அன்றொரு நாள் சிலம்பில்லா கண்ணகியாய் சீதாதேவி
அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் அயோத்தி மீது
அரசவை வழக்குகள் அத்துப்படி ஆனதாலே
அரசியவள் தன்வழக்கை தானே எடுத்துரைத்தாள்

தரணிபுகழ் தசரதனுக்கு தக்கமனைவி மூவரிருக்க
தினமொரு தாரமென அறுபதனாயிர மெதற்கு?
திக்கெங்கும் திட்டுகள் தீராத வேதனை
தீஞ்சொற்கள் வாரிசுகளைத் தீப்பந்தாய்த் தீண்டாதோ!

திறன்மிகு சிறுவனுக்கு மனைவியானேன் வில்லாலே
திங்கள்செல்வன் திருவளர் ராமன் பிறந்ததுவோ
தீதிலா திருமகள் கவுசல்யா திருவயிற்றிலே
திசைமாறி பாசமென்ன கைகேயி யிடத்திலே?

அச்சாணி கழன்றபோது அடுத்துகாப்பது மனைவிதானே
அதற்கெல்லாம் அன்பாயொரு ‘நன்றி’ போதாதா?
அநியாயமாய் வரையற்ற வரமிரண்டு வழங்கலாமா?
அதனாலே அத்தனை துயருமென் வாழ்விலே.

அருவருக்கும் கூனிக்கு அரண்மனையில் என்ன வேலை
அடுக்குமோ நாடாளும் அரசியவள் அந்தஸ்திற்கு
அக்கூனி சூழ்ச்சியாலே குணம்மாறிய கைகேயி
அஸ்திரத்தை ஏவிவிட்டாள் அரசுபுகழ் வீழ்கவே.

தாளிரும் சடைகள்தாங்கி தன்னவன் தவமிருக்க
தன்னிமை மூடாமல் கொழுநன் காவல்புரிய
துள்ளிய மான்கண்டு நானும் மயக்கம்கொள்ள
துரத்தியது வினை தூயவர்கள் கானகமெங்கும்

அல்லாத இடம்தேடி அவர்கள் அலைந்திருக்க
அண்டிவந்த அனைவரும் அப்படியே ஆகிப்போக
ஆரணங்கு சூர்ப்பணகை ஆர்ப்பரித்த காதலாலே
அமைந்தது அரிவையின் கற்பிற்கே களங்கம்.

அய்யன் இராவணன் மண்ணோடு அள்ளியசீதை
அசோக வனத்தினில் அனுமனைக் கண்டதாலே
அவதார இராமன் அறிந்தானாம் சீதைசிறை
அய்ந்தறிவு குரங்கினும் தாழ்ந்தானோ அரசன்மகன்

அங்கத நாடாண்ட சுக்ரீவன் அண்ணன்மனை யாளலாமா?
அடுத்துக்கேட்ட வாலியை மறைந்து வீழ்த்தலாமா?
அவன்துணை சேதுபந்தனம் படைத்துணை வெற்றியாகுமா
ஐயகோ அயோத்தி ராமனுக்கு என்னவானது!

அயோத்தி திரும்பியவனுக்கு அயோக்கிய எண்ணமெதற்கு
ஆரத்தழுவிய மனையாளுக்கு அக்னிப்பரிட்சை எதற்கு?
அரசுப்புத்தி அக்கிரமம் அக்னித்தேவனால் அழிந்தது
ஆனாலும் சோதனை மீண்டெழுந்தது வண்ணானாலே.

அந்திப் பொழுதில் அடர்காட்டில் விட்டிட்டு
அண்ணன் கட்டளையென அடிமை லட்சுமணன் திரும்ப
அநாதையாய் கர்ப்பிணி அடைந்தாள் வனாசிரமம்
அப்புறம்தான் ஆண்டானாம் அறவழியில் இராமன்

அவள் கொடுத்த முகவரியில் அவனில்லை
அயோத்திராமன் பிறப்பே நீதிமன்ற விசாரணையில்
அபலையாய் திரும்பினாள் பிறந்த பூமிபிளந்து.
அவள்நிலையே இன்றளவும் இந்தியப் பெண்களுக்கே.

Pin It