(உ.வே.சாமிநாதையருக்கு ‘மணிமேகலை’ பௌத்த சமயக் காப்பியம் என்பதை உணர்த்தி, அதன் உரை ஆக்கத்திற்குப் பேருதவி செய்த கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் மளூர் உ.வே.ரங்காசாரியர்)

UVSwaminatha Iyer 450டாக்டர் உ.வே.சாமிநாதையர் அரை நூற்றாண்டு காலம் ஆசிரியராகவும், முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பதிப்பாசிரியராகவும் இருந்து விளங்கியவர். அயராத பேருழைப்பின் வழியே இந்த இரு துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர் சாமிநாதையர்.

கல்லூரி ஆசிரியர் பணிக்கு இடையில் பழந்தமிழ் நூற்பதிப்பு பணிகளைச் செய்து வந்த அவர், உரையில்லாத தமிழ் நூல்கள் சிலவற்றிற்கு உரையெழுதிப் பதிப்பித்து வெளியிட்டு உரையாசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார்.

பிற்காலத்தில் தியாகராச செட்டியார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற அறிஞர்களின் வரலாறுகளை எழுதி வெளியிட்டு உரைநடை நூலாசிரியராகவும் புகழ் பெற்று விளங்கியிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர் என்று பல நிலைகளில் அவர் பெருமை பெற்று விளங்கியிருப்பது அவரது சிறப்புகளுள் ஒன்றாகும்.

சாமிநாதையர் உரையாசிரியராக இருந்து விளங்கிய வரலாறு அவர் பதிப்பித்து வெளியிட்ட மணிமேகலைப் பதிப்பிலிருந்து தொடங்குகிறது. 1898இல் வெளிவந்த மணிமேகலைப் பதிப்பிற்கு எழுதிய உரையே சாமிநாதையரின் முதல் உரையாகும். முதல் உரை எழுதியது குறித்துப் பின்னாளில் இப்படி எழுதியிருந்தார் சாமிநாதையர்:

முதல் முதலாக நான் உரையெழுதிய நூல் மணிமேகலை. எனது உரை எளிய நடையில் அமைந்தமை பற்றிப் பலர் பாராட்டினர். பல விஷயங்களை விளக்குகின்றதென்று பலர் புகழ்ந்தனர். கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக இருந்த வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், “யான் இம் மணிமேகலைப் பதிப்பைப் பற்றி முகமனாவொன்றும் எழுதுகின்றிலேன். மிகவும் அற்புதமாயிருக்கின்றது. யான் விரும்பியாங்கே குறிப்புரையும் பிறரால் இது வேண்டும் இது வேண்டாவென்று சொல்லப்படாதவாறு செவ்வனே பொறித்திருக்கும் பெற்றிமையை யுன்னுந் தோறு மென்னுள்ளங் கழிபேருவகை பூக்கின்றது. இப்போழ்தன்றே யெந்தஞ் சாமிநாத வள்ளலைக் குறித்துக் குடையும் துடியும் யாமும் எம்மனோரும் ஆடிய புகுந்தாம். இன்னும் எம் மூரினராய் நின்று நிலவிய நச்சினார்க்கினிய நற்றமிழ்ப்பெருந்தகை போன்று பன்னூற்பொருளையும் பகலவன் மானப்பகருமாறு பைந் தமிழமிழ்தம் பரிவினிற்பருகிய பண்ணவர் பெருமான் எந்தம் மீனாட்சிசுந்தர விமலன் நுந்தமக்கு வாணாள் நீட்டிக்குமாறு அருள்புரிவானாக’ என்று எழுதினார் (என் சரித்திரம்).

மணிமேகலையில் தொடங்கிய உரையாக்கப் பணி, வாழ்நாளின் இறுதிவரையில் தொடர்ந்திருக்கிறது. அவ்வப்போது தாம் பதிப்பித்த சில நூல்களுக்குக் குறிப்புரையும், சில நூல்களுக்கு அரும்பதவுரையும் எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் சாமிநாதையர் செய்து வந்திருக்கிறார். சாமிநாதையரின் உரை நூல்கள் காப்பியம், சங்க இலக்கியம், சிற்றிலக்கியம் எனும் வகைப்பாடுகளுள் அடங்கிக் கிடக்கின்றன. அவர் உரை எழுதிய நூல்கள்,

அரும்பதவுரை காப்பியம்

 • கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிச்செய்த மணிமேகலை, 1898, 1921, 1931

சிற்றிலக்கியம்

 • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சீகாழிக்கோவை, 1903
 • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சூரைமாநகர்ப் புராணம், 1904
 • திருப்பூவணம் கந்தசாமிப் புலவரியற்றிய திருப்பூவணநாதருலா, 1904, 1923
 • சேறைக்கவிராசா பிள்ளை இயற்றிய திருக்காளத்திநாதருலா, 1904, 1925
 • திருவாவடுதுறையாதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருவாரூர்த் தியாகராச லீலை, 1905, 1928
 • அந்தக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றத்து உலா, 1905
 • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மண்ணிப்படிக்கரைப் புராணம், 1907
 • வீரைநகர் ஆனந்தக்கூத்தர் இயற்றிய திருக்காளத்திப்புராணம், 1912
 • திருக்கைலாய பரம்பரைத் திருவாவடு துறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப்புராணம் - 1892; முதல் பதிப்பு; அரும்பதவுரை இல்லை; 1913, இரண்டாம் பதிப்பில் அரும்பதவுரை எழுதியமைக்கப்பட்டுள்ளது.
 • பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயர் இயற்றிய தேவையுலா, 1907 மறு அச்சு, 1911, இரண்டாம் பதிப்பு, 1925
 • திருவாவடுதுறையாதீனத்துத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக் கோவை, 1926

குறிப்புரை காப்பியம்

 • கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை, 1924, 1935
 • உதயணகுமார காவியம், 1935

சிற்றிலக்கியம்           

 • திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மகாவித்வான் ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, 1888, முதல் பதிப்பில் குறிப்புரை எழுதியமைக்கவில்லை, 1931 இரண்டாம் பதிப்பில் குறிப்புரை உள்ளது
 • செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 1906, 1927
 • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய தனியூர்ப்புராணம், 1907
 • மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடுதூது, 1930, 1932
 • மாயூரம் இராமையர் இயற்றிய மாயூரமென்று வழங்குகின்ற திருமயிலைத் திரிபந்தாதி, 1930
 • சொக்கநாதப் புலவர் இயற்றிய மதுரைச்சொக்கநாதர் தமிழ்விடு தூது, 1930
 • புராணத்திருமலைநாதர் இயற்றிய மதுரைச் சொக்கநாதருலா, 1931
 • கடம்பர்கோயில் உலா, 1932
 • சின்னப்ப நாயக்கர் இயற்றிய பழனிப்பிள்ளைத்தமிழ், 1932
 • காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, 1933
 • கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள், 1932
 • பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை இயற்றிய மதுரை மும்மணிக்கோவை, 1932
 • சங்கர நயினார் கோயிற் சங்கரலிங்க உலா, 1933
 • சங்கர நயினார் கோயில் அந்தாதி, 1934
 • திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய விளத்தொட்டிப் புராணம், 1934
 • துறைமங்கலம் சாமிநாததேசிகரென்னும் வீரசைவக் கவிஞர் இயற்றிய பழமலைக்கோவை, 1935
 • திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய ஆற்றூர்ப்புராணம், 1935
 • திருவாவடுதுறையாதீனத்துத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய கலைசைக்கோவை, 1935
 • சிராமலைக்கோவை, 1937
 • எல்லப்ப நயினார் இயற்றிய திருவாரூர்க் கோவை, 1937
 • அந்தக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றத்து உலா, 1938
 • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய திருமாலிருஞ்சோலைமலை அழகர் கிள்ளைவிடுதூது, 1938, 1941
 • திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசலப் புராணம், 1939
 • தொல்காப்பியத்தேவர் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 1940
 • குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள், 1939
 • வீரராகவகவி இயற்றிய வில்லைப்புராணம், 1940

kurundthokai 600பதவுரை, விசேடவுரை சங்க இலக்கியம்

 • குறுந்தொகை, 1937 என்ற வகைகளில் அமைந்திருக்கின்றன.

சாமிநாதையர் 21.10.1880இல் சேலம் இராமசாமி முதலியாரைச் சந்திக்கச் சென்றபோது, இராமசாமி முதலியார் மணிமேகலைச் சுவடியை இவரிடம் கொடுத்துப் பதிப்பிக்கச் சொல்லிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றாகும். முதலியார் கொடுத்த மணிமேகலை மூலபாடச் சுவடியைக் கையில் வைத்துக் கொண்டு மேலும் பல மணிமேகலைச் சுவடிகளைத் தேடித் திரட்டி ஒப்புநோக்கி ஆராய்ந்து உரை எழுதி 1898இல் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். ஏறத்தாழ பதினெட்டு ஆண்டு கால உழைப்பு, ஆராய்ச்சியின் விளைவாக மணிமேகலைப் பதிப்பு வெளிவந்திருக்கிறது.

சேலம் இராமசாமி முதலியாரிடமிருந்து மூலம் பாடம் மட்டுமிருந்த மணிமேகலைச் சுவடியைப் பெற்று வந்தது முதற்கொண்டு இந்நூலுக்குரிய உரைப் பிரதியைத் தேடும் முயற்சியில் சாமிநாதையர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். தேடுதலில் வேறு பல பழந்தமிழ் நூற்சுவடிகள் கிடைத்தனவேயன்றி மணிமேகலை உரைப் பிரதி அவருக்கு எங்கும் கிடைக்கப் பெறவில்லை. சென்னை, தஞ்சை முதலிய நகரங்களில் இருந்த பழைய கையெழுத்துப் புத்தக சாலைகளிலும் தேடிப் பார்த்திருக்கிறார்; அங்கு வேறு பல பழந்தமிழ் நூற்சுவடிகளே கிடைத்தன; மணிமேகலை உரைப்பிரதி கிடைக்கப் பெறவில்லை. வெளிநாட்டிலுள்ள நண்பர்கள் பலரைப் பத்திரிகை வாயிலாக இதைப் பற்றி எழுதியும் கேட்டிருக்கிறார்; அவ்வாறு கேட்கப்பட்டவர்களுள், கொழும்பிலிருந்த யாழ்ப்பணத்து நல்லூர் கைலாசப் பிள்ளையவர்கள், தமது கையாலெழுதிய மூலப்பிரதி ஒன்றை அனுப்பி வைத்தாரேயன்றி உரைப் பிரதியைத் தேடிக் கண்டு அனுப்பி வைக்க அவரால் இயலவில்லை.

சாமிநாதையர், பாரிஸ் நகரத்திலிருந்த  ஜூலியன்வின்ஸன் என்பவருக்குக் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார். அவர் ‘இந்நகரத்தில் கையெழுத்துப் புத்தக சாலையில் மணிமேகலை மூலப்பிரதி ஒன்று மட்டுமே உள்ளது’ என்று தெரிவித்து மாதிரிக்காக அதிலிருந்து பதிகப் பகுதியை மட்டும் படியெடித்து எழுதி அனுப்பியிருக்கிறார். அவராலும் மணிமேகலை உரைப் பிரதியைத் தேடித் தர இயலவில்லை. அன்பர்கள் பலரும் ‘கிடைக்கவில்லை’ என்ற விடையை மட்டுமே அளிக்க முடிந்ததே அன்றி இது குறித்துச் சாமிநாதையருக்கு ஒன்றும் செய்ய இயலவில்லை.

சாமிநாதையர், மணிமேகலை உரைப் பிரதியைத் தேடிப் பெறுவதில் பல்வேறு முயற்சிகளைச் செய்து முடித்த பின்னர் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டு முடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். இதை அறிந்த சாமிநாதையரின் அன்பர்கள் பலர் அவ்வாறு வெளியிடுதல் வேண்டாம், உரை எழுதியே வெளியிட வேண்டுமென்று இவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தாமே அந்நூலுக்கு உரையெழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து மணிமேகலையின் முகவுரையில் இப்படி எழுதியிருக்கிறார் அவர்,

எவ்விடத்தும் இந்நூலுக்கு உரையகப்படாமையாலும்,  உரை முன்பு உண்டென்று ஒருவாற்றாலும் விளங்காமையாலும்  இனி மூலத்தை மட்டுமாவது வெளிப்படுத்த வேண்டுமென்று நிச்சயித்துப் பதிப்பிக்கத் தொடங்கிய பொழுது, தமிழ்ப் பாஷாபிமானிகளாகிய அன்பர்களிற் சிலர், ‘உரையெழுதியே இதனை வெளிப்படுத்த வேண்டும்’ என்று வற்புறுத்திக் கூறினமையின், அவர்கள் சொல்லை மறுத்தற்கஞ்சி, இது புலவர் திலகர்கள் செய்தற்குரிய அரிய காரியமென்று கருதாமல், “ஆங்கவன் புகழ்ந்த நாட்டை யென்பெனு நறவமாந்தி, மூங்கையான் பேச லுற்றானென்னயான் மொழிப லுற்றேன்” என்று பெரியோர் கூறியதற்கு இலக்கியமாக, தக்க நூலாராய்ச்சியும் எண்ணியவற்றைச் சுவைபயக்கும்படி நல்ல நடையில் விளங்கவெழுதும் வன்மையுலில்லாத யான், “மணிமேகலை நூனுட்பங்கொள்வதெங்கன்” என்று ஆன்றோரால் நன்கு பாராட்டப்பட்டுள்ள இந்நூற்கு அரும்பதவுரையென்ற ஏதோவொன்றை எழுதத் தொடங்கினேன்.

மணிமேகலைச் செய்யுளுள் உள்ள சொற்கள் பெரும்பாலானவற்றிற்குப் பொருள் நன்றாக விளங்கிக் கிடந்த காரணத்தால், அரிய சொற்களுக்கு மட்டுமே பொருள் தரும் பணியைச் சாமிநாதையர் செய்திருக்கிறார். ஆங்காங்குள்ள செய்யுட் தொடர்களை ஒத்தவைகளாக மணிமேகலையிலும் வேறு பல நூலிலும் காணப்பட்ட செய்யுள் தொடர்களோடு அவ்வவ்விடத்தில் அமைத்துக் காட்டி அவற்றின் இடங்களை விளங்கச் செய்தும், பொருள் விளங்காத இடங்களில் கேள்விக்குறியை (?) அமைத்தும் உரைக் குறிப்பைத் தந்திருக்கிறார்.

கையெழுத்துப் பிரதிகளிற் கண்ட பாடபேதங்களை எடுத்துக் காட்டி அவற்றுள் இன்றியமையாத சிலவற்றிற்கு மட்டுமே பொருளைப் புலப்படுத்தியும், எல்லோருக்கும் எளிதிற் பொருள்விளங்குதற் பொருட்டு வடசொற்களைப் பெரும்பாலும் விரவுவித்தும் உரை எழுதிச் செல்லும் வழக்கத்தைச் சாமிநாதையர் பின்பற்றியிருக்கிறார்.

சாமிநாதையரின் மணிமேகலை ஆராய்ச்சிப் பணிக்கும், உரை ஆக்கப் பணிக்கும் பெருந்துணையாக இருந்து, அவ்வப்போது ஊக்கமளித்து வந்தவர் கொழும்பு நகரத்துப் பொ. குமாரசாமி முதலியார். மணிமேகலை உரையாக்கத்தின்போது ஏற்பட்ட ஐயங்களுக்கு இலங்கையிலுள்ள பௌத்தவித்தியோதய பாடசாலைத் தலைவராகிய ஸ்ரீஸ§மங்களரவர்களைக் கொண்டு விடைகள் எழுதியனுப்பிப் பேருதவி செய்தவரும் குமாரசாமி முதலியாரே ஆவார்.

சாமிநாதையருக்கு மணிமேகலையில் ஏற்பட்ட ஐயங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள பேருதவி செய்த மற்ற இரு அன்பர்கள், பெருகவாழ்ந்தான் உ.வே. அரங்காசாரியர் அவர்களும், கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதராகிய திருமலை ஈச்சம்பாடி உ. வே. ஸ்ரீநிவாஸாசாரியர் அவர்களும் ஆவர். இவற்றுள் உ.வே. அரங்காசாரியாரே மணிமேகலை இன்ன சமயத்தைச் சார்ந்ததென்பதே தெரியாதிருந்த சாமிநாதையருக்குப் ‘பௌத்த சமய’  நூலென்று தெரியப்படுத்தினார். பாளிபாஷையில்தான் பெரும்பான்மையான பௌத்த மத நூல்கள் உள்ளனவென்று ரங்காசாரியர் சாமிநாதையருக்குத் தெரிவித்துமிருந்தார்.

மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் என்பதால் படிப்பவர்களுக்கு விளங்கும்படி, பௌத்த சமயக் கொள்கைகளை விரிவாக எழுதிச் சேர்க்க வேண்டுமென்று சாமிநாதையரின் அன்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டமையால், பௌத்தர்களால் மும்மணிகளென்று பாராட்டப்படும் புத்ததர்ம சங்கங்களின் விவரணங்களாகப் புத்த சரித்திரமும் பௌத்த தருமமும் பௌத்த சங்கமும் என்ற பகுதி, மேற்கூறிய மளூர், உ. வே. ரங்காசாரியர் அவர்களின் உதவியால் இயற்றி, மணிமேகலைப் பதிப்பிற்கு  அங்கமாகப் பதிப்பித்திருக்கிறார். சாமிநாதையர், பிற்காலத்தில் இவற்றை மட்டும் தனி நூலாகப் பல முறைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

மணிமேகலையில் வரும் அரிய செய்திகளுக்கும், சொற்களுக்கும் தமது புலமைத் திறத்தாலும், பௌத்த சமய அறிஞர்களின் துணைகொண்டும் இவர் எழுதிய குறிப்புரையால் உரையாசிரியர் என்ற நற்பெயரைச் சாமிநாதையர் பெற்று விளங்கினார். பல நூல்களை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டிருந்த அனுபவம் மணிமேகலை உரை ஆக்கத்திற்குப் பேருதவியாக இருந்திருக்கிறது.

மணிமேகலைக்குப் பின்னர் சாமிநாதையர் உரை எழுதிய நூல் சீகாழிக்கோவை என்பது தெரிகிறது.  1903ஆம் ஆண்டு மகாவித்துவான் மீனாட்சி சுந்தர பிள்ளை இயற்றிய சீகாழிக்கோவை நூலுக்கு அரும்பதவுரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். சீகாழியிற் கோயில் கொண்டெழுந்தருளிக்கும் பிரமபுரேசர் மீது மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய 531 செய்யுட்கள் அடங்கிய நூல் சீகாழிக்கோவையாகும்.

‘இந்நூற் செய்யுட்களுள் ஒவ்வொன்றனுடைய நுட்பங்களையும் பிறவற்றையும் தனித்தனியே விளக்கியெழுதப்புகின் மிகவிரியுமென்றஞ்சியே சுருக்கமாக இந்நூற்கு அரும்பதவுரை எழுதியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் சாமிநாதையர் அரும்பதவுரைப் பகுதியை மூலத்திற்கு அடுத்ததாகத் தனியே அமைத்துத் தந்திருக்கிறார்.

சாமிநாதையர், 1904ஆம் ஆண்டு, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய சூரைமாநகர்ப் புராணத்திற்கும், திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதருலா நூலிற்கும், சேறைக்கவிராச பிள்ளை இயற்றிய திருக்காளத்திநாதருலா நூலிற்கும் அரும்பதவுரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

சாமிநாதையர், சீகாழிக்கோவை நூலில் அரும்பதவுரைப் பகுதியைத் தனியே அமைத்திருந்ததைப் போன்றே இவ்விரு நூல்களிலும் அரும்பதவுரைப் பகுதியைத் தனியே அமைத்துத் தந்திருக்கிறார். இதுபோன்று பல சிற்றிலக்கிய நூல்களுக்குக் குறிப்புரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார் என்பது இங்கு நினைத்தற்குரியது. சாமிநாதையரின் உரை நூல்களை ஒருங்கு வைத்து நோக்குகின்றபொழுது சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றிற்கு உரை எழுதியிருப்பது தெரிகிறது. குறிப்புரையைச் சில நூல்களில் இறுதியாகவும், சில நூல்களில் அவ்வவ்பாட்டிற்குக் கீழே அடிக்குறிப்பாகவும் அமைத்துத் தந்திருக்கிறார்.    

சாமிநாதையர் உரை எழுதிய காப்பிய நூல்களுள் இரண்டாவது நூல் பெருங்கதையாகும். பெருங்காப்பிய நூலான மணிமேகலைக்கும் பல சிற்றிலக்கிய நூல்களுக்கும் உரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்ட பேரனுபவம் பெருங்கதை உரையாக்கத்திற்குத் துணை நின்றுள்ளன. 1924ஆம் ஆண்டு இவர் உரை எழுதிப் பதிப்பித்து வெளியிடப் பெற்ற பெருங்கதைப் பதிப்புப் பலரின் கவனத்தைப் பெற்றது. பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த (1889இல் பத்துப்பாட்டு முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது) காலத்தில் அந்நூற் சுவடியைத் தேடிப் போன இடத்தில் ‘கொங்குவேண்மாக்கதை’ என்ற பெயரிட்ட பழஞ்சுவடியாக இந்தப் பெருங்கதைச் சுவடி சாமிநாதையருக்குக் கிடைத்திருக்கிறது. பெருங்கதைச் சுவடி கிடைத்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழித்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இந்தப் பெருங்காலப் பரப்பில் அவ்வப்போது ஓய்வு நேரங்களில் பெருங்கதை ஆராய்ச்சிப் பணியைச் சாமிநாதையர் செய்து வந்திருக்கிறார்.

மூலத்தை மட்டும் பதிப்பித்து முடித்த பின்னர், எழுதித் தொகுத்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் வீண் போகாதபடி அவற்றை ஒழுங்குபடுத்திக் குறிப்புரை என்று எழுதியமைத்ததாகப் பெருங்கதை முதல் பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பதிப்பில் (1924) மூலத்திற்குப் பின்னர் குறிப்புரைப் பகுதியைத் தனியாக அமைத்துப் பதிப்பித்திருந்த சாமிநாதையர் இரண்டாம் பதிப்பில் (1935) அவ்வப்பக்கத்தின் அடிக்குறிப்பாகச் சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார்.

குறிப்புரையில், ஒவ்வொரு சிறிய பாகத்தின் முதலில் கருத்தும், இன்றியமையாத இடங்களில் சொற்களுக்குப் பொருளும், வாக்கியங்களுக்கும் கருத்துக்களுக்கும் பெருங்கதை நூலிலிருந்தும், பழைய நூல்களிலிருந்தும், பிற்காலத்து நூல்களிலிருந்தும் ஒத்த பகுதிகளும் வருகையிடங்களும் தரப்பட்டுள்ளன.

கதைப் போக்கை நன்கு தெரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு, உதயணனுடைய சரித்திரச் சுருக்கம் வசன நடையாக எழுதப் பெற்று இந்நூலுக்கு அங்கமாகப் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது. சாமிநாதையர், மணிமேகலைப் பதிப்பிலும் இதுபோன்று வசனநடை பகுதியை எழுதியமைத்திருப்பது நினைவு கொள்ளத்தக்கது.

பெருங்கதையிலுள்ள வடநூல் கருத்துக்களைச் சாமிநாதையருக்குத் தெரிவித்தும் வேறுள்ள வடநூல்களைப் படித்துப் பொருள் கூறியும் உதவியவர் ஸ்ரீநிவாஸநல்லூர், ஷி. ராமசந்திர சாஸ்திரி என்பவர். பல்வேறு இடங்களுக்குச் சென்று முயன்று உதிதோய காவ்யத்தைப் பெற்று வந்து சாமிநாதையருக்கு உதவியவர், செஞ்சியைச் சார்ந்த விளாத்தியென்னும் கிராமத்திலுள்ள கணிதம் சின்னத்தம்பி சாஸ்திரியார். சாமிநாதையர் இவ்விருவரின் பேருதவியால் பெருங்கதைக்குக் குறிப்புரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

சாமிநாதையர் உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட ஒரே சங்க இலக்கிய நூல் குறுந்தொகையாகும். சாமிநாதையரின் உரை ஆக்கத்தில் முன்வைத்து நோக்கத்தக்கதும் குறுந்தொகை உரை மட்டுமேயாகும்.  

நல்லறி வுடைய தொல்பே ராசான் 

கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் 

பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற் 

கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய 

இதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும்  

என்பது நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளின் ஒரு பகுதி. இதில் ‘பேராசிரியர் தம்முடைய கல்வித் திறனும் அறிவு வன்மையும் உலகினர் அறியும்படி குறுந்தொகைக்குப் பொருள் எழுதினார்’ என்பதும், இருபது செய்யுட்களுக்கு மட்டும் எழுதவில்லை என்பதும், அந்த இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்பதும் கூறப்படுகின்றன. நச்சினார்க்கினியர் உரை வகுத்த நூல்களைத் தொகுத்துரைக்கும் செய்யுளாகிய,

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் 

ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும் - சாரத் 

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் 

விருத்திநச்சி னார்க்கினிய மே  

என்பதிலும் நச்சினார்க்கினியர் ‘குறுந்தொகையுள் ஐஞ்ஞான்’ கிற்கு உரைகண்ட செய்தி காணப்படுகின்றது. தொல்காப்பியம் அகத்திணையியலில்,

உள்ளுறை யுவம மேனை யுவமமெனத் 

தள்ளா தாகுந் திணையுணர் வகையே    (46)

என்னும் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் ஏனையுவமம் வந்த செய்யுளுக்குக் குறுந்தொகையில் உள்ள ‘யானே யீண்டை யேனே’ (குறுந். 54) என்பதைக் காட்டி, ‘பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறிதூண்டி லென்றதனை ஏனையுவம மென்றார்’ என எழுதியிருக்கிறார். இதனால் பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை எழுதியிருந்தது புலப்படுகின்றது. குறுந்தொகைக்கு நச்சினார்க்கினியர், பேராசிரியர் என்ற இரு உரையாசிரியர்களால் எழுதப்பட்ட பழைய உரை இப்பொழுது நமக்குக் கிடைக்கப் பெறாமல்போனது தமிழுக்கு நேர்ந்த பெரும் இழப்புகளுள் ஒன்றாகும். உ.வே. சாமிநாதையர் குறுந்தொகைக்கு உரை எழுதி வெளியிட்டது அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் அமைந்ததாகக் கொள்ளலாம். சாமிநாதையரின் உரை ஆக்கத்தில் சிறந்து விளங்கி நிற்பது குறுந்தொகை உரை ஆகும்.

சாமிநாதையர் பல ஆண்டுகளாகவே குறுந்தொகைக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இடையில் வாணியம்பாடி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தி.சௌ. அரங்கசாமி ஐயங்கார் 1915ஆம் ஆண்டு குறுந்தொகைக்கு உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் 1933ஆம் ஆண்டு புரசவாக்கம் ஸர் எம். ஸி. டி. உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் சோ. அருணாசல தேசிகரவர்கள் குறுந்தொகை மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டிருந்தார்.

நெடுங்காலமாகக் குறுந்தொகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சாமிநாதையருக்கு மேற்கண்ட இருவரின் குறுந்தொகைப் பதிப்பாக்கம் சிறிது ஊக்கம் தளரும் நிலையை  ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குறுந்தொகை ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டுப் பிற நூல் ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்தியிருக்கிறார்.

பழைய உரை இல்லாமையால் புதிய உரை எழுதி இந்நூலை வெளியிட வேண்டுமென்ற கருத்து, சில தமிழ் அன்பர்களுக்கு இருந்ததைச் சாமிநாதையர் உணர்ந்திருக்கிறார். அன்பர்கள் பலரும் குறுந்தொகைப் பதிப்பை வெளியிட வேண்டிய அவசியம் குறித்து இவரை அடிக்கடி தூண்டியும் வந்துள்ளனர். பல ஆண்டுகளாக உழைத்துத் தொகுத்து வைத்திருந்த குறிப்புக்கள் வீணாகாமல் இருக்கும் பொருட்டுக் குறுந்தொகையை வெளியிட வேண்டும் என்ற கருத்து சாமிநாதையருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறுந்தொகை ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கி தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். குறிப்புக்களும் ஒப்புமைப் பகுதிகளும் உரைப் பகுதிகளும் முறையாக எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இவரோடு இருந்து பழகுபவர்கள் பலர் இந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளனர்.

சாமிநாதையரின் குறுந்தொகை உரை பதவுரை, விசேடவுரை என்ற இரு நிலைகளில் அமைந்து காணப்படுகின்றது. இந்த உரை அமைப்பு குறித்துச் சாமிநாதையர் இப்படி விளக்கியுரைத்திருக்கிறார்.

“பதவுரை : அந்வயப்படுத்திப் பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது; பல விடங்களில் விளி முன்னத்தால் வருவித்தெழுதப்பட்டது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை யெழுதினும் முடிபு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை.

விசேடவுரை : பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும், பொருள் விளக்கங்களும், வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி யென்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன”.

1898ஆம் ஆண்டு மணிமேகலைக்கு உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதையர், அதன் பின்னர் ஏறத்தாழ நாற்பதுக்கும் மேலான நூல்களுக்கு உரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். குறிப்புரை, அரும்பதவுரை, பதவுரை, விசேடவுரை எனும் வகைகளில் அவரது உரை வகைகள் அமைந்திருக்கின்றன. தமிழின் ஆகச் சிறந்த நூல்களை ஆராய்ந்து குறிப்புகள் எழுதிப் பதிப்பித்திருந்த பேரனுபவம் உரை ஆக்கத்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளன. குறுந்தொகைக்கு உரை எழுதத் துணிந்தது குறித்து ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார் சாமிநாதையர்,

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை எழுதிய இந்நூலுக்கு உரை எழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை என்பதையும் என் முதுமையாலும் பலவேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்கு உண்டாகி உள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும் இளமை தொடங்கி இவ்வுலகில் யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ஙனமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி அருளுவான் என்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன (குறுந்தொகை முகவுரை)

பழந்தமிழ் நூல்களுக்குச் சாமிநாதையர் எழுதிய உரைகள், தமிழ் உரை மரபை உள்வாங்கி எழுதப் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. சாமிநாதையரின் பழந்தமிழ்நூற் பாடல்களுக்கான  உரையை ஆராய்ந்து நோக்கிய அளவில் இலக்கணக் குறிப்புகளைக் குறித்துக் காட்டுவதிலும், பிற நூல் கருத்துக்களை ஒப்பிட்டுக் காட்டுமளவிலும், பாடபேதங்களைச் சுட்டிக் காட்டும் முறையிலும், இலக்கண உரைக் கருத்தைத் தழுவிச் செல்லும் முறையிலும் சிறந்து விளங்கி நிற்கின்றன. பிற்காலத்தில் எழுதப்பட்ட உரைகளாயினும் தமிழ் உரை நெறியினை அடியிற்றியிருத்தலைக் காண முடிகின்றது. குறுந்தொகை, மணிமேகலை, பெருங்கதை நூல்களுக்குச் சாமிநாதையரின் காலத்திற்குப் பின்னர் பலரும் பலவகை உரைகளை எழுதி அமைத்துப் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அந்த உரைகளெல்லாம் சாமிநாதையரின் உரையின் சுருக்கமாகவும் விரிவுமாகவே அமைந்துள்ளன என்பதை மறுத்தற்கில்லை. இந்த ஒரு தன்மையைச் சாமிநாதையர் உரையின் சிறப்புமாகவும், தனித்தன்மையாகவும் சுட்டலாம்.

Pin It