நிதிநிலை அறிக்கை என்பது நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் நாட்டின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் ஓர் ஆவணமாகும். அரசின் வரவு-செலவு உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள் ஆகியன இந்த ஆவணத்தில் இடம் பெறுகின்றன. பொதுவாக நிதிநிலை அறிக்கை பொருளாதார சக்திகளை ஊக்குவிக்கும் என்ற பொருளில் தான் அவ்வறிக்கையின் தன்மைகள் ஆய்வு செய்யப் படுகின்றன. நிதிநிலை அறிக்கையினுடைய தன்மைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இந்தியா போன்ற 127 கோடி மக்கள் தொகையைக் கடந்துவிட்ட நாட்டில் நிதிநிலை அறிக்கை பெரும்பான்மையான மக்களின் வாழ்வியலை மாற்றவேண்டும் என்ற நம்பிக்கை வலி மைப்படுகிற காலத்தில், இந்தக் கூற்றை ஒன்றிய அரசின் 2019-20 நிதிநிலை அறிக்கை பொய்ப்பித்துள்ளது.

nirmala sitharaman budgetபிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பல வாக்குறுதிகளை முன் வைத்துத்தான் வெற்றி பெற்றார். அவற்றில் முதன்மையானது வெளி நாட்டில்-உள்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்துக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று ஒரு வாக்குறுதி அளித்தார். ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பேன் என்று மற்றொரு உறுதியளித்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. ரூ.500 ரூ.1000 பணத்தாள்களைச் செல்லுபடியாகாது என்று அறிவித்தது, ஏழை நடுத்தர மக்களின் தலையில் விழுந்த இடியாகவே அமைந்தது. மாறாக, பணம் படைத்தவர்கள், பெரு முதலாளிகள் தங்களின் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு இந்த அறிவிப்பு பெருமளவில் பயன்பட்டது என்பதைப் பல ஆய்வு கட்டுரைகளும் புள்ளி விவரங்களும் பறைசாற்றின.

மாநில அரசின் பட்டியலில் உள்ள பல அதிகாரங்களில் காணப்படுகிற மக்கள் நலத் திட்டங்களை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு அவற்றைத் தனது திட்டங்களாக அறிவித்து வருகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் நகர்ப்புறங்களில் 1970களிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற் கென்று குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பே உருவாக்கப்பட்டது. இன்று வரை இத்திட்டம் முழுமை யாக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படவில்லை. காரணம் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதே போன்று 2010ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஊர்ப்புறங் களில் வாழ்பவர்களுக்கு அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே காலிமனை அளித்து அவர்கள் வீடு கட்டுவதற்கான திட்டம் தொடங் கப்பட்டது. 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இத்திட்டத்தைப் பசுமை வீடுகள் என்ற அடிப்படையில் நிறைவேற்றினார். இன்றும் அத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2008இல் தொடங்கப்பட்டு அதன் வழியாகப் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசமாக வழங்கபட்டது. தற்போதும் அத்திட்டம் விரிவான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் 2006லிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டங்களையெல்லாம் பிரதமரின் 18 திட்டங்கள் என்ற பெயரில் ஒன்றிய அரசு அறிவித்தது. இத்திட்டங் கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டனவா என்பதை 2018-19 பொருளாதார ஆய்வறிக்கையில் தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பிரதமரின் 18 திட்டங் களில் மேற்குறிப்பிட்ட 3 திட்டங்கள் தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் பாஜக வாக்குறுதிகளை வாரி இறைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கோடு, 2019ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இத்திட்டங்கள் மீண்டும் 2019-20 நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இடம் பெற்றதில் தவறில்லை. ஆனால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு இல்லை என்பதுதான் உண்மையாகும். கடந்த 40 ஆண்டுகளில் வேளாண் துறை சந்திக்காத வறட்சியும் குடிநீர் பிரச்சினையும் தற்போது இந்தியா வின் 14 மாநிலங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில், பல நூற்றுக்கணக் கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். இந்த அவல நிலைமை பசுமைப் புரட்சியின் தாயகம் என்று கருதப்பட்ட பஞ்சாபிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் பெரும் வறட்சியும் குடிநீர் பற்றாக் குறையும் பெருமளவில் மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன.

தொழில் துறையில் அதிகமான வேலையின்மையும் பொருள் உற்பத்தியையும் செய்யும் நடுத்தர சிறுகுறு தொழில்கள் தொடர்ந்து நட்டத்தில் இயங்கிப் பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடும் நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரும் தொழில்களிலும் தேக்க நிலை காணப்படுகிறது.

விவசாயத்தினுடைய வளர்ச்சி வீழ்ந்து வருகிறது. சீனாவை ஒப்பிடும் போது இந்தியாவினுடைய விவசாய உற்பத்தித் திறனும் ஆண்டு வளர்ச்சியும் சரிந்து வருகிறது.

இந்தச்சூழலில் பொய்யுரை மட்டுமே நிதி நிலை அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. 2019-20இல் 1.5 இலட்ம் கோடி ரூபாய் வேளாண் துறைக்கு ஒதுக்கப் படுகிறது என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆய்ந்தால் தற்போதுள்ள சூழலில் ஓர் ஏமாற்றுத் தந்திரம் என்றே உணர முடிகிறது. இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற திட்டம் நல்ல திட்டம்தான்.

ஆனால் அத்திட்டம் வெற்றி பெறுவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பூஜ்ஜிய விவசாயத் திட்டம் என்ற அடிப்படையில் இயற்கை வேளாண்மைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சத்திலும் பட்டினியிலும் கடனிலும் மூழ்கி அன்றாடம் வாழ்க்கையே விவசாயிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கும் நேரத்தில் இந்தத் திட்டத் திற்குப் பெரும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால் இது ஒரு வெற்று முழக்கமாகவே உள்ளது.

18 திட்டங்களில் திறன் மிக்க நகரங்கள் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய இந்தியாவில் 110 நகரங்கள் 2014இல் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டம் வெற்றி பெற்றதா? இத்திட்டத்திற்காக 2015 முதல் 2019 வரை 48 ஆயிரம் கோடி நிதிநிலை அறிக் கைகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டு களில் ஒதுக்கப்பட்ட தொகை 23 ஆயிரம் கோடி மட்டுமே ஆகும். ஆனால் 8460 கோடி தான் உண்மையில் செலவிடப்பட்டது. சொல்லியது ஒன்று, செய்தது ஒன்று என்பதை இத்திட்டம் வெளிப்படுத்துகிறது.

திறன் வளர்க்கும் திட்டம் என்ற பெயரில் 2014இல் பாசக அரசு 400 கோடி ஒதுக்கியது. ஆனால் 2017-18இல் ரூ.ஐந்து கோடிதான் செலவிடப்பட்டது. இது போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நம்மால் குறிப்பிட முடியும்.

வரி வருவாயும் அதிக அளவில் வரும் என்ற நம்பிக்கையை இந்த நிதிநிலை அறிக்கை அளிக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பொருளாதார ஆய்வறிக்கையில் காண முடிகிறது. பொருளாதார ஆய்வறிக்கை பகுதி இரண்டில் அட்டவணை 2.5இல் வரி வருவாய் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டில் தற்காலிக வருவாய் மதிப்பீடு ரூ.13.16 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகை ரூ.14.84 கோடி உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இவ்வளவு பெரிய வரி வருவாயை எப்படிச் சரிக் கட்ட முடியும்? காரணம் வேளாண் தொழில், பணித்துறைகளின் வளர்ச்சியும் வீழ்ந்து வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 6.8 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடு வளரும் என்று கூறப்பட்டாலும், அத்தகைய வளர்ச்சியை உண்மையில் காண முடியவில்லை.

பிரதமர் மோடிக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்த திருவாளர் சுப்ரமணியம்- வருவாய் பெருகி வருவது போலக் காட்டி வளர்ச்சி அதிகரிக்கின்றது என்ற மாயையை உருவாக்கி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் உயர் வளர்ச்சி என்று உண்மைக்குப் புறம்பானது என்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5 விழுக்காடு தான் 2017-18இல் இருந்தது என்றும் உறுதியாக கூறுகிறார். எனவே நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகிற உயர் அளவிலான வரி வருவாய் மதிப்பீடு ஒரு கனவே ஆகும். ஒரு நாட்டினுடைய வளர்ச்சி, முன்னேற்றத்தில் முடிய வேண்டும் என்றுதான் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால் இந்த வளர்ச்சி வேலைவாய்பை உருவாக்கு வதற்குப் பதிலாக, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித் திருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டு தொழிலாளர் காலமுறை ஆய்வுப் புள்ளி விவரங்கள் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே 2012ல் 55.5 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு 2018ல் 49 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் இந்த வயதினர் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந் துள்ளனர்.

நகர்ப்புறங்களில் பெண்களுக்கான வேலையின்மை 10.8 விழுக்காடாகவும், நகர ஆண்களிடையே 7.1 விழுக்காடாகவும் குறைந்துள்ளது. ஊரகப் பகுதியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 3.8, ஆண்களுக்கு 5.8 எனக் குறைந்துவிட்டது.

10ஆவது வரை படித்தவர்களிடையே வேலை யின்மை 2012 அம் ஆண்டு 4.9 விழுக்காடாக இருந் தது. 2018ல் 11.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மேல்நிலைக் கல்வி முடித்தவர்களிடையில் 10.3 விழுக்காடாகவும், பட்டயப்படிப்பு பெற்றவர்களிடையே 19.8 விழுக்காடாகவும், பட்டப்படிப்பு முடித்தவர்களி டையில் 17.2 விழுக்காடாகவும், முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களிடையில் 14.6 விழுக்காடாகவும் வேலை வாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. இவ்வாறு வேலை வாய்ப்பு உருவாக்காத வளர்ச்சியைப் பொருளாதாரம் அடைந்தது எனப் பல வல்லுநர்கள் சுட்டுகின்றனர். படித்தவர்கள் பாமரப் பெண், ஆண், நகரம், ஊரகம் என அங்கிங்கெனாதபடி பரவியிருக்கும் வேலையின்மை தீவிரவாதத்தை வளர்க்கும் என சமுக இயலாளர்கள் கருதுகின்றனர்.

இதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மானுட மேம்பாட்டு அறிக்கை, ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. தலா வருமானம், வறுமை அளவு கல்வி, போதிய வேலைவாய்ப்பு, சுகாதாரம் குடியிருப்பு, வசதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் கருவுற்ற பெண்கள் நலன், குழந்தைகள் நலன் போன்ற பல குறியீடுகள் முன்னிறுத்தப்பட்டு வளர்ச்சியினுடைய நிலை உறுதி செய்யப்படுகிறது. இந்தியா 188, நாடுகளில் மானுட மேம்பாட்டுக் குறியீட்டு வரிசையில் 134ஆம் இடத்தில்தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் உள்நாட்டுப் பன்னாட்டு முதலாளிகள் இந்தியாவினுடைய வள ஆதாரங்களைக் கொள்ளையடிதப்பதற்குத்தான் பல சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இடைக்கால அறிக்கையில் தனிநபர் வரி வருமானத் திற்கான வரிவிலக்கு ரூ.5 இலட்சம் என்று அறிவிக்கப்பட்டு, அதே அறிவிப்புதான் 2019-20 நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த 5 இலட்ச விலக்கிற்குப் பிறகு அதிக வருமானம் பெறுகிற வர்கள் 30 விழுக்காடு வருமான வரியை எல்லோரும் செலுத்த வேண்டும் என்ற நிலை தனிநபர் வருமான வரியைப் பொறுத்தவரை தொடர்கிறது. ஆனால் முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களுக்கான வரி 25 விழுக்காடு குறைத்துச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரியில் எந்த விலக்கும் நடுத்தரப் பிரிவினருக்கு வழங்காத நிலையில் முதலாளிகளுக்கு நிறுவன வரியில் சலுகை அளிக்க வேண்டுமா? குறிப்பாக நேர்முக வரி வாரியத்தின் புள்ளி விவரங்களின்படி, நேர்முக வரிகளிலிருந்து 2017-18 2018-19 ஆகிய நிதியாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட வரிவருவாய் இலக்கை அடைய முடியவில்லை என்ற உண்மை யைப் பல பொருளாதார ஏடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

1969ஆம் ஆண்டு இந்தியாவில் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 19 ஆகும். 50 ஆண்டுகளில் முதல் 25 ஆண்டுகளில் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மாணவர்களுக்கும், சிறுகுறு விவசாயிகளுக்கும் சிறு குறு தொழில்களுக்கும் அதிக அளவில் கடனுதவியை அளித்துப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தன என்ற புள்ளிவிவரங்கள் உள்ளன. இக்காலக்கட்டத்தில் கடனைப் பெற்ற இப்பிரிவினர் உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தினர். 1990 ஆண்டுக்குப் பிறகு உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்ற பெயரில் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன்களை வாரி வழங்கின.

அரசின் இத்தகைய அலட்சியப் போக்கால் கடனைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கடன் தொகை 2018-19இல் 10 இலட்சம் கோடி அளவிற்கு உயர்ந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டில் 1 இலட்சம் கோடி அளவிற்குக் குறைப்பேன் என்று நிதியமைச்சர் நிர்மலா கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்தப் பெரு முதலா ளிகள் உள்ளே புகுந்து கொள்ளையடித்த பணத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட மூலதன இழப்பைச் சரிகட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் 70 ஆயிரம் கோடியை அறிவிப்பேன் என்றும் சுட்டியுள்ளார். இது ஒரு பெரிய முரண்பாடாகும். 70 ஆயிரம் கோடி என்பது, இந்திய மக்கள் அனைவரும் ஏழை பணக்காரர் செலுத்திய வரி வருவாய் ஆகும். மேலும் இந்தக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் மீது பல குற்றவியல் வழக்குகளை இந்திய அரசு பதிவு செய்தும் இன்றளவிலும் அவர்கள் வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் நிரவ் மோடி வெளிநாட்டிலிருந்து அளித்த பேட்டியில், நான் பல ஆயிரம் கோடி ரூபாயை பாசக தலைவர்களுக்கு வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்புதல் வாக்குமூலமே இன்றைய ஒன்றிய அரசினுடைய நாணயம் தவறிய செயலைத் தோலுரித்துக் காட்டுகிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனிற்கும் வட்டியும் முதலும் செலுத்த வேண்டிய தொகை 8 இலட்சம் கோடி அளவிற்கு உள்ளது. நாம் பெற்ற கடனின் அளவு 9 இலட்சம் கோடியாக உள்ளது. வரி வருவாய் சரிவு, இலாபத்தில் இயங்கி வந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடனில் மூழ்கும் போக்கு, இவ்வங்கிகளின் இலாபத்தில் சரிவு போன்ற நிதி இயல் வங்கிக் காரணிகளைச் சமன் செய்து நிதியியல் பற்றாக்குறையை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவில் 3.8 விழுக்காட்டிற்குள் கொண்டு வருவேன் என்று நிதியமைச்சர் கூறியது பெரும் பொய்யாகவே கருத வேண்டியுள்ளது.

மேலை நாடுகளில் அறிஞர் மார்க் ட்வெயின் புள்ளிவிவரங்களைப் பற்றிக் கூறிய கருத்தைக் குறிப்பிடுவார்கள். குறிப்பாக, இங்கிலாந்தின் பிரதமர் பென்ஜமின் டிஸ்ரேலி புள்ளிவிவரப் பொய்களைச் சுட்டும் போது-பொய்கள் மோசமான பொய்கள் புள்ளிவிவரங்கள் என்றார். தற்போதைய சூழலில் அறிஞர் மார்க் ட்வெயினின் கருத்தை ஒட்டி, 2019-20 நிதிநிலை அறிக்கை பற்றிக் கூற வேண்டுமென்றால் “மோடி பொய்கள், நிர்மலாவின் மோசமான பொய்கள்; நிதிநிதி அறிக்கை புள்ளிவிவரங்கள்” என்று தானே கூற முடியும்.

Pin It