ஒன்றரை ஆண்டுக்குமுன் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூல் குறித்து எழுந்த சிக்கல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு 5.7.2016 அன்று தீர்ப்புக் கூறியது. முற்போக்குச் சிந்தனை யாளர்களும் இயக்கங்களும் மகிழ்ச்சிப் பொங்க இத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்துத்துவ வாதிகளும் வலதுசாரியினரும் இதைப் “புண்பட்ட மக்களின் உணர்வு களைக் கருத்தில் கொள்ளாத - நியாயமற்ற தீர்ப்பு” என்று கூறுகின்றனர். இந்துத்துவத்தின் “அறிவொளி முக”மாகக் கருதப்படும் எஸ்.குருமூர்த்தி இத் தீர்ப்பை விமர்சனம் செய்து, எழுதிய கட்டுரை “பாரதப் பண்பாட்டை”த் தூக்கிப் பிடிக்கும் ‘தினமணி’யில் 8.7.2016, 9.7.2016 ஆகிய நாள்களில் இரண்டு பகுதியாக வெளி வந்தது.

மாதொருபாகன் நூலை எழுதிய பெருமாள் முருகன், அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். சாகித்திய அகாதமி விருது பெற்றவர். திருச்செங் கோட்டைச் சொந்த ஊராகக் கொண்ட வர். மாதொருபாகன் நூல் 2010ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

மாதொருபாகன் ஒரு நாவல். அதன் கதை 1940 களில் நிகழ்ந்ததாகத் தக்க தரவு களுடன் புனையப் பட்டுள்ளது. காளியும் பொன்னாவும் கணவன்-மனைவி. இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் மகப்பேறு வாய்க்க வில்லை. அக்காலத்தில் நிலவிய சமூகக் கண்ணோட்டத் தின்படி காளி ஆண்மையற்றவன் என்றும் பொன்னா மலடி என்றும் பலவகையிலும் பழிப்புக்கு ஆளாகின்ற னர். காளியும் பொன்னாவும் மகப்பேறு வேண்டிப் பல கோவில்களுக்குச் செல்கின்றனர். பலவகையான விரதங்கள் இருக்கின்றனர். உடலை வருத்துகின்ற சடங்குகளைச் செய்கின்றனர். ஆயினும் மகப்பேறு வாய்க்கவில்லை.

திருச்செங்கோட்டில் மலைமீது அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் வளாகத்தில் மிகவும் சரி வான பாறை மீது இருக்கும் “வரட்டிக்கல்” என்று கூறப்படும் உருண்டையான பெரிய குண்டுக்கல்லைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை நீண்டகாலமாகக் கொங்கு நாட்டுப் பகுதியில் நிலவி வந்தது. காளியும் பொன்னாவும் வரட்டிக்கல்லைச் சுற்றி வந்து அர்த்தநாரீசுவரரிடம் வேண்டுதல் செய்தும் குழந்தைப் பிறக்கவில்லை. பெரியார் ஈ.வெ. இராமசாமி யின் பெற்றோரும் பிள்ளை வரம் வேண்டி இந்த வரட்டிக்கல்லை வலம் வந்தனர் என்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்.

மகப்பேறு இன்மை காரணமாக உறவினர்களால், மற்றவர்களால் பல நேர்வுகளில் பழிப்புக்குள்ளான காளியும் பொன்னாவும் பெரும் மனஉளைச் சலில் உழன்றனர். அந்நிலையில், காளியின் அம்மாவும் பொன்னா வின் தாயும் சேர்ந்து, திருச் செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோயில் திருவிழாவின் 14ஆம் நாள் வைகாசி விசாகத் திரு நாளில் தேரோட்டம் முடிந்த பின் இரவில் நடக்கும் காமக் கூத்துக்கு பொன்னாவை அனுப்புமாறு காளியிடம் கூறுகின்றனர். அப் போது பொன்னா கருத்தரிப்பாள் என்று சொல்கின்றனர். காளி அதை மறுக்கும் போது பொன்னாவின் சகோதரனும் காமக் கூத்துக்கு அனுப்புமாறு வலியுறுத்துகிறான்.

காமக்கூத்து நடைபெறும் இரவில் கணவன் மூலம் மகப்பேறு வாய்க்காத பெண்கள் வேறு வேறு ஆடவருடன் உறவு கொண்டு கருத்தரிப்பது என்கிற வழக்கம் இருந்தது. குடும்பத்தாரின் ஒப்பு தலுடன் இது நடைபெற்றது. இவ்வாறு பிறக்கும் குழந்தையைச் சாமி கொடுத்த குழந்தை என்று கூறுவார் கள். அக்குழந்தைகளுக்குக் ‘குழந்தை சாமி’ என்றும் ‘தகப்பன் சாமி’ என்றும் பெயரிடுவது வழக்கம்.

மாதொருபாகன் கதையில் குடும்பத்தாரின் வற்புறுத் தலின் பேரில் பொன்னா காமக்கூத்துக்குச் சென்றாள். கருத்தரித்தாள். குழந்தை பிறந்தது. நாட்டுப்புற வழக் காற்றின் அடிப்படையில் அங்கு நடப்பிலிருந்த இக்கதை எழுதப்பட்டதாகப் பெருமாள் முருகன், நூலின் முன்னு ரையில் குறிப் பிட்டுள்ளார்.

மாதொருபாகன் நூலின் இரண்டாம் பதிப்பு 2011ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 2012ஆம் ஆண்டும் வெளிவந்தன. மாதொருபாகன் நூல் அனிருதன் வாசுதேவனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் “ONE PART WOMAN” என்ற தலைப்பில் உலக அளவில் நூல்களைப் பதிப்பிக்கும் “பெங்குயின்” நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 2010 முதல் நான்காண்டுகளில் இந்நூல் தமிழில் 5000 படிகள் விற்றுத் தீர்ந்தன. இந்த நான்கு ஆண்டுகளில் மாதொருபாகன் கதையைப் படித்த எவரும் இக்கதையால் தன் மனம் புண்பட்டதாகக் கூறவில்லை.

ஆனால், திடீரென்று 2014 திசம்பரில், திருச்செங்கோட்டில் ஒரு பெருங்கூட்டம் மாதொருபாகன் கதை, கொங்கு மண்டலத்தின் வேளாளக் கவுண்டர் சாதிப் பெண்களை யும், சமூகத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறி அந் நூலைத் தடைசெய்ய வேண்டும்; பெருமாள் முரு கனைப் பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்பரிவாரங்களும் - சாதி ஆதிக்கவாதிகளும் தன்னலநோக்குடன் திட்டமிட்டுத் திடீரென மாதொருபாகன் நூல் எங்கள் உள்ளங்களைப் புண்படுத்துகிறது-எங்களை இழிவுபடுத்துகிறது என்று கூறித் தங்கள் வீட்டுப் பெண்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்திப் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர்.

பெருமாள் முருகனைத் தொலைப்பேசி வாயிலாகத் தகாத சொற்களால் பழித்தனர்; கொலை மிரட்டல்கள் விடுத்தனர். வீட்டுக்குள்ளேயே அவர் முடங்கிக் கிடக்கும் வகையில் திருச்செங்கோட்டு நகரில் கொந்தளிப்பான சூழ்நிலையை உண்டாக்கினர். திருச்செங்கோட்டு நகரில் கடையடைப்பு நடத்தி ஒட்டுமொத்த மக்களும் பெருமாள் முருகனுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினர்.

பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு எதிராக மத-சாதி ஆதிக்கச் சிறு கும்பல் நடத்திய அழிம்புகளைச் செயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடுக்க முயலவில்லை. பெரியாரின் வழிவந்ததாகச் சொல்லிக் கொள்ளும்-தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காந்தியாரின் மூன்று குரங்கு பொம்மைகள் போல் இருந்தன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பெருகிவரும் சாதி ஆணவக் கொலைகள்-இளவரசன், கோகுல்ராஜ் படுகொலைகள் குறித்து இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கருத்துக் கூறாமல் அமைதி காக்கின்றன. காரணம், கவுரவக் கொலைகளில் கொல்லப்படுவோர் தாழ்த்தப்பட்டவர் களாக இருப்பதால், ஆணவக் கொலை செய்தவரின் அக்குறிப் பிட்ட சாதியின் வாக்குகள் தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சமே ஆகும்.

எழுத்தாளர்களில் ஒரு பிரிவினரே பெருமாள் முருகன் பக்கம் நின்றனர். கர்நாடகத்தில் யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சம்ஸ்காரா’ என்ற நூலுக்கு எதிர்ப்பு எழுந்த போது, கர்நாடகத்தின் அனைத்து எழுத்தாளர் களும் ஒன்றுதிரண்டு அனந்தமூர்த்திக்கு ஆதரவாக நின்று அந்த எதிர்ப்பை முறியடித்தனர். தமிழ்நாட்டில் அத்தகைய நிலை ஏற்படாதது வெட்கக்கேடு! பெருமாள் முருகனுக்கு ஆதரவாக மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரிய இயக்கங்கள் குரல் கொடுத்தன.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு என்ற பெயரில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் 10-1-2015 அன்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட் டக்காரர்களின் சார்பில் எட்டுப் பேருக்கும், பெருமாள் முருகன் மற்றும் இந்நூலைப் பதிப்பித்த காலச்சுவடு கண்ணனுக்கும் அழைப்பு விடுத்தது. அந்த எட்டுப் பேரில் இருவர் இந்து முன்னணித் தலைவர்கள். மற்ற ஆறு பேர் சாதி அமைப்புகளின் தலைவர்கள், கோயில் நிருவாகக் குழு உறுப்பினர்கள். இந்த எட்டுப்பேரில் யுவராஜ் ஒருவர். யுவராஜ், கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலையில் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்.

மத-சாதி ஆதிக்கக் கும்பல் எந்தப் பெயரால் அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டாலும் ஆட்சியாளர்கள் தொடக்கத்திலேயே அவர்களைக் கட்டுப்படுத்தாமல், வளரவிட்டு வேடிக்கைப் பார்ப்பதும், மேலும் அவர்களை ஊக்குவிப்பதுமான கேடான போக்கு இந்தியா முழுவ துமே நிலவுகிறது. அந்த எட்டுப்பேரில் எவரும் அமைதிப் பேச்சில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவர் களுக்குப் பதிலாக வேறு ஆட்களை அனுப்பினர். அந்த அளவுக்குச் சாதி ஆணவம் அவர்களிடம் தலைக்கேறி இருக்கிறது. ஆனால் பெருமாள் முருகன் நேரில் தனியாகச் சென்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தை நடப்பதற்குமுன், 7.1.2015 அன்று பெருமாள் முருகன் வெளியிட்ட அறிக்கையில், “மாதொருபாகன் நூல் எவருடைய மனத்தையேனும் புண்படுத்தியிருக்குமானால், அதற் காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் ஆதிக்க சாதிவெறியர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத் தில், 10-1-2015 அன்று சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. மாதொருபாகன் நூலின் கதைக்களம் திருச் செங்கோடு என்று இருப்பதை அந்நூலின் அடுத்த பதிப்பில் நீக்கி விடுவதாகப் பெருமாள் முருகன் கூறினார். ஆனால் அந்த ஓநாய்களின் கூட்டம் அதை ஏற்க வில்லை. இறுதியாக, பெருமாள் முருகனிடம் நிபந்தனை யற்ற மன்னிப்பை அவர் கைப்பட எழுதி வாங்கியது மாவட்ட நிர்வாகம். அதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான பெருமாள் முருகன் அன்றிரவே தன் முகநூலில், “எழுத்தாளன் பெருமாள் முருகன் இறந்து விட்டான்” என்று அறிவித்தார்.

பெருமாள் முருகனின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லு நர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அறிக்கைகளைத் தனியாக வும், கூட்டாகவும் வெளியிட்டனர். பெருமாள் முருகன் தன் எழுதுகோலைத் தானே முறித்துக் கொண்ட முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கள் கோரியிருந்தனர்.

2013ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் மருத்துவ ரான நரேந்திரத போல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவு நோக்கு என்பதை அடிப்படையாகக் கொண்டு பரப்புரை செய்து வந்தார். அது ஓர் இயக்கமாக வளர்ந்தது. எனவே சங்பரிவார வெறியர்கள் தபோல்கரைப் படுகொலை செய்தனர். அதன்பின்னர் இதே காரணத்துக்காக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினரான கோவிந் பன் சாரேவைக் கொன்றனர். இதேபோல் கர்நாடகத்தில் கல்புர்கி என்கிற பகுத்தறிவாளரைக் கொன்றனர். தமிழ் நாட்டில் பெருமாள் முருகனை அதுபோல் கொலை செய்ய முடியாத காரணத்தால், அவருள் இருக்கும் எழுத் தாளனைப் பெருமாள் முருகனே கொல்லும் படியான கொடிய நிலைக்கு அவரை ஆளாக்கினர்.

பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பை எழுதிக் கொடுத்த பிறகும், கொங்குவேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம், வேல்முருகன், வெள்ளியங்கிரி ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்தனர். பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நூலைத் தடைசெய்ய வேண்டும்; பெருமாள் முருகன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். 10-1-2015 அன்று நடந்த சமாதானப் பேச்சின் முடிவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்தார். மாதொருபாகன் நூலைத் தடைசெய் யக் கூடாது என்று கோரி அந்நூலைப் பதிப்பித்த காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவராகவும் வழக்குரைஞராகவும் உள்ள வி.சுரேஷ், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் ஓராண்டுக்குமேல் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கின் மீதான தீர்ப் பை 5-7-2016 அன்று வழங்கினர். இந்தத் தீர்ப்பில், “நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை யில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு செல்லாது; யாரையும் கட்டப்படுத்தாது. பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் இரத்து செய்யப்படுகின்றன. மாதொருபாகன் நூலை விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

160 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் முதன்மை யான சில பகுதிகளைச் சுட்டிக்காட்டுவது பொருத்த மாகும். ஆனால் அதற்குமுன் ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.கே. கவுல் அல்லாமல் வேறொரு நீதிபதி இந்த வழக்கை விசாரித் திருந்தால் மாறுபட்ட தீர்ப்பு கிடைத்திருக்கவும் வாய்ப் புண்டு. ஏனெனில் 2013 சூலையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மருத்துவக் கல்விக் கான பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று தீர்ப் பளித்தது. 2016 ஏப்பிரல் மாதம் அய்வர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அதிகார அமர்வு, மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை இந்தக் கல்வி ஆண்டே நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆகவே நீதிபதிகளைப் பொறுத்தும் தீர்ப்புகள் மாறுபடுவதுடன், பெரும்பாலான நீதிபதிகள் அரசின் மன வோட்டத்திற்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குவது என்பதே இப்போது பெருவழக்காக இருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.கே. கவுல், 2008இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது-புகழ் பெற்ற ஓவியரான எம்.எஃப். உசேன் அலி இந்துத்துவ வெறியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டதால் அவர் இந்தியாவைவிட்டு வெளியேறி, கத்தார் நாட்டின் குடி யுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவர் தொடர்பாக நடந்த வழக்கில் “90 அகவையினரான உசேன் இந்தியாவில் அவருடைய வீட்டில் உரிமை யுடன் அமர்ந்து அவர் விரும்புகின்றவாறு திரைச்சீலை யில் வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்டட்டும்” என்று கூறி, அந்த முதிய ஓவியரின் உரிமையை நிலை நாட்டினார். அதேபோன்று 5.7.2016 அன்று அளித்த தீர்ப்பிலும் நீதிபதி கவுல், “எழுத்தாளர் பெருமாள் முருகன் புத்துயிர்ப்புப் பெற்று மீண்டும் எழுதவேண் டும்” என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட விதி 19(1)( a) தனிமனிதக் கருத்துச் சுதந்தரத்தை உறுதி செய்கிறது. அதேசமயம் விதி 19(2)இல் கருத்துச் சுதந்தரத்திற்குச் சில கட்டுப்பாடு களும் வரையறுக்கப்பட்டுள்ளன. நீதிபதி கவுல் தன் னுடைய தீர்ப்பில் மாதொருபாகன் நூல் அரசமைப்புச் சட்ட விதி 19(2)இன்கீழ் வைத்து ஆராயப்பட வேண்டி யதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இத்தீர்ப்பில் நீதிபதிகள், “மாதொருபாகன் நாவல் சிறந்த இலக்கியநயத்துடன் எழுதப்பட்டுள்ளது. சமூக வரலாற்றில் மனிதர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் பூர்வமான சூழ்நிலைகள் இக்கதையில் கலைநயத் துடன் பின்னப்பட்டுள்ளன. மகப்பேறு வாய்க்கப் பெறாத கணவன்-மனைவிக்கு - முன்னொரு காலத்தில் இருந்த தாகக் கருதப்படும் ஒரு பழக்கமும் வழக்கமும் - அது விரும்பத்தகாததாக இருந்த போதிலும் - இக்கதையின் கணவன்-மனைவியான காளி-பொன்னா ஆகியோரின் முன் வைக்கப்படுகிறது. மகப்பேறு இல்லாத கணவன்-மனைவியை இத்தகைய தீர்வை நோக்கித் தள்ளப்படு கின்ற அளவுக்கு அவர்கள் பழிப்புகளுக்கும் புறக்கணிப்பு களுக்கும் ஆளாகின்றனர்” என்று கூறியுள்ளனர்.

அவர்களுக்குள் அன்பாக இருந்த கணவன்-மனைவியை உறவினர்களும், மற்றவர்களும் கூறிய பழிச்சொற்களால் காளி-பொன்னாவைக் குத்திக் குருதி சிந்த வைத்த வன்முறையே, மகப்பேற்றிற்கான மாற்று வழியை நாடச் செய்தது. காளி மறுத்த போதிலும் இவ்விணையரின் அம்மாக்களும் பொன்னாவின் உடன்பிறந்தவனும் வலியுறுத்தி தேர்த் திருவிழாவின் 14ஆம் நாள் வைகாசி விசாக இரவில் நடக்கும் காமக் கூத்துக்கு அனுப்புகின்றனர் என்பது கதையின் ஒரு முக்கியமான கூறாக இருந்தபோதிலும், கதையின் முதன்மையான நோக்கம் குழந்தை இல்லாத ஒரு கணவன்-மனைவி சமூகத்தில் சந்திக்கும் அவமானங் கள், துன்பங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே இருக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள், “இந்த நாவலைப் படிக்கத் தொடங்கிய போது இடையில் புத்தகத்தை மூடிவைக்க முடியாத  அளவில் தொடர்ந்து படிக்கத் தூண்டியது. குழந்தை இல்லாத ஒரு கணவன்-மனைவியின் துயரம் படிப்பவரின் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. தமிழில் இந்த நாவலைப் படிக்கும் வாய்ப்பிருந்திருந் தால் இன்னும் சிறந்த இலக்கிய உணர்வுடன் படித் திருக்கலாமே என்று நாங்கள் நினைத்தோம். ஆயினும் ஆங்கில மொழியாக்கம் மூலத்தை அப்படியே பிரதி பலிப்பதாகக் கருதுகிறோம்” என்று தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.

இத்தீர்ப்பின் மேலும் சில பகுதிகள் :

“நாங்கள் இந்த நாவலில் உள்ள பல பகுதிகளை இத்தீர்ப்பில் அப்படியே கொடுத்துள்ளோம். அதனால் இந்தத் தீர்ப்பைப் படிப்பவர்களும் நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த நாவலின் சிறப்பை உணருவார்கள். ஆயினும் நாவலை முழுமையாகப் படிக்கும் போது தான் அதன் முழு இலக்கிய உயர்வை உணர முடியும். இந்த நாவல் உங்கள் உள்ளத்தை உலுக்கும் - ஆனால் இதன் எதிரிகள் படம்பிடித்துக் காட்டும் தன்மையில் அல்ல. குழந்தை இல்லாத கணவன்-மனைவியின் துன்பங்கள், அவர்களின் சொற்கள் மூலமாக வெளிப் படுத்தியிருப்பதைப் படிக்கும் எவருடைய மனமும் துன்பத்தில் உறைந்து போகும். இதுவே இந்த நாவல் எவர் மீதும் ஏற்படுத்தும் தாக்கமாகும்.”

“நீங்கள் ஒரு நூலைப் படிக்க விரும்பவில்லை யானால், அதற்கு எளிமையான ஒரே வழி அந்தப் புத்தகத்தை மூடி ஒதுக்கி வைத்துவிடுங்கள். அந்த நூலைத் தடை செய்ய வேண்டும் என்பது தீர்வல்ல. எல்லாவற்றிலும் ஆபாசத்தைப் பார்க்கும் கண்ணோட் டம் உடையவர்கள் இதைப்பற்றித் தீர்மானிக்க அனு மதிக்கக் கூடாது. சில பேர் இந்தக் கதையால் மனக் கொதிப்படைந்திருக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் பகை உணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடமுடியாது. பழிவாங்கும் நோக்கத் துடன் மனக் கொதிப்புடன் உள்ள பிரிவினரைக் கையாள இயலவில்லை என்று அரசு கூறுவதை ஏற்க இயலாது.”

“வைகாசி விசாக நாளில் தேர்த் திருவிழாவுக்கு வருகிற பெண்கள் எல்லோருமே விபச்சாரிகள் என்று பெருமாள் முருகன் படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்று இந்நூலை எதிர்ப்பவர்கள் கூறுவதை, இந்த நூலைப் படிக்கும் எவரும் ஏற்கமாட்டார். அவர்களின் கருத்து, இந்த நூலைச் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ளாத தால் உண்டானதாகும்.”

“மத-சாதிய ஆதிக்கச் சக்திகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, புதினங்களைப் படைப் போரையும், எழுத்தாளர்களையும் அடிபணியச் செய்ய முயல்வது என்கிற போக்கு அண்மைக்காலமாக வளர்ந்து வருவது மிகவும் கவலைக்குரியதாகும்.”

இந்துத்துவத்தின் ‘அறிவாளி முகமாக’த் திகழும் எஸ். குருமூர்த்தி, தினமணிக்கு எழுதிய கட்டுரையில், “இந்த நாவலின் கருத்துகளால் மனம் புண்பட்ட கொங்கு வேளாள சமூகத்தைப் பொறுத்தவரையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது; இத்தீர்ப்பு அச்சமூகத்தின் உணர்வு களைக் கருத்தில் கொள்ளாமல் ‘கருத்துச் சுதந்தரம்’ என்கிற கோணத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் விமர்சனத்துக்கு இடமளிக்கிறது” என்று எழுதியிருக்கிறார். இந்துத்துவம் தவிர்த்த வேறு எந்தவொரு மாற்றுக்கருத்தையும் எதிர்த்து ஒடுக்கும் பாசிச மனப்போக்கு கொண்ட குருமூர்த்தி போன்றவர் களிடமிருந்து, வேறு எந்த எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?

ஆண்-பெண் பாலியல் உறவு, குடும்பம், கணவன்-மனைவி உறவு முதலானவை மனித சமூகத்தின் நெடிய வரலாற்றில் பல்வேறு மாற்றங்களை அடைந்து வந்திருக்கின்றன. ஒருதார மணம் என்பது நிலை பெற்ற பிறகு, மக்கட்பேறு - உயர்வான ஒரு தகுதி என்றான பிறகும்கூட, சமூகத்தில் கணவன்-மனைவி உறவுக்கு அப்பால் மாற்றுக் கருத்தரிப்பு நடைமுறைகள் இருந்தன. அத்தகைய மாற்றுக் கருத்தரிப்பு முறை நிலவியதாகக் கூறும் நாட்டுப்புற வழக்காற்றின் அடிப்படையில்தான் மாதொருபாகன் கதையில் பொன்னா கருத்தரிப்பதாகப் பெருமாள் முருகன் காட்டியுள்ளார்.

இப்போது மகப்பேற்றினை அடைவதற்கான மருத்துவ அறிவியல் வியக்கத்தக்க அளவில் வளர்ந் துள்ளது. பெரியார் பல ஆண்டுகளுக்கு பரப்புரை செய்த முன் ‘சோதனைக் குழாய்க் குழந்தை’ ((TestTube Baby)) முறை இப்போது நடப்புக்கு வந்துவிட்டது. இன்று ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் கணவன் அல்லாத ஆணின் விந்தணுவைக் கொண்டோ, மனைவி அல்லாத பெண்ணின் சினை முட்டையைக் கொண்டோ, சிலபோது இரண்டும் அயலவருடையதாகவோ கருத் தரிக்கச் செய்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகள் இல்லாத ஒரு காலத்தில் நிலவிய மாற்றுக் கருத்தரிப்பு முறையைக் கதையில் காட்டியதற்காகப் பெருமாள் முருகனை எதிர்ப்பது அப்பட்டமான கருத்துப் பாசிசமேயாகும்.

முன்பு ஊர்களில் பசுக்களைச் சினைப்படுத்த பொலி காளைகளை வளர்த்தது போல், கணவனால் குழந்தை யைப் பெறமுடியாத பெண்களுக்குக் குழந்தையை உண்டாக்குவதற்காகப் பொலிகாளை போல் சில இளை ஞர்கள் சமூக அங்கீகாரத்துடன் இருந்தனர். கணவன் வெளியே சென்ற பின் இந்த இளைஞன் தன் செருப்பு களை வீட்டின் வாயிலில் விட்டுவிட்டு உள்ளே செல்வான். கணவன் இந்தக் காலணிகளைக் கண்டதும் திரும்பிச் செல்வான் என்பதைப் பெரியார் பல தடவைகள் எழுதி யும் பேசியும் இருக்கிறார். முன்பு சமூகத்தில் இருந்த நடப்பையும் இப்போது ஏற்பட்டிருக்கிற மாற்றத்தையும் கூறுவதே பெரியாரின் நோக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முன் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் இத்தகைய மாற்றுக் கருத்தரிப்பைப் மையமாகக் கொண்டு “பூட்டாத பூட்டு” என்ற திரைப் படத்தை எடுத்தார்.  பெருமாள் முருகனின் நோக்கமும் அதுவே ஆகும்.

மகாபாரதத்தில், திரௌபதிக்கு அய்ந்து கணவர்கள் என்பது ஒரு காலத்தில் இருந்த நடைமுறையாகும். கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலை யில், கணவன் இறக்க நேரிட்டால், அப்பெண், கணவ னின் உடன்பிறந்தவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்து மத சாத்திரங்கள் கூறுகின்றன. பெருமாள் முருகன் கதையை ஆபாசம் என்று கூறினால், இந்துமதப் புராணங்களில் புழுத்து நெளியும் ஆபாசக் கதைகளுக்கு குருமூர்த்தி போன்ற வர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

எனவே இந்துத்துவ-சாதிய வெறிக் கும்பலை எதிர்த்து வீழ்த்துவோம்!

Pin It