பெரியாரின் பிறந்தநாளில், பெரியாரின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படும்போது இரண்டு செயல்பாடுகள் முக்கியமானது.

periyar 550ஒன்று தமிழகத்தில் அடுத்த தலைமுறைக்கு பெரியாரின் கருத்துகளை எவ்வாறு எடுத்துச் செல்வது?

இரண்டு, இந்தியா முழுமைக்கும், அடுத்த மாநிலங்களுக்கும் எவ்வாறு எடுத்துச் செல்வது?

இவை இரண்டும், இன்றைய தமிழக, இந்திய அரசியல், சமூக சூழ்நிலைகளுக்கு ஏன் அவசியமானது?

முதலாவது அவசியத்திற்கான தேவை மூன்று வகையில் உள்ளது.

முதல் வகை, தமிழ்நாட்டில் பெருகி வரும் சாதிய உணர்வு. அந்த உணர்வு பெருமிதமாகவும், மற்றவர்களின் மீதான வன்மமாகவும் மாறிவரும் சூழல்.

சமூகநீதிக்கான செயல்பாடுகளின் ஊடாக எழுந்த சாதிகளைப் பற்றிய தன்னறிவு, அச்சாதிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது முதன்மையான நல்விளைவாக அமைந்தது. அதே சமயம் அவ்விழிப்புணர்வின் வழியாக எழுந்த அரசியல் நோக்கங்கள்/விருப்பங்கள் சாதிய தற்பெருமை பிம்பங்களையும், படிமங்களை உருவாக்குவதிலுமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தியது, சமீப காலமாக தீவிரமாக பரவிக் கொண்டிருப்பது வெட்கப்பட, கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரியார் தன்னிலை விளக்கமாக கூறிய, "வேறு யாரும் செய்யத் துணியாததால், நான் செய்கிறேன்" என்று சொன்னதுபோல், சாதியொழிப்பு என்கிற பணியை வேறு யாரும் செய்யத் தயங்குவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதை முதன்மை செயல் திட்டமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும். மற்றவர்களைவிட, அந்தக் கடப்பாடு பெரியாரியலாளர்களுக்கே அதிகம் இருக்கிறது.

இரண்டாம் வகையானது, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லா வகையில் இந்துத்துவ சக்திகள் வீரியத்துடன் அரசியல், சமூக, பொருளாதரம் என அனைத்து தளத்திலும் மூர்க்கத்துடன் களம் கண்டுள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே கடுமையாக பாதிக்கப்படுகின்ற சூழலில், அதைவிட அந்த இந்துத்துவ சக்திகள், கடந்த ஐம்பதாண்டுகளில் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகம் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் பயன்களை, விளைவுகளை முற்றாக ஒழித்துவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றது.

இத்தகைய சூழல்களில், அந்த பிற்போக்கு, இந்துத்துவ சக்திகளுக்கெதிரான, வலிமையான, தொடர்ச்சியான பிரச்சாரங்களை, போராட்டங்களை அரசியல், சமூக, பொருளாதாரம் என்று அனைத்து தளத்திலும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்றாம் வகையானது, மேற்சொன்ன சூழல்களில், அந்தப் பணிக்கு இயல்பாகவே, முதன்மையாகவே பயன்படக்கூடிய பெரியாரின் வளமான, ஆழமான சிந்தனைகளை பெரும் ஆயுதமாகக் கொண்டு களமாடுகையில், அதனை இந்துத்துவ சக்திகளுக்குத் துணை போகும் வகையில், அப்பிரச்சாரங்களை மடைமாற்றும் விதமாக, சொல்லப் போனால் அதன் மூலம் எதிர்க்க வேண்டிய, தடுக்க வேண்டிய இந்துத்துவ சக்திகளுக்கு உதவும் விதமாக, மறைமுகமாக சில வலதுசாரி தமிழ்த் தேசிய சக்திகள் ஊறுவேலை செய்து கொண்டிருக்கின்றன.

நிகழ்கால தமிழின விழிப்புணர்வு, தமிழினத் தேவைகளுக்கு மாறியுள்ள சூழல்களில், பெரியாரை, அவருடைய ஐம்பதாண்டு கால தொடர் பணியின் முழு பரிணாமத்தையும் புரிந்து கொண்டு, அதனைத் தற்கால தேவைகளுக்கேற்ப, தமிழின உயர்வுக்கு எடுத்துச் செல்வதன் மூலமே, இந்துத்துவத்தின், மறைமுக நேச சக்திகளாக விளங்கும் சாதிய அடிப்படையிலான, வலதுசாரி தமிழ்த் தேசியத்தை முறியடிக்க முடியும்.

இந்துத்துவ சக்திகளோடு, இத்தகைய திரிபு தமிழ்த் தேசிய சக்திகளும் தமிழினத்திற்கு ஆபத்தானவர்களே.

ஒவ்வொரு மாவட்டத்திலோ அல்லது சில மாவட்டங்களை இணைத்தோ, அப்பகுதிகளில் 100 பேரை, குறிப்பாக, மாணவர்களை, இளைஞர்களை, மருத்துவர்களை, பொறியியலாளர்களை, ஆசிரியர்களை, ஊடகவியலாளர்களை, கணினித் துறையாளர்களை, அவர்களில் பெண்களை என்பதாக ஆர்வமுள்ளோரைத் தெரிவு செய்து, பயிற்சி முகாம்கள் நடத்தலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் அவர்கள், Training the trainers என்ற வகையில் அத்தகையோர்கள் அவரவர் துறைகளில் பெரியாரியக் கருத்துகளை எடுத்துச் செல்பவராகவும், குறிப்பாக தமிழின விரோதக் கொள்கைகளை, திட்டங்களை எதிர்த்து கருத்தியல் பிரச்சாரம் செய்பவர்களாகவும் விளங்குவார்கள்.

அத்தகைய பயிற்சிக்கான ஆர்வம் இருந்தாலும், வெளிப்படையாக வரத் தயங்குபவர்களுக்காக, தவிர்க்க வேண்டிய சூழல்களில் இருப்பவர்களுக்காக, ஆன்லைன் மூலம் இத்தகைய பயிற்சிகளை, கருத்துப் பரிமாற்றங்களை நடத்தலாம்.

பெரியாரியலாளர்களில், எழுத்து வன்மை, பேச்சு வன்மை உடையோர், முக்கியமான பிரச்சனைகள் எழும்போது, அத்தகைய பிரச்சனைகளின் ஆழமான நோக்கங்களை, விளைவுகளை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் எழுதியோ, பேசியோ, அவற்றை பல்வேறு வகை தொடர்பு முறைகள் மூலம் பரப்புரை செய்யலாம்.

இரண்டாவது செயல்பாடு, இந்தியா என்கிற அமைப்பில் இருக்கும்வரை, இந்துத்துவ சக்திகளுக்கெதிரான செயல்திட்டங்களில் வெற்றி பெற வேண்டுமென்றால், நமக்கான செயற்களம் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமையும்தான் என்கிற புரிதல் வேண்டும்.

தமிழ்நாட்டில் எவ்வளவுதான் வலிமையான எதிர்ப்பைக் காட்டுவதில், அந்த அழிவு சக்திகள் தமிழகத்தினுள் வரவிடாமல் தடுப்பதில் வெற்றியடைந்தாலும், பிற மாநிலங்களில் அத்தகைய விழிப்புணர்வு இல்லாமை, நம் எதிர்ப்பின் வலிமையைக் குறைக்கிறது. மற்றொரு வகையில் எதிர்த்து செயல்பட வேண்டிய சுமையை அதிகமாக்குகிறது. அந்த வகையில் பெரியாரை, அவரின் கருத்துகளை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.

பெரியாரின் எழுத்துகளை, பேச்சுகளை மற்ற மாநில மொழிகளில், குறிப்பாக இந்தியில் மொழிபெயர்ப்பது அவசியமான பணியாகும். பல்வேறு பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவவர்களையும், சமூக செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைக்கும் பணியும் அவசியமானது. மண்டல் பரிந்துரையின்போது ஏற்படுத்திய வட இந்திய ஒருங்கிணைப்புபோல, அதைவிட தீவிரமாக, பரந்துபட்ட அளவில் அந்த ஒருங்கிணைப்புகளையும், அதன்மூலமான தொடர் செயல்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

பெரியாரோடு, அம்பேத்கர், வி. பி. சிங் போன்ற தலைவர்களின் வளமான கருத்தியல்களையும், செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சியில், இயல்பாகவே தென்னக மக்களை, அவர்களிடையே இருக்கும் ஒத்த கருத்துடையவர்களை இணைப்பது எளிதானதாகும். ஏனெனில், இந்த இந்துத்துவக் கொள்கைகளால். அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படப் போவது தென்னகம்தான். அந்த அழிவு சக்திகளுக்கெதிரான தென்னக மக்களின் முரண்களை அம்பலப்படுத்தும் வகையில், தென் மாநில மக்களிடையே, அவர்களின் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து அம் மாநிலங்களில் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இத்தகைய தீவிரமான, பரந்துபட்ட, தொடர்ச்சியான பிரச்சாரங்கள், செயல்திட்டங்கள், செயல்பாடுகள் மூலமாகவே குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முடியும்.

இருபத்தியோராம் நூற்றூண்டின் தொடக்கம், பெரியாரியலாளர்களின் கடமையாகக் காட்டியிருக்கும் பணிகள் இவைதாம்.

- ப.பூங்குமரன்

Pin It