புதுப் புது நூல்கள் பல நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள் படைக்கின்றனர். அந்த நோக்கத்தைக் கெண்டும், அதை அந்நூலாசிரியர் வெளிப்படுத்தும் திறமையைக் கொண்டும் அந்நூலின் சிறப்பு அமைகிறது. அவ்வகையில் "கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி" எனும் இந்நூல் நோக்கத்திலும் அதை வெளிப்படுத்தும் திறமையிலும் மிக உயர்வானது.
இந்நூல் தமிழ் இனத்தின் தொன்மையை மிகத் தெளிவாகவும், அழகாகவும் அதே சமயம் எளிமையாகவும் பறை சாற்றுகிறது. ஆகவே தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் இந்நூலை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். அது மட்டுமா? மறைந்து கிடக்கும் உண்மை வெளி வருகின்றது என்றால் அதை வரவேற்க உலக மக்கள் அனைவருமே கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர முயலும் கீழடி அகழாய்வு பற்றி முழுவதுமாக விளக்குவதால் உலக மக்கள் அனைவருமே வரவேற்க வேண்டிய ஒரு நூலாகும். ஆகவே வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது மனித குலத்திற்குச் செய்யும் உண்மையான வரலாற்றுத் தொண்டாக அமையும்.
கீழடி, அகழாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப் பொருத்தமான இடம் தான் என்பதன் நுணுக்கமான காரணங்களைத் தொல்லியல் ஆய்வுத் துறைக் கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனின் வாய்மொழி மூலமே இந்நூலாசிரியர் திரு.நீ.சு.பெருமாள் வெளிக் கொணர்கிறார். அது மட்டும் அல்ல; பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தும், தமிழ் அறிஞர்களின் ஆய்வுரைகளில் இருந்தும் சான்று காட்டுகிறார்.
இந்நூல் ஏழு கட்டுரைகளையும், தொல்லியல் ஆய்வு நிபுணர் திரு,அமர்நாத் ராமகிருஷ்ணனுடனான நேர்காணலையும் கொண்டு உள்ளது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு வாக்கியமும் பொருட்செறிவு கொண்டதாக உள்ளதானது நூலாசிரியரின் பரந்த ஆழமான அறிவுத் திறனை வெளிப்படுத்துகிறது.
தமிழ் அறிஞர் அ.சா.ஞானசம்பந்தர் நிறுவிய சென்னையில் உள்ள சேக்கிழார் ஆராய்ச்சி மையம் 2018ஆம் ஆண்டில் சிறந்த நூலாக இந்நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் ரூ.10,000 பண முடிப்பும் வழங்கி உள்ளது.
இந்நூல் மெத்தம் 104 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலாசிரியர் இந்நூலைப் படைக்க வெளிப்படுத்தியுள்ள நுண்ணறிவைக் கணக்கில் கொண்டு இந்நூலின் விலையை நிர்ணயிக்க முயன்றால், சாதாரண மக்கள் அதை வாங்கிப் படிக்க முடியாமலேயே போய்விடும். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்துடன் இந்நூலின் விலை ரூ.100 என நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்நூல், மல்லிகை புக் சென்டர், 11. மேல வெளி வீதி, மதுரை - 625001 (மதுரை இரயில் நிலையம் எதிரில்) கிடைக்கும். மேலும் நீ.சு.பெருமாள், 1/73 எண் 39 ஜீவா நகர், எமனேஸ்வரம், பரமக்குடி - 623701, கைப்பேசி எண் 9442678721 அல்லது 7904234672இல் நூலாசிரியரைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.
இந்நூல் தமிழ் அறிந்தோர் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.