மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் அரசு, நடைபெற்று வரும் மழைக் கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவதும், மக்களவையில் ஓட்டெடுப்பில் பெரும்பான்மை பெற்றதுமான சட்டதிருத்தம் தான் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி (குட்ஸ் & செர்விசெஸ் டேக்ஸ் -GST) விதிப்பதற்கான 122-வது சட்டத் திருத்தம் ஆகும்.
ஜி.எஸ்.டி. பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன், தற்போது இருக்கும் வரிவிதிப்பு முறை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய வரிவிதிப்பு முறை:
இன்றைய நடைமுறையில், நாம் ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு உணவகத்தில் உணவருந்தும் போதோ ஒன்றுக்கும் மேற்பட்ட வரிகள் விதிக்கப்படுகின்றன. அப்படி விதிக்கப்படும் வரிகளில் சில மத்திய அரசாலும், மாநில அரசாலும் வசூலிக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது கலால் வரியும், பொருட்கள் விற்பனை செய்யும் போது விற்பனை வரியான “மதிப்புக் கூட்டப்பட்ட வரியும் (VAT)”, ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் போது சுங்க வரியும், சேவைகள் வழங்கலில் சேவை வரியும் விதிக்கப்படுகிறது.
மத்திய அரசின் CENVAT எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியானது, பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே வசூலிக்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கான VAT விற்பனை வரி நாம் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் போது வசூலிக்கப்படுகிறது.
இப்போதிருக்கும் முறைப்படி, பொருட்களுக்கு தனி வரி விதிப்பு முறையும் (5-20%), சேவைகளுக்கு தனி வரி விதிப்பும்(12.36%), மேலும் வெவ்வேறு அளவிலான வரிகளும் விதிக்கப்படுகின்றது.
ஜி.எஸ்.டி. (Goods & Services Tax) என்றால் என்ன ?
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான புதிய வரி விதிப்புமுறை ஜி.எஸ்.டி. என்பது மத்திய, மாநில அரசுகளால் பொருட்கள் விற்பனை, சேவைகள் வழங்கல் போன்றவற்றின் போது வசூலிக்கப்படும் பல்வேறு விதமான வரிகளை ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து ஒரே வரியாக வசூலிக்கும் முறைதான் என்று மத்திய அரசு விளக்கம் கொடுக்கிறது.
ஒரு பொருளுக்கோ அல்லது சேவைக்கோ பல்வேறு விதமான வரிகளைச் செலுத்துவதைத் தவிர்க்கவும், வணிகர்கள் மத்திய அரசுக்கு தனியாகவும், மாநில அரசுகளுக்கு தனியாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் கூடுதல் வேலை வழக்கைத் தவிர்க்கவும் ஜி.எஸ்.டி. எனப்படும் எளிமையான வரி விதிப்பு முறை வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.
இரட்டை ஜி.எஸ்.டி. (Dual GST):
மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் வசூலிக்கும் இரட்டை ஜி.எஸ்.டி. என்னும் முறைதான் இப்போது பரிசீலனையில் உள்ளது. அதாவது, நாம் ஒரு பொருளை 100 ருபாய் கொடுத்து வாங்கினால், வசூலிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. வரி மதிப்பு 16 விழுக்காடு என்றால், மத்திய அரசு 8 விழுக்காடும், மாநில அரசு 8 விழுக்காடும் அல்லது வேறு விகிதத்திலோ வசூலிக்கப்படும்.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி என்னும் பெயரின் கீழ் மாநில அரசின் பின்வரும் வரிகள் கொண்டுவரப்படும். மாநில விற்பனை வரி, கேளிக்கை வரி, பொருட்களுக்கான நுழைவு வரி, மத்திய விற்பனை வரி, சில சிறப்பு வரிகள் போன்றவை இதில் அடங்கும். இந்த வரிகள் அனைத்தும் சேர்ந்து மாநிலங்களின் சொந்த வருவாயில் 52 விழுக்காட்டைக் கொடுக்கின்றன.
இந்த இரட்டை வரிவிதிப்பு முறையில், நாம் மேலே குறிப்பிட்ட உதாரணம் போல, மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே அளவிலான வரியை வசூலிக்க முடியாது. ஒரு மாநில அரசுக்கான வருவாய் என்பது 52 விழுக்காடு என்பது நாம் செலுத்தும் பல்வேறு வரிகளின் மூலமே கிடைக்கப் பெறுகிறது. அப்படி இருக்கையில், ஒரே வரி என்கிற பெயரில் மிகக் குறைந்த வரியினை மாநில அரசுகள் வசூலிக்க வேண்டி வந்தால், அது மாநில அரசுகளின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, சிறு சிறு திட்டங்களுக்கும் மாநில அரசுகள் மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.
இதனால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலத்தில் 13-வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் மூலம் மத்திய, மாநில அரசுகள் பெற வேண்டிய வரி விகிதங்களை (Revenue Neutral Rate)) நிர்ணயிக்கவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆணையம், ஜி.எஸ்.டி வரியாக 12 விழுக்காடு வசூலிக்க வேண்டும் என்றும், அதில் 7% மாநில அரசிற்கும், 5% மத்திய அரசிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், மாநில அரசுகளால் வசூலிக்கப்படும், விற்பனை வரியான க்ஷிகிஜி-ன் அளவு மட்டும் 12.5%. ஆகவே 13-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுள்ள பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், நாடு முழுக்க ஒரே அளவிலான வரியினை விதிப்பதும், மாநில அரசுகள் வரி அளவினை முடிவு செய்ய அனுமதிக்காமல் தடுப்பதும் மாநில தன்னாட்சி பறிப்பே.
ஜி.எஸ்.டி. சட்டத் திருத்தமாக மத்திய பா.ச.க. அரசு கொண்டு வரும் திருத்தத்திற்கு, இரட்டை வரிப்பு முறையின் அடிப்படையில் 27.54% அளவினை நடுநிலை வரி விகிதமாக பரிந்துரைத்து இருக்கிறது தேசிய பொதுநிதி மற்றும் நிதிக் கொள்கைக்கான நிறுவனம். 27.54 விழுக்காட்டில் மத்திய அரசிற்கு 12.77 விழுக்காடும், மாநில அரசிற்கு 14.77 விழுக்காடும் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், “27 விழுக்காடு வரி என்பது மிகவும் அதிகம். ஜி.எஸ்.டி. வரி விகிதம் அதை விட கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்“ என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
வரி விகிதம் குறைவாக இருந்தால் அது மாநில அரசுகளின் பொருளாதார தன்னாட்சியைக் கேள்வி குறியாக்கும். வரி அதிகமாக வசூலித்தால் வரி செலுத்துபவர்களின் தளம் விரிவடையாமல் நின்றுவிடும். அதிகாரம் என்பது பொருளாதாரம் எங்கு குவிந்து கிடக்கிறதோ அங்குதான் நிலைபெற்று நிற்கிறது என்பது மார்க்சிய பாலபாடம்.
ஜி.எஸ்.டி. வரி அமல்ப்படுத்தப்பட்ட பின்னர், மத்திய அரசு நினைத்தால் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியும். அந்த மாற்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பொதுப் பட்டியலில் இருந்தாலும் அல்லது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் நினைத்த மாற்றங்களை உடனே செய்ய முடியும்.
122-வது திருத்தத்தின் படி, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கான முடிவுகளை எடுக்கவும், அரசுகளுக்கிடையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் எனும் அமைப்பை ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குடியரசு தலைவர் ஏற்படுத்துவார். இந்த அமைப்பில் மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், மத்திய இணை நிதி அமைச்சர், மாநில நிதி அமைச்சர்கள் அல்லது ஆலோசகர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
மாநிலங்கள் தங்கள் நலன்களை காக்க ஜி.எஸ்.டி. சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நினைத்தால், நான்கில் மூன்று (3/4) பங்கு வாக்கு விகிதங்களைப் பெற்று ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிறைவேற்றினால் அது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படும் என்று கூறுகிறது 122-வது சட்டத் திருத்தம்.
மிகப்பெரிய ஏமாற்று வேலை:
மத்திய அரசு பிரதிநிதிகளோடு சேர்ந்து இந்தியாவில் உள்ள மொத்தம் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கின்றன. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானத்திற்கு அளிக்கும் வாக்கு முறையில் மத்திய அரசிற்கு வாக்கு மதிப்பு மூன்றில் ஒரு பங்கு (1/3 - 33.33%), மாநில அரசுகள் அத்தனை பிரதிநிதிகளும் சேர்த்து வாக்கு ம்திப்பு மூன்றில் இரண்டு பங்கு (2/3 - 66.67%). ஒரு தீர்மானம் வெற்றி பெற மொத்தம் நான்கில் மூன்று பங்கு (3/4 - 75%) வாக்குகள் பெற வேண்டும்.
மாநில நலன்களுக்காக மாநில அரசுகள் இணைந்து ஒரு தீர்மானம் கொண்டுவர முனைந்து, இதனை மத்திய அரசு ஆதரிக்க வில்லையென்றால், மத்திய அரசின் வாக்கு மதிப்பு சுழியம்(0%) ஆகிவிடும், பின்னர் எப்படி தீர்மானம் வெற்றி பெற 75% வாக்குகள் மாநில அரசுகளால் பெற முடியும்? அனைத்து மாநிலங்களும் ஒரு தீர்மானத்தை ஆதரித்தாலும் 66.67% வாக்குகளே எடுக்க முடியும் எனும் போது (அனைத்து மாநிலங்களும் ஒரு தீர்மானத்தை ஆதரிப்பது என்பதே கடினம்) எப்படி 75% வாக்குகள் பெற்று மாநில அரசுகள் கொண்டுவரும் தீர்மானம் வெற்றி பெறும்?
ஆனால் மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற அதன் 33.33% வாக்கு போக, மாநில பிரதிநிதிகளின் 41.67% வாக்குகள் (அதாவது மாநிலங்களில் பாதிக்கும் சற்று கூடுதலான அல்லது பா.ச.க. ஆளும் மாநிலங்களின் வாக்குகளைப்) பெற்று மொத்தத்தில் 75% வாக்குகளுடன் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
ஆக, இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற மத்திய அரசு பரிந்துரைக்கும் வாக்குமுறை ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை. மத்திய அரசின் இசைவுக்கு அப்படியே ஆடும் மாநில அரசுகள் இது குறித்து மவுனம் சாதிப்பதும், சில மாநில அரசுகள் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் சமரசமில்லாமல் போராடி நிறுத்த முற்படாததும் அந்தந்த மாநில மக்களின் உரிமைகளை அடகு வைக்கும் வேலையே ஆகும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஒருமுகப்படுத்தி, இந்தியச் சந்தையை ஒரே சந்தையாக முதலாளிகளுக்கு விற்பதும், வரி வருவாயை மத்திய அரசிடம் குவித்து மாநிலங்களின் பொருளியல் அடித்தளத்தை பலியிடுவதுமே ஜி.எஸ்.டி. சட்டத்திருத்தத்தின் நோக்கம்.