நம் நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்களைப் பொதுவாக மூன்று காரணிகளை வைத்து ஆய்வு செய்து அந்தத் திட்டம் சாதகமா அல்லது பாதகமா என்கிற முடிவிற்கு வரலாம். குறிப்பிட்ட திட்டம் எந்த மாதிரியான திட்டம், அதன் அமைவிடம், அந்த திட்டத்தினால் ஏற்படப்போகும் சமூகப் பொருளாதார நன்மைகள் என்ன? மேற்சொன்ன மூன்று காரணி களின் அடிப்படையில் தான் அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா? என்கின்ற நிலைப்பாட்டிற்கு வரமுடியும். தேனி மாவட் டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் எந்த மாதிரியான திட்டம்?
தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய இருக்கிற நியூட்ரினோ ஆய்வகத்தில், நியூட்ரி னோக்களை ஆய்வு செய்யப் போவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இயற்கையாகவே சூரியனில் இருந்தும் அண்டவெளியில் இருந்தும் கோடிக்கணக்கான நியூட்ரி னோக்கள் நம் உடலை ஊடுருவிச் சென்று கொண்டு தான் இருக்கின்றன. இயற்கையில் வரும் இந்த நியூட்ரி னோக்களுக்கு ஆற்றல் மிகவும் குறைவு அல்லது கிடையாது. துல்லியமாக ஒரு இடத்தை நோக்கிக் குறி பார்த்து வராது அவற்றால் எந்தவிதமான பிரச்சினை களும் பெரிதாகக் கிடையாது.
இந்தியா இவ்வகை நியூட்ரினோ ஆய்வுகளில் முன்னணியில் இருந்த நாடு, 60களில் கோலாரில் இருந்த தங்கச் சுரங்கத்தில் இந்தியா அமைத்த நியூட்ரி னோ ஆய்வகம், இயற்கையில் கிடைக்கக்கூடிய நியூட்ரி னோக்களைப் பதிவு செய்து சாதனை படைத்தது, பொட்டிபுரத்தில் அமையவுள்ள “நியூட்ரினோ நோக்குக் கூடம்” இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கையாக, தொழிற்கூடங் களில் உருவாக்கப்படுகின்ற நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்யப் போவதாகக் கூறப்படுகிறது,
இவ்வாறு செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோ கற்றைகள், அதிக ஆற்றல் கொண்டவை யாக இருக்கும். துல்லியமாக ஒரு இடத்தை நோக்கி அனுப்ப முடியும். இந்தக் கற்றைகள் அமெரிக்காவின் பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்தும், ஐரோப்பா, ஜப்பான் ஆய்வகங்களில் இருந்தும், அண்டார்டிகாவில் இருந்தும் தேனி பொட்டிப்புரத்தை நோக்கி, துல்லியமாக அனுப் பப்படும். ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்தக் கற்றைகள் உற்பத்தி செய்யும் இடத்தில் கதிர்வீச்சு இருக்கும் என்று பெர்மி ஆய்வகம் வெளிப்படையாகத் தெரிவித் துள்ளது.
இரண்டாம் கட்டம் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ ஆய்வு எதற்காக? எதிரி நாடுகளிடம் எங்கே அணு குண்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டு அறிந்து, அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு. இது அடிப்படை அறிவியல் திட்டம் அல்ல; பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டம். அமெரிக்காவக்குப் பிடிக்காத, குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளை ஆராய்ந்து, அதைச் செயல் இழக்கச் செய்வதுதான் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்.
இந்த ஆய்வகம் அமையவுள்ள இடம் எப்படிப் பட்டது? தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அங்கம், இம்மலைகளை உலகப் பல்லுயிரிய பாதுகாப்பு மண்டலம் என ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அறிவித்து இருக் கிறது. பாதுகாக்க வேண்டிய பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலம் என, மாதவ் காட்கில் குழுவும், அறிவித்து இருக்கின்றது. இத்தகைய அறிவிப்புகள் மூலம் சொல்ல வருவது இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந் தால்கூட, அங்கே குண்டு போடக்கூடாது, தாஜ்மகால், தஞ்சை பெரிய கோவில் போன்றவற்றை எப்படி பாதுகாக் கிறோமோ, அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மேற்குத் தொடர்ச்சி மலை.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மராட்டியம் மற்றும் குசராத் மாநிலங் களில் மக்கள் வாழ்வதற்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்போடு இருக்க வேண்டும், தென்னிந்தியாவில் உற்பத்தியாகி ஓடும் நதிகள் அனைத்தின் பிறப்பிடமும் இம்மேற்கு மலைகள்தான், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, பல இலட்சம் டன் பாறைகளைத் தகர்த்து உடைத்து எடுத்து, இந்த ஆய்வகம் அமையப் போவதாகத் தெரிகிறது. அதுவும் தமிழகம் போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு, வைகை, மேகமலை உள்ளிட்ட 18 நீர்த்தேக்கங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. இரண்டாண்டுகளுக்கு முன்னர், ஹைகுவாக் என்ற ஆய்வு இதழ், ஒரு ஆய்வறிக் கையை வெளியிட்டு இருந்தது.
கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங் களில் 746 நில நடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப் பட்டவை என்று சொல்கிறது இந்த அறிக்கை. அவற்றுள் 37 சதவீத நில நடுக்கங்கள் மிகப் பெரிய சுரங்கங் களைக் குடைந்ததால் தூண்டப்பட்டவை; 24 சதவீத பெரிய அணைகள், நீர்த் தேக்கங்கள் கட்டுமானங்களால் தூண்டப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்கிறது. திட்டம் அமையவுள்ள பகுதி, ஏற்கெனவே நீர்த்தேக் கங்களால் அழுத்தம் உள்ள பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாறைகளை வெடிவைத்து தகர்த்து நிறைய சுரங்கங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு அணைகள் உள்ளன எனவே எந்தப் பிரச்சினையும் ஏற்படாது” என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்திருந்தது.
நம் கண்முன்னால் நீலகிரியிலும் கேரளாவிலும் நடைபெற்றுள்ள கோரத்தைப் பார்த்தாலே தெரியும், மலைகளைக் குடைந்து சுரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், அணைகள், எ°டேட்டுகள் என அமைத்த தன் விளைவாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதையும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தையும் காணலாம்.
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால், தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது. இந்தப் பகுதியும் பொருளாதாரத்தில் வளராது. ஏனென் றால் ஒரு சில விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்வார்கள். நமக்குள்ள வேலை வாய்ப்பு என்பது அதிகபட்சமாக சில பேருக்கு காவலாளி பணி கிடைக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கென வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து 2017-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் நிலைப்பாட்டை கணக்கில் கொள்ளா மல், மாநில அரசுகள் மட்டுமே தரக்கூடிய பிரிவின்கீழ் “சிறப்புத் திட்டம்” என்று அறிவித்து மாநில அரசின் உரிமைகளை மீறி கடந்தாண்டு மீண்டும் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கியது மத்திய அரசு.
இந்திய அனுமதியை எதிர்த்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து, 2015 ஆம் ஆண்டு தடை ஆணை பெற்றுள்ளார். தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்குக் குடிநீர் மற்றும் விவாசயத்திற்கான நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய அணைகள், பல்லுயிரியம் தழைத்து இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை செயல் படுத்த முனைவது அறிவில் சிறந்த செயலாகாது. காலநிலை மாற்றத்தில் இருந்து மனித சமூகம் தப்பித்துக் கொள்ள இயற்கை அரண்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
தினத்தந்தி : 20.8.2019