(1938இல் திசம்பரில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் பெரியாரின் தலைமையுரை-சென்ற இதழ் தொடர்ச்சி...)

தோழர்களே!

இந்தி

நம் நாட்டு மக்களில் 100க்கு 93 பேருக்குத் தாய் பாஷையில் தங்கள் கையெழுத்துக் கூடப் பாடத் தெரியாத நிலையில், ஆரம்பப் பாடசாலைகளை ஜில்லாதோறும் 100ம் 200மாக திடீர் திடீரென மூடிக்கொண்டு வரும் நிலையில், கேட்பதற்கெல்லாம் பணமில்லை, பண மில்லையென்று பல்லவிபாடும் நிலையில், வடமொழி யென்றும், ஆரியமொழியென்றும், அந்நிய மொழி யென்றும் சொல்லப்படும் இந்தி மொழியை (பலர் ஆட்சேபித்த பிறகு) இந்துஸ்தானி என்று சொல்லிக் கொண்டு கட்டாய பாடமாகப் படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது காங்கிரஸ் திட்டத்தில் எத்தனையாவது திட்டமென்றும், ஓட்டர்களுக்கு எப்பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறுதியென்றும் கேட்கின்றேன்.

ஜனநாயக ஆட்சிக்காரர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் மிதவாதக் கட்சிப் பிரமுகர்களும், ஜஸ்டிஸ் கட்சிப் பெரியோர்களும், சுயமரியாதைக் கட்சிப் பிரமுகர்களும், முஸ்லீம் லீக் பிரமுகர்களும் சேர்ந்தும் தனித்தனியும் பத்திரிகைகள் வாயிலாகவும், பிரசங்க மேடைகளிலும், மகாநாடுகள் கூட்டியும் ஒருமனதான அபிப்பிராயத்தைத் தெரிவித்த போதிலும், அவ்வள வையும் அலட்சியப்படுத்திவிட்டு அதற்காக 600 பேர்கள் சிறை சென்ற பிறகும், 75 வயது சென்ற தாய்மார்களும், சகோதரிகளும், இன்னஞ் சிறார்களோடும் சிறை புகுந்த பின்னரும், வக்கீல்களும், ஆசிரியர்களும், பெரும் பட்டதாரிகளும், சர்க்கார் உத்தியோகத்தில் பென்ஷன் வாங்கி வருபவர்களும், துறவிகளும், மடாதிபதிகளும் சிறை புகுந்த பின்னரும், இந்தி எதிர்ப்பு சம்மந்தமான ஆயிரக்கணக்கான கூட்டங்களில் இலட்சக்கணக்கான ஆண் பெண்கள் கூடி ஏகமனதாய் இந்தியைப் பள்ளிகளில் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும் ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்னும் முதுமொழிக்கேற்ப, ஒரே பிடிவாதமாய் இரண்டிலொன்று பார்த்தே விடுகிறேன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி முறையா? மாறுபட்ட அபிப்பிராயங் களைக் கூறும் பத்திரிகைகளை ஒடுக்குவதும் கிளர்ச் சியை நசுக்கக் கடினமான அடக்குமுறைகளைக் கை யாளுவதும் ஜனநாயக ஆட்சியின் லட்சணமா எனக் கேட்க வேண்டியவனாக இருக் கின்றேன்.

இந்தி நுழைவால் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம், தமிழர் தன்மானம் இவைகள் அழிவுறும் என்று சொன்னால் அது அரசியல் எதிரி களின் கூச்சலாம்!

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நசுக்க அன்னார் உபயோகப்படுத்தும் சட்டம் ஜனநாயகக் கொள்கைக்குச் சற்றும் பொருந்தாது என காங்கிரஸ்காரர்களாலேயே முடிவு கட்டப்பட்டதாகும். தாங்கள் பதவியேற்றதும் இச்சட்டத்தை எடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பதாகத் தேர்தல் காலத்தில் உறுதிமொழி கொடுத்ததை யார் அறியார்கள்? இதைத் தந்நலமற்ற தலைவர்கள் மீதும் சமூக வாழ்க்கையில் ஆரியக் கோட்பாட்டிற்கு அடிமைப் பட்ட பெண்கள் மீதும் பிரயோகப்படுத்துவது அடுக்குமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.

காங்கிரஸ்காரர்கள் பதவியேற்ற பின்பு கிராம்பு மறியல் செய்தார்கள். அதனால் தினசரி வாழ்க்கைக்கும் வர்த்தகத்திற்கும் மற்ற பல அலுவல்களுக்கும் குந்தகம் ஏற்பட்டன. பலருடைய நலன் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த மறியல் கிரிமினல் அமண்ட்மென்ட் ஆக்டுக்குக் கீழ் குற்றமாக்கப்படவில்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் மனம்போனபடி வைதார்கள். அது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தவறாகத் தோன்ற வில்லை. இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்று தெருவில் சொல்லிக்கொண்டு நிற்பது அசிங்கமாகவும், ஆபாசமான வார்த்தைகளாகவும், அக்கிரமமான பேச்சுக்களாகவும் அவர்களுக்குப்படுகின்றன. 6 மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம் தண்டனைகளும், ரூ.500, ரூ.1000 அபராதங்களும் விதிக்கப்படுவதுடன், சிறையில் தொண்டர்களின் நாக்கைக் குறடுகொண்டு பிடித்திழுப் பதும் இரும்பு உலக்கை கொடுத்து அவர்களை நெல்குத்தச் செய்வதும், மாடுபோல் தண்ணீர் கவலை பிடித்து தண்ணீர் இறைக்கச் செய்வதும், கல்லுடைக்கப் போடுவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றது. இவைகளெல்லாம் ஜனநாயக ஆட்சி முறையா என்று கேட்க வேண்டியிருக்கின்றது. இன்றைய காங்கிரஸ் ஜனநாயக ராமராஜ்ய ஆட்சியில் நமது கூட்டங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் காலித்தனங்கள் செய்கிறார்கள்; நம்மவர்கள் தடி கொண்டு தாக்கப்படுகின்றார்கள்; துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படுகின்றது. இதைப் பற்றிக் காந்தியாருக்குக் கவலையில்லை. இதை நிறுத்த யாதொரு முயற்சியும் செய்யப்படுவதாகக் காணோம். ஆனால் ஆறாயிரம் மைலுக்கப்பாலுள்ள செக்கோஸ்லோ வேகியா மக்களுக்கும் யூதர்களுக்கும் காந்தியார் அகிம்சா பிரசங்கங்கள் செய்கிறார். காங்கிரஸ்காரர்களும் தங்களை அன்பின் சொரூபமென்றும் அகிம்சா மூர்த்திகள் என்றும் நாக்கூசாமல் பேசுகின் றார்கள்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது அபிப்பிராய பேதத்தால் ஏற்பட்டதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவுகட்டப்பட்டதே! அந்த அபிப்பிராய பேதத்தை விளக்கிக்காட்ட முயற்சித்தார்களா? கேவலம், அபிப்பிராய பேதத்திற்கு மூன்று வருஷ தண்டனையா? மற்றொரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியை நுழைக்கும் செய்கை வகுப்புத் துவேஷத்தை உண்டு பண்ணக் கூடியதாயிருக்கின்றதென்றும், அதை நிறுத்திவிடும்படியும் சொன்னார்களே! அதை மதித்தாவது சென்னை மந்திரிகள் நல்வழிப்பட்டார்களா? அதற்குப் பதிலாக மற்றவர்களை வகுப்பு வாதத் துவேஷிகளென்று அவர்கள்மேல் குற்றஞ்சுமத்தி அவர்களைக் கடுமையாகத் தண்டித்து வருகிறார்கள்.

வார்தா திட்டம் என்ற உலகிலே இல்லாத விநோத மான ஒரு திட்டம் தயாரித்து அதை அமுலுக்குக் கொண்டு வரப் படாதபாடு படுகின்றார்கள். அதனால் விளையும் ஒரே நன்மை கல்வியை ஒழிப்பதுதான். உலகக் கல்வி முறைத் திட்டங்களைக் கண்டறிந்த சிறந்த அறிவாளிகள் அதை வெகுவாகக் கண்டித்துங்கூட அதைக் கையாளத் தீவிர முயற்சி நடந்து வருகின்றது.

ஜமீன்தார்கள்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஜமீன்தார்கள் இயக்கமென்று சொல்லி ஜமீன்தார்களை ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம். ஜமீன்தார்கள் இருப்பதைப் பற்றியோ, போவதைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. ஆனால் இவர்கள் சட்டம் செய்யும் சூட்சுமம் என்ன? நாட்டு மக்களுக்கு நலம் புரியவா? அல்லது பழிவாங்கும் குணத்தாலா? என்று கேட்க வேண்டியிருக்கின்றது.

இவர்கள் இதுவரை இயற்றியுள்ள இருபெருஞ் சட்டங்களுக்குத் தினந்தினம் திருத்தம் செய்ய வேண்டியிருக் கின்றது. மதுவிலக்குச் சட்டத்திற்குத் திருத்தச் சட்டம், சட்டசபைக்குச் சென்ற செஷனில்கூட வந்தது. கடன் குறைப்புச் சட்டம் நீதி ஸ்தலங்களில் எள்ளி நகையாடப் படுகின்றது; நாடெங்கும் குறைகூறப்படு கின்றது. யாருக்கு நன்மை தேட இயற்றப்பட்டதோ அவர்கட்கு அதனால் தீமையே விளைவதாய் இருக்கின்றது. இந்த இலட் சணத்தில் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வேறு செய்கிறார்களாம். இதுவரை வெளிவந்திருக்கும் அறிக்கையில் ஜமீன் தார்களுக்கு பூமி சொந்தமில்லை எனக் காணப்படுகிறது. ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஒன்றுக்கு மூன்றாய் எழுதி வாங்கி ஏழையின் நிலத்தை ஏலம் போட்டு அவன் பதறப் பதறப் பிடுங்கிக் கொள்பவனுக்கு அது சொந்தமாம். ஜமீன்தார்களிடம் மதத்தின் பெயரால் ஏமாற்றி அவர்களின் கொடுமையான நிலங்களை இனாமாகப் பிடுங்கிக் கொண்டவர்களுக்கு அது சொந்தமாம். தானாக உழுது பயிர் செய்யாமல் பூமியைக் குத்தகைக்குவிட்டு, விளைந் தாலும், விளையாவிட்டாலும் குத்தகைப் பணத்தைக் கொறடு போட்டுப் பிடுங்கி சோம்பேறி வாழ்வு வாழ்பவ னுக்குப் பூமி சொந்தமாம். உழுது பயிரிட்டு உழைப்பவர் களுக்கு அது சொந்தமில்லையாம்! இவர்கள் சட்டம் செய்வதின் யோக்கியதை எப்படி இருக்கின்றது பாருங்கள்!

ஜமீன்தார்கள் ஆட்சி கூடாது; புரோகிதர்கள் ஆட்சி இருக்கட்டும் என்று கூறும் மேதாவிகள் இதைச் சிந்தித்துப் பார்க்கட்டும். ஜமீன்தார் பணம் சம்பாதித்து தனக்கும் மற்றவருக்கும் அதைச் செலவிடுபவன். ஆனால் புரோகிதனோ எல்லோரையும் வஞ்சித்து தானும், தன் குடும்பமும், தன் கூட்டமும் மாத்திரம், வாழவேண்டு மென்று எண்ணுபவன். இந்த இருபிரபுக்களில் யார் யோக்கியர்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங் கள். இந்த 17 வருட காலத்தில் இந்தச் சங்கத்திற்கு ஜமீன்தார்கள் மிராசுதாரர்கள், பிரபுக்கள் தலைமை வகித்து தங்களுக்காக வென்று சுயநலமாக என்ன காரியங்கள் செய்துகொண்டார்கள்? தங்களுக்காக வென்று எவ்வளவு பணம் தேடிக் கொண்டார்கள் என்று யாராவது சொல்லட்டும்.

ஒரு இயக்கத்தை நடத்தப் பணக்காரர்களில்லாமல் ஏழைகளால் நடத்த முடிகின்றதா? தொழிலாளர்கள் இயக்கங்கூட சோம்பேறிக் கூட்டத்தாரான பார்ப்பனர்களால் தானே நடத்தப்படுகின்றது? காங்கிரஸ் இயக் கங்கூட தாஸ், நேரு போன்ற பிரபுக்களாலும், பிரபுக் களின் குழந்தைகளாலும், சங்கராச்சாரி, மகாராஜா போன்றவர்களது போக போக்கிய பழக்கமுள்ள காந்தி யாராலும், மற்றும் பிர்லா, பஜாஜ் என்றவர்கள் போன்ற கோடீஸ்வரர்களாலுந்தானே நடத்தப்படுகிறது?

நிற்க. இவர்களுக்கு உதவியாக பல தேச பக்தர்கள் என்பவர்களுக்குத் தினக்கூலி கொடுத்தும் மாதக் கூலி கொடுத்தும் நம்மை வைவதற்கு மாத்திரம் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு நடத்தப்படுகிறதே தவிர, அது ஏழைகளால் நடத்தப்படுகிற இயக்கமா என்று கேட் கிறேன். பார்ப்பனர்கள் ஏழைகளா? பாட்டாளிகளா? பொது ஜனக்கஷ்டம் உணர்ந்தவர்களா? இப்படிப்பட்ட மக்களை விட ஜமீன்தார்கள் நடத்தை பெரிய அபாயகரமான தென்று சாக்குச் சொல்லுபவர்கள் சுயநலக்காரர்களும், பொறாமைக்காரர்களும் தவிர வேறு யார் சொல்ல முடியும்? தமிழனுக்குப் பிச்சை கேட்டு வழக்கமில்லை. அவனுடைய இயக்கம் ஒரு பணக்காரனால்தான் நடத்தப்பட முடியும். “பிரச்சாரம், தேர்தல் ஆகியவற்றிற்கு ஏராளமான பணம் வேண்டும்; ஜமீன்தார்கள் கூடாது” என்று சொல்லுகின்ற இந்தச் சங்கத்திலுள்ள சமதர்ம வாதிகள், யார்? எவ்வளவு ரூபாய் கொடுத்தார்கள்? அல்லது இயக்கம் நடைபெற, யார்? எவ்வளவு ரூபாய்கள் வசூல் செய்து கொடுத்தார்கள்?

காலஞ்சென்ற கனம் முனுசாமி நாயுடு அவர்கள் ஜமீன்தாரருமல்ல; பணக்காரருமல்ல. அவர் தலை வரானவுடன் “காங்கிரஸ்தான் தேசீய சபை, நம்முடை யது வகுப்புவாத சபை” என்று சொல்ல வேண்டிய தாகிவிட்டது. அதிக நாள் இருக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை.

சமதர்ம அரசாங்கம் பலமான அஸ்திவாரத்தின் மீது ஏற்படுத்தப் படும்வரை ஜமீன்தாரனோ, பணக்காரனோ, பிரபுவோ, முதலாளியோ இல்லாமல் எந்த இயக்கந்தான் நடைபெறும்? இன்று பெயரளவுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்றாலும், பணக்காரர்களிடம் 5,000, 10,000, 50,000, 1,00,000, 10,000,000 உதவித் தொகை பெறுவது எதற்கு? அவன் எதை உத்தேசித்துக் கொடுக்கிறான்? என்ன பிரதிப் பிரயோஜனம் செய்வதாக வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தால் காங்கிரஸ் பணக்காரர்களுக்கும், ஜமீன்தாரர் களுக்கும் கங்காணிகளாயிருப்பது விளங்கும். இதை அநேக காங்கிரஸ் அபிமானிகள், காங்கிரஸ் தலைவர்கள், நேரு, போஸ் முதற்கொண்டு சொன்னவர்களேயா வார்கள். ஒரு சமயம் காங்கிரஸ்காரர்கள். தாங்கள் பணம் வாங்கும் பணக்காரப் பிரபுக்கள் உண்மைத் தேசாபி மானிகளென்றால், நம் ஜமீன்தார்கள் உண்மையான மனிதாபிமானிகளென்று ஏன் சொல்லக்கூடாது?

இப்போது காங்கிரஸ்காரர்கள் கொண்டுவருவதாய்ப் பூச்சாண்டி காட்டும் மசோதா உண்மையில் ஜமீன் முறைகளை ஒழிக்கவா? அல்லது அவர்களை (ஜமீன் தார்களை) மிரட்டி நமக்கு உதவி செய்யக்கூடாது என்று அடக்கவா? அல்லது பிரதிப் பிரயோஜனம் பெற்றுக் கொண்டு, மற்ற பல மசோதாக்களில் நடந்துகொண்டது போல் கைவிட்டுவிடுவர் என்று இன்று யாரால்தான் ஜோசியம் கூறமுடியும்? ஆகவே எதிரிகள் பேச்சையும், பொறாமைக்காரர்கள், சுயநலக்காரர்கள் பேச்சையுங் கேட்டு பணக்காரர்களை வைது எதிரிகளுக்கு ஆளாகிவிடும்படிச் செய்து விடாதீர்களென்று எனது வாலிப சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பணக்காரர்கள் ஒழிக்கப்படவும், பணக்கார ஆட்சி ஒழிக்கப்படவும் காலம் வர வேண்டும். அது புரோகிதக் கூட்டமும், புரோகித ஆட்சியும் அடியோடு ஒழிந்துபிறகே தான் வரும். கட்டாயம் வரவே போகிறது. பொறுமையை இழந்து வழிமாறிப் போய் விடக்கூடாது. அப்படிப் போய் விட்டோமானால் நம் எதிரிகளுக்கு இரட்டிப்புப் பலம் ஏற்பட்டுவிடும். நமது மீட்சிக் காலமும் குறிப்பிடாமல் ஒத்திப் போடப்பட்டுவிடும்.

சுயமரியாதை இயக்கத்தின் மூலம் பணக்காரன், ஜமீன்தாரன், முதலாளி, ஒழிய வேண்டுமென்று சொன்னோம். புரோகிதர்களே அதற்கு எதிரிடையாக இருந்தார்கள். நாம் அப்படிச் சொன்னது, இன்று புரோகித ஆட்சிக்கு இடந்தந்தது. ஆதலால் புரோகித ஆட்சியை ஒழிக்கவும் மற்றப்படி அரசியலில் நமது கொள்கை என்னவென்பதற்கும் நான் சென்ற மகாநாட்டின்போது சமர்ப்பித்து நிறைவேற்றி வைத்திருக்கும் திட்டங்களிருக் கின்றன.

இந்து முஸ்லீம் கிருஸ்துவ தாழ்த்தப்பட்டவர் ஒற்றுமை

புரோகித ஆட்சி ஒழியவேண்டுமானால் நம் மக்களுக் குள் அபார ஒற்றுமையும், நல்ல பகுத்தறிவு ஆராய்ச்சியும் வேண்டும். ஏனெனில் நம் நாட்டிலுள்ள புரோகித ஆதிக்கம் நம்மையும், முஸ்லீம்களையும், கிறிஸ்துவர் களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒன்றுபோலவே தான் கருதி நடத்தி வருகிறது. கீழ்ச்சாதி, சூத்திரன், மிலேச்சன், தொடக்கூடாதவன் என்கின்ற பெயர்கள் நம் எல்லோருக்கும் ஒன்று போலவே உண்டு. நம் பல்வேறு முயற்சிகளால் சிறிது மாற்றமடைந் திருப்பதாகக் காணப்படுகிறதென்றாலும் அவர்களுக்கு வேண்டியபோது ஒன்றுபடுத்தித் தெளிவாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரை மேற்கூறிய நாம் எல்லோரும் ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள். தொழிலால், பழக்கத்தால், மன உணர்ச்சியால் வேறு மதம், வேறு சாதி, வேறு வகுப்பாய்க் கருதிக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் திராவிடர்களே யாவார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும் திராவிடர்களே யாவார்கள். மத விஷயத்தில் மனமாற்றங் கொண்டவர்கள் பிறவியில் நம் சகோதரர்கள்தான். ஆதலால் நம் நான்கு கூட்டத்தாரிடையும் சிறிது கூட வேற்றுமையுணர்ச்சியிருக் கக்கூடாது. ஒருவித ஆராய்ச்சி உணர்ச்சி ஏற்படும்வரை மதவிஷயத்தில் ஒருவருக்கொருவர் பிரவேசிக்க அவரவர்கள் பழக்கவழக்க கலை விஷயங்களில் பிரவேசிக்க இவ்வியக்கத்தில் யாருக்கும் எவ்வித உரிமையுமில்லை. ஆதலால் புரோகித ஆதிக்கத்துக்கு, ஆட்சிக்கு, ஏமாற்றத்துக்கு இடங்கொடுக்காமலிருக்க நாம் ஒன்றுகூடியே ஆகவேண்டும். முஸ்லீம்களினுடையவும், கிறிஸ்துவர்களினுடையவும் தாழ்த்தப்பட்டவர்களினு டையவும் தலைவர்கள் இதே அபிப்பிராயங் கொண்டி ருக்கிறார்கள். நம்மைப் பிரிக்க எதிரிகள் செய்யும் சூட்சிக்கு இடங்கொடுக்கக் கூடாதென்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழிலாளர்கள்

நம் நாட்டுத் தொழிலாளர்கள், பார்ப்பனரல்லாதாரியக்கம் வேறு; தொழிலாளர்கள் வேறு என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இக்கருத்து மாறி, இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையான எண்ணமும் உணர்ச்சியும் ஏற்படும் வரை இரண்டும் உருப்படா என்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனரல்லாதவர்கள் என்கின்ற வார்த்தையும் மக்களும்- தொழிலாளர் என்ற வார்த்தையும் மக்களும் ஒன்றேயென்பதை நாம் மறக்கவே கூடாது.

பார்ப்பனரல்லாதாருக்கு பெயர் “சூத்திரர்கள்” என்பதாகும். “சூத்திரர்கள்” என்றால் வேலைக்காரன், அடிமை என்று பொருள். ஆகவே, ‘சூத்திரன்’ என்பது தொழிலாளி என்பதைவிட மிகவும் தாழ்ந்த கருத்தி லிருப்பதோடு, காரியத்திலும் உடலுழைப்பு வேலைகள் பூராவும் பார்ப்பனரல்லாதாருக்கே இருந்து வருகிறது. இது காரியத்தில் மாத்திரமில்லாமல் புரோகிதக் கோட்பாட்டின் படியும் பார்ப்பனர்கள் உடலுழைப்புச் செய்யக்கூடாதென்றும், பார்ப்பனரல்லாதார் உழைக் கின்றவர்களே யாவார்களென்றும் இருக்கின்றது. இந்த பேதத்தை நிலைநிறுத்த பட்டாளம் வைத்திருப்பது போல் சில முதலாளிகளையும் ஜமீன்தார்களையும் புரோகிதன் மீதியாக வைத்திருக்கிறான். அவனும் ஒரே ஜாதியில் இல்லாமல் அடிக்கடி மாறி மாறி தானும் முதலாளி யாகும்படி இடம் வைத்திருக்கிறான். ஆதலால் முதலாளி யென்றோ ஜமீன் உடையவன் என்றோ பிறவியில் இல்லை. சட்டத்தில்தான் உண்டு. அதை, எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிடலாம். ஆனால் புரோகிதன் என்கிறவன் பிறவியில் இருக்கிறான். அதை மாற்றி விட்டோமானால் சட்டத்தை ஒரு வரியில் ஏற்படுத்தி விடலாம். ஆகவே, தொழிலாளத் தோழர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு புரோகிதர்கள் காலடியில் தங்கள் பாதுகாப்புச் சங்கங்களை ஒப்புவித்திருப்பதை மீட்டுக் கொண்டுவந்து பார்ப்பனரல்லாதார் சங்கத்தில் இரண் டறக் கலந்துவிடும்படியாய்க் கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு விண்ணப்பம் இல்லையென்றே கருதுகிறேன்.

அதிகாரிகள்

பார்ப்பனரல்லாத சர்க்கார் அதிகாரிகளே! ஜஸ்டிஸ் மந்திரிகள் ஆட்சியிலிருந்த காலத்தில் நீங்கள் உங்களை மேதாவிகளாகக் கருதிக் கொண்டு உங்களாலேயே நீங்கள் பெரியவர்களானதாக நினைத்துக் கொண்டு உங்கள் நாற்காலிகளில் சாய்ந்து, மந்திரிகளுக்குப் புத்தி சொல்லுகிற மனப்பால் குடிக்கிறவேலையில் இருந்து வந்தீர்கள். ஒரு காசாவது, ஒரு மணிநேர அநுதாபமாவது உங்களிடத்தில் நமது இயக்கம் பெற முடியவில்லை. அதன் பலனை இப்போது அடைகிறீர்கள். மந்திரிகளால் பெரும்பதவி, உத்தியோகம் பெற்றவர்களும் மந்திரிகள் போனவுடன் நீங்கள் உத்தியோகத்திலிருக்கும் போதும் எதிரிகளுக்கு ஆதரவளித்தீர்கள். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் தேவஸ்தான போர்டு மெம்பர்கள் உட்பட அநேகர் இப்படியே செய்தார்கள் - செய்கிறார்கள். இதன் பலனையும் அவர்கள் அடைவார்கள் என்றாலும், இன்று பதவியில் சிறு உத்தியோகத்திலுள்ள பார்ப்பனரல்லா தாரெல்லோரும் இயக்கத்துக்கு அநுதாபங் காட்டுங்கள். பொருளுதவி செய்யுங்கள். முன்னவர்களைப் போல் நன்றியற்றவர்களாகவும் இனத்துரோகிகளாகவும் ஆகிவிடாதீர்கள். உங்கள் சந்ததியின் மானத்திற்காகவே நான் உங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளு கிறேன்.

தலைவர்களுக்கு

இயக்கத் தலைவர்களே! பெரியோர்களே! ஏதோ சில காரணங்களால் தலைவர்களுக்குள் அபிப்பிராய பேதம் இருக்கலாம். இயக்கத்தின் பேரால் ஒரு நாளாவது தலை மையிலோ, பதவியிலோ, இருந்தவர்கள் இயக்கத்திற்கு ஆயுள்வரை கடன்பட்டவர்களாவார்கள். இயக்கக் கொள்கைகளில் மாறுபட்டாலல்லது அவர்கள் பராமுகமா யிருப்பது மிகக் கொடுமையான காரியமாகும். ஆதலால் எல்லா மனக்குறைகளையும் மாற்றிக்கொண்டு இயக் கத்தில் கலந்து காரியங்களை நடத்திக் கொடுக்க வேண்டியது அவர்களின் நீங்காக் கடமையென்பதோடு தலைவணங்கி அவர்களை வருந்தியழைக்கின்றேன். தகுதியான வண்ணம் தலைவர்களால் நன்கு மதிக்கப் படவில்லையென்றும் தங்களது நியாயமான உரிமைகள் அலட்சியப்படுத்தப்பட்டனவென்றும் சிலருக்கு இயக்கத் தினிடம் வெறுப்பேற்பட்டிருக்கலாம். அம்மாதிரிக் காரியங் களும் வெறுப்புகளுமே இந்த இயக்கம் சோர்வுற்றி ருக்கவும், தமிழர்கள் கட்டுக் குலையவும் காரணமாகவு மிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவைகளை மறந்து விட்டு முன்வரவேண்டிய காலம் இதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தமிழ்நாடு, தன்மானமுள்ள தமிழ் மக்களை தங்களது கடமையைச் செய்ய அழைக்கின்றது. இந்த அழைப்பைப் புறக்கணிப்பது சுலபத்தில் சரிப்படுத்த முடியாத குற்றமாகிவிடுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆகவே போனது போகட்டும். எப்படியோ நடந்த தவறுகளை மறந்துவிட்டு யாவரும் ஒன்றுபட வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

முடிவு

மாபெரும் மாறுதல்கள் நம்முன் காத்திருக்கின்றன. இச்சமயத்தில் மிகமிகச் சாமான்யனை (Very Ordinary Man) இப்பதவியில் வைத்துவிட்டீர்கள். மேலே சொன்ன வார்த்தைகள் எதுவும் சொல்ல நான் சிறிதும் தகுதியும், அந்தஸ்தும் உடையவனல்ல. இவைகள் தகுதிக்கு மேற்பட்டதாக இருக்கலாம். இந்தப் பதவியிலிருப்பவதற் காகவே சொல்ல வேண்டியது கடமையென்று கருதி இவைகளைச் சொல்ல வேண்டியதாய்விட்டது. நாம் செய்ய வேண்டிய வேலை, நம்மில் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமையேயாகும்.

நம் ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்குள் தக்க மெய்யான கண்ணியமான பிரச்சாரம் வேண்டும் யாரிடமும் வெறுப்பு, விருப்பு, குரோத உணர்ச்சி இவைகளில்லாமல் உண்மையன்புடன் துணிந்து கருமமாற்ற வேண்டும். கஷ்ட நஷ்டங்களுக்குப் பயப்படாமல் போர் முகத்து வீரன் போல் முடிவு காணும் வரை எதிர்த்து நிற்க வேண்டும்.

‘விடுதலை’ 29-12-1938

குறிப்பு :

1.            பெரியார் பெல்லாரி சிறையில் இருந்ததால் அவருடைய இந்த தலைமையுரையை சர்.ஏ.டி. பன்னீர்செல்வமும், கி.ஆ.பெ.விசுவநாதமும் படித்தார்கள்.

2.            தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.The B.N.Press,Madras.

- தொடரும்

Pin It