நரேந்திர மோடி தலைமை அமைச்சரானது முதல், அவ்வப்போது அதிரடியான அறிவிப்புகளை ஆரவாரத்துடனும் அதேசமயம் அதிகார ஆணவத்துடனும் வெளியிட்டு வருகிறார். இதன் உச்சக்கட்டம் போல், 2017 சூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax - GST - ஜி.எஸ்.டி.) நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவிப்பதற்காக சூன் 30 நள்ளிரவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட் டத்தை நாடாளுமன்றத்தின் நடு மண்டபத்தில் நடத்தி னார். ஒரு வரி விதிப்பு மாற்றத்தை வேறு எந்தவொரு சனநாயக நாட்டிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவைப்போல் கொண்டாடியதில்லை.
இந்தியாவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதற்கான அறிவிப்பு - இந்தியா சுதந்தர நாடாகிவிட்டது என்பதற்கான விழா 1947 ஆகத்து 14 நள்ளிரவு 12 மணிக்கு நாடாளுமன்றத்தின் நடு மண்ட பத்தில் நடைபெற்றது. அதன்பின் இந்தியா சுதந்தரம் பெற்றதன் வெள்ளிவிழா இதே இடத்தில் நடைபெற்றது. அதன்பின் சரக்கு மற்றும் சேவை வரி (இனி ஜி.எஸ்.டி.) செயல்பாட்டுக்கு வருவதை முறைப்படி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கான விழா மோடி அரசால் 2017 சூன் 30 நள்ளிரவு நாடாளுமன்றத்தின் நடு மண்டபத் தில் நடத்தப்பட்டது. இந்தக் கேலிக்கூத்தை சமூகவியல் அறிஞர்களோ, ஊடகங்களோ கண்டிக்கவில்லை என்பது இந்திய சனநாயகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது.
வல்லபாய் பட்டேல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தபோது 1947-48களில் இந்தியாவில் இருந்த 560க்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வழிவகுத்தார். அதுபோல், நரேந்திர மோடி ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தியதன் மூலம், இந்தியப் பொருளாதார ஒருமைப்பாட்டை உருவாக்கியிருக்கிறார் என்று பாரதிய சனதா கட்சியினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்,
ஜி.எஸ்.டி. குறித்து மக்களவையில் 2016 ஆகத்து 8 அன்று நரேந்திர மோடி உரையாற்றிய போது, “காந்தியார் 1942 ஆகத்து அன்று ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கினார். அதுபோல் ஜி.எஸ்.டி. இந்தியர்களை ‘வரி பயங்கரவாதத்திலிருந்து’ விடுவிக்கும்” என்று கூறினார். ஜி.எஸ்.டி.க்கான எதிர்ப்பை முறியடிப்பதற்காக, நாட்டின் பொருளாதார ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பலமுனை வரிச் சுமைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும் ஜி.எஸ்.டி. இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்று ஆட்சியாளர்களும் பா.ச.க.வினரும் கூறிவருகின்ற னர். ஜி.எஸ்.டி.யால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2 விழுக்காடு அதிகமாகும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்கிறார்.
ஆனால் ஜி.எஸ்.டி., மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையைப் பறிக்கிறது; தேசிய இனங்களின் பாரம் பரிய சந்தையை அழிக்கிறது; சிறு-நடுத்தர வணிகர் களையும் சிறு-நடுத்தர உற்பத்தியாளர்களையும் நசுக்குகிறது; அதேசமயம் பெருமுதலாளியக் குழுமங் களின் பொருளியல் ஆதிக்கத்தை ஊக்குவிக்கிறது; பொருளியல் ஒருமைப்பாட்டின் மூலமாக இந்துத்துவ ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. ஜி.எஸ்.டி.யின் இக் கூறுகள் குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
வரி இனங்களில் நேர்முகவரி (Direct Tax), மறை முக வரி (Indirect Tax) ஆகிய இரு வகைகள் உள்ளன. இவற்றுள் மறைமுக வரி என்பது சந்தைக்கு வரும் சரக்குகள், பணம் பெற்றுக் கொண்டு செய்யப்படும் சேவைகள் ஆகியவற்றின் மீதான வரி விதிப்புகள் ஆகும். நேர்முகவரி என்பது தொழில் முனைவோர், வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வருமா னத்தின் மீதும், சொத்துக்கள் மீதும் விதிக்கப்படும் வரி இனங்கள் ஆகும்.
இவற்றுள் மறைமுக வரி என்பது பெரும்பாலும் சரக்கு மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்றப்பட்டு, இறுதியில் நுகர்வோர் சுமக்க வேண்டிய வரி இனம் ஆகும். மறைமுக வரி ஏழைகள், பணக்காரர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே அளவில் வசூலிக்கப் படுகிறது. அதனால் பெரும்பான்மையினராக உள்ள ஏழை-நடுத்தர மக்களே பெருமளவில் பாதிக்கப்படு கின்றனர். நேர்முக வரி என்பது நிரந்தர வருமானம் உள்ள நடுத்தர - உயர் நடுத்தர மற்றும் உயர் வரு மானம் உள்ளவர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாகும்.
இந்திய நிதித்துறையின் 2015ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நடுவண் அரசு மற்றும் மாநில அரசு களின் வரி வருவாயில் மறைமுகவரியின் பங்கு 67 விழுக்காடாகும். நேர்முக வரியின் மூலம் அரசு களுக்கு வரும் வருமானம் 33 விழுக்காடுதான். எனவே ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களிட மிருந்துதான் அரசுகள் அதிக வரி வருவாயை ஈட்டுகின்றன.
அதேசமயம் அரசுகள் பெரும் பணக்காரர்கள் மீதான நேரடி வரிவதிப்பை அதிகப்படுத்தாமல் இருக் கின்றன. 2000ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் மேல் நாட்டில் உள்ள ஒரு விழுக்காடு குடும்பங்களுக்கு நாட்டின் மொத்த சொத்தில் 36.8 விழுக்காடு சொந்தமாக இருந்தது. 2013இல் இது 49 விழுக்காடாக இருந்தது. நரேந்திர மோடி தலைமை அமைச்சரான பின் இரண்டு ஆண்டுகளில் இது 58.4 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எனவே நடுவண் அரசில் காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்தாலும், பா.ச.க. ஆட்சி செய்தாலும் பணக்காரர்களின், பெருமுதலாளியக் குழுமங்களின் நலன்களைப் பேணுவதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதே உண்மையாகும். ஆனால் தேர்தல் சமயங்களில் மட்டும் இக்கட்சிகள் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே பாடுபடுவதாகப் பசப்புகின்றன.
ஜி.எஸ்.டி. கோட்பாடு 2000ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக முன்மொழியப்பட்டது. 2006ஆம் ஆண்டில் காங்கிரசு ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நிதிநிலை அறிக்கையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 2010 ஏப்பிரல் மாதம் மன்மோகன் சிங் ஆட்சியில் ஜி.எஸ்.டி.யை சட்டமாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பா.ச.க. ஜி.எஸ்.டி.யைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்த வரும், வாஜ்பாய் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த வருமான யசுவந்த் சின்கா, “முதலில் நடுவண் அரசு தன்னுடைய வரி இனங்களை இணைத்து, ஜி.எஸ்.டி. யை முதலில் செயல்படுத்திக் காட்ட வேண்டும்; அதன் பின் மாநிலங்களைப் பின்பற்றுமாறு கேட்கலாம்” என்று கருத்துரைத்தார். குசராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியும் ஜி.எஸ்.டி.யைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி.யில் இருந்த குறைபாடுகளை நீக்கிவிட்டதால் ஜி.எஸ்.டி. புனிதம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்.
2016 ஆகத்து மாதம் அரசமைப்புச் சட்டத்தின் 122ஆவது திருத்தத்தின் மூலம் ஜி.எஸ்.டி. சட்டமாக நிறைவேற்றப்பட்டது. மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி போன்ற பலவகையான மறைமுகவரிகள் இரத்து செய்யப்பட்டு, நடுவண் சரக்கு - சேவை வரி (Central GST - CGST), மாநில சரக்கு - சேவை வரி (State GST - SGST), ஒருங்கிணைந்த சரக்கு - சேவை வரி (Integerated GST - IGST) என்கிற மூன்று பிரிவுகள் ஜி.எஸ்.டி.யில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரிவிகிதத் தைத் தீர்மானிப்பதற்காக சரக்கு - சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) என்கிற ஒரு அமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது.
2016 சூன் 30 நள்ளிரவு விழாவில் நரேந்திர மோடி வெற்றிக் களிப்பில் “ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி” என்று முழங்கினார். ஆனால் ஜி.எஸ்.டி.யில் 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு என்று நான்கு வகையான வரி விகிதங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரசுக் கட்சி திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி.யில் இரண்டு வiகான வரி விகிதங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. முதலாவது கச்சாப் பொருள்கள் மற்றும் பிற வகையான அடிப்படைப் பொருள்கள் மீது விதிக்கப்படுவது; இரண்டாவது நுகர்வு நிலையில் உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் மீதானதாகும்.
ஜி.எஸ்.டி.யின் நான்கு வகையான வரி விகிதங்களால் பல பொருள்களின் விலைகள் உயரக் கூடிய வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகள் தங்கள் அச்சத்தை நடுவண் அரசிடம் தெரிவித்தன. அதற்கு நடுவண் அரசு, ஏற்கெனவே நடப்பில் உள்ள மறைமுக வரிகளின் கூட்டுத்தொகை யின் அளவிற்கே ஜி.எஸ்.டி. இருக்கும் என்று கூறி ஏமாற்றியது. இது “வருவாய் நடுநிலை விகிதம்” (Revenue Neutral Rate - RNR) என்று கூறுப்படுகிறது.
மொத்தத்தில் ஜி.எஸ்.டி. என்பது உற்பத்தியாளர் கள் மீது விதிக்கப்படும் வரி அல்ல; மாறாக பலநிலை நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரியாகும். ஒரு சரக்கு எங்கே உற்பத்தியானாலும், எந்த மாநிலத்தில் உற்பத்தி யானாலும் அது நுகரப்படும் அல்லது அது பயன்படுத் தப்படும் இடத்தில்தான் இந்த வரி விதிக்கப்படுகிறது.
மாநில உரிமை பறிப்பு
சரக்கு மற்றும் சேவை வரியைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த ‘சரக்கு மற்றும் சேவை வரி மன்றம்’ நடுவண் அரசின் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மன் றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாநில அரசுகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். மாநி லங்களின் வாக்கு மதிப்பு 66.6 விழுக்காடாகும். நடுவண் அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு ஆகும். ஆனால் சரக்கு - சேவை மன்றத்தில் ஒரு தீர் மானம் நிறைவேறுவதற்கு 75 விழுக்காடு வாக்குகள் தேவை. எனவே 33.3 விழுக்காடு வாக்கு மதிப்பு அதி காரம் கொண்டுள்ள நடுவண் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் எந்தவொரு தீர்மானத்தையும் நிறை வேற்ற முடியாது.
மாநிலங்களுக்குப் பெரும்பான்மை வாக்குரிமை மதிப்பு இருப்பது போல் தோன்றினாலும், எந்தவொரு மாநிலமும் தன் உரிமையைத் தனியாகப் போராடி நிலைநாட்டிக்கொள்ள முடியாது. உண்மை நிலை இவ்வாறிருக்க நரேந்திர மோடியும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் இம்மன்றத்தில் மாநிலங்களுக்குப் பெரும்பான்மை வாக்குரிமை இருப்பதைச் சுட்டிக் காட்டி, இதைக் “கூட்டுறவுக் கூட்டாட்சி” (Cooperative federalism) என்று பெருமையுடன் கூறுகின்றனர். கூட்டாட்சி முறையை மேலும் ஒரு உயர்ந்த நிலைக் குக் கொண்டு சென்றிருப்பதாக வெட்கமில்லாமல் பிதற்றுகின்றனர்.
உண்மை நிலை என்னவெனில், எந்தவொரு மாநில அரசும் ஏதாவது ஒரு சரக்கின் மீது அல்லது சேவையின் மீது வரி விகிதத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ விரும்பினால் இதுவரையில் இருந்தது போல் மாநில அரசே முடிவெடுக்க முடியாது. இது குறித்து ஜி.எஸ்.டி. மன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இம்மன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும். எனவே எல்லா மாநில அரசு களும் எத்தகைய வரிவிதிப்பு அதிகாரமும் இல்லாத, நடுவண் அரசின் வெறும் வரி வசூலிப்பு முகமை களாக மாற்றப்பட்டுள்ளன.
அதேசமயம் நடுவண் அரசு தான் விரும்புகின்ற எந்தவொரு மாற்றத்தையும் ஜி.எஸ்.டி.யில் எளிதாக செய்துகொள்ள முடியும். எவ்வாறெனில், நடுவண் அரசுக்கு உள்ள 33.3 வாக்கு மதிப்புடன், நடுவண் அரசில் ஆட்சி செய்யும் பா.ச.க.வோ அல்லது காங்கிரசோ தன் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளின் வாக்குகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். மாநிலங் களுக்கான நிதியைப் பங்கிட்டுத்தரும் முழு அதிகாரம் நடுவண் அரசிடம் இருப்பதால் மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் மிரட்டி அவற்றின் வாக்குகளைப் பெற முடியும். ஆகவே சரக்கு-சேவை மன்றம் என்பது முற்றிலும் நடுவண் அரசின் கைப்பாவையாகவே செயல்படும்.
வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், மாநில சட்டமன்றங்களின் வரம்பிலிருந்து தற்போது ஜி.எஸ்.டி. மன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மன்றத்தின் முடிவுகளை நாடாளுமன்றத்திலோ சட்டப் பேரவையிலோ விவாதிக்கவும், இறுதி முடிவு எடுக்க வும் வழியில்லாத நிலையை உண்டாக்கியிருப்பது சனநாயக நெறிமுறையைக் குழிதோண்டிப் புதைப்ப தாகும். நடுவண் அரசின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள ஜி.எஸ்.டி. மன்றத்தைப் பெருமுதலாளியக் குழுமங்கள் தங்களின் நலனுக்கு ஏற்ப ஆட்டிப்படைக்க வாய்ப்பு உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களின் வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்படும் என்று மாநில அரசுகள் மன்றாடியதால் பெட்ரோலியம், மது வகைகள், மின்சாரம், புகையிலைப் பொருள்கள் மீதான வரி விதிப்பை ஜி.எஸ்.டி.யில் சேர்க்காமல், மாநிலங்களின் அதிகார வரம்பிலேயே விடப்பட்டுள்ளது.
மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முதல் மூன்று ஆண்டு களுக்கு முழு அளவிலும் நான்காவது ஆண்டில் 75 விழுக்காடும், அய்ந்தாவது ஆண்டில் 50 விழுக்காடும் ஈடுசெய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்திருக் கிறது. அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு எதுவும் கிடைக்காது. ஜி.எஸ்.டி.யால் மாநில அரசுகள் கடுமை யான நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படும். தமிழ்நாட்டு அரசுக்கு ஜி.எஸ்.டி.யால் ஆண்டிற்கு உருவா 9,270 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறி மறைந்த முதல மைச்சர் செயலலிதா இதை எதிர்த்தார். ஆனால் இப் போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் சட்டப் பேரவையில் ஜி.எஸ்.டி.க்கு ஒப்புதல் அளித்தது.
உலகில் முதல்நிலை பொருளியல் வல்லரசாகவும், தாராளமய முதலாளியத்தை உலக நாடுகளில் நிலை நாட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகவும் கொண்டுள்ள வடஅமெரிக்காவில் ஜி.எஸ்.டி. இல்லை. வடஅமெரிக்கா முழுமைக்கும் ஒரே சந்தை என்கிற நிலை உள்ள போதிலும், அமெரிக்காவின் மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப வரி விதிக்கும் அதி காரத்தைப் பெற்றுள்ளன. அதேபோல் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள், அய்ரோப்பிய பொதுச் சந்தை (European Common Market)) என்ற ஒற்றைச் சந்தைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. யூரோ என்ற பொது நாணயமும் புழக்கத்தில் உள்ளது. ஆனாலும் அய்ரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான ஜி.எஸ்.டி. இல்லை.
ஆனால் இந்தியாவில் ஒற்றைச் சந்தையின் பெய ரால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்குப் பொருளியல் ஆதிக்கம் மட்டும் காரணமன்று. இந்தியா ஒரே அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இருந்தாலும் மொழி வழியில் அமைந்த தேசிய இனங்களின் அடிப்படை யில் பல்வேறு மாநிலங்களாக இருக்கின்ற ஒரு துணைக் கண்டமாகும். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்த மொழி இருப்பதுடன் நீண்ட வரலாறும், தனித்தன்மை யான பண்பாட்டுக் கூறுகளும் வணிக முறைகளும் உணவு முறையும் உடையும் பழக்கவழக்கங்களும், இலக்கியங்களும், கலைகளும் உள்ளன. தேசிய இனங் களின் எழுச்சியை, தனித்தன்மைகளை அழிப்பதற் காகவே பார்ப்பன-பனியா-ஆரிய ஆளும் வர்க்கம் இந்துத்துவக் கோட்பாட்டை, இந்தி, சமற்கிருதத்தைத் திணித்து வருகிறது. இத்தன்மையில் தேசிய இனங் களின் உணர்வுகளை, அதிகாரத்தை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக ஜி.எஸ்.டி.யைப் பயன்படுத்துகிறது.
சிறு தொழில்களை, சிறு வணிகத்தை நசுக்கும் ஜி.எஸ்.டி. :
ஜி.எஸ்.டி. ஒரு குறிப்பிட்ட சரக்கிற்கு அல்லது சேவைக்கு ஒரே விகிதத்தில் வரிவிதிக்கிறது. இதனால் சந்தையில் பெருமுதலாளிய நிறுவனங்களின் பொருள்களுடன் சாதாரண சில்லறை வணிகர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் காலப்போக்கில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் ஜி.எஸ்.டி.யால் விரட்டி யக்கப்படுவார்கள்.
அதேபோல், “ஒரே நாடு, ஒரே சந்தை” என்பதில் அதிகப் பயனடையும் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும், சிறு உற்பத்தியாளர் களும் ஒரே வரிச்சுமையை ஏற்கும் நிலையில், சந்தைப் போட்டியில் சிறு தொழில் முனைவோர்கள் படிப்படியாக வெளியேறும் நிலை ஏற்படும்.
எனவே தான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிக்கப்படும் சாயத் தொழில், விசைத்தறிகள், தீப் பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில் முதலானவற்றில் ஈடுபட்டுள்ள சிறு உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதுவரை வரி விதிப்பு இல்லாத 509 பொருள்களுக்கு வரி விதிக்கப் பட்டுள்ளது. பலமுனை வரியைவிட தற்போது விதிக்கப் பட்டுள்ள ஒருமுனை ஜி.எஸ்.டி. வரி, கூடுதலாக இருப்பதால் பல பொருள்களின் விலைகள் முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளன. உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தால், உண வகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. தெருவோரக் கடைகள், வீட்டில் சமைத்து தரப்படும் உணவுகளை மக்கள் அதிகம் நாடுகின்றனர்.
பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 5ஆம் நாள், 15ஆம் நாள், 25ஆம் நாள் என மூன்று முறை வரித்துறை யினருக்குத் தங்கள் கணக்குகளை மின்னியல் வடிவில் (Electronic Format) அனுப்ப வேண்டும். எனவே சிறிய நிறுவனங்களும் கட்டாயம் கணினி மயமாக வேண்டும். நிறுவனங்களின் வரவு-செலவுக் கணக்குகளை “ஜி.எஸ்.டி. இணையம்” (GST Network) என்ற வலைப்பின்னலில் இணைக்க வேண்டும். இம்மாற்றங்களை செப்டம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று மோடி அரசு கூறுகிறது. குறைந்த அளவிலான எழுத்தறிவு கொண்ட சிறு வணிர்கள், சிறு உற்பத்தியாளர்களால் கணினி மூலம் இவற்றைச் செய்ய முடியுமா? இந்த நிலையால் சிறு வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் வரித்துறை அதிகாரிகளால் மிரட்டப்படுவார்கள். இதனால் ஊழல் அதிகமாகும். மேலும் இணையதள வசதியைக் கொண்டிருக்கும் சிறிய நிறுவனங்களிடம் மட்டுமே பெரிய நிறுவனங்கள் தமக்கான பொருள்களை வாங்கு வார்கள். எனவே எல்லா வகையிலும் ஜி.எஸ்.டி. சிறுவணிகர்களுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் எதிரானதாகவே இருக்கிறது.
எனவேதான் ஆர்.எஸ்.எஸ்.-இன் அறிவுஜீவி யாகக் கருதப்படும் எஸ். குருமூர்த்தி, “சிறுவணிகர் களுக்கு ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்த மூன்று ஆண்டு முதல் அய்ந்து ஆண்டுகள் வரை அவகாசம் கொடுத்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு செய்ய வில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் நிலை இருக் கிறது. எனவே ஆண்டுக்கு ரூ.4 அல்லது ரூ.5 கோடி வர்த்தகம் செய்வோருக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் (தினமணி, 22.7.17). குருமூர்த்தியே இந்த அளவுக்குப் பேசுகிறா ரெனில், உண்மையில் சிறுவணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் ஜி.எஸ்.டி.யால் எந்த அளவுக்கு அல்லல்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அரசு நிலையில் கூட ஜி.எஸ்.டி.யை நடைமுறைப் படுத்துவதற்கான போதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட வில்லை என்று பொருளியல் வல்லுநர்கள் கருத்து ரைத்துள்ளனர். ஜி.எஸ்.டி. குறித்து பலதரப்பு வல்லு நர்களுடன் கலந்துரையாடாமல், வெறும் உயர் அதி காரிகள் மட்டத்தில் மட்டுமே ஜி.எஸ்.டி. வகுக்கப்பட்ட தால் நடைமுறையில் அது பல சிக்கல்களை எதிர் கொள்ளும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறு கின்றனர். நரேந்திர மோடி 2016 நவம்பரில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அதிரடியாக மேற் கொண்டது போல் ஜி.எஸ்.டி.யையும் 2017 சூலை 1 முதல் செயல்படுத்த வேண்டும் என்பதில் விடாப்பிடி யாக இருந்தார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வெளிப்படைத் தன்மையையும், வரி வசூலிப்புத் திறனையும் அதிகப்படுத்தும்; ஊழலைக் குறைக்கும் என்கிற வாதம் நடுவண் அரசால் வலுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த வாதம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றதாகும். 2005ஆம் ஆண்டு வாட் வரி வந்த போதும் இதே வாதத்தை முன்வைத்தார்கள். வாட் வந்ததால் வரி வசூலிப்புத் திறன் அதிகரித்ததாகவோ, ஊழல் குறைந்துவிட்டதாகவோ மெய்ப்பிக்க சான்றுகள் இல்லை. மாறாக, கடந்த பத்து ஆண்டுகளில் ஊழல் அதிகமாகியிருக்கிறது. அதேபோல் ஜி.எஸ்.டி.யிலும் உயர் வரிவிகிதங்களில் வரி ஏய்ப்பு செய்வதற்கான வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஊழலுக்கு அடிப்படை, அரசியல் ஊழல் மயமாகி விட்டிருப்பதே ஆகும். பெருமுதலாளிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக் கில் நன்கொடை என்ற பெயரில் கையூட்டுத் தருவதே ஊழலின் ஊற்றுக்கண் ஆகும். மோடி ஆட்சிக்கு வந்தபின், முதலாளிய நிறுவனங்கள் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்கிற விதியையும் நீக்கி விட்டார்.
ரொக்கப் பரிவர்த்தனை முறையை நீக்கி டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்பட்டுவிட்டால் ஊழல் ஒழிந்துவிடும் என்று மோடி தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். மோடியின் கூற்று எவ்வளவு பொய்யானது என்பதை 21.7.2017 அன்று நாடாளுமன்றத்தில் அரசால் வெளி யிடப்பட்ட அறிக்கை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலக ஆய்வறிக் கையில், தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி யில் உள்ள ஏர்டெல், வோடாஃபான், ஐடியா, ஆர்காம், ஏர்செல், எஸ்.எஸ்.டி.எல். ஆகிய ஆறு நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ரூ.61,000 கோடியைக் கணக்கில் காட்டாததால், அரசுக்கு ரூ.7697 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது; அரசின் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இத்தவறு நிகழ்ந் துள்ளது என்று கூறப்பட்டுள்ளது (The Hindu, 22.7.2017).
இந்தியாவில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வரிவருவாயின் பங்கு 16.6 விழுக்காடாகும். இது வளரும் நாடுகளில் 21 விழுக்காடாகவும், வளர்ந்த நாடுகளில் 34 விழுக்காடாகவும் உள்ளது.
எனவே வரிவருவாயை அதிகரிக்க முதலாளிகள், பணக்காரர்கள் மீதான நேரடி வரிவிதிப்பை அதிகப் படுத்திட வேண்டும். மறைமுக வரியான ஜி.எஸ்.டி. மூலம் வெகுமக்களை அலைக்கழித்து, துன்புறுத்தக் கூடாது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கின்ற, சிறுவணிர்களை, சிறு உற்பத்தியாளர்களை ஒடுக்கு கின்ற ஜி.எஸ்.டி.யை நடுவண் அரசு திரும்பப் பெற வேண்டும்.