நீலச் சட்டை அணிந்து கொண்டு சாதி ஒழிப்பு நோக்கத்தை ஓங்கி ஒலித்தபடி தமிழக வரலாற்றில் முதன் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பேரணி நடத்துகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பியக்கங்களாக இணைந்துள்ளன. அத்தனை இயக்கங்களையும் சாதி ஒழிப்பு நோக்கி அணிதிரட்டுகின்ற பெருமுயற்சியே பேரணியும் மாநாடும்.
பேரணியின் மாநாட்டின் இலக்கும் சாதி ஒழிப்பே.
சாதி ஒழிப்பை எப்படி முன்னெடுத்துச் செயல்படுத்துவது என்பதில் கடந்த கால முயற்சிகளும் படிப்பினைகளும் மிக அதிகமானவை. சாதியால் அடக்கப்பட்ட மக்களின் செயற்பாடுகள் மட்டுமல்லாது, பொதுவுடைமைக் கட்சிகளும், திராவிடர் கழகமும், தமிழ்த்தேச இயக்கங்களும் பல வகையில் போராட்டங்களை நடத்தி யிருக்கின்றன. மார்க்சிய இலெனினிய இயக்கங்கள் சாதிவெறிக்கு எதிராகத் தாக்குதல்களையும், சாதி ஒழிப்புக்கென பல்வகைக் கருத்தரங்குகளையும் நடத்தி யிருக்கின்றன. இவையெல்லாம் முழுமையாகக் கணக்கில் எடுக்கப்பட்டு அவற்றின் தொடர்ச்சியாகவே மாநாடு அடி எடுத்து வைக்கிறது.
சாதி ஒழிப்புக்கான முயற்சிகளில் கடந்த காலப் படிப்பினைகளோடு சாதியால் புறந்தள்ளப்பட்ட, அடக்கப்பட்ட மக்களை அதிகாரப் படுத்துவதற்கான திசைவழி முயற்சியாகவே மாநாட்டின் நோக்கங்கள் முன்னோக்கி நகர்ந்திருக்கின்றன.
மக்களை நசுக்கிக் கொண்டிருக்கிற முதலாளியத்தையும் அதனோடு பின்னிப்பிணைந்து அதிகார வெறியோடு மக்களைக் கூறு பிரித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிற - பார்ப்பனிய சாதிய வெறி அதிகாரங்களையும் அடியோடு வெட்டிச் சாய்க்கிற முயற்சிகளிலேயே சாதி ஒழிப்பின் இலக்கு முயற்சிகள் இணைந்திருக்க முடியும்..
இன்றைய அரசு பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கான அரசாகவும் அவற்றின் சுரண்டல்களுக்கும், சூறையாடல்களுக்குமான அரசாகவே இருக்கிறது.
இந்திய அரசின் அதிகார வடிவங்களாகவே பார்ப்பனியமும், பன்னாட்டு முதலாளியமும் இருந்து வருகின்றன என்பதை நமக்கு முன்னோடிகளாகச் செயல்பட்ட அறிஞர்கள், புரட்சி நோக்கச் செயற் பாட்டாளர்கள் அனைவரும் அடையாளம் காட்டியிருக்கின்றனர்.
பன்னாட்டு முதலாளிகளுக்கான இந்திய அரசைத் தாங்கிப் பிடித்து நிலைப்படுத்துகிற தூண்களாகவே பார்ப்பனியமும் சாதியமும் செயலாற்றி வருகின்றன.
எனவே, இந்திய அரசதிகாரம் என்றாலே அதற்குள் பார்ப்பனியமும் சாதியமும் உள்ளடங்கியுள்ளதை நாம் உணர வேண்டும்
பல்வேறுபட்ட மொழித் தேசங்களின் மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள், பண்பாட்டு அரசியல் பொருளியல் உரிமைகளையெல்லாம் நசுக்கி, இல்லாமல் ஆக்குகின்ற பணிகளையே,. இந்திய அரசியல் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.
பார்ப்பனியச் சார்புடைய சமசுக்கிருதமும், சமசுக்கிருதச் சார்புடைய இந்திய அடையாளமும், அவற்றுக்கானவையாகக் கட்டமைக்கப்படும் வரலாற்று, பண்பாட்டு அரசியல் பொருளியலுமாக உருவாக்கிக் காட்டி நிலைப்படுத்தி உறுதிப்படுத்துகிற வேலைகளையே இந்திய அரசு செய்து வருகிறது.
அவ்வகையில் பார்ப்பனியம் படிப்படியாகத் தன் ஆளுமையை இந்திய அரசதிகார அளவில் விரிவுபடுத்தி, வலுப்படுத்தி வந்திருக்கிறது
இன்றைக்கு இருக்கின்ற அதிகார வடிவிலேயே தொடக்கத்தில் பார்ப்பனியம் இருந்திடவில்லை.
தொடக்கக் காலங்களில் பார்ப்பனியம் மொழி அளவிலும் பண்பாட்டு அளவிலும் மட்டுமே தன் அதிகாரத்தைச் செலுத்தியிருந்த நிலை இருந்தது.
பின்னர், படிப்படியாகப் பேரரசர்கள், சிற்றரசர்கள் உள்ளிட்ட நிலவுடைமை ஆட்சியாளர்களைத் தன்வயப்படுத்தி அரசியல் அளவிலும் பொருளியல் அளவிலும்,வரலாற்று அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும் தன் ஆளுமையை விரிவுபடுத்தி வலுப்படுத்திக் கொண்டது. ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் அவர்களை எதிர்ப்பதுபோல் நடவடிக்கைகளை ஒருபுறம் செய்து கொண்டே, மறுபுறும் அவர்களோடு இணங்கி உறவாடி அவர்களின் அதிகாரங்களோடு பங்கு பெற்றுக் கொண்ட அதிகாரம் கொண்டதாக வளர்ந்த பின்னர் வல்லரசியங்களோடு ஒட்டி உறவாடி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவைப் பார்ப்பனிய உள்ளீடு கொண்டது என்பதாக அடையாளப்படுத்தி நிலைப்படுத்திக் கொண்டது.
இந்தியாவில் உள்ள மொழிகள் மட்டுமன்று ஐரோப்பிய மொழிகள் பலவற்றுக்கும் மூலம் சமசுக்கிருதமே என்று வல்லரசியங்கள் அனைத்தையும் நம்ப வைத்து இணக்கப்படுத்திக் கொண்டது பார்ப்பனியம். பார்ப்பனியம் என்னென்ன வகையிலெல்லாம் தன் ஆளுமையைக் கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
1) வருண (வருணாச்சிரம) அடிப்படையில் குமுகத்தைக் கூறுபடுத்தி அதில் பிராமண வருணத்தை அனைத்துக்கும் மேலானதாகக் காட்டிக் கொள்வதும், பிற்படுத்தப்பட்டோரைச் சூத்திரர்கள் இழிவான வர்கள் எனக் காட்டுவதும், தாழ்த்தப்பட்டவர்களை வருணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் எனப் புறந்தள்ளுவதுமாக நிலைப்படுத்தி வைத்திருப்பது -
2) சமசுக்கிருதத்தையே அனைத்து மொழிகளுக்கும் மூலமொழி, கடவுளின் படைப்பு மொழி என்பதாகவும் அதிலிருந்தே பிறமொழிகள் தோன்றின என்பதாகவும் அனைவரையும் நம்ப வைத்திருப்பதோடு, சமசுக்கிருதத்தையும் அதனுடன்முழுத் தொடர்புடைய இந்தி மொழியை மட்டுமே உயர்த்தி நிறுத்தி இருப்பதோடு, பிற மொழிகள் யாவும் இழி மொழிகள் என அரசியல் அதிகார வழியிலும் புறந்தள்ளி அவற்றின் பயன்பாடுகளை மறுப்பதும், சமசுக்கிருத மொழி வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல ஆயிரம் கோடி உருவா தொகையை வாரி வழங்குவதும், அதேபோது, பிறமொழிகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பதுமான வகையில் செயல்பட்டு வரும் வகையிலேயே அனைத்து நிலைகளையும் அமைத்துக் காட்டி வருவது...
3) வைதிகப் பார்ப்பனிய மத உருவாக்கமே இந்துமதத்தின் உள்ளீடு என்பதாக அமைத்து, இந்துமத வாழ்க்கை, பண்பாடு, வரலாறு என்பனவற்றோடு உருவான அடையாளத்திலேயே அரசியலை அமைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே வாழ்வியல் முறை என அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டு அடக்கி ஆண்டு வருவது...
4) வேதங்கள், புராணங்கள், மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத் கீதை போன்ற சமசுக்கிருதக் குப்பைக் கூளங்களை வரலாறாகவும் புனிதத் தன்மை வாய்ந்தனவாகவும் காட்டி - அதிகாரத்தைக் கொண்டு கட்டாயப்படுத்திப் பரப்பி மக்களை மூளைச்சலவை செய்து முழுக்க அடிமைப்படுத்தி வைத்திருப்பது- கல்வியை முழுக்க முழுக்க மேற்சுட்டப்பட்ட பார்ப்பனியக் கருத்துப் பரப்புகிற தன்மைகளுக்குள் ஆக்கியிருப்பது...
5) அப்படியான வகையிலேயே கல்வி நிறுவனங்களை அமைப்பது அதற்குத் தகவானவர்களையே கல்வித் தொடர்புடைய அமைச்சர்களாக, நிறுவனப் பொறுப்பாளர்களாக ஆக்குவது...
6) மொழித் தேசங்களின் அனைத்து அடையாளங்களையும் சிதைத்து அழித்து அனைவரையும் `இந்தியர்’ எனக் கட்டாயப்படுத்துவது, மொழித் தேசங்களின் சமயங்கள் சிறுதெய்வக் கருத்தாடல்கள் என அனைத்தையும் இந்துமதம் எனப் பிணைத்துக் காட்டி இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும், தங்களை இந்து இல்லை எனக் கருதுவதும் பரப்புவதும் தேச விரோதப் பகைமைக் கருத்தாக அடையாளப்படுத்தி அடக்கி வருவதும்...
7) பிள்ளையார் ஊர்வலம், கிருட்டிண செயந்தி, துர்கா பூசை என நூற்றுக்கணக்கில் விழாக்கள் எனும் பெயரில் மக்களை முழுக்க முழுக்க ஆரியக் கருத்தாடல்களுக்கு ஆளாக்கி மூடநம்பிக்கைகளைப் பரப்புவது - அவற்றிற்கு மாறாய்ப் பரப்பல் செய்கிறவர்களையும், பிற மதத்தினரையும் பகைவர்களாக்கி மத மோதல்களை, கலவரங்களை உருவாக்கி, மாற்றுக் கருத்து அறிஞர்களை, வெகு மக்களைக் கொலை செய்வதும்...
8) பார்ப்பனியத்தை அதன் சூழ்ச்சிகளை அடையாளப்படுத்தி அவற்றுக்கு எதிராகப் பரப்பல் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், ஆட்சி அதிகாரத் தைக் கொண்டு அடக்குமுறைச் சட்டங்களால் அடக்குவது அவ்வகை யிலானவர்களான காந்தி தொடங்கி கல்புர்கி, கௌரி லங்கேசு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குமுகத் தலைவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, செய்து வருவது...
9) பார்ப்பன மாணவர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற சமய மாணவர்களை இந்திய அரசின் நடுவண் கல்விக்கூடங்களில் படிக்க விடாமல் செய்திட அவர்களே தற்கொலை செய்து கொண்டதுபோல் புனைந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கொலை செய்து வருவது-
10) ஒரு பக்கம் அறிவியலை வளர்ப்பதாகக் காட்டிக் கொண்டு மறுபுறம் நிலவுக்கு ஏவுகணை அனுப்புவது என்றாலும், அரசின் திட்டங்களைப் புதிதாகத் தொடங்கப்படுவது என்றாலும், அரை அம்மண ஆரியப் பார்ப்பனர்களைக் கொண்டு யாகங்கள் நடத்தி அனுப்புவதும், பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகள் அனைத்திலும் சடங்குகள் என்கிற பெயரில் ஆரியப் பார்ப்பனர்களைக் கொண்டு சமசுக்கிருத மந்திரங்கள் ஓதி நடத்துவதும் -
11) சங்கராச்சாரி, சாய்பாபா, ஜக்கிவாசுதேவ், ராம்தேவ் என்கிற பலர் பன்னாட்டுப் பங்குதாரர்களாகக் கொள்ளை அடித்துச் சூறையாடி வருபவர்களாகவும், ஆரியச் சார்பு இந்து மதப் பரப்புநர்களாகவும் இருக்கிற ஒரே காரணத்தினால் அவர்களை உயர்ந்தவர்களாகக் காட்டுவதும் அவர்களின் கால்களைத் தொட்டு இந்திய அரசின் தலைமைப் பொறுப்புள்ளவர்கள் கும்பிட்டு மக்களை அவ்வாறு செய்யத் தூண்டுவதும்...
12) இராம லீலா என்கிற பெயரில் இராவணன இந்திய ஆட்சியாளர்களே தீயிட்டு அழித்திடுவதும், அதன்வழி ஆரியப் பார்ப்பனியத்திமிரை அரங்கேற்றுவதும், கங்கையைத் தாங்களே முழுமையாய்ப் பாழாக்குவதும், பின்னர் தாங்களே தூய்மைப்படுத்துவதாகக் கூறுவதும்....
13) ஊரெல்லாம் தெருவெல்லாம் கோயில் கட்டுவது தொடங்கி இராமர் கோயில் கட்டுவதாகப் பல்லாயிரம் கோடிப் பணங்களைப் பாழாக்குவதுமான நடைமுறைகளும்....
- போன்று எண்ணற்ற பல நடைமுறைகள் பார்ப்பனியத்தை வளர்க்கிற அடிப்படையான நடைமுறைகள் ஆகும்.
அத்தகைய பார்ப்பனிய அரசியல் அதிகார உறுப்பினர்கள் யாவரும் பன்னாட்டு முதலாளிகளையும் அம் முதலாளிகளின் மூலதனக் குவியல்களையும் சுரண்டல்களையும், சூறையாடல்களையும் மறுப்பதோ எதிர்ப்பதோ இல்லை. முதலாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து அதிகார மற்றும் சுரண்டல்களில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அதிகார வகுப்பினர் மக்களைப் பொருளியல் அளவிலும் அடிமைப்படுத்தி அடக்கி வைத்திருக்கின்றனர்
இதே தன்மையில்தான் சாதிய வல்லதிகாரக் கொடுமைகளும் பல ஆயிரம் ஆண்டுகளாய் நீடித்துக் கொண்டுள்ளது.
பிறப்பு வழிச் சாதிக் கூறுபாடுகள் இருப்பது மட்டுமன்றி வாழ்க்கை வழியும் கூறு படுத்தப்பட்டிருக்கிறது
வாழ்விடங்கள் வழிப் புறந்தள்ளி வைத்திருப்பதும்,
தீண்டாமை எனும் பெயரில் புறக்கணிப்பதும். இழிவுபடுத்துவதும்,
சாதிகளுக்குள்ளாக மட்டுமே திருமணங்கள் செய்யக் கட்டாயப்படுத்துவதும்,
சாதி மாறித் திருமணம் செய்து கொள்வோரைச் சாதி ஆணவப் படுகொலைச் செய்வதும்,
சுடுகாட்டிலும் சாதிவெறிப் பாகுபாடு செய்வதும்,
பொது வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் இறப்பு ஊர்வலங்களைச் செல்ல விடாமல் தடுப்பதும்,
வாழ்விடங்களில் சுடுகாடுகளில் தீண்டாமைச் சுவர் எழுப்பிப் பிரித்து வைப்பதும்,
தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்களைச் சேரிகள் என்றும் காலனிகள் என்றும் புறந்தள்ளி அமைத்து அடையாளப்படுத்துவதும்,
அங்கு எவ்வகை அடிப்படைத் தேவைகளையும் செய்து தர மறுப்பதும், தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களைக் கோயில் பூசாரிகளாக ஆகவிடாமல் மறுப்பதும்,
அப்படி அவர்கள் பூசை செய்வதால் கோயில் தூய்மை கெட்டுவிடும் என இழிவுபடுத்துவதும்,
சமசுக்கிருதம் கலக்காத தமிழ் மொழியில் குடமுழுக்கு உள்ளிட்ட பூசைகளைச் செய்ய மறுப்பதும்,
தமிழில் பூசை செய்தால் கோயில் தீட்டுப்பட்டுவிடும் எனக் கூறித் தமிழையும் தமிழ் பேசும் மக்களையும் இழிவு படுத்துவதும் நடைபெற்று வருகின்றன...
வருண அமைப்பு முறையைப் பார்ப்பனியம் எப்படிக் கையாண்டு மக்களைப் பிளவுபடுத்தி ஆளுமை செய்ததோ, செய்து வருகிறதோ அப்படியேதான் சாதியும் வருண மாதிரியிலேயே குமுகத்தைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தி வருகிறது
எனவே தமிழ் நாட்டிலும் சரி இந்திய அரசுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள மொழித் தேசங்களிலும் சரி அங்குள்ள மக்களிடையே பொருளியல் அளவில் சமநிலையை உருவாக்குகிற தேவை போலவே குமுக அளவிலும் சமன்மையை உருவாக்குவதும் தேவையாகின்றது
இரண்டின் சமநிலையையும் எப்படி உருவாக்குவது என்பதில்தான் குமுக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட அமைப்புகளிடையே மாறுபட்ட கருத்துகளும் நடைமுறைகளும் உள்ளன.
பொதுவுடைமைக் கட்சியினர் பொருளியல் சமன்மை வந்து விட்டால் அனைத்தும் மாறிவிடும் என்று கூறி வகுப்பு (வர்க்க)ப் போராட்டமே அடிப்படைத் தேவை என்கிற நிலையிலிருந்து செயல்பட்டு வந்தனர், இப்போதும் அவ்வாறே செயல்படுகின்றனர்
சாதியைக் குமுகத்தின் மேற்கட்டுமானம் என்றும், குமுகத்தின் அடிக்கட்டுமானமாகிய, பொருளியல் கட்டுமான அமைப்பைச் சரி செய்கிறபோது மேற் கட்டுமானங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கருத்து கொண்டிருந்தனர், இன்றும் கருத்து கொண்டிருக்கின்றனர்
இன்னும் சொன்னால், அவர்களுள் பலர் தங்களின் சாதி அடையாளங்களிலிருந்தே கூட வெளியேறிடவில்லை
அவர்களுள் பலர் பார்ப்பனியத்தின் பல வடிவங்களில் உள்ள கொடுமைகளையும் எதிர்க்க மாட்டாமல் அமைந்து இருக்கின்றனர். அதாவது பார்ப்பனியம் காட்டிய வரலாற்றுப் பார்வையை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர். பார்ப்பனியச் சடங்குகளையோ சமசுக்கிருதப் பண்பாட்டுக் கூறுகளையோ அவர்கள் விட்டொழித்திடவில்லை..
அதே நிலையில்தான் தமிழ் உணர்வாளர்கள் பலரும் தமிழ் மீட்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ் உணர்வு பெருகி வரும்போது, தமிழன் என்கிற உணர்வு மேலோங்கும்போது சாதி அழிந்துவிடும் எனக் கருதுகின்றனர்.
அப்படியான அவர்களுக்குள்ளும் அவர்கள் தங்கள் வாழ்வியலில், நடைமுறைகளில் சாதியை எதிர்த்திடுவதோ, மறுத்திடுவதோ இல்லை, பார்ப்பனிய வழக்குகளையும் மறுத்திடுவதில்லை.
எனவே, இத்தகைய சூழல்களில் சாதி ஒழிப்பு முயற்சிகள் எவ்வாறு நிறைவேறும் என்பதை அறிய வேண்டியுள்ளது.
பார்ப்பனியமும் சாதியமும் ஒரு காசின் இரண்டு பக்கங்கள் போன்று ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவை.
ஒன்றின் இணைவில் மற்றதை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.
ஒன்றை ஒன்று மறுப்பது போல் ஒரு புறத்தோற்றத்தைக் காட்டிக் கொண்டு மற்றதோடு இணைபிரியா உறவு கொண்டிருப்பவை.
சாதியை மறுப்பது போன்று பார்ப்பனியம் புற அளவில் சொன்னாலும் சாதியை நிலைப்படுத்தி வைத்திருக்கிற அளவில் அனைத்து முயற்சிகளிலும் அது செயல்படக்கூடியது.
அதேபோல்தான் பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகச் சாதிய தன்மையுடைய சிலர் பேசினாலும், உள்ளடக்கத்தில் பார்ப்பனிய அதிகாரங்களை ஏற்றுக்கொண்டு இயங்குபவர்களாகவே இருக்கின்றனர்.
சாதி தன் அதிகாரத்திலிருந்து மெலிவுபடுகிற சூழல் ஏற்படும்போது, அது அரசு அதிகாரச் சார்பிலும் அரசை அதிகாரப் படுத்தியிருக்கும் பார்ப்பனியச் சார்பிலும் தன் மெலிவை வலிவுப்படுத்தி நிலைப்படுத்திக் கொள்கிறது.
அதேபோல்தான் பார்ப்பனியமும் தன் அதிகாரப்பிடிகளுக்கு நெருக்கடி ஏற்படும்போது சாதிய உணர்வைக் கிளறிவிட்டு ஆதிக்கச் சாதியத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு நிலைப்படுத்திக் கொள்கிறது.
இரண்டின் நிலைப்பாட்டிற்கும் அவற்றுக்குக் கிடைத்த மிகப்பெரும் அதிகாரக் கருவியாக அரசே இருக்கிறது.
இன்றைய அரசமைப்பு பார்ப்பனியத்தின் முழு ஆளுமை அதிகாரத்திற்கான அரசாக இருப்பது போலவே சாதியைக் காப்பாற்றுகிற, அதன் அதிகாரத்திற்குத் தகவான அரசாகவும் இருக்கிறது.
சாதி என்பது பெயர்களில் மட்டுமல்லாமல், வாழ்நிலையில் மட்டுமல்லாமல், வருணப் பாகுபாடு கொண்ட இந்து மத அமைப்பு முறைகளுக்குள்ளாக மட்டுமல்லாமல், அதிகார நலன்களுக்கான பொருளியல் உருவாக்க முறைகளைக் காப்பாற்றுகிற அரசதிகாரத்தோடும் இணைந்துள்ளது.
மொழி, வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து முறைகளிலும் உள்ள பார்ப்பனியம் சமன்மையற்ற வருணாச்சிரம அதிகாரத்தோடு இணைந்துள்ளது.
எனவே, சாதி ஒழிப்பு என்பது தீண்டாமை ஒழிப்பு என்கிற அளவோடு மட்டும் சிந்திக்கவும், செயல்படுவதுமான அளவீடு கொண்டது மட்டுமன்று.
காணாமை, தீண்டாமை என்கிற புறநிலைத் தாக்கங்களில் இன்றைய அளவில் சில நிலைகளில் தளர்வுகள் ஏற்பட்டிருந்தாலும் சாதி என்கிற குமுகப் பகுப்பு முறையை, அதன் அதிகாரக் கொடுமைகளை முற்றாக ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனிய அதிகாரக் கொடுமைகளை ஒழிக்கும் செயல் திட்டங்களோடு இணைந்தே செயல்படுவதால்தான் முடியும்.
பார்ப்பனியம், சாதியம் ஆகிய இரண்டையும் அவை இணைந்து அதிகாரப்பூர்வ வெறியோடு இயங்கிக் கொண்டிருக்கிற அரசதிகாரத்தை வீழ்த்திப் புதிய மக்களாட்சி அரசமைப்பு முறையைக் கொண்டு வருவதன் வழியாகத்தான் செய்ய முடியும்.
இன்றைக்கு இருக்கிற பார்ப்பனிய - சாதிய அரசதிகார அமைப்பு முறையை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான செயல்பாடுகளைக் கொண்டதன்று.
கருத்தளவில் மொழி, குமுக, பண்பாட்டு, வரலாற்று, அரசியல், பொருளியல் என அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரப் போக்குகளுக்கு எதிராக மிகப் பெரும் வீச்சான பரப்பல் முயற்சிகள் தேவை.
வெகு மக்களிடையே மேற்குறிப்பிட்ட எல்லாவகையிலும் விளக்கப்படுத்துகிற வகையில் அனைத்து வகை ஊடக வலுவிலும் பார்ப்பனிய - சாதிய அதிகார வெறித்தனங்களுக்கு எதிரான பரப்பல்களோடு இயங்கியாகவேண்டும்..
அவை ஒவ்வொன்றிலும் உள்ள பார்ப்பனிய - சாதிய அதிகார வெறிகளுக்கு எதிரான செயல்பாடுகளைப் படிப்படியாக வலுப்படுத்தி வீழ்த்துகிற முயற்சிகளை மேற் கொண்டாக வேண்டும்.
அனைத்து நிலைகளிலுமான அடிநிலை முயற்சிகளை வலுவாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அரசதிகார நடுவங்களாக இருக்கிற ஆளுகை (நிர்வாக)த் துறைகளுக்குள்ளும், நயன்மை( நீதி)த் துறைகளுக்குள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்றத் துறைகளுக்குள்ளும் உட்சென்று அவற்றைப் பீடித்துள்ள முதலாளிய பார்ப்பனிய - சாதிய அதிகாரங்களை வீழ்த்தி, சமன்மை நோக்கம் கொண்ட அதிகார வடிவங்களை நிறுவுகிற, அதற்காகப் போராடுகிற அணிகளை வலுப்படுத்தினால் மட்டுமே முடியும்..
இப்படியான, முறையான நீண்டகாலச் செயல்திட்டங்களோடான செயல்பாடுகளின் மூலமாகவே சாதியற்ற - பார்ப்பனிய அதிகார வெறிப் போக்கற்ற - முதலாளியக் கொடு நெறியற்ற ஒருபுதிய குமுக அரசமைப்பை - வாழ்க்கை முறையைக் கட்டியெழுப்ப முடியும்.
மொழி தேசங்களின் அதாவது தமிழ்நாட்டைச் சார்ந்த நாம் தமிழ்நாட்டளவில் அத்தகைய முயற்சிகளை வலுவாக முன்னெடுத்துச் செய்திடல் வேண்டும்.
அதேபோல் பிற தேசங்களில், அதாவது, கேரளத்தில், கருநாடகத்தில், ஆந்திரத்தில், வங்காளத்தில், மராட்டியத்தில் என்று அனைத்து நிலைகளிலும் அத்தகைய முயற்சிகளை செய்கிற அணிகளை ஊக்கப்படுத்திடவும், அவற்றோடு தோழமை உறவுகொண்டு அங்கெல்லாமும் செயல்பாடுகளை முடுக்கப்படுத்தி மாற்று அரசுகளை நிறுவுகிற முயற்சிகளுக்குத் துணை நிற்கவும் அவர்களிடமிருந்து துணை பெறவும் வேண்டும்..
அப்படியான விரிந்த முயற்சிகளாலேயே பார்ப்பனியத்தை - சாதியத்தை வீழ்த்த முடியும்..
அத்தகைய அணிதிரட்சிக்குக் கருப்புச்சட்டையின் அடையாளத்தோடு பெரியாரியக் கருத்தாளர்கள் மட்டுமல்லாமல்,
நீலச் சட்டையின் அடையாளங்களோடு உள்ள அம்பேத்கரிய உணர்வாளர்களும்,
செஞ்சட்டையோடு புரட்சி இலக்கு நோக்கியப் பொதுவுடைமைச் சிந்தனை செயல்பாட்டாளர்களும்
ஒருங்கிணைந்த பேரெழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது.
பார்ப்பனியத்திற்குப் பாடை கட்ட,
சாதியத்திற்குக் குழி தோண்ட,
முதலாளியத்தை முடித்துக் கட்ட காலம் அறிந்து இடத்தால் செய்யப் பெற வேண்டிய முயற்சிகளுக்கு நம் கைகளைக் கோத்துப் பெரும் வீச்சோடு அணி சேர்ந்து கிளம்புவோம் வாருங்கள்...
- பொழிலன்