தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் 1870களில் வெள்ளையரால் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர், கொடு மணல், பொருந்தல், கீழடி அகழ்வாய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. கீழடி ஆய்வு புதியது; 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

தொல்லியல் ஆய்வு, மூலிகைத் தோட்டம் வளர்ப்பு இவற்றில் பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நல்ல நாட்டம் உண்டு; அதன் வேலைத் திட்டங்களுள் இவை அடக்கம்.

அதனால் ஆதிச்சநல்லூர் அகழ்வு ஆய்வு குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கையும், பட ஆவணக் காட்சியையும் - சென்னை நடுவண் செம்மொழித் தமிழ் நிறுவனமும், பெரியார்-நாகம்மை அறக்கட்டளையும் இணைந்து 2006, 2011ஆம் ஆண்டு களில், முறையே சென்னையிலும், திருநெல்வேலியி லும் நடத்தினோம்.

இப்போது கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அதனால் பெற்ற உந்துதலால், இப்போது அறிஞர் ‘செம்மொழி’ க. இராமசாமி அவர்கள் மூலம், 1) ஆதிச்ச நல்லூர், கொடுமணல் பொருந்தல், கீழடி ஆய்வு களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரி அதற்கான விண்ணப்பத்தையும்;

2. அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும் பரப்பில் பரவியுள்ள உயிர்ப்படிவப் பாறைகள் (Fossil Deposits and Fossil Tree) நிரம்பிய பகுதி முழுவதை யும் இந்திய மண்வளத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரும் விண்ணப்பத்தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு, அதற்காகவே, 18.2.2017 அன்று நான் தில்லியை அடைந்தேன்.

இதற்கிடையில் தில்லி மாநிலங்கள் அவையில், கீழடி பற்றி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை டி.கே. ரெங்க ராஜன் கொணர்ந்தார். அதையொட்டி, திருச்சி சிவா, கனிமொழி, இல. கணேசன், சுப்பிரமணிய சாமி ஆகி யோர், கீழடி அகழ்வாய்வு பற்றி நாடாளுமன்றத்தில் ஆர்வத்துடன் பேசினர்.

இந்தச் சூழலில் தொல்லியல் துறைக்கான அமைச்சர் மகேஷ் சர்மா தலைநகரில் இல்லாததால், அவருக்கு உரிய மடலின் படியுடன், தொல்லியல்துறை இயக்குநர் நாயகம் (Director General - Archaeological Survey of India) முனைவர் ராகேஷ் திவாரி அவர்களை - அறக் கட்டளை சார்பில் நானும், தில்லி பெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனம் ப. இராமமூர்த்தி அவர்களும் 21.2.2017 மாலை 4 மணிக்கு அலுவலகத்தில் நேரில் கண்டு பேசினோம்.

அவர் தமிழகத் தொல்லியல் இடங்கள் எல்லா வற்றையும் நேரில் பார்த்திருக்கிறார்.

“அய்யா, தமிழகத் தொல்லியல் துறைப் பணிகளில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை; நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” என, நான் சொன்னேன்.

அவர், உடனே, “இதோ பாருங்கள் - இந்தத் தொகுதி கீழடி அகழ்வு ஆய்வு பற்றியது. இந்த அறிக்கை 9.2.2017 இல் அனுப்பப்பட்டு, 13.2.2017 இல் எங்களுக்குக் கிடைத்தது. இது கிடைத்த பிறகு, நான் பரிந்துரைத்த தன் பேரில், இந்திய அரசினர், கீழடி தொல் ஆய்வு மேற்கொண்டு நடைபெற நிதி ஒதுக்கியுள்ளனர்!” என்று கூறினார்.

“ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டு அகழ்வாய்வு செய்ய, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேட்டேன்.

“டாக்டர் டி.எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் இன்னமும் அவருடைய ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையையும் அனுப்பவில்லை. முழு அறிக்கை வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம்” என்றார், அவர்.

இதுபற்றி, மதிப்புக்குரிய முனைவர் டி.எஸ். சத்திய மூர்த்தி அவர்கள் கருதிப் பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.

புதுச்சேரி முனைவர் கே. இராசனின் பொருந்தல், கொடுமணல் ஆய்வறிக்கைகள் முழுமையாகக் கிடைத் தன எனக் கூறி, அவரைப் பாராட்டினார், திவாரி.

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் - தாமிர பரணி ஆற்றங்கரை நாகரிகம், மொகஞ்சதாரோ - அரப்பா நாகரிகத்துக்கு முந்தியது என நாம் பெருமைப் படுகிறோம்.

அதேநேரத்தில், கீழடியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்களையும், ஏற்கெனவே ஆதிச்ச நல்லூரில் ஆய்வு மேற்கொண்ட முனைவர் டி.எஸ். சத்தியமூர்த்தி, முனைவர் அறவாழி ஆகியோரையும், புதுச்சேரி முனைவர் கே. இராசன் அவர்களையும் மற்றும் இரா.பூங்குன்றன் அவர்களையும் தொல்லியல் ஆர்வலர்கள் நெஞ்சாரப் பாராட்ட வேண்டுகிறோம்.

- வே.ஆனைமுத்து

Pin It