‘பிளவு பட்ட வழிகள் பொருந்திய

பெரிய காட்டிலே, தன்

கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல் நானும்

தேடிச் செல்ல விரும்புகிறேன்’

என்று தன் தலைவனைப் பிரிந்த பாலை நிலத் தலைவி உடல் மெலிந்து, பழைய அழகு கெட்டு வருந்தி,“நெறிபடு கவலை நிரம்பா நீளிடை / வெள்ளி வீதியைப் போல நன்றும் / செலவு அயர்ந்திசினால் யானேஞ்” (அகநானூறு - 147) உரைப்பதாகப் பாடுகிறார் ஒளவையார். சங்கப் பாடல்கள் பாடிய படைப்பாளிகள் வெகுசிலரே தங்கள் சமகாலப் படைப்பாளிகள் குறித்த பதிவைச் செய்துள்ளனர்.

வெள்ளிவீதியார் வடித்த தலைவிகளின் துயரமும் தலைவனுக்காகக் காத்திருத்தலும் ஒளவை காலத்தில் வெகுவாகப் பரவியிருந்திருத்தல் வேண்டும். அது ஒளவையால் உள்வாங்கப்பட்டிருக்கிறது. தம் தலைவர்களைத் தேடி எல்லை கடந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து அவர்களுக்காக ஏங்கி நிற்கும் எதிர்பார்ப்பற்ற அன்பு நிறைந்த வெள்ளிவீதி தலைவிகளின் குரல்கள் சங்ககால திணைகளில் ஒலித்ததன் எதிர்வினையாக ஒளவையின் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ள முடியும். ஒளவை என்கிற மிகச் சிறந்த படைப்பாளியால் போற்றப்பட்ட ஒரு படைப்பாளி என்கிற அளவிற்குச் சிறப்பு வாய்ந்தவராக வெள்ளிவீதியாரை அடையாளம் காண முடிகிறது.

sangam womens 600குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற அகப்பாடல் திணை மரபுகளில் முல்லை தவிர்த்த மற்ற நான்கு திணைகள் சார்ந்தும் வெள்ளிவீதியின் பாடல்கள் வகுக்கப்பட்டுள்ளன. காதலும் (களவு, கற்பு), காதல் தவிர்த்த மற்ற (வீரம், கொடை...) அனைத்தும் என வகைப்படுத்தப்பட்டுள்ள சங்கப் பாடல்களுள் வெள்ளிவீதியார் காதலை மட்டுமே பாடியுள்ளார். குறிஞ்சித் திணை சார்ந்து மூன்று, மருதத் திணை சார்ந்து இரண்டு, நெய்தல் திணை சார்ந்து மூன்று, பாலைத் திணை சார்ந்து ஐந்து என பதிமூன்று பாடல்கள் இவருடையவை. நற்றிணையின் 235ஆவது பாடலையும் இணைத்து வெள்ளிவீதியின் பாடல்கள் பதினான்கு என்று சொல்வோரும் உண்டு.

ஒளவையின் தலைவிகள் தம் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசியது போலவே, வெள்ளிவீதியாரின் தலைவிகளும் பேசுகிறார்கள். மேலே குறிப்பிட்டதை ஒப்புநோக்கிப் பார்க்கும் போது, வெள்ளிவீதியை மேற்கோள் காட்டி ஒளவை பாடியிருப்பதால், ‘பெண் உணர்வுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்துவதில்’ ஒளவைக்கு முன்னோடி வெள்ளிவீதி என்றே சொல்லலாம்.

‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ என்கிற உரிப்பொருளைக் குறிஞ்சித் திணை கொண்டிருந்தாலும் அதன் தலைவிகள், தலைவனைப் பிரிந்து வாழ நேரிடும் சூழலில் அவனுக்காக ஏங்கித் தவிப்பவர்களாகவே வெள்ளிவீதி படைத்தளிக்கிறார். தன்னைக் கடிந்து கொள்ளும் உறவினர்களைப் பார்த்து வெளிப்படையாக, “இடிக்கும் கேளிர்! நும்குறை ஆக / நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல” (குறுந்தொகை - 58) அதாவது, ‘தலைவனைப் பிரிந்து காம நோயினால் தான் அவதியுறுவதாகவும் அந்நோயினால் தன் உடல் அழிவதற்கு முன்னர், அதைத் தடுத்து நிறுத்துவது அவர்களின் முதற் கடமை’  என்பதாகவும் தலைவி எடுத்துரைக்கிறாள்.  மற்றொரு பாடலில், “அம்ம வாழி தோழி! நம் ஊர்ப் / பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ” (குறுந்தொகை - 146). தலைவனுக்காக ஏங்கி நிற்கும் தலைவியைத் தோழி, ‘நமது ஊரில் பிரிந்த காதலரை சேர்த்து வைக்கும் சான்றோர்களும் இருப்பதனால், நீ அச்சப்படத் தேவையில்லை’  என்று தேற்றுகிறாள்.

இங்கு சமகாலத்துக் காதலர்கள் களவு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காதல் செய்வதும், காதலித்து மணம் செய்து கொள்வதும் ஒவ்வாத காரியங்களாகப் பார்க்கப்படும் இந்தியச் சூழலில் - காதலுக்கு எதிராக ‘கௌரவக்’ கொலைகள் நடந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நாகரிகமான தமிழ்ச் சமுதாயம் எத்தனை போற்றுதலுக்கு உரியது! திணைகளையும் இனக்குழுக்களையும் கடந்து, இரவுக் குறியிலும் பகற்குறியிலும் தலைவியும் தலைவனும் சந்தித்துள்ளனர். அவர்களைப் பாணர்களும் தோழிகளும் நெறிப்படுத்தியுள்ளனர் என்கிற தகவல்கள் சங்க இலக்கியப் பரப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இம்மாதிரியான  காதல் வாழ்வு இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சமகாலத்து இலக்கியங்களும் ஊடகங்களும் காதலைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் குடும்பம் கடந்து, தெரு கடந்து, ஊர் கடந்து, சமூகம் கடந்து, சமயம் கடந்து ஒரு பெண்ணும் ஆணும் காதலிப்பதும் மணம் செய்து கொள்வதும் ஒவ்வாத காரியமாக எப்போது ஆகிப்போனது? எல்லை தாண்டிக் காதலித்த பழந்தமிழ் காதல் மரபின் தொப்புள்கொடியை ‘கௌரவம்’ என்கிற துருப்பிடித்த அரிவாள்கள் ஏன் அறுக்கின்றன? தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் இலக்கிய மரபுகளையும் விதந்து பேசுகின்றவர்கள், எல்லை தாண்டிய காதல் என்பது நமது மரபின் நீட்சியே என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? இங்குதான் வெள்ளிவீதி போன்றோர் நமக்குத் தேவைப்படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளிவீதியாரால் படைக்கப்பட்ட அவரது தலைவிகள் நமக்குக் காதலைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

தலைவனைப் பிரிந்து ஒரு கணமும் வாழ முடியாத தலைவிகள் வெள்ளிவீதியின் வார்ப்புகளாக உள்ளனர். “நசைதர வந்த நன்ன ராளன் / நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் / இன்று இப்பொழுதும் யான் வாழலெனே” (அகநானூறு- 362). தலைவன் பிரிவால் தேமல் பரவி அவனது வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தலைவி தோழியிடம், ‘தலைவன் நம்மைக் கூடாது சென்றால் இன்றிரவும் நான் உயிருடன் இருக்க மாட்டேன்’ என்று கூறுகிறாள். இந்தத் தலைவியின் அன்பை தலைவன் புரிந்து கொண்டிருப்பானா என்பது தெரியாது. ஆனாலும் தலைவியின் எதிர்ப்பார்பற்ற அன்பை வெள்ளிவீதி காட்டுகிறார்.

மருதத் திணை தலைவன் பரத்தைக்காகத் தலைவியைப் பிரிந்திருந்தாலும் அவன் மீது ஊடல் கொள்ளாது, ‘அவனது பிரிவால் தன் அணிகலன்கள் கழலுகின்ற நோயைப் பற்றி தலைவனிடம் வெள்ளாங்குருகு (சிறிய பறவை) சொல்லவில்லை’ என்று அதைக் கடிந்து கொள்கிறாள் தலைவி.

சிறு வெள்ளாங் குருகே! சிறு வெள்ளாங் குருகே!

------ -------- ------- ------ --------

இழைநெகிழ பருவரல் செப்பா தோயே? (நற்றிணை - 70).

‘தலைவனைக் கண்டு சிரித்த தனது வெண் பற்களும் தலைவனைப் பெறாமல் தனது உயிரும் அழியட்டும்’ என்கிற நிலைக்குப் போகிறாள் குறுந்தொகைத் தலைவி (பாடல் - 169).

‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ என்கிற நெய்தல் திணை உரிப்பொருளின் அடிப்படையில், கடலுக்குள் சென்ற தலைவன் திரும்புவானா மாட்டானா என்று எண்ணி கடற்கரைப் பகுதியில் காத்திருந்து காத்திருந்து இராப்பொழுது முழுவதும் தான் மட்டும் கண்ணுறங்காத (“யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு / கனைஇருங் கங்குலும் கண்படை இலனே” நற்றிணை - 348)வெள்ளிவீதியின் தலைவிகள் தனிமைத் துயரோடு நீண்ட மாலைப் பொழுதைக் கடந்து கொண்டிருக்கிறார்கள் (குறுந்தொகை - 386). அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் அத்தனையுமே அவர்களது காமநோயை அதிகமாக்குவனவாகவே உணர்கிறார்கள். இந்நோயைப் போக்க தலைவன் அருகில் இல்லாத சூழல் அவர்களை அலைக்கழிக்கிறது (“அன்றிலும் என்புறு நரலும்; அன்றி / விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் / யாமம் உய்யாமை நின்றது / காமம் பெரிதே; களைஞரோ இலரே!” நற்றிணை - 335).

திணை சார்ந்த உரிப்பொருள்கள் வெவ்வேறானவையாக இருந்த போதிலும் பெரும்பாலான பாடல்களில் தலைவிகளின் ஏக்கமும் காத்திருத்தலும் ஆற்றாமையும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது வெள்ளிவீதியின் பாடல்களுக்கான தனித்தன்மை என்று சொல்லலாம்.

பாலை, ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்கிற உரிப்பொருளைக் கொண்டது. தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவிகளின் உள்ளுணர்வு சார்ந்த பாடல்கள் வெள்ளிவீதியாரின் பாடல்களுள் அதிகமானவை. இந்தத் திணை சார்ந்த தலைவிகளும் முன்னவர்களைப் போலவே தலைவனுக்காக - அவன் அன்பிற்காக ஏங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது

----- ------ ------ ------ ------ ----- -------

பசலை உணீஇயர் வேண்டும் (குறுந்தொகை - 27)

‘பசுவின் பால் கன்றாலும் உண்ணப்படாது கலையத்திலும் கறக்கப்படாது வீணாவது போல என் பேரழகு, எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் பயன்படாது இப்பசலை உண்ணும் நிலைக்கு ஆளானதே!’ என்று ஏங்குகிறாள் ஒரு பாலைநிலத் தலைவி. தன் தலைவனைத் தேடிப் புறப்பட்ட குறுந்தொகைத் தலைவி, ‘நடந்து நடந்து கால்கள் ஓய்ந்தாள்; தேடித் தேடி கண்கள் பூத்தாள்; விண்மீன்களை விட அதிகமாக வாழ்கின்ற மக்களிடையே அவளது தலைவனை எங்கு தேடிக் கண்டடைவாள்?’ (பாடல் - 44) என்று கேட்கிறார் வெள்ளிவீதி.

தன் காதலனைத் தேடும் இன்னொரு தலைவி  தன் தோழியிடம், ‘என் தலைவன் நிலத்தை அகழ்ந்து உள்ளே போயிருக்க முடியாது; வானத்தை நோக்கி உயரே சென்று மறைந்து விடவும் முடியாது; குறுக்கிடும் கடலின் மீது காலால் நடந்தும் போயிருக்க முடியாது; அதனால் நாடுகள், ஊர்கள், குடிகள் தோறும் தேடிப் பார்த்தால் அகப்படாமல் தப்பிவிட முடியுமோ?’ (“நிலம்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார் / விலங்குஇரு முந்நீர் காலின் சொல்லார்ஞ்” குறுந்தொகை - 130) என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள். கவித்துவத்தின் உச்சமாக விளங்கும் இந்தப் படைப்பு, இந்த உலகம் பற்றிய முழுமையான புரிதல் உள்ள ஒருவராலேயே சாத்தியமாகியிருக்கும். அந்த ஒருவராகவே வெள்ளிவீதி நம் கண்முன் விரிகிறார்.

எவ்வளவுதான் ஊரார் அலர் தூற்றினாலும் பசலை நோய் அவர்களைத் தின்று தீர்த்தாலும் பொறுப்பில்லாமல், நிர்கதியாக தனிமையில் விட்டுவிட்டுப் பிரிந்து சென்ற தலைவர்களுக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தன் உணர்வுகளையும் கூச்சத்தால் மறைத்துக் கொள்ளாது வெளிப்படையாகப் பேசுகின்ற தலைவிகள் வெள்ளிவீதியின் பாடல்களில் உலா வருகின்றனர்.

இவரது பாடல்களை மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு, ‘ஆண்களுக்காக ஏங்கும் பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை’ என்பது போல் தோன்றலாம். தந்தை வழிச் சமூகம் வளம் பெறத் தொடங்கிய காலகட்டத்தில் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுகளாகத் தோன்றினாலும் நேசித்தலுக்கு அந்நியமான ஆண்களின் போக்குகளுக்கு விடுக்கப்படும் சாட்டையடியாகவும் இப்பாடல்களை வாசிக்கலாம்.

வெள்ளிவீதியின் அன்பு சொட்டும் இந்தப் பாடல்கள், எல்லா காலத்திலும் எவ்வித எதிர்ப்பார்ப்பும் அற்ற பெண்களின் அன்பிற்கு நெருக்கமானவையாக விளங்கும் என்பதில் எள்ளவும் ஐயமிருக்க முடியாது.

- கோ.பழனி

Pin It