‘இந்துக்களின் விரோதி தி.மு.க.’வை வீழ்த்த வேண்டும் என்று கூக்குரல் போடுகிறது, பா.ஜ.க.! வேல் தூக்கிக் கொண்டு யாத்திரை போனார்கள்; ஓட்டு வங்கிக்கு முருகக் கடவுளை துணைக்கு அழைத்தார்கள்; மக்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை; குத்தாட்டம் போட்டதுதான் மிச்சம்!
யார் ‘இந்து’ விரோதி என்று பார்ப்போமா?
• தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள் தான். இந்த மக்களின் இடஒதுக்கீடு உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, தாய்மொழி உரிமை, பண்பாட்டு உரிமைகளை முற்றிலும் பறிப்பது, பா.ஜ.க. ஆட்சி.
• ‘அம்மா’வின் ஆட்சி என்று பேசும் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் முன்னணி தலைவர்களும் பார்ப்பனிய வைதிக சடங்குகளை செய்கிறார்கள். அவர்களை மட்டுமே அழைத்து யாகம், பூஜைகளையும் நடத்துகிறார்களே தவிர, பார்ப்பனரல்லாத இந்து ‘பூசாரி’கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதுகூட கிடையாது.
• நைவேத்தியம் செய்யும் பணியாளர்கள் பதவிக்கு ‘பிராமணர்கள்’ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்த ஆட்சி இந்து அற நிலையத் துறை வழியாக பத்திரிகை விளம்பரம் தருகிறது; பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தவுடன் உத்தரவை திரும்பப் பெறுகிறது.
• கிராமக் கோயில்களில் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பூசாரிகள் வறுமையில் வாடுகிறார்கள். கலைஞர் முதல்வராக இருந்தபோது இவர்களுக்காக ‘பூசாரி நல வாரியம்’ ஒன்றை அமைத்தார். 10 ஆண்டுகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அது முடங்கிக் கிடக்கிறது.
• 4000 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம். இவர்களில் சிலர் மரணமடைந்தால் மட்டுமே மற்றவர் களுக்கு ஓய்வுதியம் என்ற நிலை. இந்த அவலத்தைப் போக்க 15,000 பூசாரிகளுக்கு ஓய்வூதியம் தர வேண்டும் என்று பூசாரிகள் நல சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. ‘பிராமணர்’ கோரிக்கை என்றால் ‘கோப்பு’கள் பறந்திருக்கும்.
• கொரானா காலத்தில் பல பூசாரிகள் வறுமையால் நோயால் இறந்தனர். முதுமையடைந்தோர் உயிர் வாழ ஓய்வூதியம் கேட்டனர்; கிடைக்கவில்லை. கோயில் உண்டியல் வருமானம் முழுவதையும் அறநிலையத் துறை எடுத்துப் போய் அதிகாரி களிடம் கட்டி நல்ல பெயர் வாங்கிக் கொண்டது. ஆனால், தில்லை நடராசர் கோயிலில் நாள் தோறும் உண்டியலில் விழும் பல்லாயிரக் கணக்கான ரூபாய் உண்டியல் பணத்தில் அரசு ஒரு ‘பைசா’ கூட கேட்க முடியாது. தீட்சதர் கும்பல் அவ்வளவையும் ஏப்பம் விடுகிறது.
• இந்து அறநிலையத் துறை நடத்தும் வழிபாட்டுக்கான பயிற்சி முகாம்களில் பூசாரிகள் பங்கேற்க விடாமல் தடுக்கப்படுகிறார்கள். ‘பிராமண’ அர்ச்சகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.
• பூசாரிகளையும் அறநிலையத் துறை ஊழியர் களாகக் கருதி ஏன் மாத ஊதியம் வழங்கக் கூடாதா என்று கேட்கிறார்கள் பூசாரிகள்.
• தி.மு.க. ஆட்சியில் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ‘வணிகப் பயன்பாடு’ என்ற அடிப்படையில் கூடுதல் மின் கட்டணம் வாங்கி, அதை செலுத்த வருமானமின்றி பல கிராம கோயில்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன என்று புலம்புகிறார்கள் பூசாரிகள்.
• கிராமக் கோயில்களில் ‘திருப்பணி’ என்ற பெயரில் பெறப்படும் நன்கொடைக்கு ‘ஜி.எஸ்.டி.’ வரி போடுகிறது ‘இந்து’க்களின் காவலனாகக் கூறிக் கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி! ஆனால் அயோத்தியில் இராமன் கோயில் கட்ட பல்லாயிரக்கணக்கில் நிதி வசூல்; அதற்கு ‘ஜி.எஸ்.டி.’யும் கிடையாது; வருமான வரியும் கிடையாது.
• அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும். அதன் மூலம் ‘சூத்திரர்’ கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்தால் அது ‘தீட்டாகி’ விடும் என்ற இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடினார் பெரியார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஒரே ஒரு அம்மன் கோயிலில் மட்டும் ஒரு பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனார். ‘பிராமணர்’களாகப் பிறந்த காரணத்தால் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனே அர்ச்சகர் ஆகி விட்டார்கள். 200 பார்ப்பன ரல்லாத அர்ச்சகர்கள் வேலையின்றி காத்துக் கிடக்கிறார்கள். இப்படி பார்ப்பன ரல்லாத ‘இந்து’ பூசாரிகளை புறக்கணித்துவிட்டு இந்து ‘வைதிக மதவாத’ கூட்டத்தை தலைமீது தூக்கி வைத்து ஆடுவது ஏன்? ஏன் இந்த பாகுபாடு?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
14 ஆண்டுகளாக உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் பணிக்கு காத்திருப்போருக்கு அர்ச்சகர் பணிகள் வழங்கப்படும் என்பது ஒரு அறிவிப்பு.
வைதிக வேத வழிபாட்டு முறைகளையும் உருவ வழிபாட்டையும் சமஸ்கிருதத் திணிப்பையும் எதிர்த்து பக்தி மார்க்கத்தில் மகத்தான சீர்திருத்தத் திற்கு வித்திட்ட வள்ளலாரின் ‘சுத்த சன்மார்க்க சங்கம்’ இயங்கும் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மய்யம்’ உருவாக்கப்படும் என்பது மற்றொரு அறிவிப்பு.
சங்கரமடம் சங்கராச்சாரிகள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானாலும் அதற்கு சர்வதேசப் புகழை ஏற்ற முயலும் பார்ப்பனியத்துக்கு பதிலடியாக வரப் போகிறது ‘வள்ளலார் சர்வதேச மய்யம்’!
வைதிகத்தின் காலடியில் வீழ்ந்து கிடப்பது தான் இந்துக்களின் நலனா? அல்லது ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் சுயமரியாதைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் இந்துகளின் நலனா?
- விடுதலை இராசேந்திரன்