athiyamanஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான் நேர்காணல்

ஆதித்தமிழர் பேரவை தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை ஆற்றியுள்ள செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவையாக நீங்கள் கருதுவது என்ன?

1994-ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அருந்ததிய மக்கள் மத்தியில் அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான் பேரவையின் செயல்பாடுகளில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

காந்தி, நேரு போன்ற தலைவர்கள்தான் அருந்ததிய மக்களிடம் அறிமுகமாகி இருந்தனர். ஆதித்தமிழர் பேரவை வந்தபிறகுதான் அம்பேத்கரும், பெரியாரும் பெரிய அளவில் அவர்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா ? அவ்வாறெனில் அதற்கான காரணங்களாக நீங்கள் முன்வைப்பவை என்னென்ன?

அதிமுக- - பாஜக கூட்டணி சமூக நீதிக்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை. அதிமுக - பாஜக கூட்டணி என்று சொல்வதைவிட பாஜக அதிமுகவை சில விஷயங்களை மையப்படுத்தித் தங்களது அடிமையாக மாற்றி வைத்துள்ளது என்று கூற வேண்டும்.

அதுவும் நட்பாகக் கூட அல்ல, மிரட்டல் மூலமாக. அதிமுகவை அழித்தொழிக்கும் வேலையையும் பாஜக தற்போது செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கும் அழிவு வேலைகள் பலவற்றைச் செய்யும் இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பேரவை கண்ணும் கருத்துமாக இருக்கிறது.  அதிமுகவினர் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்துள்ளனர். ஆனால் அதற்கு நேர் எதிராக இப்போது இயங்கிக் கொண்டுள்ளனர்.

தமிழக மக்களின் வேலைவாய்ப்பைக் குறிவைத்து அவற்றை அழிப்பதில் குறியாக இருக்கிறார்கள் இருவரும். இந்திய சராசரியை விட தமிழகத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி உள்ளது.

இது அவர்களுடைய கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே இவற்றை நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது போன்ற வேலைகளைச் செய்வதன் மூலம் அழித்தொழிக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

தமிழக மக்களுக்காகத் தொலைநோக்கோடு எந்தத் திட்டத்தைப் பாஜக கொண்டு வந்துள்ளது? அதிமுகவின் ஒரே திட்டம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அத்தனை உதவிகளிலும் பெருமளவு சுரண்டல் நடந்துள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவுமே கிடையாது இந்தக் கூட்டணியிடம். தமிழக மக்களின் எதிரிகள், -துரோகிகள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பாஜக மாநிலத் தலைமையை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியதை வெறும் வாக்கரசியலோடு மட்டுமே சுருக்கிப் பார்க்க வேண்டுமா?

இதில் வாக்கரசியல் மட்டும்தான் இருக்கிறது. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களின் வாக்கு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. குறிப்பாக அருந்ததிய மக்களின் வாக்குகள். இவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் தமிழக அரசை ஆளமுடியும். புள்ளிவிவரங்கள் அதைத்தான் சொல்கின்றன. இவர்களை இன்னும் கூடுதலாக அரவணைத்துச் சென்றிருந்தால் திமுகதான் இன்று ஆளும் கட்சி. அதை இழந்ததால்தான் அதிமுக இன்று வந்துவிட்டது. இந்த அரசியலைத் தெரிந்துகொண்டு அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தலைமைப்பதவிக்குக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறது பாஜக.

பாஜக மாநிலத் தலைவர் முருகன் அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். அதனால்தான் அவருக்குப் பாஜக அந்தப் பதவியை வழங்கி இருக்கிறது. அதை முதலில் மக்களிடம் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

அவர் ஏற்கனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர். அந்தப் பதவியில் இருந்து கொண்டே மக்களுக்கு இவர் என்ன செய்தார்? நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஏதாவது தீர்வு கண்டு இருக்கிறாரா என்பது நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆதித்தமிழர் பேரவை ஆதரிப்பதற்கான காரணம் என்ன?

திமுகவை ஆதித்தமிழர் பேரவை இப்போது மட்டுமல்ல, எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. திராவிட இயக்கம் என்று சொன்னாலே இன்றைய நிலையில் அதனுடைய பிரதிநிதி திமுக மட்டும்தான். அதை முறியடிப்பதற்காகத்தான் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதும், குடும்ப அரசியல், கழகங்கள் அல்லாத தமிழகம் என்று சொல்வதும். இது பார்ப்பன- ஆர்எஸ்எஸின் அஜெண்டா.

கலைஞர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைப் பட்டியலிட்டோம் என்றால் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் எந்த முதல்வரும் இதைச் செய்திருக்க முடியாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் அல்ல,  ஐரோப்பிய நாடுகளுடன்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் திமுக.

 கலைஞருடைய சாதனை என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது. சமூகத்தில் கீழே உள்ள ஒருவனை மேலே கொண்டு வருவது. அதில் ஒன்றுதான் அருந்ததியர் உள் ஒதுக்கீடு. அதுமட்டுமன்று கொங்கு வேளாளர் சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்தது, அவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்தது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடும் அவ்வாறே. இதைச் செய்தது கலைஞர்தான்.

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைத் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாக ஒருமுறை தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டார். இதைச் செய்தபோது அவர் மருத்துவமனையில் இருந்தார் என்பதும், சட்டப்பேரவையில் இதைக் கொண்டு வந்து நிறைவேற்றியது இன்றைய திமுக தலைவர் தளபதி அவர்கள்தான் என்பதும் நாம் நினைவுகூரத்தக்க செய்திகள்.

இதை மக்களிடம் கொண்டு சென்று அருந்ததிய மக்களை அதிமுக மனநிலையிலிருந்து திமுக மனநிலைக்கு மாற்றியது ஆதித்தமிழர் பேரவையின் குறிப்பிடத்தகுந்த சாதனை. இதனை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

திமுக வெற்றி பெறும் சூழலில் ஆதித்தமிழர் பேரவை சார்பாகத் திமுகவிற்கு வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. இந்த விழுக்காட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறையானது சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஒன்றிய அரசின் சட்டமும் கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழித்து விட்டன. அந்த மக்கள் இந்தத் தொழிலிலேயே இருக்கக் கூடாது என்று ஆதித் தமிழர் பேரவை விரும்புகிறது.

இந்தப் பணிகளை முழுவதும் இயந்திரமயமாக்க வேண்டும். அந்த மக்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். துப்புரவுப் பணியை ஒரு குறிப்பிட்ட சமூகம் செய்வதாக இருக்கக் கூடாது. இதை ஆராய்ந்து பரிசீலனை செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் இடைநிற்றல் (dropouts) என்பது அருந்ததிய மக்களிடையே அதிகமாக உள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி என்பது சட்டமாக உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஓர் ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தந்தை பெரியாரைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவராகக் கட்டமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்த உங்களது விமர்சனம் என்ன?

ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உடன் போகிறவர்கள் ஆகியோர்தான் தந்தை பெரியாரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நிறுத்துகிறார்கள். பெரியாரை எதிர்க்கும் போலித் தமிழ்த்தேசியவாதிகளும் இறுதியில் பார்ப்பனியத்திற்குத்தான் வந்து சேர்வார்கள்.

தந்தை பெரியார் யாரையும் பிரித்துப் பார்க்கவே இல்லை. அவர், ஒட்டுமொத்தமாகப் பார்ப்பனர்களால் நாம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம், சுரண்டப்பட்டு இருக்கிறோம் என்றுதான் பார்த்தார்.

உலகம் முழுவதும் நாத்திகம் பேசிய பல தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தந்தை பெரியார் மட்டும்தான் அதை மக்களின் முன்னேற்றத்துடன் இணைத்துப் பேசினார்.

தலித் மக்கள் இன்று படிக்கவும், கலைஞர் கொண்டு வந்த உள்ஒதுக்கீடு மூலமாக மருத்துவர், பொறியாளர்களாக ஆவதற்கும் தந்தை பெரியார் போட்ட விதைதானே காரணம்! இதை வேறு யாராவது செய்தார்களா?

அவர் 1929-இல் செங்கல்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானங்கள்தானே இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. சாதிப்பெயரை நீக்குவதிலிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை வரை அவர் போட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினாலே போதும், புதிதாக நாம் எதுவும் சிந்திக்க வேண்டியதில்லை. அந்த எல்லை வரைக்கும் சிந்தித்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் ஆயிரம் பிஎச்டி வாங்கலாம். உலகப் பல்கலைக்கழகங்கள் அத்தனையிலும் அவருக்கான ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவரை ஆழமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிக் கொண்டு போனால் மட்டும்தான் மனித குலம் முன்னேற முடியும். சில முட்டாள்கள்தான் அப்படிப் பேசுவார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

- நேர்காணல் : வெற்றிச் செல்வன்

Pin It