தமிழர் தொடர் நெடும் பண்பாட்டுக்கு உரியவர்கள். தமிழர்களின் வாழ்வியல் முறைதனை நமக்கு அறிமுகம் செய்பவைகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், தொல்லியல் தரவுகள் போன்றவையாகும். இவைகளின் வழி தமிழர்களின் வாழ்வென்பது அறவயப்பட்டது, அன்புவயப்பட்டது, அழகுவயப்பட்டது என்பதை நாம் அறிவோம். இத்தகைய வாழ்வியல் நெறியில் இவர்கள் தேடல், உற்பத்தி, மற்றும் ஒன்றினை செம்மையாகச் செயல்படுத்துதல் போன்ற விடயத்தில் தனிக்கவனம் கொண்டிருந்தனர்.

அனைத்திற்கும் அடிப்படையாக பசியும் அதன் பொருட்டு தேடல், உற்பத்தி என்பதும் தொடர்ந்தது. பசி என்பது உயிர்களுக்குப் பொது. இப்பசிதான் மனிதர்களைப் பல்வேறு உயரிய நகர்வுகளுக்கும் எடுத்துச்சென்றது. இவர்கள் செம்மையான வாழ்வியல் தன்மைக்கு பல்வேறு அழுத்தமான கட்டமைப்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அவதானிப்பதுண்டு. பல்வேறு அழுத்தமான கட்டமைப்பு ஆக்கங்களுக்குள் பண்டமாற்று வணிக முறைமையைப் பழந்தமிழ் இலக்கியங்கள்வழி ஆராய்ந்து அவதானிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பசித்த மனிதன் பசியைத் தீர்த்துக்கொள்ளத் தேடினான். இத்தேடல் முதலில் வேட்டையாகவும் பிற்பாடு உற்பத்தியாகவும் பரிணமித்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போன்ற இடங்களில் தங்களின் வாழ்வைப் பற்றிக்கொண்டவர்கள் இச் சூழலுக்குத் தகுந்த தேடல் மற்றும் உற்பத்தி தன்மைகளைக் கையகப்படுத்திக் கொண்டனர். பிற்பாடு, இதன்வழி கிடைத்தவற்றைத் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் கொடுக்கும் வாழ்வியல் நெறி தோன்றிது.ancient shipsபிறகான படிநிலையில் தன்னிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து தன்னிடம் இல்லாத மற்றொரு பொருளை வாங்கிக் கொள்ளும் தன்மை புழக்கத்தில் வந்தது. இதனை ஒரு பண்டமாற்று வழக்கமாகக் காண்பது ஒருபுறம் என்றாலும் ஒரு பண்டமாற்று வணிகமாகவும் இப்பழக்கம் வளர்ந்திருந்ததை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

அன்றாடத் தேவைகளான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசுகொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டனர். நிலத்தோடு இணைந்து வாழ்ந்த மக்கள், அந்த நிலம்சார் பொருள்களை அது தேடிக் கிடைத்த பொருளாக இருந்தாலும் உற்பத்திப் பொருள்களாக இருந்தாலும் அப்பொருளைக் கொடுத்துத் தனக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொண்டனர்.

ஐவகை நிலங்களில் மருத நிலத்தில்தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம்பெற்று வளர்ந்தன. நிலைத்த வருவாயும் நிலைபெற்ற உற்பத்தியாக வேளாண் உற்பத்தியும் இதன் இணைத்தொழிலான கால்நடை வளர்ப்பும் இருந்துள்ளது. மருத நிலத்திற்கு வந்து முல்லை நில ஆயர்கள் பாலைக் கொடுத்து தானியங்களைப் பெற்றுக்கொண்டனர். இதேபோன்று குறிஞ்சி நில வேடர்கள் இறைச்சியைக் கொடுத்து நெல் பெற்றனர். தேன்கொடுத்து, யானைத் தந்தம் கொடுத்து மது பெற்றனர். நெய்தல் நிலப் பரதவரோ மீன் கொடுத்து நெல் பெற்றனர். உப்புக் கொடுத்தும் நெல் பெற்றனர். இப்படியாகப் பண்ட மாற்று வணிகச் சூழல் அன்றைய சமூகத்தில் நிலைபெற்றது.

ஐவகை நில வாழ்வில் நிலைபெற்ற வருவாய் உடையதான மருத நிலத்தில் வாழ்பவர்கள் உழவர்கள். இப்பெருங்குடி மகள், நெல்லை பண்டமாற்றாகத் தரும் வாழ்வியல் சூழல் உடையவளாக இருந்துள்ளாள். வேட்டுவன், நாய் துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம். இதே போன்று ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டு வந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம் இப்படியாக மருதநிலக் குடிகளிடம் பண்டமாற்றாகப் பிறநிலத்து மக்கள் உணவுக்காக நெல்லைப் பெற்றுச் சென்றனர்.

“கானுறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்

மான் தசைசொரிந்த வட்டியும், ஆய்மகள்

தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய,

ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்

குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்

தென்னம் பொருப்பன் நல்நாட்டுள்ளும்" (புறம்-33-1-7)

தொண்ணூறுகளின் பிற்பகுதி வரை பெரும் பான்மையான வீடுகளில் கேழ்வரகுக் கூழ் இருக்கும் சில வீடுகளில் மட்டுமே நெல் சோறு இருக்கும் யாரேனும் வராத விருந்தினர் வந்துவிட்டால் கூழைக் கொடுத்து சோறு பெறும் வழக்கம் இருந்தது. அன்றும் இது இருந்ததை,

அவரோ வாரார் முல்லையும் பூத்தன

பறியுடை கையர் மறியினத்தொழியப்

பாலொடு வந்து கூழொடு பெயரும்

யாடுடை இடைமகன் சென்னிச்

சூடிய வெல்லாம் சிறுபசு முகையே (குறுந்தொகை-221)

பருவம் கண்டு வருந்தும் தலைவியின் மன உணர்வைச் சொல்லும் இப்பாடலில், இடைமகன் பாலைக்கொடுத்துவிட்டு குடிக்க கூழை எடுத்துக் கொண்டு மீளும் சூழல், அண்மைக் காலம் வரை நம்மிடம் இருந்ததைக் கவனப்படுத்திடச் செய்கிறது.

ஆயர்கள், வேடர்கள் பண்டமாற்று வாழ்வியல் போக்கினைத் தொடர்ந்து. பாணர்களும் உணவுக்குத் தேவையான தானியத்தைப் பெற்றுக் கொள்ள மருத நிலம் நோக்கி நகர்ந்துள்ளனர். பாணர்கள் நீர்நிலைகளில் வலை வீசியும் தூண்டிலிட்டும் மீன் பிடித்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களை பாண் மகளிர் மருத நிலம் விளைந்த பயிற்றுக்கும் தானியத்திற்கும் மாற்றினார்கள்,

“முள் எயிற்றுப் பாண்மகள் இங்கெடிறு சொரிந்த

அகன் பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகால் பெரும் பயறு நிறைக்கும்”, (ஐங்குறு -புலவிப்பத்து-47)

தொடர்ந்து,

“வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்” (ஐங்குறு -புலவிப்பத்து- 48)

மீனுக்குப் பண்டமாற்றாகப் பழைய நெல் பெற்றாள என்கிறது. பழைய நெல் அரிசி மருத்துவக் குணமும் உண்பதற்கு சுவையுடையதாகவும் இருக்கும் தன்மையுடையது என்பதும் வேளாண் மக்களின் வாழ்வில் இருந்து வந்தது. குறிப்பாக குழந்தை பெற்ற பெண்களுக்கு பழைய நெல் அரிசிச் சோறே சமைத்துக் கொடுப்பர்.

ஆனால், இன்று நெல் அவித்து அரைக்கும் பழக்கம் இல்லாதுபோன சூழலில் தமிழர்களிடமிருந்து அறுந்துபோன பல பழக்கங்களும் இதுவும் ஒன்றென்பது வருத்தமே.

மேலும் இதே ஐங்குறுநூறு,

“அஞ்சில் ஓதி அசைநடை பாண்மகள்

சின் மீன் சொரிந்த பன்னெற் பெரூஉம்” (ஐங்குறு -புலவிப் பத்து-49)

நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர், கடலில் சென்று சுறா, இறால் போன்ற மீன்களைப் பிடித்து வந்தனர். இவர்கள் பிடித்து வந்த மீன்களைப் பரதவ மகளிர் எளிதாக தானியத்திற்கு மாற்றினர்.

 “ இனிது பெறு பெருமீன் எளிதினிற் மாறி” (நற்றிணை-239-3)

இதைப் போன்றே கடலில் விளைந்த மீனை நெல்லுக்கு மாற்றினர்,

“பசு மீன் நொடுத்த வெண்ணெல் மா அத்

தயிர் மிதி மிதவை யார்த்தும்” (அகம்-340-14-15)

மீனை நெல்லுக்கு மாற்றி, அந்த நெல்லை அம்பியில் ஏற்றிக்கொண்டு உப்பக்கழிகளின் வழி வந்தனர்.

“மீன் நொடுத் நெல் குவைஇ

மிசை அம்பியின் மனை மறுக்குந்து" (புறம்,343-1-2)

நெய்தல் நிலமான கொற்கை கரையோரப் பரதவர்கள் கடலில் மீன் பிடிக்கின்றனர். அப்போது வலைகளில் முத்துச் சிப்பிகளும் கிடைக்கின்றன. அச்சிப்பிகளைக் கள்ளுக்கடையில் கொடுத்து கள் குடித்துள்ளனர்.

“பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி

நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்

பேரிசைக் கொற்கை”    (அகம்,296,8-10)

இதன் வழி தன்னிடமிருக்கும் ஒன்றினைக் கொடுத்து அப்போதைக்குத் தன்னை மகிழ்விக்கும், தனக்குத் தேவையான ஒன்றைப் பெற்றனர் என்ற தன்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதே சூழலில் நெய்தல் நில பரதவப் பெண்கள்தம் நிலத்து மீனை திருவிழா நடைபெறும் ஊர்களிலும் சென்று விற்றுள்ளனர்.

“ திமிலோன் தந்த கடுங்கன் வயமீன்

தழையணி அல்குல் செல்வத்தங்கையர்

விழவயர் மறுகின் விலையெனப் பகரும்

கானலம் சிறுகுடி”              (அகம், 320,2-5)

நெய்தல் நில பரதவர், கடல் தந்த மீனை மட்டுமல்ல கடற்கரை சார்ந்த உப்பளங்களில் உப்பும் விளைவித்தனர். அவ்வுப்பை, உப்பு வணிகர்கள் மாட்டு வண்டிகளில் நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து அதற்கு ஈடான உப்பை ஏற்றிக் கொண்டு போனார்கள்,

“ தந்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

-----------------------------------------

உமர் போகலும்"     (நற்றிணை. 183)

உப்பு வணிகர் வந்து உப்பை நெல்லுக்கு வாங்கிச் சென்றாலும் நெய்தல் நில பெண்களும் உப்பைக் கொண்டு போய்க் கொடுத்து மருதநிலத்தில் நெல் வாங்கி வந்தனர்,

“ ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய

உப்பு விளை கழனிச் சென்றனள்” (குறுந்தொகை 269.4-6)

உப்பு வணிகர்கள் உப்பளத்தில் நெல்லுக்கு வாங்கிய உப்பை உப்பு வணிகர்களின் மனைவியர்களாகிய உமணப் பெண்கள், தெருக்களில் கொண்டுபோய் விற்கும் பழக்கம் இருந்துள்ளது.

ஊர் தெருக்களில் உப்புவிற்ற உமணப் பெண் நெல்லுக்கு உப்பை மாற்றினதை,

“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரிவிலை மாறு கூறலின்”‘ (அகம்.140,5-8)

என்றும்,

“ நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும்” (அகம்.390,8-9)

உமணர் தந்த உப்பு நொடை நெல்" (நற்றிணை.254,-6 )

என்ற பதிவுகள், நெல்லும் உப்பும் பண்டமாற்று தன்மையில் பெற்றிருந்த பொது விலை மதிப்புத் தன்மையை உணர்த்துவதாகவும் அமைகிறது.

குறிஞ்சி நில வேடர்களும் தான் வேட்டையாடியதைத் தனக்குத் தேவையான மற்றொன்றுக்கு மாற்றிக் கொண்டனர்.

“ தேனெய்யொடு கிழங்கு மாறியோர்

மீனெய்யொடு நறவு மறுகவும்

தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்

மான் குறையொடு மது மறுகவும்” (பொருநர் ஆற்றுப்படை 214-217)

வேடர்கள் தேனையும் கிழங்கையும் கொண்டு வந்து மதுபானக் கடைகளில் மாற்றி, அதற்கு மாறாக வறுத்த மீன் இறைச்சியையும், மதுவையும் வாங்கி சுவைத்து மகிழ்ந்துள்ளனர்.

இதேபோன்று உழவர்கள் கரும்பையும் அவலையும் கொண்டுவந்து கொடுத்து, அதற்கு மாறாக வறுத்த மான் இறைச்சியையும் மதுவையும் பெற்று உண்டு மகிழ்ந்தனர். இப்பதிவுகள் அன்று ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாற்றி பெற்றுக் கொண்ட தன்மையோடு உடனே உண்ணும் பொருள்களையும் பண்ட மாற்றாகப் பெற்றுக் கொண்டனர் என்ற தன்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், கையில் ஒரு பொருள் இருக்கும் போது அதைக் கொடுத்து மற்றொரு பொருளைக் கொடுத்ததோடு, பொருள் இல்லாத தருணத்திலும் பிறகு கொண்டு வந்து தருகிறோம் இப்பொழுது இப்பொருளைத் தாருங்கள் என்ற நிலையில்,

பாலை நில எயினர், மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்திற்கு வருகின்றனர். எப்பொருளும் இல்லாதபடியால் காட்டில் வேட்டையாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து தருகிறோம், அதற்கு ஈடாக இப்பொழுது கள்ளைத் தாருங்கள் என்று கேட்ட காட்சியை அகநானூறு பாடலில் காண முடிகிறது.

“அரிகிளர் பணைத் தோள் வயிறணி திதலை

அரியை வாட்டியர் அல்குமனை வரைப்பின்

மகிழ்நொடை பெறஅராகி நனைகவுள்

கான யானை வெண்கோடு சுட்டி

மன்றாடு புதல்வன் புன்றலை நீவும்

அருமுனைப் பாக்கம்”    (அகம்.245.8-13)

பண்டமாற்று என்ற நிலையில் தனக்குத் தேவையான ஒன்றினை கடனாகவும் பெற்றுக்கொள்ளும் சூழல் இருந்துள்ளது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் இதன் எச்சமாகத் தனக்கு உறவுள்ளவரிடமோ அல்லது தனக்கு அருகில் உள்ள அண்டை வீட்டாரிடமோ உணவுப் பொருள்களை மாற்றி வாங்கிக் கொள்ளும் பழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.அதிலும் மீன் குழம்பும் கருவாட்டுக் குழம்பு வைக்கும் வீட்டில், இக்குழம்பு பிடிக்காத ஒருவர் அவ்வீட்டில் இருப்பின் ஒருவருக்காக ஒரு குழம்பு வைக்க வேண்டும் என்ற சூழலில் சாம்பாரோ, ரசமோ, புளிக் குழம்போ, பழகிய ஒருவீட்டாரிடம் பெற்றுக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

யானைத் தந்தங்களைத் தானியத்திற்கு மாற்றி சிறுகுடி மக்கள் சோறு சமைத்து உண்டுள்ளனர். யானைத் தந்தத்திற்கு தானியம் மாற்றாக இருந்திருக்கிறது.

‘காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்

கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத் துண்ணும்

வல்வில் ஓரி கொல்லிக் குடவரை’ (குறுந்தொகை.100, 3-5)

இச்சூழலில் பண்ட மாற்று, உள்நாட்டுப் பயன் பாடாக மட்டும் இல்லாது ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்குமான வணிகத்திலும் நிலைகொண்டிருந்தது. கடலில் கிடைத்த முத்துக்களையும், சங்குகளை அறுத்து உண்டாக்கிய வளையல்கள், கப்பல் வாணிகர் கொண்டு வந்த நவதானியங்கள், கருவாடு போன்றவற்றை நாவாய்களில் கொண்டுபோய் அயல் தேசத்தில் விற்றுவிட்டு, அங்கிருந்து குதிரை முதலியவற்றைக் கொண்டு வந்துள்ளனர்.

“முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்

அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை

பரதர் தந்த பல்வேறு கூலம்

இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்

பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்

கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல்

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

நனந்தலைத் தேஎத்து நன்கலம் உய்ம்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடனைத்தும்" (மதுரைக் காஞ்சி 315-323)

இதைப் போன்றே மிளகு கருப்புத் தங்கம் என்றும் இதனை யவனர்கள் விரும்பி வாங்கியதால் யவனப் பிரியர் என்றும் அழைக்கப்பெற்றது. யவனர்கள் பெரிய யவனக் கப்பல்களில் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகைப் பண்டமாற்றாக வாங்கிச் சென்றனர். பொருள் மதிப்பில் தங்கத்தின் மதிப்புவேறு மிளகின் மதிப்புவேறு.இவற்றைப்போன்றுதான் யானைத் தந்தத்திற்கு மாற்று தானியங்கள் என்பதும்.

“கள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி”           (அகம்.149.8-

இதே போன்று புறநனூறு,

“மீன் நொடுத்து நெல்குவைஇ

மிசை அம்பியின் மனை மறுக்குந்து

மனைக்குவைஇய கறிமூடையால்

கலிச் சும்மைய கரைகலக்குறுந்து

கலம் தந்த பொற் பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து

-------------------------------------

படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே” (புறம்.343)

யவனர்கள் பொன்னுக்கு மாற்றாக மிளகு மூட்டைகளை வாங்கிச் சென்றனர். இப்படியாக உள்நாட்டு வணிகத்திலும் வெளிநாட்டு வணிகத்திலும் பண்டமாற்று வணிகம் இருந்த நிலையில் அதே சமயம் காசுப் பயன்பாடும் இருந்துள்ளது.

“நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமை நல்லான் கருநாகு பெறூஉம்

மடிவாய்க் கோவலர்” (பெரும்பாண் 164-166)

இடைச்சியர் அன்று நெய்யைக் கொடுத்து விலையாக அளந்து பொன்னைப் பெறாமல் ஒருவரிடம் நெய்யைக் கொடுத்து அக்காசு (பொன்) சேர்ந்தவுடன் அவர்களிடம் பசுவும் ‘பெண் எருமையும் வாங்கிக்கொண்டாள் என்ற பதிவு ஒரு பொருளைக் கொடுத்து பண்டமாற்று பெறலாம்; காசு பெறும் சூழலும் இருந்தது என்பதை உணர்த்தும் நிலையில் பண்டமாற்றே அதிகம் புழக்கத்தில் இருந்தது என்பதை அவதானிக்க முடிகிறது.

புழக்கத்தில் இருந்த காசுகள் உகா மரத்தின் பழம் போல் மஞ்சள் நிறமாக இருந்தமையை,

“குயில்கண் அன்ன குரு உக்காய் முற்றி

மணிக்கா சன்ன மானிற இருங்கனி

உகாஅ மென்சினை உதிர்வன கழியும்

வேனில் வெஞ்சுரம்”         (அகம்.293.6-9)

அதாவது உகா மரத்தின் பழம் போல் மஞ்சள் நிறமாக பொற் காசுகள் இருந்தன. பொற்காசு காணம் என்றும் அழைக்கப் பெற்றது. பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தின் பதிகம் செல்வக்கடுகோ வாழியாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்கிறது. எனவே, காணம் என்பதும் அக்காலத்தில் வழங்கிய பொற்காசு என்பதை அறியலாம்.

பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு சோழன் கரிகாலன் நூறாயிரம் காணம் பரிசு வழங்கினான் என்ற குறிப்பிலிருந்தும் காணம் என்கிற பொற்காசு அன்றைய வழக்கிலிருந்ததை அறிய முடிகிறது. கப்பல் வணிகத்தின் மூலம் அந்நாளில் பயன்பாட்டில் இருந்த யவன தேசத்து நாணயங்கள் தொல்லியல் ஆய்வின் மூலமாகவும் கிடைத்துள்ளதிலிருந்து வணிகத்தில் காசுப் பயன்பாடும் இருந்துள்ளது.

கடல் கடந்த வணிகத்திலும் பொற்காசு கொடுத்து யவனர் மிளகு பெற்றனர். தானியங்கள் கொடுத்து அயல் தேசங்களிலிருந்து குதிரைகள் பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் அன்றாட பயன் பாட்டுப் பொருள்கள் பண்டமாற்று நிலையிலேயே நிகழ்ந்துள்ளது. ஐந்து நிலத்து மக்களுள் அந்நிலத்தில் தேடிய அல்லது உற்பத்தி செய்த பொருள்களை பெரும்பாலும் மருதநிலம் வந்தே கொடுத்து நெல் மற்றும் பிற தானியங்களைப் பெற்றுள்ளனர். நெய்தல் நிலத்தில் விளைந்த உப்பை உமணர்கள் நெல்லைக் கொடுத்து உப்பைப் பெற்று அவர்கள் மீண்டும் மருத நிலத்தில் உப்பைக் கொடுத்து நெல் பெற்றனர். இந்த உப்பு வணிகத்தில் உமணப் பெண்களும் ஈடுபட்டனர்.

முல்லை மற்றும் குறிஞ்சி நில மக்களும் பண்டமாற்றின் மூலமாகவே தன்னிடம் உள்ள ஒன்றைக் கொடுத்துத் தனக்கு தேவையான ஒன்றினைப் பெற்றனர் என்பதை முடிவாகக் கருத முடிகிறது. பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் பண்டமாற்று நிலையிலேயே நிகழ்ந்துள்ளது. அதே சமயம் காணம் என்கிற காசுப் பயன்பாடும் புழக்கத்தில் இருந்துள்ளது. கடல் வணிகத்தில் பண்டமாற்றோடு காசுப் பயன்பாடும் இருந்துள்ளது..

- முனைவர் பு.இந்திராகாந்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்.