சமூக இலக்கிய வரலாற்றில் தந்தை வழிச் சமூகச் சூழலை, மையமிட்ட சமூக பின்புலத்தைக் காண முடிகிறது. சங்க இலக்கிய வரலாற்றில் 2381 – பாடல்களுள் 517 – புறப்பாடல்களும், 1862 – அகப்பாடல்களும் காணப்படுகின்றன. அவற்றில் அகப்பாடல்களுள் மருதத் திணைப் பாடல்கள் முழுவதும் பரத்தைத் தொடர்பு கொண்ட தலைவன் மீதான கோபம், ஊடல், பாணர்களின் தூது ஆகியவையே பெரும்பகுதி காணப்படுகின்றன. ஏக்கம், எதிர்பார்ப்பு, ஈர்ப்பு என பல பாடல்களும் காணப்படுவதை அறியலாம்.

அடுத்தக் கட்ட வரலாற்றில் காப்பிய காலங்களிலும் சிலம்பில் கண்ணகியை விட்டுவிட்டு மாதவியோடு கிடப்பதும், பிறகு கோவலன் கொலையுண்டு போவதும், கண்ணகி அழிப்பதும், மாதவி நோன்பு நோற்பதும், மணிமேகலையானவள் திருமணமே செய்து கொள்ளாததும், உதயணன் வற்புறுத்தியும் மறுத்த சமூகச் சூழலும் சீவகன் எட்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையையும் காண முடிகிறது. இஃது யாவும் அடிப்படையில் பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையான வரலாற்றின் ஒரு பகுதியேயாகும்.

ancient tamil loversபக்தி இலக்கிய வரலாற்றிலும் இந்நிலை தொடர்கிறது. குறிப்பாக சுந்தரர் பரவை நாச்சியார், சுந்தர நாச்சியார் ஆகிய இரு பெண்களை திருமணம் செய்து கொண்;டதையும், பக்தி மேலிட்டால் காரைக்கால் அம்மையை விட்டுவிட்டு வேறு பெண்ணை அவர் கணவன் மணம் செய்து கொண்டதையும் அறிய முடிகிறது.

அடிப்படையில் சங்க காலத்திய பெண்கள் என்று பொதுவில் வைத்துக் கூறினாலும் தனித்தனித் கூறுகளாய் அவர்களை ஆராய வேண்டியுமிருக்கிறது. அதாவது உயர் குலத்து பெண்களான, அந்தணர், அரசர் அவர்களின் பெண்களும், வணிகர், வேளாளர் பெண்களும், அடியோர், ஏவலர், வினைவலர், இழிந்தோர் என்று கூறப்படுகின்றவர்களின் பெண்களும், அவர்களின் நிலையும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் 5 நிலத்தில் வாழ்ந்த நில மக்களும், அம்மக்களில் பெண்களின் நிலைகளும் ஒத்த தன்மையில் இருந்திருக்கவே இல்லை என்பதையும் வரலாற்று வழி உறுதி செய்ய முடிகிறது.

சிற்றிலக்கிய வரலாறு பெரும்பகுதி தூது, உலா, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு என பலவும் பெண்ணினத்தின் நிலையை தெளிவாக விவரித்து செல்கின்றது. ஒரு இறைவன் (அல்லது) தலைவன் மீது காதல் கொண்டதாகவும், அவளுக்கு காதல் நோய் மிகுந்தபடியால் ‘குறி’ சொல்ல குறத்தி வருவதாகவும், குறி சொல்லி ‘தலைவன் கிடைப்பான் எனக் கூறி பொருள் பெற்றுச் செல்வதையே கருவாகக் கொண்டது குறவஞ்சி நூல்கள்.

‘தூது நூல்களும் மேற்கூறியதை போன்றே காதல் கொண்ட பெண்ணொருத்தி ஏதேனும் ஒரு பொருளை தூதாக அனுப்புவதாக அமைவது. ‘உலா’ வரும் தலைவனோ அல்லது இறைவனோ தூதாக வர, காதல் கொண்ட தலைவி புலம்புவதாக அமைந்திருக்கிறது. சில நூல்கள் இறைவனை புகழ்ந்து பாட வேண்டுமெனும் நோக்கில் பாடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக பள்ளு நூல்களில் உழவர் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறி, இரு முரண்பட்ட தெய்வங்களைப் பற்றி ஏசுவது போல கூறி, இறுதியில் இருவரும் ஒருவரே என்ற ஓர் பொதுக் கருத்தை வலியுறுத்தும் பாங்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு ஆணுக்கு இரு மனைவியர் இருப்பதாகவே கதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரணி போன்ற நூல்களில் மன்னனின் வலிமை, போர் பற்றி கூறப்படினும், அதிலும் தலைவன் வரவும் பெண்கள் கதவுகளை மூடுவதும், திறப்பதும் என தாழ்பாழ்களே தேய்ந்து போகும் அளவிற்கு தலைவன் வருகையை எதிர்நோக்கி காத்திருத்தல் எனும் கருத்தையும் பரணி தருகிறது. சிற்சில நூல்கள் மாறுபட்டும் அமைந்துள்ளது. ‘விறலி விடு தூது’ நூல் மட்டும் தலைவன் விறலியிடத்து தூது விடுவதாக அமைந்துள்ளது. அதற்கும் அடிப்படைக் காரணம் தலைவன் பரத்தைத் தொடர்பு செயல்பாடுகளே ஆகும். தலைவன் பரத்தை மீது கொண்ட உறவால் தலைவி ஊடலுறுகின்றாள். அதனால் தலைவியை இஃது காதல் பொருள் கூறாது புலவன் தான் பரத்தையருடன் கூடி கேடு அடைந்த செய்தியை விறலிபாற் கூறி மனைவியின் ஊடல் நீக்குமாறு தூது விடுத்ததாகப் பொருள் அமைந்துள்ளது. வேறு ஆண்கள் தூது விடும் நூல் இல்லை என்றே கருதலாம்.

மேற்கூறிய பெரும்பாலான சிற்றிலக்கியங்களில் பலவற்றிலும் பெண்ணினத்திற்கான தன்மை ஒரே வகைத்தாகும். யாவற்றிலும் மதக் கருத்துக்களையும், மன்னர், சிற்றரசர், தலைவன் என ஏதோ ஒரு அதிகாரம் படைத்த தனி மனிதரின் புகழை வெளிப்படுத்த வேண்டும் என நோக்கிலேயே பல சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல்கள் அனைத்திலும் பெண்களுக்கு எதிரான சமூகச் சூழலையே காண முடிகிறது. 16-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் கூட பல சிற்றிலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன. மராத்திய மன்னன் தஞ்சை ‘சரபோஜி’ மன்னனை மையமிட்டு “சரபேந்திர பூபால குறவஞ்சி” படைக்கப்பட்டு அவன் புகழ் கூறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

பள்ளு நூல்களிலிருந்து சில குறிப்புகளை உள்வாங்க முடிகிறது. குறிப்பாக தம் மதக் கருத்துக்களைப் பரப்புரை செய்யும் நோக்கோடு சில நூல்கள் எழுதப்பட்டுள்ளதை காண்கிறோம். உதாரணமாக, முக்கூடற்பள்ளு எனும் நூல் சிவன், திருமால் ஆகிய இருவரைப் பற்றியும், பெத்தலேகம் (எபிரேய) பள்ளு நூல் இயேசுவின் புகழையும், மக்காப் பள்ளு நபிகளின் பெருமையையும் கூறுவதை காணலாம். ஒரு குறிப்பிட்ட மக்களின் செயலை வெளிப்படுத்தி தம்மதக் கருத்துக்களை பரப்புரை செய்த நிலையை நன்கு அறிய முடிகிறது.

ஐரோப்பிய வருகைக்குப் பின்னர் சமூகத்தில் சிற்சில மாற்றம் தெரிந்தது. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பெண்கள் சார்ந்த கருத்தியலில் பெருமாற்றம் ஏற்பட்டது. பாரதியார் முதல் பட்டுக்கோட்டை வரையுமாய் பெண்ணுரிமை, பெண்ணடிமை எதிர்ப்பு குறித்த பாடல்கள் உருவாக மக்களிடையே வரவேற்பை பெற்றன. சிறுகதை, புதினம், ஹைக்கூ போன்ற வடிவங்களிலும் பெண்களின் சமூகக் கொடுமைகள், ஆணாதிக்கத்தால் அல்லலுறும் அவர்களின் வாழ்வு அதற்கெதிரான குரல் தொடர்ந்து இலக்கியங்களில் ஒலித்துக் கொண்டே வருகிறது. இன்றைய சமூக நடவடிக்கைகள் பெரும்பாலும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகுகின்ற சூழல், கொடுந்துயரமான வாழ்வு என பெண்கள் ஒருபுறம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்க, மறுபுறம் பெருந் துயரமான சூழலுக்கு உட்பட்டே வேறு வழியின்றி வாழ்ந்து வருவதை அறிகின்றோம். பண்டைய காலந் தொட்டு இன்று வரையும், அன்றைய ஒளவை தொடங்கி இன்று அம்பை வரையும் தமது குரலை ஓங்கி ஒலிக்க எழுத்தாளுமையை பயன்படுத்தி நின்றாலும் பெண்கள் வாழ்வு எத்தகைய சிறப்புடையதாய் அமைந்து விளங்குகின்றது என்று கேட்பின் அதற்கு முழுமையான பதில் இந்தியாவெங்கும் வராது என்பதே உண்மை.

ஆண்களின் மிகச் சரியான நடத்தையும், பெண்ணினத்திற்கு எதிரான, பொருளாக பாவிக்கின்ற, நிலையிலிருந்து விடுத்து ‘மனித இனத்தின் மாபெரும் புரட்சி’ பெண்களென ஒவ்வொரு ஆணும் எண்ணுகையில் தான் இத்தகைய மாற்றம் நிகழும்.

புராண இதிகாசங்களிலும் பெரும்பாலான கருத்துக்கள் பெண்ணினத்திற்கு எதிரானதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, ‘நிலவு’ தேய்ந்து வளர்வதைப் பற்றி ஒரு கதை காணப்படுகிறது. அது 28 பெண்ணை நிலவு எனும் ஆண்மகன் திருமணம் செய்து கொண்டதாகவும், ‘அரிச்சந்திரன்’ கதையில் தன் மனைவியை விற்கின்ற சூழலும், இராமனே சீதையை சந்தேகப்படுவதும், மஹாபாரதத்தில் பாஞ்சாலியை பணயம் வைப்பது, நளவெண்பாவில் நளன் தன் மனைவியை விட்டுவிட்டு சூதாடி கெடுவது என பல காவியங்களிலும் கூட பெண்ணின் நிலைமை மிக மோசமாக இருந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

சமூக, இலக்கிய வரலாற்றில் மகட்பாற்காஞ்சி (பெண்தராததால் போரிடல்) உடன் கட்டை (கணவன் இறந்தால் மனைவி இறப்பது) விதவை (நல்ல உணவு உண்ணாது, நல் உடை உடுத்தாது தன்னந்தனியாய் வாழுதல்) தேவரடியார், முறை போன்ற பல தவறான செயல்களையும் வரலாற்று வழி அறிகின்றோம். இன்றும் கூட காதல் செய்யும் பெண் கொலை செய்யப்படுவது, பல்வேறு வகையில் தண்டிப்பது, திருமண வரதட்சணை கொடுமை, சிறு குழந்தை முதல் வயோதிகப் பெண்கள் வரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதும், கொடுமைப்படுத்தப்பட்டு அழிக்கக்கூடிய சூழலை சமூகம் எவ்வாறு ஏற்றுக் கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது பெருங் கேள்விக்குறி.

எத்தனை சட்டங்கள் இருந்திடினும், இன்னும் இன்னும் கடுமையான தண்டனை வழங்கக் கூடிய சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்துவதே இன்றைய அரசின் மிகமுக்கிய கடமை. அதே சூழலில் ஆண்களாய் திருந்தாவிட்டால் இத்தவறுகளை தடுக்க முடியாது. மேலும் பெண்களும் தவறான செயல்களுக்கு வழி ஏற்படுத்தாமலும் இருக்கும் சூழலும், பழைய மரபு சிலவற்றை மாற்றி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் ஒன்றில்,

“தாலி கட்டிக்கிட்டா இரண்டு பேரும் சேர்ந்து கட்டிக்கணும் இருக்கிற பழைய முறையை மாத்திக்கணும்” என்ற கருத்திற்கேற்ப திருமணமான ஆண்களுக்கென தனி அடையாளம் போன்ற பல சட்டங்களை இயற்றும் போது – பெண்ணினம் பேரழிவிலிருந்து கொஞ்சம் காப்பாற்றப்படும். இல்லையேல் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு மேலும் மேலும் அழிவுக்குள்ளாக்கும் வழிகளே ஆணாதிக்கச் சமூகத்தால் எதிர்காலத்தில் அரங்கேற்றப்படும்.

இன்றைய நவீன இலக்கியங்கள் காட்டப்படும் பெண்களுக்கு எதிரான செயல்கள் வித்தியாசமான முறையில் மாறுபட்டு இருப்பதையும் உணர முடிகிறது. “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற நிலை மாறி வீட்டை விட்டு பெண்ணை ஏன் அனுப்பினோம் என மனிதர் தலை கவிழும் சூழலுக்கு மனித நேய சமூகம் மானக்கேடான சமூகமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

வேலை கேட்டுப் பெண்ணொருத்தி
வீதியிலே நடந்து வந்தால்
சேலைதனை அவிழ்த்துவிடும் உலகமடி
பணக்கார வர்க்கமடி பாம்பினும் கொடியதடி
சுதந்திர இந்தியாவாம் சொல்லும் போதே எறியுதடி
என்றார் கவிஞர் இன்குலாப். இப்படி தான் இன்றைய பெண்ணினத்தின் நிலை.

காந்தி பின்வருமாறு கூறினார்.

“ஒரு பெண் தன்னந்தனியே இரவில் நகைகளோடு எப்போது சென்று வருகிறாரோ அப்போது தான் அஃது முழு சுதந்திரம்” என்று. இங்கு ஒரு பெண் அல்ல ஒரு சிறுமி கூட, அதுவும் பகலில் நடமாட முடியாதபடி, கொடுமையான சூழல், இவ்வளவு அறிவியல் வளர்ச்சிப் பெற்ற 21 ஆம் நூற்றாண்டில் நிகழ்கிறது என்றால் அதை விடவும் கொடுஞ் செயல் உலகில் வேறொன்றுமில்லை என்றே கூறலாம்.

நவீன செயலிகளின் மூலமும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பலவற்றின் ஊடாகவும் கூட பெண்கள் அடையும் பாதிப்பை விரல் விட்டு எண்ணலாகாது. இத்தகைய கொடுமையை முற்றிலும் அகற்றுவதற்கு பெண்களே தமக்கென ஒரு பொதுவான அமைப்பாய் திரள வேண்டிய தேவையும் இங்கிருக்கிறது நினைவிற்கொள்ள வேண்டிய செயல்.

பெண்ணினத்தின் அழிவு… மானுட இனத்தின் அழிவு… மானுட இனத்தின் அழிவு… மனித குல வரலாற்றின் இழிவு…

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306

Pin It