகை தறியில் தொங்கவிடப்படும் கல் செம்பினா லான ஊசி எலும்பினாலான வரைகோல் ஆகியன இவ்அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆகையால் பண்டைக் காலத்தில் இங்கு நெசவுத்தொழில் சிறந்து விளங்கியது என்பதனை அறியமுடிகிறது.

வணிகம் :

தமிழகத்தில் கடல் வணிகம் சிறப்புற்று விளங்கியது. காரணம் நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்ததே ஆகும். கப்பல்கள் வந்து செல்லவும் நங்கூரமிட்டு நிற்கவும் ஏதுவாக அமைந்தது தமிழகக் கிழக்குக் கடற்கரை யாகும். வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளம் துறைமுகம் பண்டைக் காலத்தில் அமைந்திருந்தது. வைகை ஆற்றின் அருகில் அமைந்த கீழடியிலிருந்து அழகன் குளம் துறைமுகம் வழியாக சங்கு வளையல் கள், கண்ணாடி வளையல்கள், முத்து மணிக் கற்கள், துணி வகைகள், மிளகு மற்றும் வாசனைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கண்ணாடி மணிகள், அகேட் மற்றும் சூது பவளமணிகள் இவைத்தவிர அகேட் மற்றும் சூதுபவளம் மணிகளும் ரோம் நாட்டிற்கு அனுப்பப் பட்டன. தங்கம், பானங்கள், நறுமணத் திரவியங்கள், குதிரை ஆகியவை ரோமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ரோம் நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி இங்கேயே ரௌலட்டட் அரிட்டைன் பானை வகைகள் வனையப்பட்டன. கீழடியில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வைகை ஆற்றின் மூலமாக அழகன்குளம் துறைமுகம் வழியாக எகிப்து, ரோம், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன.

விளையாட்டுப் பொருட்கள் :

இவ்அகழாய்வில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குப் பொருள்களும் கிடைத்து உள்ளன. தற்சமயம் பெண்கள் விளையாடும் பாண்டி எனப்படும் விளையாட்டுக்குரிய 600 வட்டச் சில்லுகள் கிடைத்துள்ளன. பகடைக்காய்கள் வட்டச்சில்லுகள் சதுரங்கக் காய்கள் தாயம் விளையாடுவதற்குரிய பகடைக் காய்கள் சதுரங்கம் விளையாடத் தேவையான சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன. இப் பொருட்கள் எல்லாம் சுடுமண்ணால் ஆனவை.

பண்பாட்டுக் காலமுறைகள் :

கீழடியில் நடந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட மண்ணடுக்குக் கட்டட அமைப்பு, பானை ஓடுகள், எழுத்துப் பொறிப்புகள், அணிகலன் ஆகியவற்றைக் கொண்டு கீழடியின் பண்பாட்டுக்காலம் பிரிக்கப்படுகிறது. கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.3ஆம் நூற்றாண்டு வரை முதல் பண்பாட்டுக்காலம். கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை இரண்டாம் பண்பாட்டுக் காலம். கி.பி.5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை மூன்றாவது பண்பாட்டுக் காலம் எனக் கொள்ளலாம்.

இதுகாறும் நாம் ஆய்ந்தவற்றால் கீழடியில் கி.மு.6ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழர்கள் நகர நாகரிகத்தில் சிறந்து எழுத்தறிவு பெற்றவர்களாக வாழ்ந்தனர் என்பதனை அறியலாம்.

முனைவர் ப.வெங்கடேசன், வாலாசாப்பேட்டை

Pin It