திமுக அமைச்சர்களின் சேவா பாரதி விழா பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ். பற்றி அதன் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், “அது ஒரு “தனி நபர்களின் அமைப்பு”. அதன் நடவடிக்கைகளை அரசிடம் தெரியப்படுத்தவோ நிதி விவரங்களை வெளியிடவோ, வரி செலுத்தவோ தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.
உலகின் அதிக நிதி ஆதாரம் பெற்றுள்ள “அரசியல் இயக்கம்” ஆர்.எஸ்.எஸ் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. ஆனால், அதன் நிதி வருவாய் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் கிடைப்பதில்லை. தனது நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் வலைப்பின்னல் மூலம் இயங்குவதால் அவற்றை ஆய்வு செய்வதும் சாத்தியமில்லை.
இந்த அமைப்புகள் இந்துத்துவ வெறியின் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிட அடிப்படையில் பிரிந்து செயல்படுகின்றன. இந்த பிரிவுகளை “கொள்கை” அடிப்படையிலான இந்துத்துவ அமைப்பு, “செயல்பாடு” அடிப்படையிலான இந்துத்துவ அமைப்பு என பிரித்து பார்க்கலாம்.
முதலாவது, RSSன் கொள்கைகளை நேரடியாக வெகுமக்களிடம் பிரச்சாரம் செய்யும் அமைப்புகள். சேவா பாரதி, அகில்பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்றவை இத்தகையபிரச்சார சேவை அமைப்புகள்.
இரண்டாவது, மத அடிப்படையிலான அமைப்புகளாக அடுத்த பிரிவுகள் உள்ளன. இவை, இந்து அல்லது ஜெயின் மத பிரச்சார அமைப்புகள். யோகா சத்சங் சமிதி, சாந்தி சேவாஸ்ரம் ஜெயின் ட்ரஸ்ட் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.
மூன்றாவது, மத அடையாளங்களற்ற இராணுவ நலச் சங்கம் போன்ற வகைப்படாத பிரிவுகளும் உண்டு. எந்த பிரிவிலும் சேர்த்து பார்க்க இயலாதவாறான அமைப்புகளும் இந்த வலைப்பின்னலில் உண்டு. உதாரணமாக, “மக்கன் லால் சாரிட்டபள் ட்ரஸ்ட்” போன்ற தனிநபர் பெயர்களுடன் இயங்குபவை. இவையனைத்தும் கொள்கை சார்ந்து இயங்குபவையே.
இதுமட்டுமல்லாமல், வேறு வகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் என்.ஜி.ஓக்களை அவற்றின் செயல்பாடு அடிப்படையில் அடையாளம் காணலாம். இவை பல்வேறு சேவைகள் செய்வதன் மூலம் தங்கள் கருத்தியலை பரப்பும் கிளை அமைப்புகளாகும். அவற்றில் ஐந்து வகைகள் உள்ளன.
ஆதிவாசி மக்களின் கல்வி கட்டமைப்புகளை “சரஸ்வதி வித்யா மந்திர், ஏகால்வித்தியாலயா” எனப்படும் தனிநபர் ஆசிரியர் பள்ளிகள் மூலம் இந்துத்துவமயமாக்குகின்றன. இவைகள் பெரும்பாலும் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்குகின்றன. அதே போல ஆன்மீக பயிற்சியளிக்கும் அமைப்புகள் உள்ளன. “மத்ரி மந்திர் நில நிதி” எனும் புதுச்சேரியின் ஆரோவில்லில் இயங்கும் அமைப்பாகும்.
மேலும், வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எனும் பெயரில் இயங்கும் “மகிளா ஸ்வலம்பன் கேந்திரா” போன்ற அமைப்புகள் இயங்குகின்றன. சேவை, நல அமைப்புகள் எனும் பெயரில் இயங்கும் “சுவாமி விவேகானந்தா மெடிக்கல் மிசன்” போன்றவை பேரிடர் மீட்பு என்பதற்காக இயங்கும் அமைப்புகளாகும். இவை ஒரிசா புயல், குஜராத் நிலநடுக்கம் ஆகியவற்றின் போது இயங்கியவை. இப்படியாக ஆர்.எஸ்.எஸ்ஸின் வலைப்பின்னல் மிகவும் விரிவானதாகவும் வலுவானதாகவும் உள்ளது!
இப்பிரிவுகளிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் தனக்கு கீழே பல நூற்றுக்கணக்கான இணை மற்றும் கிளை அமைப்புகளை கொண்டுள்ளன. இவை இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் இயங்குவதோடு சர்வதேச மட்டத்தில் அனைத்து மேலை நாடுகளிலும் இயங்கி வருகின்றன. ஆர்.எஸ்.எஸின் அரசியல், மதம், தொண்டு பிரிவுகளின் வடிவத்தை மேலோட்டமாக கீழுள்ள படத்தில் காணலாம்.
அமெரிக்க மற்றும் மேலை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற உயர்சாதி இந்துக்கள், பார்ப்பனர்கள் தங்கள் வருவாயின் பெருந்தொகையை தாங்கள் வாழும் நாட்டில் இந்துத்துவத்தை வளர்த்திடவும் நிதி திரட்டவும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். மேலும், நிதி திரட்டி இந்தியாவில் சனாதன இந்துத்துவத்தை வளர்த்திட பாடுபடுகின்றனர்.
முன்னாள் உலக வங்கி அதிகாரி வினோத் பிரகாஷ் என்பவரால் தொடங்கப்பட்ட IDRF - Indian Development & Relief Fund (இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி) என்ற அமெரிக்க அறக்கட்டளை 1989 முதல் அமெரிக்க பணக்காரர்களிடம் நிதி திரட்டி இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் வலைப்பின்னலில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
முதன்முறையாக, 1995-2001 ஆண்டுகளில் வழங்கிய அதன் நிதி கணக்கு வெளியானது. இதில், சுமார் $50 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளது தெரிய வந்தது. இந்த தொகையில் 90% ($45 லட்சம்) நிதி சனாதன இந்துத்துவ வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
அதில், தமிழ்நாட்டில் நிதி பெற்ற ஆர்.எஸ்.எஸ் நிறுவனங்களின் பட்டியல் கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் நிதிபெற்ற ஆர்.எஸ்.எஸ் அறக்கட்டளைகள் |
நிதி உதவி (அமெரிக்க $) |
|
1 |
பாரத் கலாச்சார அறக்கட்டளை, திருச்சிரப்பள்ளி. |
$45,980 |
2 |
கிராம கோவில் பூஜாரிகல் பெரவாய், சென்னை |
$2,250 |
3 |
நயா ஜோதி அறக்கட்டளை அறக்கட்டளை, சென்னை |
$14,700 |
4 |
சேவலயா, சென்னை |
$6,550 |
5 |
ஸ்ரீ பி.என். நாராயண சாஸ்திரிகல் மேரு அறக்கட்டளை, சென்னை |
$9,500 |
6 |
ஸ்ரீ ராம தனுஷ்கோடி அபயா அஞ்சநேயர் சேவா டிரஸ்ட், ராமேஸ்வரம் |
$5,110 |
7 |
சுவாமி விவேகானந்த ஊரக வளர்ச்சி சங்கம், சென்னை |
$82,290 |
8 |
ஆயுர்வேத அறக்கட்டளை, கோவை |
$2,410 |
9 |
யுனிக் மவுண்டென் அறக்கட்டளை, திருவண்ணாமலை |
$9,035 |
10 |
வெர்கல் நற்பணி மன்றம், சென்னை |
$11,500 |
11 |
விவேகானந்த கேந்திரா மற்றும் ராக் மெமோரியல், கன்னியாகுமரி |
$74,885 |
மேலே பட்டியலில் நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இந்துத்துவ கருத்தியல்கள் பரவலாக மக்களிடம் விதைத்திருப்பதை எளிதில் உணர முடியும்.
தமிழ்நாடு சேவா பாரதி தனது இணையத்தில் நிதி உதவியாளர்களாக சில நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது. மூன்று முறை அரசால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸின் தீவிர இந்து மதவாதத்தை வளர்க்கும் நிறுவனங்களில் அரசு பொதுத்துறை நிறுவனங்களையும் காண்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
ஆர்.எஸ்.எஸின் சேவா பாரதி போன்ற அமைப்புகளின் தமிழ்நாடு செயல்பாட்டிற்காக சர்வதேச மற்றும் இந்திய அளவில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதை மேலே கண்டோம். இவை கடந்த கால, மோடி-பாஜக ஆட்சி பொறுபேற்காத காலகட்டத்தின் தகவல்கள். எனவே பெருவெள்ளத்தின் ஒரு துளி மட்டுமே.
இப்படியாக குவிந்திடும் நிதியை கொண்டு சேவா பாரதி தமிழ்நாட்டில் பல்வேறு பண்பாட்டு
கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வெகுமக்களிடம் இந்துத்துவ கருத்தியலை வளர்த்து வருகின்றது. இவர்களது பல்வேறு உத்திகளில் ஒன்று கோவில்களில் பெண்களை குறிவைத்து இயங்குவது. கடவுள் வழிபாடு, பக்தி, ஆன்மீகம் என்ற போர்வையில் பெண்களை எளிதாக தங்கள் வசம் ஈர்த்துவிடுகின்றன.
இதன் மூலமாக பெண்களை சனாதன இந்துத்துவ கருத்தியலுக்கு ஆட்படுத்தி அவர்கள் வழியாக அவரது குடும்பத்திற்குள் இந்துத்துவ மதவெறியையும், சனாதன அடக்குமுறையையும் ஏற்க செய்து விடமுடியுமென நம்புகின்றன.
அது தவிர, சமூகத்தின் விளிம்பு நிலையில் அதிக எண்ணிக்கையில் வாழும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களையும் சனாதன இந்துத்துவ கருத்தியலுக்குள் கொண்டு வரும் பணியை சேவா பாரதி தனது தொண்டு அமைப்புகள் வலைப்பின்னல் மூலம் செய்து வருகின்றது. ஆதிவாசி கல்வி கூடங்கள் மூலம் இந்துத்துவத்தை வளர்த்து வருவதை ஏற்கனவே கண்டோம்.
இந்த பின்னனியில் இருந்தே திமுக பொறுப்பாளர்கள் சேவாபாரதி நிகழ்வில் பங்கேற்றதை நாம் அணுக இயலும்.
சமூகத்தில் மத வெறுப்பையும், சாதி பெருமையையும் வளர்த்து பொய் புராணங்களை சொல்லி உழைக்கும் ஏழை எளிய மக்களை தொடர்ந்து ஒடுக்கி வரும் உயர்சாதி இந்துக்களின் நலனுக்காக இயங்குவது சேவா பாரதி.
தமிழ்நாட்டில் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். பாஜகவை எதிர்த்து களத்தில் பெருமளவில் இயக்கங்களே, குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள், எதிர்வினையாற்றி வருகின்றன. இதற்கான விலைகளை கடந்த பாஜக - அதிமுக ஆட்சிக்காலத்தில் இவ்வியக்கங்களின் தோழர்கள் தந்து வருவதையும் கண்டு வருகிறோம்.
மக்களை சந்திக்க பொது நிகழ்வுகளில் பங்கேற்க்கத்தடை, தொடர் வழக்கு விசாரணை, கைது, சிறைக்காலம் என்று இயக்கவாதிகளின் காத்திரமான பங்களிப்பின் காரணமாக தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய கட்சிகள் பெயரளவு கண்டன அறிக்கைகள் வெளியிடுவது மற்றும் ஓரிரு கூட்டங்களை நடத்தி கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளன.
மே பதினேழு இயக்கம் மற்றும் பெரியாரிய - அம்பேத்கரிய இயக்கங்களின் களப் போராட்டங்களின் ஊடாகவே எடப்பாடி-பாஜக அரசு அம்பலப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வி்ளிம்பில் நின்று ஆதரவளித்ததை மட்டும் செய்திட்ட திமுகவினர், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே இவ்வியக்கங்களிடம் உறவு பாராட்டினர் என்பதை இந்நிகழ்வு அம்பலமாக்குகிறது.
இந்த புள்ளியில் நின்று தமிழ்நாட்டில் இந்துத்துவ சேவா பாரதியின் செயல்பாடுகளையும், அதில் பங்கேற்ற மாநில அமைச்சர்களின் செய்தியையும் அணுகிடவேண்டியதாகிறது.
மக்கள் திரள் கூட்டங்கள், வீட்டு திண்ணை பிரச்சாரங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் என இயக்கங்களின் வலுவான அரசியல் பணிகளின் மூலம் பொது மக்களிடம் தெளிவான முற்போக்கு அரசியல் விழுப்புணர்வை இயக்க அரசியல் உருவாக்கியுள்ளது.
மக்களிடம் ஏற்பட்ட இந்த விழுப்புணர்வின் காரணமாக எழுப்பப்படும், நீட் ரத்து போன்ற, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி மக்கள் ஆதரவை தேர்தலின் போது கட்சிகள் வாக்கு அறுவடை செய்கின்றன. இப்படியாக ஆட்சியில் அமரும் கட்சிகளின் சித்தாந்த தெளிவில்லாத நடவடிக்கைகளை வெகுமக்கள் இயக்கங்கள் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் வழி நடத்த வேண்டிய தேவையும் எழுகிறது.
கட்சியின் தலைமைக்கு அறியாமல் திமுகவின் அமைச்சர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருக்க வாய்ப்பில்லை. மேலும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பங்கெடுத்ததன் மூலமாக இந்த சமூகவிரோத அமைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் பணியை திமுக செய்திருக்கிறது. இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் வளர்ந்து வரும் கொங்குப் பகுதியில் திமுகவினரின் இந்த செயல்பாடு திராவிட கருத்தியலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
“ஒரே நாடு, ஒரே மதம்” என்று கூறும் ஆர்.எஸ்.எஸின் இந்து பாரதத்தின் குறியீடான “பாரத மாதா” படத்திற்கு மாலையிட்டு வணங்கி வரும் திமுக அமைச்சர்களின் செயல் கண்டனத்திற்குரியது. காவி கொடிகளுடன் பாரத மாதா படங்களை ஏந்தி பொது மக்களிடம் மதவெறுப்பு, “ஒற்றை நாடு, இந்து பாரதம்” என்று வரும் சங்பரிவார் கும்பலை களத்தில் நேருக்குநேர் எதிர்கொள்ளும் பெரியாரிய தோழர்கள் மத்தியில் இச்செயல் பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை ஆதரித்த பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, இசுலாமிய இயக்கங்களின் முகத்தில் கரியை பூசும் செயலாகவே இந்நிகழ்வு அமைந்துள்ளது. ஆட்சிக்கட்டில் ஏறிய 30 நாட்களுக்குள்ளாக தனது சமரசத்தை திமுக வெளிப்படுத்தியதாகவே இந்த நிகழ்வை புரிந்து கொள்ள இயலும்.
மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்கி மாநில சுயாட்சியை முன்னிறுத்தும் திமுக ஆட்சியில் அமர்ந்த சில நாட்களில் “இந்திய ஒன்றியம்” என்று பேசியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எப்படி தனது அமைச்சர்கள் “ஒரே நாடு”, “இந்து பாரதம்” கருத்தை ஆதரிக்கும் வகையில் “பாரத மாதா” படத்திற்கு பூஜை செய்திட அனுமதித்தது? இது, திமுக ஆட்சியின் “மத சார்பு, மாநில சுயாட்சி” கொள்கைகளை குழிதோண்டி புதைப்பதற்கே வழிவகுக்கும்.
இக்கட்டுரையின் பாகம்-2 தொடர்ச்சியை "ஆர்.எஸ்.எஸ்சின் சேவாபாரதிக்கு இடமளிக்கும் திமுக அரசு" என்கிற இணைப்பில் வாசிக்கலாம்.
- மே பதினேழு இயக்கம்