சாதி மோதலைத் தவிர்ப்பதற்காகக் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரு மான திரு. வைகோ அவர்கள் 25.04.2016 அன்று கோவில்பட்டியில் அறிவித்தார். கோவில்பட்டி தொகுதியில் மட்டுமின்றி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் 24.04.2016 ஞாயிறன்று தேர்தல் பரப்புரைக்கு வைகோ போனார். அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுப் பரப்புரையைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டு சிலையை நோக்கிப் போனபோது, ஏற்கெனவே அங்கு கூடியிருந்த சுமார் 50 பேர், வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று எதிர்த்து முழக்க மிட்டுள்ளார்கள்.

குறிப்பாக உடுமலைப்பேட்டையில் தேவர் வகுப்பைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்காக ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் சங்கர், பெண் வீட்டுத் தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சாதிவெறிப் படுகொலையை வைகோ கண்டித்தது தவறு என்றும், வெட்டுக் காயம்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யாவை போய்ப் பார்த்து வைகோ ஆறுதல் சொன்னது தவறு என்றும் அந்த இளைஞர்கள் முழக்கமிட்டு, அப்படிப் பட்ட “குற்றங்களைச்’’ செய்துவிட்டு, தேவர் சிலைக்கு மாலை போட உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேள்விகள் எழுப்பி, வைகோவைத் தடுத்துள்ளார்கள்.

அதே கோவில்பட்டி தொகுதியில் போட்டி யிடும் தி.மு.க. வேட்பாளர் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் வைகோவின் நாயக்கர் வகுப்பு வாக்குகள் இத்தொகுதியில் 52 ஆயிரம் என்றும் தமது சமூக வாக்குகள் 70 ஆயிரம் என்றும், எனவே தாம் வெற்றி பெறுவது உறுதி என்றும் ஏற்கெனவே கூறியுள்ளார். அதைத் தி.மு.க. கண்டிக்க வில்லை என்றும் வைகோ குற்றம் சாட்டுகிறார்.

தேவர் வகுப்பைச் சேர்ந்த அந்த சில இளைஞர்கள் வைகோவை அவமானப்படுத்துவ தாக நினைத்துக் கொண்டு முத்துராமலிங்கத் தேவரை மிகவும் கொடூரமான சாதி வெறியர் போல் சித்தரித்து விட்டார்கள். முத்துராமலிங்கத் தேவர்க்கு பரந்துபட்ட அனைத்து மக்களுக்கான அரசியல் செயல்களம் இருந்தது. அனைத்து சாதி மக்களின் வாக்குகளை மிகுதியாக வாங்கி நாடாளுமன்ற -- சட்டமன்றத் தேர்தல்களில் வென்றவர் அவர்.

இமானுவேல் சேகரனார் கொலை _ அதற்கு முன்னும் பின்னும் நடந்த சாதிக் கலவரங்கள் ஆகியவற்றில் முத்துராமலிங்கத் தேவர்க்குக் கறை உண்டு. ஆனால் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு அத்துடன் சுருங்கிவிடவில்லை. பொது சமூகத்தளமும் அரசியல் பங்களிப்பும் இருந்தன.

சங்கர் கொலையைக் கண்டித்த வைகோவுக்குத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கத் தகுதி இல்லை என்று, எந்த அடிப்படையில் திட்டங்குள இளை ஞர்கள் முடிவுக்கு வந்தார்கள்?இந்த இளைஞர்களைப் போன்றவர்கள் முத்துராமலிங்கருக்கு தன்சாதி அடையாளத்தை மட்டும் பொருத்துவது சரியா? அந்தச் சமூகச் சான்றோர் சிந்திக்க வேண்டும். வ.உ.சி., காமராசர் போன்ற தலைவர்களைக் கூட சாதிச் சிமிழுக்குள் அடைக்கின்றனர்.

தேவர் சமூகத்திற்கென்று இயக்கங்கள் வைத்திருப் போர், அந்த இளைஞர்களின் தவறான செயலை ஏன் கண்டிக்கவில்லை? சாதி வெறியர்கள் சிலரால் தவறாக வழி நடத்தப்படும் அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கில்லையா?

தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாதிகளைச் சேர்ந்த மக்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்ச்சியும் கூடுதல் சமூக அக்கறையும் வேண்டும். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய, - அதற்காக செயல்பட வேண்டிய கூடுதல் பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சாதியைப் பயன்படுத்திப் பலனடைய வேண்டும் என்று கருதுகிற தன்னலத் தனிநபர்கள், சாதி உணர்ச்சியைத் தூண்டி, - கூடுதல் மக்கள் தொகையைத் தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட சாதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் பரவலாக - நிரந்து எல்லாப் பகுதியிலும் உள்ள சாதி எதுவுமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண்டலத்தில் அடர்த்தியாக உள்ளது. எனவே சாதியை முதன்மைப்படுத்தி, அனைத்துத் தமிழ்நாட்டிற்கும் தலைமை தாங்கும் அரசியல் தலைமை இங்கு உருவாகிட வாய்ப்பில்லை.

அடர்த்தியாக மக்கள் தொகை கொண்ட சாதிகளிலிருந்து, அனைத்துத் தமிழ்நாட்டிற்குமான தலைமை உருவாக முடியும்! எப்போது? அனைத்து மக்களுக்குமான இலட்சியங்கள், முற்போக்கான கொள்கைகள், அனைத்து மக்களையும் தம் மக்களாகக் கருதும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் பெரிய எண்ணிக்கை கொண்ட சாதியிலிருந்தும் தமிழ்நாட்டுத் தலைமை உருவாகலாம்; சிறிய எண்ணிக்கை கொண்ட சாதியிலிருந்தும் தமிழ்நாட்டுத் தலைமை உருவாகலாம்.

மண்டல வாரியாக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட சாதி சமூகங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம். வன்னியர், கொங்குவேளாளர், முக்குலத்தோர். இம்மக்கள் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சாதியை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகளிலும், சாதி அமைப்புகளிலும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலைமை என்னவென்று பார்க்க வேண்டும். ஒரு சாதியை மட்டும் அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சி- சட்டப்பேரவையில் பெரும்பான்மை இடங்களைப் பெறவே முடியாது. மண்டல வாரியாக அடர்த்தியாக உள்ள சாதிகள் -- ஒன்றின் தலைமையை இன்னொன்று ஏற்காது. இவை தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சாதி உளவியல் என்பது உயர்வு - தாழ்வு வேறுபாட்டைக் கொண்டது. மாநில அதிகாரத்திற்கான போட்டியில் ஒன்றை ஒன்று வீழ்த்தவே முனையும்.

1990களில் மருத்துவர் இராமதாசு தாழ்த்தப் பட்டோர் + பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் ((SC + BC + Minorities)) கூட்டமைப்பை உருவாக்கி, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை அகற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்றார். அவ்வாறான கூட்டமைப்பு உருவாகவே இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக - தாழ்த்தப்பட்டோர் தவிர்த்த இதர சாதிகளின் கூட்டமைப்பை, “நாடகக் காதலுக்கு எதிராக’’ அமைக்கிறேன் என்றார். அப்படி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். அதில் வன்னியர் களைத் தவிர மற்ற சாதியினர் பெயருக்குப் பிரதிநிதி களாக இருந்தார்களே தவிர, அவரவர் சாதியினரைக் கணிசமாக உறுப்பினர்களாகக் கொண்டவர்கள் அல்லர்.

மேலே கூறப்பட்ட மண்டலவாரியாக அடர்த்தியாக உள்ள மூன்று சாதிகளைத் தவிர்த்த மற்ற அடர்த்தி யாக உள்ள சாதிகள், -அடர்த்தி குறைவாக உள்ள சாதிகள் ஆகியவையும் சாதி அடிப்படையிலான கூட்டமைப்பில் -கணிசமான பிரதிநிதித்துவத்தோடு ஒரு போதும் இணைந்தது கிடையாது. ஏனெனில் சாதி என்பது பிறப்பிலேயே பிரிவினை கொண்டது, உயர்வு தாழ்வு கற்பிப்பது; சாதிக் கலப்புத் திருமண உறவை- அதாவது குடும்ப உறவைத் தடுக்கும் உளவியல் கொண்டது.

ஒரு சாதி அடையாளத்தோடு உருவாகும் அரசியல் தலைவரை, பிற சாதிகள் தங்கள் தலைவராக - ஏற்கவே மாட்டா. தங்கள் நண்பராக ஏற்பார்கள்; தங்கள் தலைவராக ஏற்க மாட்டார்கள். எனவே மண்டல வாரியாகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒரு சாதியின் அடையாளத்தோடு உருவாகும் தலைவர் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக ஏற்பிசைவு பெற வாய்ப்பில்லை. கூட்டணி ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டால்கூட வலுவான ஒரு சாதித் தலைவர் முதலமைச்சராகி விடாமல் பார்த்துக் கொள்வதில், பிற வலுவான சாதித் தலைவர் களும் இதர சாதித் தலைவர்களும் கவனமாக இருப்பார்கள்.

இதனால் என்ன நிலை உருவாகும்? தங்கள் சாதிக்கு சலுகைகள் காட்டும் பொதுவான அரசியல் கட்சி ஒன்றின் _ பிற சாதியில் பிறந்த தலைவரைச் சார்ந்து இயங்கும் நிலைமையே வலுவான சாதிகளுக்குரிய நிரந்தர உத்தியாகிவிடும்.

அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. போன்ற அரசியல் கட்சித் தலைமைகள் அந்தந்த வட்டாரத்தில் அடர்த்தி யாய் உள்ள அந்த சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு, ஒன்றியம், மாவட்டம், சட்டப்பேரவை உறுப் பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் போன்ற பதவி களைக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் அதிகாரப் பதவியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளும்.

தி.மு.க. தலைமை எப்போதும் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற் குரியதாக இருக்கும். அ.இ.அ.தி.மு.க. தலைமை என்பது செயலலிதா வுக்குப் பிறகு, வலுவான ஒரு சாதிப் பிரதிநிதிக்குப் போகும் போது இதர வலுவான சாதிப் பிரதி நிதிகள் கலகம் செய்வார்கள். வலு வான தமிழ்ச்சாதிகளுக்கு அப்பால் வேறு சாதிகளிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாக லாம்.

மாவட்டம், ஒன்றியம், ச.ம.உ., நா.ம.உ., அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே தமிழ்நாட்டின் வலுவான சாதிப் பிரமுகர்கள் உயர முடியும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுத் தலைமைக்கு வர வாய்ப்பில்லை என்பது பழைய வரலாற்றுச் செய்தி ஒன்றை நினைவூட்டுகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட நாயக்க மன்னர்களே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் படைத்தவர்களாகவும் அவர்களுக்குக் கீழே பதினைந்து ஊர், இருபது ஊர்களுக்குப் பாளையக் காரர்களாக இருந்தவர்களே நம் பாராட்டுக்குரிய மண்ணின் மக்களாகிய பூலித்தேவன், வேலுநாச்சியார், இராமநாதபுரம் சேதுபதி போன்றவர்கள் என்பதும் பழைய வரலாறு; மீண்டும் சனநாயக அரசியலிலும் அது தொடரும்.

சோழர்களும் பாண்டியர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்ட போதுதான் தில்லியிலிருந்து மாலிக்காபூர் வர வழைக்கப்பட்டான். அவன் தமிழ் நாட்டை அழித்தான். அதன்பிறகு மதுரையில் அயல்நாட்டுச் சுல்தான் கள் ஆட்சி ஏற்பட்டது. அதன்பிறகு ஆந்திராவிலிருந்துநாயக்க மன்னர்கள் வந்து மதுரையைப் பிடித்தார்கள். தமிழ்நாட்டைப் பிடித்தார்கள்.

அதன்பிறகுதான் பார்ப்பனியம் தமிழ்நாட்டில்முழுவீச்சில் கோலோச்சியது. நாயக்கர் ஆட்சி ,- வெள்ளையர் ஆட்சி, - பிறகு இந்திய விடுதலை என்பது வரைக்கும் தமிழ் நாட்டின் சமூக நிலை என்ன?

தமிழ்ச் சாதிகள் அனைத்தும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழும், நாயக்கர்கள், நாயுடுக்கள்,- ரெட்டி யார்கள்ஆதிக்கத்தின் கீழும் இருந்தன. நில உடைமையும் பெரிதும் அவர்க ளிடமே இருந்தது. அடுத்த நிலையில், தமிழர்களில் சைவப் பிள்ளைமார், முதலியார், நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்! பொருளாதார நிலையில இவர்களுக்குக் கீழ்தான் வலுவான சாதிகளான வன்னியர், கொங்கு வேளாளர், முக்குலத்தோர் இருந்தனர்.

இந்த வலுவான சாதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜமீன்கள் இருந்தன. அவையும் தங்களுக்கு மேலே உள்ள ஆட்சியாளர்களுக்குப் பாதுகாப்புப் பணி செய்பவையாகவே இருந்தன. மற்றபடி இச்சமூகங்களைச் சேர்ந்த வெகுமக்கள் கடும் உழைப்பாளிகளாகவே வாழ்ந்தனர்.

இன்றைய நிலையில் பார்ப்பனர், நாயக்கர், நாயுடு, ரெட்டியார் முதலிய வகுப்புகளைச் சேர்ந்த மக்களை நாம் அயலவர் என்று பார்க்கவில்லை. அவர்களுக் கெதிரான பாகுபாடு எதையும் நாம் பேசவில்லை. அவர்களும் தமிழ்நாட்டு மக்களே, தமிழ்த்தேசிய மக்களே என்றுதான் பார்க்கிறோம். இன்றைக்கு எழுந்துள்ள சாதிச் சிக்கல்களைப் போக்குவதற்காக வரலாற்றுச் செய்திகளைச் சொல்கிறோம்.

நம் சாதி பெரிய எண்ணிக்கை கொண்ட சாதி, நம் ஆள் வலிமையை வைத்து, நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் என்று கருதும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1952-லிருந்து அப்படி என்ன அரசியல் துறையில் சாதித்து விட்டீர்கள்? வட்டார, மாவட்ட அரசியல் பிரமுகர்களாக இருந்து - அவற்றின் வழி சில பலன்களை அடைந்திருக்கலாம்.

ஆனால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு அரசியல் தலைமைக்கு ஏன் வர முடியவில்லை என்று சிந்தி யுங்கள். நேர்வழியில் - மக்களுக்கான இலட்சியங்களோடு - ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு அரசியல் தலைமைக்கு வர வேண்டும் என்று சிந்தியுங்கள்.

ஆள் வலிமை அல்ல, அறிவு வலிமை வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது. அறத்தின் வலிமையே நிரந்தரப் பலன்கள் தரும்.

தருமபுரி நாயக்கன்கொட்டாய் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளவரசன் -- வன்னியர் வகுப்பு திவ்வியா காதல் திருமணம் -- பெரும் கலகமாக _- தாழ்த்தப்பட்டோர் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட அவலமாக வெடித்தது.

அடுத்து, திருச்செங்கோட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பு கோகுல்ராஜ் -- கொங்கு வேளாளர் வகுப்பைச் சேர்ந்த சுவாதி காதல். கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார்.

உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட வகுப்பு சங்கர் -- தேவர் வகுப்பு கவுசல்யா திருமணம். சங்கர் கொலை செய்யப்பட்டார்.

மேற்படி மூன்று வலுவான பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகளில் உள்ள கற்றறிவாளர் மற்றும் விழிப்புணர்ச்சி பெற்ற மக்கள் சிந்திக்க வேண்டும்.

பார்ப்பன வகுப்புப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவில்லையா? பல திருமணங்கள் நடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சைவப் பிள்ளைமார், முதலியார், நாயக்கர், நாயுடு, செட்டியார் வீட்டுப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவில்லையா? பல திருமணங்கள் நடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ச் சாதிகளில் இதர பல சாதிகளிலும், இதேபோல் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. அங்கெல்லாம் கொலைகள் இல்லை; வீடுகள் கொளுத்தப்படவில்லை. இந்தக் கலப்புத் திருமணங்க ளால் மேற்படி சாதிகள் எல்லாம் அழிந்து விட்டனவா? இல்லை.

வன்னியர்,- கொங்கு, வேளாளர் - முக்குலத்தோர் வகுப்புகளில் மட்டும் ஏன் இப்படி காதல் திருமணங் களால், கொலைக்களங்கள் உருவாக வேண்டும்? அதனால் அந்தப் பெண்களின் குடும்பங்கள் அழிகின்றனவே அதைக் கவனித்தீர்களா?

இந்த மூன்று பெரிய சாதிகளும் - அமைதியான வாழ்க்கையை இழந்து எந்நேரமும் பதற்றத்திலேயே இருந்தால் அவர்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் எல்லாத் துறையிலும் பாதிக்கப்படாதா?

பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் இந்தப் பிள்ளைகள் அமைதியாகப் படிக்க முடிகிறதா? கைகளில் சாதிக் கயிறுகள் கட்டிக் கொண்டு, எந்நேரமும் அந்த இளம் பிஞ்சுகள் சாதி உணர்விலும் -குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் பகை உணர்ச்சியுடனும் நடந்து கொள்வது அவர்களின் படிப்பைப் பாதிக்காதா? இப்படிப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் - நாளைக்கு தமிழ்நாட்டில் அமைதியாகக் கற்கும் இதர சாதி மாணவர்களோடு எல்லாத் துறையிலும் போட்டி போட முடியுமா? இதன் எதிர் வினையாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் தங்கள் கைகளில் கயிறு கட்டிக் கொண்டு எதிர் முகாமாகச் செயல்படுகிறார்கள். மேலும் பதற்றம் இருதரப் பினர்க்கும் கூடுதலாகிறது.

மீண்டும் சொல்கிறோம்; ஆள் எண்ணிக்கை அதிகாரத்தைக் கொடுப்பதில்லை. அறிவுக் கூர்மையே அதிகாரத்தைக் கொடுக்கிறது. பிறரை ஆதிக்கம் செய்யும் அதிகாரம், வேறொரு சூழலில் அடுத்தவர் அதிகாரத்திற் குக் கீழ்படிய வைக்கும். பிறரைத் தம்மவர் போல் கருதும் அறம் சார்ந்த அதிகாரமே நிலைக்கும்; அனைவர் நன்மைக்கும் உகந்தது.

வலுவான சாதிகளைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டு அரசியல் நடந்தும் அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சாதிகளில் சிலர் செய்யும் தவறுகளைக் கண்டித்துத் திருத்த இத்தலைமைகள் முன்வருவ தில்லை. சாதிச் சண்டைகள் நிகழ்ந்தால் நல்லது; இரண்டு பக்கமும் தங்கள் ஆட்கள் மூலம் ஆதரவு பெறலாம் என்று கருதுகின்றன.

நாய்க்கன்கொட்டாய் - தீ வைப்புக் கொடுமைகளைத் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் கண்டிக்க வில்லை.

கோகுல்ராஜ் கொலையைத் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் கண்டிக்கவில்லை. சங்கர் படுகொலையை ஸ்டாலின் கண்டித்தார். கருணாநிதி கண்டிக்கவில்லை. செயலலிதா கண்டிக்கவில்லை. கடலூர் மாவட்டம் சேசசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் கொளுத்தப்பட்டதை தி.மு.க. தலைமையும் கண்டிக்கவில்லை; அ.தி.மு.க. தலைமையும் கண்டிக் கவில்லை. இப்படி எத்தனையோ நிகழ்வுகளைக் கூறலாம்.

தன் குழந்தை தவறு செய்தால், அதைக் கண்டிப்பவர் தானே உண்மையான தாய். நல்ல தாய். தன் நண்பன் தவறு செய்தால் அவனைக் கண்டித்துத் திருத்துபவன் தானே உண்மையான நண்பன்; நல்ல நண்பன்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நம் மக்களுக்குக் தாயாக இல்லை; ஐஸ்கிரீம் கொடுத்துப் பிள்ளை பிடிப்பவனாக இருக்கின்றன. அவை நம் மக்களுக்கு நல்ல நண்பனாக இல்லை; தங்களது கொள்ளை வாணிகத்திற்குக் கூட்டாளி சேர்ப்பவையாக இருக்கின்றன.

பெரிய சாதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தங்கள் கைகளில் கயிறுக் கட்டிக் கொள்ளும் பழக்கம், - சக மாணவர்களை சாதி கேட்கும் பழக்கம் எந்த உளவியலில் வந்தன? தாங்கள் மேலாதிக்கம் செய்யப் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளையும் - பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சாதிகளையும் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்க வேண்டியவர்களே அல்லாமல் தங்களோடு சமமாகப் பழக உரிமை படைத்தவர்கள் அல்லர் என்ற உளவியல் தானே அது!

இவ்வாறான சாதி உணர்வு மிகுந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்களா? சமூகத்தில் நிலவும் அறிவுப் போட்டியில் வெல்வார்களா? எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு வளர்ந்துள்ள உற்பத்திக் கருவிகளும், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் பிறப்பு அடிப்படையில் ஒருவரை இன்னொருவருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராய் வைத்திருக்காது. இது நிலகிழமைக் காலமல்ல!

படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் 90 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலையின்றி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளார்கள். படிப்புக் கேற்ற வேலையில்லாமல் குறைந்த கூலிக்கு வேலை பார்க்கும் உயர் கல்வி கற்றோர் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரிய சாதிகளைச் சேர்ந்தோர் பெரிய எண்ணிக்கையில் பாதிக்கப் பட்டுள்ளனர். வாழ்வுரிமைக்கான இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் சாதி உணர்வில் இளைஞர்களை ஆழ்த்துவது, அவர்களை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையே, சீர்குலைத்துவிடும்!

சாதி கூடாது என்கிறோம்; ஆனால் அதை அவசர அவசரமாகக் காலாவதி ஆக்கிட முடியாது என்பதையும் அறிவோம். இப்பொழுது உடனடித் தேவை என்ன? சாதியின் பெயரால் ஆதிக்கம் செலுத்துவது, மற்றவர் களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பது, சனநாயக உரிமைகளைத் தடுப்பது, சாதி கடந்த விருப்பத் திருமணங்களை எதிர்ப்பது போன்றவை கூடவே கூடாது.

பெரியசாதி ஆதிக்கவாதத்தின் பின் விளைவுகளை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களின் வாரிசுகளும் அடுத்த தலைமுறையினரும், இந்தப் போட்டி உலகில் அமைதியாள - முன்னேற்றமான வாழ்வு வாழ வேண்டும்; - அதற்கான தகுதிகளையும்- உளவியல் பண்புகளையும் அவர்கள் பெற வேண்டும். சாதி உணர்வைத் தூண்டிவிட்டு, குட்டித் தலைவர் களாக, வட்டாரத் தலைவர்களாக, அரசியல் கட்சிக ளிடம் பேரம் பேசும் ஆற்றல் பெற்றவர்களாக வளர்த்திடத் தந்திரம் செய்யும் தன்னலவாதிகளின் வலைகளில் சிக்காதீர்கள்.

தமிழ்ச் சாதிகள் அனைத்தும் ஒற்றைத் தமிழினத் தின் பிரிவுகள்தாம். நம் அனைவர்க்கும் தாய்மொழி தமிழ்! யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்) என்றோர் நம் முன்னோர். பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமம் என்ற தமிழினப் பேராசான் வள்ளுவரி லிருந்து வள்ளலார் வரை அனைவரும் நம்மினத்தின் முன்னோர்கள்!

இந்த மரபில் வந்த நாம், தமிழர் ஒற்றுமை வளர்ப்போம்; தமிழர் அறம் காப்போம்.

Pin It