மலையாளத்திலிருந்து தமிழ் பிறந்தது என்னும் தலைப்பில் பி.எச்.டி. ஆய்வு செய்யும் மாணவரைப் பற்றி என் நண்பர், மலையாளக் கவிஞர் சொன்னார். அந்த ஆராய்ச்சியாளர் சங்ககாலக் கேரளத்தில் (பண்டைய, சேர நாடு) ஒட்டு மொத்தமாக பேச்சு வழக்கில் இருந்த மொழி மலையாளம், அதிலிருந்து தமிழ் பிறந்தது. சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்கள் அப்போது பிறந்தன, பேச்சு வழக்கு  மலையாளம் தொடர்ந்தது என்ற ஒரு முடிவைக் கூற சுற்றி வளைத்து எழுதியதை நண்பர் சொன்னார்.

தமிழிலிருந்து மலையாளம் பிறந்தது என்று குண்டர்ட், கால்டுவெல் போன்றோர் சொன்னதை ராஜராஜவர்மா, சூரநாட்டுக் குஞ்சம்பிள்ளை, இளங்குளம் குஞ்சம்பிள்ளை எனச் சிலர் ஒத்துக் கொண்டு விரிவாக ஆராய்ந்து விளக்கியிருந்தாலும் இந்தக் கருத்துக்கு எதிரான கூட்டம் எழுபதுகளில் உருவாகி விட்டது.

சாஹித்ய அகாதமி வெளியிட்ட மலையாள இலக்கிய வரலாறு நூலின் (1958) ஆசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் நாயரைப் போன்றோர் தமக்கு முந்திய மலையாள ஆய்வாளர்களான இளங்குளம் போன்றோரைத் தீவிரமாய் மறுத்து எழுதினர்.   இதன் தொடர்ச்சி தொய்வில்லாமல் மௌனமாகத்தான் நீண்டு போனது. ஆனால் மலையாளம் செம்மொழியான பிறகு சாதாரண மலையாள வாசகனும் தமிழைத் தன் சகோதர மொழியாகக் கூறுவதில் தயக்கம் கொள்கிறான்.  இதே நேரத்தில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து என்னும் நூற்களையும் ஐயனாரிதனார், கபிலர் வேணாட்டடிகள், குலசேகர ஆழ்வார் எனப் பழம்புலவர்களையும் தங்கள் முன்னோடிகள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்.

தங்களின் கவிதை வேரைச் சிலப்பதிகாரத்திலிருந்து தொடங்குவதில் பெருமை கொள்ளும் இவர்களிடம் இந்த முரண்பாடு எப்படி வந்தது? பண்டைய திருவிதாங்கூர், கொச்சி அரசர்களிடம் இல்லாத தமிழ் வெறுப்பு இவர்களிடம் எப்படி வந்தது? தமிழ் மொழியிடமும் தமிழரிடமும் கேரளத்தாருக்கு ஏற்பட்ட மௌனமான மென்மையான இந்த வெறுப்பிற்கும் தங்கள் பூர்வீகம் தமிழ் என்று கூறுவதில் தயக்கமும் எதனால் உருவானது?

முக்கியமாக, இதற்குரிய பொறுப்பை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மலையாளத் திரைப்படங்களில் தமிழ் பேசி சாலை வியாபாரிகளை வில்லன் “ஏ பாண்டிக் கழுதை” என்பதும், தமிழ்த் திரைப்படங்களில் கேரளப் பெண்ணை நகைச்சுவை நடிகர் இரட்டை அர்த்தத்தில் அழைப்பதும் ஆன காட்சிகள் இரண்டு மாநில மக்களிடமும் மௌனமான பண்பாட்டு விலகல் உருவாகக் காரணமாயிருக்கின்றன. இது மெதுவாக நடந்த நிகழ்வு.

முல்லைப் பெரியாறு விஷயத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்தபோது தமிழ்த் திரைப்படக் காட்சிகளை மேடையில் விஸ்தாரமாகப் பேசி மலையாளிகளை வெறுப்பேற்றியது அச்சில் வரவில்லை. இதுபோல கேரள எல்லைப் பகுதிகளில் ‘பாண்டிக்கழுதைகள்’ என்று துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டதும் பலர் அறியாத விஷயம்.

கேரள - தமிழக மாநிலங்களுக்கிடையே உள்ள அரசியல் ரீதியான, பண்பாட்டு ரீதியான விலகல் அண்மைக் காலத்தில் உருவானது. முந்தைய மலையாள இலக்கண ஆசிரியர்கள் தமிழைத் தங்களின் தாயாகக் கருதினார்கள்.  மலையாள இலக்கணங்களில் காலத்தால் முந்தியது ‘லீலாதிலகம்’ என்ற நூல்.  இதன் ஆசிரியர் பெயர் தெரியாது. இதைப் பதிப்பித்த மலையாளப் பேராசிரியரும் தமிழ் நன்கு அறிந்தவருமான இளங்குளம் குஞ்சன்பிள்ளை இந்நூல் கி.பி. 1385-1400ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது என்கிறார்.

லீலாதிலகம் ஆசிரியர் தமிழ் நன்றாக அறிந்தவர் என்பதற்கு நூலில் நிறைய சான்றுகள் உண்டு.  இவர் தொல்காப்பியம் அறிந்தவர்.  வீரசோழியத்தைப் பயின்றவர்.  இவர் சேந்தன் திவாகரத்தை நாட்டுமொழி நிகண்டு என்கிறார்.  தொல்காப்பியம் உரையாசிரியர்களில் தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர் ஆகிய இருவரும் இவருக்குப் பிடித்தமானவர்கள்.  இவர் மலையாள இலக்கியங்களான இராமசரிதம், கிருஷ்ணகதா, கண்ணசராமாயணம், பாரதமாலை எனச் சில நூற்களைத் தமிழ்க் கலப்புடையவை என்கிறார்.

லீலாதிலகம் ஆசிரியர் மலையாளச் சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் வகுக்கும்போது தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரண்டு தமிழ் இலக்கணங்களின் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார்.  இவர் தமிழ் இலக்கணங்களை எடுத்துப் பயன்படுத்துவதை, இந்நூலின் பதிப்பாசிரியரான இளங்குளம் பெருமையாகக் கூறுகிறார். இந்த இலக்கணம் வழி சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ஆம் நூற்றாண்டுவரை கேரளத்தில் உலக வழக்கு மொழியும். செய்யுள் வழக்கு மொழியும் தமிழாகவே அமைந்திருந்தது என்கிறார்.

இளங்குளம் கேரளத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் மணிப்பிரவாள நடை உருவானது இதற்கு முந்திய காலங்களில் வட்டெழுத்து எழுத்துமொழியாக இருந்தது.  அதனிடத்தில் ஆரிய எழுத்து வந்தது.  அதுவே பின் கிரந்த எழுத்துக்களுடன் கலந்து மலையாளம் ஆனது என்கிறார்.  அவர் லீலாதிலகத்தின் அடிப்படையில் இதை வரையறை செய்கிறார்.  கி.பி. 9 முதல் 11ஆம் நூற்றாண்டுகளில் கேரளத்தில் கிடைத்த பல ஆவணங்கள் தமிழ், வட்டெழுத்து வடிவில் எழுதப்பட்டன.  திருவிதாங்கூர் கோவில்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் வட்டெழுத்து வடிவில் அமைந்தவை ஆகும்.

மலையாளத்தின் இன்னொரு முக்கியமான இலக்கண நூல் கேரள பாணினீயம்.  எழுதியவர் ராஜராஜவர்மா.  சென்னைப் பல்கலைக் கழகத்தில் மலையாள மாணவர்களுக்குப் பாடத் திட்டத்தில் இருந்த நூல்.  ராஜராஜவர்மா (1868-1918) கேரளம் சங்கனாச்சேரி ஊரினர். அரச குடும்பத்தினர், அப்பா ஏற்றுமானூர் வாசுதேவன் நம்பூதிரி.

வர்மா 1871இல் திருவனந்தபுரத்திற்கு வந்து விட்டார்.  அப்போது திருவிதாங்கூர் அரசராயிருந்த ஆயில்யம் திருநாள் (1860-1880) இவரைப் பாதுகாத்துப் படிக்க வைத்தார். வர்மா முதலில் பி.எஸ்ஸி படித்தார், பின் சமஸ்கிரத எம்.ஏ. படித்தார்.  49 வயதில் பேராசிரியர் ஆனார்.  இவர் எழுதியவை பாஷா பூஷணம், ஸாகித்யலாகியம், விருத்த மஞ்சரி ஆகியன.

வர்மா மலையாளம் தவிர தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நுட்பமான புலமை உடையவர்.  தனக்கு முற்பட்டு வாழ்ந்த குண்டர்ட்டின் மலையாள மொழி இலக்கணம் (1851), லீலாதிலகம் (கி.பி. 14 நூற்.) இரண்டையும் தன் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தாலும் அவற்றிலிருந்து வேறுபடவும் செய்கிறார்.

வர்மாவின் கேரளபாணினீயம் என்ற இலக்கண நூல் 1895இல் வந்தது. இதில் நீண்ட முகவுரை உண்டு. தமிழிலிருந்து மலையாளம் பிறந்த ஆய்வை முழுவதுமாக ஒத்துக் கொண்டு, அதை விரிவாகக் கூறுகிறார். இந்த முகவுரையில் அவர் கூறுவதன் சாராம்சம் இதுதான்.

லீலாதிலகம் என்ற இலக்கண நூல் எழுதப்படும் முன்பே மலையாள மொழி வரன்முறையில்லாமல் பேசப்பட்டது, எழுதப்பட்டது. இம்மொழிக்கு முதலில் இலக்கண வடிவத்தைக் கொடுத்தவர் குண்டர்ட் என்ற ஐரோப்பியர். பழங்காலத்துப் பேச்சுவழக்கு தமிழ் சமஸ்கிருதத்துடன் கலந்து மணிப்பிரவாளம் உருவானபோது ஏற்பட்ட ஒருவகை மோகம் கேரளத்தில் தமிழ் அழியக் காரணமானது.

சாக்கையர் கூத்தில் பாடப்பட்ட இராமாயணம் பாரதம் போன்றவை 19ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால் மலையாளத்தில் தமிழில் தாக்கம் எந்த அளவுக்கு ஆழமாய்ப் பதிந்து கிடந்தது என்பதைத் துல்லியமாய் கூறியிருக்க முடியும். அது யாராலும் பதிவு செய்யப்படவில்லை, அது துரதிஷ்டமானது.

கொடுந்தமிழ் மொழி திராவிடமாகிய இமயமலையிலிருந்து பாய்ந்து சமஸ்கிருத யமுனையுடன் கலந்து மலையாள மொழியாயிற்று.  ஆரிய திராவிடக் கலப்பு காயலில் ஆறு விழுவதைப் போன்றது என்றெல்லாம் உவமானங்களுடன் தமிழிலிருந்து மலையாளம் பிறந்தது என்கிறார் வர்மா.

தமிழிலிருந்து மலையாளம் வந்தது என்று ஆணித்தரமாகக் கூறும் லீலா திலகம் (1971) கேரள பாணினீயம் (1977) ஆகிய இரண்டு இலக்கண நூற்களையும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் மறைந்த இளையபெருமாள் மொழிபெயர்த்துள்ளார். இரண்டு நூற்களும் இப்போது அச்சில் இல்லை.  தேடிக் கண்டுபிடித்துப் படிக்கலாம்.

- அ.கா.பெருமாள்

Pin It