பொருளாதார மந்த நிலை இன்று பேசுபொருளாக உள்ளதோடு நம் உணர்வு நிலையாகவும், முதலிய சமூகத்தில் வாழ்வதால் அதுவே நம் வாழ்நிலையாகவும் உள்ளது. பொருளாதார மந்த நிலையின் வரையறை என்ன, பொருளாதார மந்த நிலைக்கும், பொருளாதார வீழ்ச்சி (பொருளாதார பெருமந்த நிலை) ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு, வேறுபாடு என்ன எனப் பார்த்தோமானால், நாட்டின் மொத்தப் பொருளாக்க மதிப்பின் வளர்ச்சி வீதத்தில் குறுக்கம் ஏற்பட்டு, அது 2 காலாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால் அது பொருளாதார மந்த நிலை எனப்படுகிறது. இந்தப் பொருளாக்கக் குறுக்கத்தினால் ஏற்படும் பொருளாதார மந்த நிலை நீண்ட கால அளவில் நீடித்து ஆண்டுகளாகத் தொடர்ந்தால் அது பொருளாதாரப் பெருமந்தம் எனப்படுகிறது. இதனால் அறுதித் தேவைக் குறைபாடு, வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாகி பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போகின்றன.
தற்பொழுது உலகெங்கிலும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை பிற துறைகளிலும் பின் தொடரும் அபாயம் உள்ளது. பொருளாதாரத்தேக்கம் ஒட்டுமொத்த தேவையின் அளவும், முதலீட்டின் அளவும் மிகக் குறைந்துள்ளதாலும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையை முதலியம் பொருளியத்தின் இயல்பான ஏற்ற இறக்கங்களின் சுழற்சியில் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. அதற்கு அந்தக் கட்டமைப்புக்குள்ளே தீர்வு உண்டு எனவே போதிக்கிறது. ஆனால் உண்மையில் இது முதலியத்தின் அடிப்படை முரண்பாடு, உற்பத்தி சாதனங்களின் தனியுடைமையால் உழைப்பு சமூகமயமாக்கப்பட்ட போதிலும் அதன் விளைபொருளான மிகைமதிப்பை கொள்ளை லாபமாக பெருமுதலாளிகளே கைகொள்கின்றனர். மூலமுதலின் வளர்ச்சி வீதத்தோடு ஒப்பிடுகையில் கூலியின் வளர்ச்சி வீதம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆக்க முறைகள் வளர்ச்சியடைந்து நவீனமாக்கப்பட்டு உற்பத்தித் திறன் பெருமளவிற்கு உயர்ந்த போதிலும் கூலியுழைப்பு மிகவும் மலிவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலோ பொருளாதார வளர்ச்சி வீதம் 5 சதவீதமாக சரிந்துள்ளது. அரசின் எதிர்மறையான நடவடிக்கைகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என உலக வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளதாகவும், ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளின் விளைவால் தொழில் சேவைத் துறைகள் சரிவை சந்தித்துள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி 2018-19 உள்நாட்டு நுகர்வு சரிவடைந்திருப்பதையும், தேவை குறைபாட்டினால் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டிய போதிலும் இது ஒரு சுழற்சி முறை சரிவு தானே தவிர ஆழமான கட்டமைப்பு ரீதியான மந்த நிலையல்ல என்று தன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்களின் நுகர்வுத் திறன் மிகவும் குறைந்துள்ளது. மத்திய வங்கி கணக்கீட்டின் படி நுகர்வோர் நம்பிக்கை ஆறு ஆண்டுகளில்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற உழைக்கும் மக்களின் வாங்கும் திறன் மிகவும் குறைந்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்துள்ளது. முதலீட்டு வீதமும், சேமிப்பு வீதமும் மிகக் குறைந்துள்ளது
இந்நிலையில் ஒரு மக்கள் நல அரசு என்ன செய்ய வேண்டும்? உழைக்கும் மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்தும் விதமாகக் கூலியை உயர்த்த வேண்டும், மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி சலுகைகள் வழங்க முதலீடு செய்ய வேண்டும், உடனடி நிவாரணமாக கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த அரசே நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதியை நேரடி செல்வ வரியின் மூலம் பெற வேண்டும். ஆனால் பாஜக அரசு செய்தது என்ன? அதற்கு நேர் எதிராக கடந்த சில மாதங்களில் நாட்டின் பணக்கார நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 2.25 லட்சம் கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது. பெருநிறுவனங்களின் நிறுவன வரியை 30லிருந்து 22% ஆகக் குறைத்துள்ளது. புதிதாகத் துவங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிறுவன வரி 25%லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது. குறைந்தபட்ச மாற்றுவரியை 18%லிருந்து 15% ஆகக் குறைத்துள்ளது. வரிக்குறைப்பால் 0.7% ஜி.டி.பி நிதிப் பற்றாக்குறை அதிகமாகும், அரசு கூடுதல் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படும். இந்த வரிக் குறைப்பால் அரசிற்கு ரூ. 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் ஆதாயம் அடையும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் பணக்காரர்களுக்கான கூடுதல் வரியை விலக்கியுள்ளது.
"இந்த வரிச்சலுகைகள் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்கப்படுத்தும், முதலீடு பெருகும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும். இது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட்டு வருவாயை உயர்த்தும்" என நம்புவதாக நடைமுறைக்கு நேர்மாறாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டு பெருலாபத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தனியார் முதலாளர்கள் முதலீடு செய்ய முன்வரவே மாட்டார்கள். இந்நிலையில் தனியார் முதலீட்டை அதிகப்படுத்துவதற்காக எனக் கூறி பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அவர்களது செல்வத்தையும் தனிச் சொத்தையுமே அதிகரிக்குமே ஒழிய அது புதிய முதலீடுகளை அதிகப்படுத்தப் போவதில்லை.
பெரு நிறுவனங்கள் மத்திய மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு 40000 கோடியை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த வருடம் மத்திய சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி வீதம் 3.85% குறைந்துள்ளது. மத்திய வங்கி வங்கிவீதத்தைக் குறைத்த பின்பும், அதன் பயனை மக்கள் பெறும் நிலையில் வங்கிகள் செயல்படவில்லை. லோன் மேளாக்களின் மூலமும் குறைந்த அளவுக் கடனே விநியோகம் ஆகியுள்ளது. கடன் மலிவுக் கொள்கையை மட்டுமே முதலியம் சர்வரோக நிவாரணியாகக் காண்கிறது.
அரசு தரும் தீர்வுகளில் அரசு நேரடியாக முதலீடு செய்வது குறித்தோ, பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது குறித்தோ பெயரளவிற்குக் கூட இடமளிக்கவில்லை. இந்த பெறு நிறுவனங்களுக்கு வழங்கிய சலுகைகளுக்கான மொத்த மதிப்பை அரசு தனியாருக்கு அளிக்காமல், தானே நேரடியாக முதலீடு செய்யுமானால் அது நிச்சயமாக பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். ஆக்கத் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக அரசு கடன் பெறுவது தவறில்லை. அந்த முதலீட்டால் கிடைக்கும் வருவாய் அக்கடனுக்கான வட்டிவீதத்தை விட அதிகமாக இருந்தால், அது நீடித்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும், வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் ஊக்குவிக்கும்.
சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும் என செலவீனங்களை வெட்டிவிடும் அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு இவ்வளவு சலுகைகள் அளிக்கும் போது வரும் நிதிப் பற்றாக்குறையை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அது குறித்து கேட்டால் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் எனப் பெருந்தன்மையுடன் பதிலளிக்கிறார் நிதியமைச்சர். பொருளாதார நெருக்கடிகளின் போதும் கூட பெரும்பணக்காரர்களே இது போல் கொள்ளை லாபம் ஈட்ட குடியாட்சியத்துக்கு விரோதமாக அரசே துணை போகிறது. பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கோ எந்த நிவாரணமும் இல்லை. இதனால் அறுதித் தேவையும், நுகர்வும் மேலும் குறைந்து பொருளாதார நெருக்கடி மேலும் முடுக்கி விடப்பட்டு நிலைமை சரி செய்ய இயலாத அளவிற்கு மேலும் முடங்கிப் போகும்.
ஏற்கெனவே பெறுநிறுவனங்கள் 2% சமூகப் பொறுப்பு நிதியை சரியாக ஒதுக்கீடு செய்யாமலும், செயல்படுத்தாமலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் நிலையில், அதன் வெளிப்படைத் தன்மையை மேலும் குறைத்து, அதன் முறைகேடுகளை ஊக்குவிக்கும் விதமாகத் தற்பொழுது சமூகப் பொறுப்பு நிதியை ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டியில் ஆய்வுக்காக செயல்படுத்தலாம் என்ற கூடுதல் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜன்தன் கணக்குகளை உருவாக்கும் போது பாஜக அரசு என்ன கூறியது? நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வங்கிக் கணக்கை, வங்கி சேவையை பெறும் விதம் செய்யப் போகிறோம் என்றது. அது எந்த அளவுக்கு நடைமுறையாகியது என்பது தனிக் கதை. தற்போது வங்கிச் சேவைகளை பொது மக்களுக்குக் குறைக்கும் வண்ணம், நாடு முழுவதும் 27 பொதுத் துறை வங்கிகள் இருந்த நிலையில் வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாகக் குறைக்க உள்ளனர்.
பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படும் நடவடிக்கை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான படிக்கற்கள் என்று நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். எப்பேர்பட்ட படிக்கட்டுகள் அவை? விவசாயிகளின், பாட்டாளிகளின் முதுகில் கட்டப்பட்டப் படிக்கட்டுகள் அவை.
இந்தியாவின் ஒரு கை ஜிடிபி மாய்மாலத்தையும், மற்றொரு கை பங்குச் சந்தை மாய்மாலத்தையும் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளது. இதன்படி ஜிடிபியும் உயர்ந்து பங்குச் சந்தையும் உயர்ந்தால் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகப் போற்றப்படும். அந்த ஜிடிபியில் எத்தனை சதவீதம் தொழிலாளர்களுக்கு சென்றது, எவ்வளவு சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் சென்றது என்பதைப் பற்றி ஏன் நிதியமைச்சகம் கவலைப்பட வேண்டும்? பெருமுதலாளிகள் சந்தையில் பெருலாபம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்பதே அதன் ஒரே நிதிக் கொள்கை. இன்றைய வளர்ச்சி வீதத்தில் இந்தியா முடங்கிக் கிடந்தால் 2024க்குள் 5 டிரில்லியன் பொருளாதாரமாவது எப்படி சாத்தியமாகும்?
பெறு நிறுவனங்களுக்கான சலுகைகளால் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருக்கிறது, முதலீட்டளவில் உள்ள தேக்கத்தை வெளிநாட்டு நிதி மூலதனத்தின் மூலமே சரி செய்ய முடியும் என்று நம்ப வைக்கப்படுகிறது.
சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளை இந்தியாவிற்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாகுவதாலோ, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பங்குச் சந்தையில் ஏற்றம் பெறுவதால் மட்டும் இங்குள்ள வேலைவாய்ப்பின்மையைக் குறைக்கவோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தவோ முடியாது. முதலியத்தின் அடிப்படைக் கட்டமைப்பினால் ஏற்பட்டதே இன்றைய நெருக்கடி. இந்தக் கட்டமைப்பைத் தகர்த்துத் தான் இந்நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அடிமை நிலையில் மாநிலங்கள்:
தற்போது 15வது நிதிக்குழு செயல்படுத்த இருக்கும் விதிமுறைகள் கூட்டாட்சிக் கூட்டுறவிற்கு முற்றிலும் புறம்பானதாக உள்ளது. இதன்படி மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு 42% ஒதுக்குவதற்கு முன்பே நாட்டின் வெளிநாட்டு, உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒரு நிரந்தர நிதியை உருவாக்க வேண்டும் . இது ஏற்கெனவே 14வது நிதிக்குழுவால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42% வரிவருவாயை மேலும் குறைக்கும் நடவடிக்கையாகும்.
14 வது நிதிக்குழு மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு 42% ஒதுக்கீடு செய்யுமாறு பரிந்துரைத்திருந்தது. இது 13வது நிதிக்குழு திட்டம் சாரா தேவைகளுக்கென ஒதுக்கிய 32%ஐக் காட்டிலும் 10% அதிகமாகத் தெரிந்தாலும் உயர்த்தப்பட்டது என்னவோ 3% தான். எப்படி எனப் பார்த்தோமானால், திட்டக்குழு திட்டம் சார்ந்த செலவீனங்களுக்காக மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 5.5% ஒதுக்கி வந்தது. பாஜக அரசால் திட்டக்குழு மூடப்பட்டதால் அது நிதிக்குழு ஒதுக்கீடுகளுடன் சேர்க்கப்பட்டது. மேலும் துறைவாரியாக அளித்து வந்த நிதி உதவிகள் 1.5 - 2%. இவை அனைத்தையும் மொத்தமாக சேர்த்தால் 32 + 5.5 + 1.5=39%. மத்திய அரசு மாநிலங்களுக்குப் பங்கில்லாத கூடுதல் வரி, செஸ் மூலமாக வரி வருவாயை அதிக அளவிற்கு மையப்படுத்தியுள்ளதால் மாநிலங்கள் மொத்த வரி வருவாயில் 32 சதவீதத்திற்கும் குறைவாகவே பெறும் நிலை உள்ளது.
மேலும் 14வது நிதிக்குழுவின் காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே அவசரகதியில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதால் 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை. ஜி.எஸ்.டி என்பது உற்பத்தி அடிப்படையிலான வரி விதிப்பு முறை அல்ல. நுகர்வு, இலக்கு அடிப்படையிலான வரிவிதிப்பு முறை. இதன் படி தமிழ் நாட்டில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது கோவாவில் நுகரப்பட்டால் அப்பொருளுக்கான வரிவருவாய் கோவாவிற்கு கிடைக்குமே தவிர, தமிழ் நாட்டிற்குக் கிடைக்காது. இவ்வரி முறையால் உற்பத்தியில் அதிகப் பங்கேற்கும் தமிழ்நாடு உரிய நிதி வருவாய், முறையாக இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி நிவாரணத் தொகை 2022 வரை மட்டுமே வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்ய அடிப்படியான வளர்ச்சி வீதத்தை 14%-லிருந்து குறைக்கப் போவதாக அறிவித்துள்ளதால், இழப்பீட்டுத் தொகை குறையும் அபாயமும் உள்ளது.
ஜி.எஸ்.டி வரியால் ஏற்கெனவே மாநிலங்கள் வரி உரிமையை இழந்து நிதிச் சுமையால் நசுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் நிதி வருவாயை மேலும் குறைக்கும் விதமான இந்திய ஒன்றியத்தின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது. "ஜி.எஸ்.டியில் சில குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அது தான் சட்டம்" என்கிறார் நிதியமைச்சர். அது யாருக்கான சட்டம் என்பது தான் கேள்வி. மூலமுதலில் கார்ல் மார்க்ஸ் முதலியத்தைத் தோலுரித்துக் காட்டும் போது, அதன் வளர்ச்சியின் தன்மைகளாக மூலதனக் குவிப்பையும், மையப்படுத்துதலையும் விளக்குவார், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி என்பது சிறு உற்பத்தியாளர்களை, சிறுவணிகர்களை விழுங்கி மூலமுதலின் குவிப்பை, மையப்படுத்துதலை முதலாளர்களே நேரடியாக செய்ய அவசியமின்றி அவர்களுக்கு ஏதுவாக அரசே அந்தப் பணியை எளிதாக செய்யும் விதமான கருவியாகியது.
படுமோசமான அயல்நாட்டுக் கொள்கை கொண்ட ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசு கூட தன் நாடுகளின் மீது இப்படிப்பட்ட வன்முறையைத் திணிக்கவில்லை. ஜி.எஸ்.டி நடைமுறையிலிருக்கும் நாடுகளிலும் இவ்வளவு அவசரமாகவும் அதிதீவிரமாகவும் ஜிஎஸ்டி செயல்படுத்தப்படவில்லை. அதே போல் பணமதிப்பிழப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்கியது அனைவரும் அறிந்ததே. இந்திய அரசின் பணமதிப்பிழப்பும் மின்னணுப் பரிவர்த்தனையில் ஈடுபடும் முதலாளர்களுக்கு சாதகமாக, பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் சிறு உற்பத்தியாளர்களை, வணிகர்களை விழுங்கி மையப்படுத்துதலை ஊக்குவிக்கும் ஒரு முதலியக் கருவியாகவே செயல்பட்டது.
இந்திய ஒன்றியத்தின் அதிகாரப் பகிர்மானம் மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல். இதுவும் வெறும் பெயரளவிற்கான ஒரு ஏற்பாடாகவே அப்பட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளையும் மத்திய அரசே ஆக்கிரமிக்கிறது. முதலில் மத்திய நிதியுதவித் திட்டங்களுக்கான (CSS) மாநிலப் பங்களிப்பு 10-25% ஆக இருந்தது பிறகு அதை 40% உயர்த்தியது. மேலும் 14வது நிதிக்குழு மாநிலங்களின் வரி வருவாய் பங்கை 42% உயர்த்தியுள்ளது எனக் காரணம் காட்டி பல மத்திய நிதியுதவித் திட்டங்களை நிறுத்தியுள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறைக்கு நிதி அளித்தல் இதுவரை இருந்த நிதிக் குழுவின் வழிமுறையாக இருந்தது. அதை 15வது நிதிக் குழு நீக்குவது நிதிக் குழுவின் நடைமுறையையே மாற்றுவதற்கு ஒப்பாகும்.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலில் மாற்றியதற்காக, கல்விக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஏதும் ஒதுக்கவில்லை என்பதோடு ஏற்கெனவே ஒதுக்கி வந்த நிதியையும் வெட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி மத்திய அரசு பெறும் வரி வருவாயிலே மத்தியப் பட்டியலில் உள்ளத் துறைகளுக்கான செலவீனங்களை செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறை மத்திய பட்டியலில் உள்ள நிலையில் அதற்கான நிதியை மாநிலங்களின் நிதிப் பங்கிலிருந்து பறிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கே புறம்பானது. அனைத்துத் துறைகளுக்கான அதிகாரங்களையும் மையப்படுத்தி, நிதிப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதோடு மட்டுமில்லாமல், மாநிலங்களின் நிதியையும் பறித்து அவற்றை மேலும் கடனாளியாக்கி அடிமைப்படுத்துவது தான் இந்திய ஒன்றியம் கூறும் கூட்டுறவுக் கூட்டாட்சியத்தின் ஜனநாயகமா?
- சமந்தா