புத்தாண்டு பிறந்தும், தை பிறந்தும் வழி பிறக்கவில்லை, பொங்கலில் பொங்கியது என்னவோ உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வும், வேலையின்மையும், மக்களின் கண்ணீரும், கோபமும் தான்…. பாஜக மோடி ஆட்சியில் பொங்கலும் புளிக்கும், கரும்பும் கசக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2019ல் அரிசி உற்பத்தி 8% அளவிலும், சோள உற்பத்தி 11% அளவில் குறைந்துள்ளது. உளுத்தம் பருப்பு 18.38%, துவரம் பருப்பு 10.47% என பயறு வகைகளின் உற்பத்தியும் மிகவும் குறைந்துள்ளது. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 24% குறைந்துள்ளது, சர்க்கரை உற்பத்தி 22% குறைந்துள்ளது.

modi and nirmala sitharaman 596காய்கறிகளின் உற்பத்தியும் குறைந்துள்ளது. பாஜக அரசு விவசாயத் துறைக்கு ஒதுக்குவதாக உறுதியளித்த நிதியில் 28% வெட்டியுள்ளதை இங்குக் குறிப்பிட வேண்டும்.

இந்திய தொழிற்துறை உற்பத்தியில் 40% பங்களிப்பு செய்யும் 8 முதன்மை தொழிற்துறைகளின் உற்பத்தி 2018 நவம்பரில் 3.3% ஆக இருந்தது 2019 நவம்பரில் 1.5% ஆகக் குறைந்தது. இதில் மின்சாரம் (-5.7%), உருக்கு (-3.7%), நிலக்கரி (-2.5%), எரிவாவாயு (-6.8%), கச்சா எண்ணெய் (-5.7%) ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது. தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தேசிய வருவாய் பற்றிய கணிப்பு மதிப்பீட்டின்படி உற்பத்தித் துறை வீழ்ச்சியினால் நாட்டின் பொருளாக்க மதிப்பின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் 6.2% ஆக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி 2% குறைந்தது.

விவசாயத் துறை, தொழிற்துறை இரண்டிலுமே உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களின் நுகர்வுத் திறனும், பணக் கையிருப்பும் ஏற்கெனவே குறைந்துள்ள நிலையில் நுகர்வுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் 5 1/2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டிசம்பரில் பணவீக்கத்தின் அளவு 7.35% ஆக உயர்ந்துள்ளது. நவம்பரில் 1.93% ஆக இருந்த உணவல்லாத பொருட்களின் விலைவாசி உயர்வு டிசம்பரில் 7.72%. என நான்கு மடங்கு உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலைவாசி டிசம்பரில் 13.12% அதிகரித்துள்ளது. இது அவர்களின் நுகர்வுத் திறனை மேலும் குறைத்து பட்டினியையும், வறுமையையுமே அதிகரிக்கும்.

தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலகத்தின் அறிக்கையின் படி மக்களின் நுகர்வுத் திறன் 2011-12-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18-ல் 3.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் நுகர்வுத் திறன் 10% சரிந்துள்ளது. இந்த 7 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 3 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி இருமடங்காகி விட்ட நிலையில், தனிநபர் வருவாய் 7 ஆண்டுகளுக்கு முன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் 30% குழந்தைகள் கொடிய வறுமையால் வாடுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.

தேவையின் வீழ்ச்சியைக் குறைத்து மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அரசின் செயல்பாடுகள் மக்கள் மேலும் துயருறும் வகையில் தேவையையும், நுகர்வையும் மேலும் குறுக்குமாறான நடவடிக்கைகளிலே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமையல் எரிவாயு விலையையும், ரயில் பயணிகள் கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலையும் ஐக்கிய அமெரிக்காவின் அடாவடியால் ஈரானில் ஏற்பட்ட பதட்ட நிலையால் எகிரும் போக்கில் உள்ளது.

ஏற்கெனவே நிதி நிலை அறிக்கையில் வாக்களித்ததைக் காட்டிலும் அரசு செலவீனங்களைக் குறைத்துள்ள நிலையில் தற்போது, மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை மேலும் 2 லட்சம் கோடி குறைக்க உள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் 7 சதவீதம் வெட்ட உள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கெனவே கல்விக்கு ஒதுக்கப்பட்டதில் 3000 கோடியை வெட்டியுள்ளது. இது அரசு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டாலும் பெருமுதலாளிகளுக்களுக்கு 1.5 லட்சம் கோடி சலுகை அளிக்கும் போது அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையைப் பற்றி மட்டும் ஏன் அரசு கவலைப்படுவதில்லை?.

இந்நிலையில் தற்பொழுது ரூ. 102 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவை 2025-ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இத்திட்டத்தில் 39 சதவீதம் மத்திய அரசு மூலமும், 22 சதவீதம் தனியார் துறை மூலமும், 39% மாநில அரசு செயல்படுத்தும் எனக் கூறப்பட்டாலும் இதுவும் ஒரு வாய்ப்பந்தல் திட்டம் தான்.

டிசம்பரில் மத்திய அரசு பெற்ற ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து 2-வது மாதமாக ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி ரூ. 1.03 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி வருவாய் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலங்களுக்கு வழங்காமல் அரசு தொகு நிதியில் உள்ள 3.59 லட்சம் கோடி ஜி.எஸ்.டி செஸ் நிதியை பாஜக அரசு வைத்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிதியில் ரூ. 4,073 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

கடந்த 2018 ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டனர் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தனது புள்ளிவிரத்தை வெளியிட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 7.7 சதவீதம் பேர் (10,349) விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்காத அரசு மீண்டும் காவிரி விவசாய மண்டலங்களை நாசமாக்க மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை, மக்களிடம் கருத்து கேட்கவும் அவசியமே இல்லை என ஆணை பிறப்பித்துள்ளது. மற்ற நாடுகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசரநிலைப் பிரகடனம் செய்கிறார்கள். மக்களுக்கு எதிரான திட்டங்களை திரும்பப் பெறுகிறார்கள். அதற்கு நேர்மாறாக இந்தியாவில் அலட்சியத்திலும், அகம்பாவத்திலும் தன்னிகரற்ற பாஜக அரசு செயல்படுகிறது.

விவசாயிகளுக்கான தங்கக் கடனுக்கான வட்டி மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. விவசாயிகள் கடன் தள்ளுபடியால் தான் வங்கிகள் நட்டம் அடைகின்றன என்பது பொதுக் கருத்தாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தரவுகளின்படி பார்த்தால் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்யும் தொழில் அதிபர்களாலே வங்கிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பது தெரிய வரும். 2019-20-ம் ஆண்டில் நடந்த 398 வங்கி மோசடிகளில் அனைத்துமே ரூ. 50 கோடிக்கு மேற்பட்டவை, இதன் மதிப்பு ரூ. 1.05 லட்சம் கோடியாகும்.

கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறி கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக்கிய பாஜக அரசின் நிதியமைச்சகம் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் விவரத்தை வெளியிட முடியாது என்பது, கருப்புப் பணத்தை பதுக்குபவர்களின் பாதுகாவலனாகவே பாஜக அரசு செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.

தற்போது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார மந்த நிலைக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் அகர்வாலா குறிப்பிட்டுள்ளார். திவால் நடவடிக்கைச் சட்டமும் முறையான திட்டமிடல் இன்றி கொண்டு வரப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் நவீன தாராளமயக் கொள்கை, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் 10% ஆக உயர்ந்த வேலையின்மை 2020ல் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 2019 ஐ விட 2020ல் 16 லட்சம் வேலைகள் குறையும் என எஸ்.பி.ஐ வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

2018-19 நிதி ஆண்டில் அரசு ரூ. 1.05 டிரில்லியன் அளவில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் (தனியார்மயம்) மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இலக்கில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் ரூ. 17,364 கோடி அளவிலேயே பங்கு விலக்கல் 17% மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது பொதுத் துறையின் மற்ற சொத்துக்களான கட்டிடம், வளாகம் என எதையெல்லாம் விற்க முடியுமோ அதையெல்லாம் விற்க உள்ளது. மஹாபாரதத்தில் அர்ஜீனன் சூதாடினாரா என்று தெரியாது. பாஜக அரசு அர்ஜுனனை விட படு மோசமான சூதாடியாக உள்ளது. அர்ஜீனன் தனது சொத்துக்களை மட்டும் சூதாடினார் என்றால் பாஜக மக்கள் சொத்துக்கள் அனைத்தையும் தனியாரிடம் சூதாடி வருகிறது.

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நிதிமூலங்களை விற்கும் முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை இந்த சூதாட்டம் தான் தொடரும்.

விலைவாசி உயர்வுக்கேற்ப உழைப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படவில்லை. உயர்ந்ததென்னவோ பாஜகவின் வருமானம் தான். சென்ற 2018-19-ம் நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருமானம் ரூ. 2,410 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை அதன் சொத்துகளை விற்று நிதி திரட்டும் முயற்சியில் தள்ளிய பாஜக அரசு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்த ஆண்டின் இந்தியாவின் முதல் முன்னணி நிறுவனமாக உயர்த்தியதில் பாஜக பெரும்பங்கு வகித்துள்ளது.

அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 41.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அடிப்படையில் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸின் ஜியோமார்டை இறக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

உலகத்தின் பொருளாதார சமமின்மை மிகவும் அதிகரித்துள்ளதாக சர்வதேச பண நிதியத்தின் மேலாண்மை இயக்குனரே கவலை தெரிவித்துள்ளார். நான் சாப்பிட ஆடு சாகணுமேனு ஓநாய் அழுதது போல், இஸ்லாமியர்களுக்காக பாஜக கவலைப்படுவது போல் தான் இருக்கிறது பொருளாதார சமமின்மை பற்றிய சர்வதேச பண நிதியத்தின் கவலையும். பொருளாதார சமமின்மைக்குக் காரணமானவர்களே ஏன் அதைப் பற்றி அக்கறை காட்ட வேண்டும்?. ஏனென்றால் சந்தை சரியாக இயங்க வேண்டும் இல்லையா, பொருளாதார பெருமந்தம் வந்தால் சந்தை படுத்துவிடும். ஒவ்வொரு பொருளாதார பெருமந்தத்தின் முன்னும் பொருளாதார சமமின்மை மிகவும் அதிகரித்துள்ளது என்பது அவர்களுக்கு தெரியும்.

உண்மையிலே பொருளாதார சமமின்மையைக் குறைக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் முதலில் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் போன்ற பெரும் வட்டிக் கடைகள், சர்வதேச ஜனநாயக அமைப்புகளை உருவாக்க வேண்டும். .

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பானது 70 சதவீத மக்களின் சொத்து மதிப்பை விட நான்கு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது என்றும், இந்தியாவில் 63 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மத்திய அரசின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம் எனவும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் ஏழை - பணக்காரர் இடையிலான பொருளாதார சமமின்மை மிகவும் அதிகரித்துள்ளது இதனால் பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகில் மொத்தம் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பானது 460 கோடி மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளதாகவும், பணக்காரர்கள் தாங்கள் செலுத்தும் வரித் தொகையின் அளவை விட 0.5 சதவீதம் கூடுதலாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு செலுத்தினால் அதன் மூலம் 11.70 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். அதேபோல முதியோர், குழந்தை நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாகச் செலவிட முடியும் என்று ஆக்ஸ்பார்ம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார நிலைகளை நுணுக்கமாகத் தெரிந்த கொள்ள சமூகப் பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். மத்திய அரசு 2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 8754 கோடி ஒதுக்கியுள்ளது. சிறுபான்மையினரின் குடியுரிமையை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்தை செயல்படுத்த தேசிய மக்கள் பதிவேட்டுக்காகவும் 3941 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் பொருளாதார கணக்கெடுப்பு நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை அறியவும் அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை திட்டமிடவும், செயல்படுத்தவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் நல அரசு கணக்கெடுப்பில் கூடுதல் அக்கறையுடன் நம்பகத் தன்மையுடனும் செயல்பட வேண்டும். ஆனால் பாஜக அரசு அதைக் குலைக்கும் வகையில் அதனுடன் தேசிய மக்கள் பதிவேட்டையும் கோர்த்து பொருளாதார கணக்கெடுப்பையும் பாழ்படுத்துவது பெரும் வேதனை அளிக்கிறது. ஏற்கெனவே மத்திய புள்ளியியல் துறையின் நம்பகத் தன்மையை சீரழித்த பாஜக அதன் நீட்சியாக பொருளாதாரக் கணக்கெடுப்பிலும் குளறுபடி செய்வது மன்னிக்க முடியாத குற்றம்.

நெருங்கி வரும் பொருளாதார பெருமந்தத்தைத் தவிர்க்க அரசு சமூக நலத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால் நிதிப் பற்றாக்குறையை 3 - 3.5%-க்குள் வைக்க வேண்டும் என்று அரசு சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டே வருகிறது.

அது நவீன தாராளமயம் விதிக்கும் கட்டளை. இல்லையேல் அந்நிய முதலீடுகள் வெளியேறிவிடும், பங்கு சந்தை சரியும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பார்கள். ஆனால் வல்லரசுகள் குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா இதிலிருந்து விதிவிலக்கானவர்கள். அவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை 3%க்குள் இருக்க வேண்டும் என யாரும் ஆணையிட முடியாது. ஆணைகளை அவர்களே உருவாக்குவார்கள். 2019ல் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. ரூ 1.33 லட்சம் கோடி அளவில் அந்நிய முதலீடுகள் உள்ளே வந்தன. அதனால் இந்தியாவின் வேலையின்மையும், விலைவாசி உயர்வும், பொருளாதார நெருக்கடியும் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மக்களின் வரிநிதியில் அந்நிய முதலீடுகளையும், அம்பானி, அதானிகளையும் கவருமாறு நிதிநிலை அறிக்கை போட்டால் மக்களாகிய நாங்கள் எதிர்த்துப் போராடவே செய்வோம். உலகெங்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1 என்றால் இந்தியாவுக்கு மட்டும் இரண்டு மாதம் முன்னரே பிப்ரவரி-1ல் வருகிறது. இந்த முறை முட்டாளாகி ஏமாற மாட்டோம். எதிர்த்துப் போராடுவோம்.

- சமந்தா

Pin It