நாம் தமிழர் கட்சி ஆவணம் அக்கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வரலாற்று சம்பவங்களாக பல திரிபுகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓட்டுக்கட்சி அரசியலால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான தமிழ்த்தேசிய முழக்கத்தை கையிலெடுத்திருக்கும் 'செந்தமிழன்' சீமான் அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் முன்வைக்காமல், எதிர்ப்பு அரசியலிலும், தமிழினம் போற்றும் தலைவர்களை குறை சொல்வதிலும் அதீத கவனம் கொண்டு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார். 

ஒடுக்கப்பட்டோர் நலன், தமிழின நலன், சமூகநீதி என தன் பாதைகளை வகுத்துப் போராடி வந்திருக்கும் திராவிட இயக்கத்தை தமிழர் விரோதியாக சித்தரிப்பது என்பது கடினமான காரியம் மட்டுமல்ல, முடியாத காரியமும் கூட! ஆனால் அதற்காக பயங்கரமாக மெனக்கெட்டு, அதிஅற்பத்தனமான பொய்களைச் சொல்லி, வரலாற்றைத் திரித்து செவ்வனே முயன்றிருக்கிறது ஆவணம்.

பெரியாரியவாதிகள், அரசியல் ஆதரவற்ற சீமானுக்கு அமைத்துக்கொடுத்த மேடைகளில், "நான் பெரியாரின் பேரன், பெரியாரின் பேரன்" என தொண்டை புடைக்க முழங்கி இன்று பெரியாரை தமிழின விரோதியாக சித்தரித்திருக்கும் போக்கு ஓரிரவில் நடந்ததல்ல! சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி இணையதளத்தில் இருந்து திடீரென பெரியாரின் படம் காணாமல் போனதில் ஆரம்பித்து படிப்படியாக நாம் தமிழர் கட்சி தனது இந்த வெளிப்படையான ஆரிய ஆதரவுப் போக்கை வடிவமைத்திருக்கிறது! சரி செய்ததையாவது சரியாகச் செய்தார்களா, வெளிப்படையான எதிரியாக உருமாறி தைரியத்துடன் எதிர்த்து நின்றார்களா என்றால் அதுவும் இல்லை! நாம் தமிழர் கட்சி ஆவணம்  ஏகப்பட்ட நகைச்சுவைகளையும், தவறான வரலாற்று உதாரணங்களையும், பக்கத்துக்கு பக்கம் மாறுபட்ட கொள்கைகளையும் தாங்கி முரண்களின் மூட்டையாக நம் முன் விரிகிறது.

ஆவணம் முழுவதும் பார்ப்பனர், ஆரியர் என்ற சொற்களுக்கு பதிலாக 'மனு நெறியாளர்' என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பார்ப்பனர் என்றால் உயர்ந்தவன், சீரிய நெறியாளன் என பொருள் என்று 117ம் பக்கத்தில் அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.

"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே -
வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே" என்று பாடியிருக்கிறார் பாரதியார் (பக்கம் 44ல் போற்றுதற்குரிய பெருமக்கள் வரிசையில் பாரதியாரையும் சேர்த்திருக்கிறார்கள்). நடப்பு வழக்கில் 'பார்ப்பனர்' என்ற சொல்லாடலுக்கு 'உயர்ந்தவன், சீரியவன்' என்ற அர்த்தம் இருந்திருந்தால் மேற்கண்டவாறு பாடியிருப்பாரா பாரதியார்? பார்ப்பனர் என்பதற்கான நடைமுறை அர்த்தத்தை மறைத்துவிட்டு, ஒருகாலத்தில் பார்ப்பனர்களே பார்ப்பனர்களுக்கு வழங்கிக்கொண்ட செத்துவிட்ட பொருளைத் தோண்டி எடுத்து உயிர்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? யாரை திருப்திப்படுத்த இந்த 'பொருள்' புதுப்பிப்பு!?

பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தெலுங்கர்கள் தங்கள் ஆதிக்க நிலையை மீட்டெடுத்துக் கொள்வதற்காகவே இடஒதுக்கீடு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி இடஒதுக்கீடு என்ற திராவிட இயக்கத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை காக்கும் திட்டத்தின் மேல் போகிற போக்கில் சேற்றை அள்ளி இறைக்கிறது ஆவணம். இடஒதுக்கீடு சட்டங்களில் எந்த இடத்தில் தெலுங்கர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றோ அருந்ததியினர் என்ற தெலுங்கு பேசும் ஆதிதிராவிடரின் நிலையையும் ஆதிக்கசாதி தெலுங்கர்களோடு சேர்த்தே மதிப்பிடுகிறதா என்பது குறித்தோ ஆவணத்தில் தெளிவான கருத்துக்கள் இல்லை. தெலுங்கு பேசுவோர் எல்லாம் பார்ப்பனர் போன்ற உயர்ந்தநிலையில் இருந்தவர்களாகவும், தமிழ்பேசுவோர் எல்லாருமே கீழ்நிலையில் அடிமைப்பட்டுக்கிடந்ததாகவும் சொல்கிறது ஆவணம். ஆதிக்க சாதியினரான தெலுங்கு நாயக்கர்களும், ரெட்டிகளும், தமிழ் ஆதிக்கசாதியினரான செட்டியார்களும், முதலியார்களும் சம-நிலையில் வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு!

மேலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகள் அனைத்துமே முன்னேற வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாக இருந்தது என்பதையும், பிற்படுத்தப்பட்டவர்களை விட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை இருப்பதையும் மறந்தோ அல்லது மறைத்தோ, ஏதோ தெலுங்கு பேசுவோருக்கு மட்டும் இடஒதுக்கீட்டை அள்ளிவழங்கியது போல பொய் பரப்புரை செய்கிறது ஆவணம். இடஒதுக்கீட்டை இன்றுவரை எதிர்க்கும் ஒரே வகுப்பினர் யார் என்பதும், இடஒதுக்கீட்டு திட்டத்தினால் பலமாக பாதிக்கப்பட்டது யாருடைய ஆளுமை என்பதும் அனைவருக்கும் தெரியும். மீண்டும் தமிழர்களை ஏவலாட்களாக, வர்ணாசிரம அடிமைகளாக மாற்ற திட்டம் தீட்டி, சமகால-பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்த இந்த ஆவணத்தின் மூலம் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. 

சி.பா.ஆதித்தனார் அவர்களைப் போற்றுவது போல் தொடங்கி பின் அவர் திராவிடத்தை நம்பி ஏமாந்தவர் என பறைசாற்றுகிறது ஆவணம். திராவிட இயக்கத்தின் மறைந்த ஒரு முக்கியத் தலைவரை "நம்பி ஏமாந்தார்" "தமிழ்த் தேசியத்திற்கு பெருந்தீங்கு செய்தார்" என எந்த ஆதாரமும் இன்றி அவர் மனசாட்சி போல அடித்துச் சொல்வது எந்த வகையான பண்பு எனப் புரியவில்லை.

இருமொழிக்கொள்கைதான் தமிழைக் காப்பாற்றும் என திராவிட இயக்கங்கள் அறிவித்ததும் போராடியதும் துரோகமாம், ஆராய்ச்சி செய்திருக்கிறது  நாம் தமிழர் கட்சி. திராவிட இயக்கங்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஒருபேச்சுக்காக நாளை  'நாம் தமிழர் கட்சி' ஆட்சிக்கு வருவதாக வைத்துக்கொண்டால் கூட மத்திய அரசுடன் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டியிருந்திருக்கும்! செந்தமிழன் சீமான் கூட '30நாட்களில் இந்தி கற்பது எப்படி?' என்ற புத்தகத்தோடு தமிழை இந்தியில் வளர்த்திருப்பார்! ஆனால் உலகத் தொடர்புமொழி ஆங்கிலத்தை இந்தியாவில் தக்கவைத்து அதன்மூலம் இந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழர்களைக் காத்தது திராவிட இயக்கம். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் தகவல் தொடர்புத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் மின்னுவதற்கு திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பங்கு மகத்தானது என ஊடகங்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

ஏதோ பலநூறு வருடங்களாக களத்தில் இருக்கும் இயக்கம் போல வரலாற்றையே மாற்றியமைத்த போராட்டங்களின் மேல் மிக சுலபமாகப் பழிபோடுகிறது ஆவணம்!  1900களின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட தமிழையும், இன்றைய தமிழையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட இயக்கம் எவ்வளவு சீரிய முறையில் சமஸ்கிருத கலப்பில் இருந்து தமிழ்மொழியைக் காப்பாற்றி இருக்கிறது எனப் புரியும்.

அடுக்கடுக்காக அடுத்தடுத்த பக்கங்களில் வெளிப்படும் எல்லாப் பொய்களுக்கும் சிகரம் வைத்தாற்போல ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த சிங்களப் பேரினவாதத்தை 'திராவிடம்' எனச் சொல்கிறது ஆவணம்! பேரினவாத சிங்கள அரசுக்குக்குக் கூட  இவ்வளவு பெரிய பொய் சொல்ல, திரிபு செய்ய துணிவிருக்குமா எனத் தெரியவில்லை! தமிழர்கள் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கும்போதெல்லாம் "இலங்கைக்கும் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியான நட்பு உண்டு." என இந்திய அரசு பதில் சொல்வதை நாம் தமிழர் கட்சி வசதியாக மறந்துவிட்டது. ஆதிகாலத்தில் சிங்களர்கள் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறிய ஆரியர்கள் என்பதும் அவர்களுக்கும் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும் எவ்வகையிலும் தொடர்பு கிடையாது என்பதும் வரலாற்றுத் தெளிவு முற்றிலும் இல்லாத நாம் தமிழர் கட்சிக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாளை வாய்ப்பு கிடைத்தால் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் பார்ப்பனியத்துடன், ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை நின்ற ஆரிய-சிங்கள வரலாற்று நட்புடன் கைகுலுக்கி "பாவம். திராவிடர்கள் செய்ததற்கு நீங்கள் என்ன செய்வீர்கள். நாமெல்லாம் ஒரே இனம்" என நாம் தமிழர் கட்சியினர் சொன்னாலும் சொல்வார்கள்! சிங்களர்கள் திராவிடர்கள் என்றால் அங்கு அழிந்த தமிழர்கள் என்ன ஆரியர்களா? பொய் சொல்வதை பொருந்தச் சொல்லவேண்டாமா? 

சாதிப்பெயர்களை துறப்போம் என 'நடத்தை விதி' பகுதிகளில் பறைசாற்றும் ஆவணம், மறக்காமல் கட்சி வழிகாட்டிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்போர் அனைவருக்கும் சாதிப்பெயர்களை இட்டு மகிழ்ந்திருக்கிறது. தேவர், படையாட்சி என மறக்காமல் சாதிப்பெயர்களை குறிப்பிட்டிருக்கிறது. அதாவது உங்கள் சாதியிலும் ஒருவரை (அவர் வெறும் சாதித்தலைவரக இருப்பினும் கூட) எங்கள் வழிகாட்டியாக ஏற்றுள்ளோம் அதனால் தவறாமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என மறைமுக சாதி ஓட்டு கலாச்சாரத்தை தொக்கி நிற்கிறது அந்த பக்கங்கள்.

போற்றுதற்குரிய பெருமக்கள் பகுதியில் முத்துராமலிங்கம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதே முத்துராமலிங்கத்தை கீற்று இணையதளப் பேட்டியில், "அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் தான் தம்பி படத்தில் அவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தேன். பெரியாரின் மரணத்தின் போது இரங்கல் தெரிவிக்காத ஒரே கட்சி ஃபார்வர்ட் ப்ளாக் தான் என தோழர்கள் சொன்னார்கள். பின் அவர்மேல் கொண்ட நன்மதிப்பை மாற்றிக்கொண்டேன்" என சொன்ன சீமான் இப்போது மீண்டும் அவரை 'போற்றுதற்குரிய பெருமக்கள்' வரிசையில் சேர்த்திருப்பதன் மர்மம் என்ன? திராவிடக் கட்சிகளின் ஓட்டரசியலை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி ஒரு தேர்தலைக் கூட சந்திக்காவிடுனும் ஓட்டுக்காக எவ்வளவு சமரசங்களை செய்துகொள்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம்!

உண்மை இப்படியிருக்க, தமிழக அரசியல் இதழில் வெளிவந்த பேட்டியை தான் அளிக்கவேயில்லை என்று சீமான் மறுத்திருக்கிறார். ஆனால் தங்களிடம் ஆதாரம் உண்டு என்று தமிழக அரசியல் இதழ் கூறியபின் சீமானிடம் இருந்து மறுப்பேதும் இல்லை. இந்தப் பிரச்சினையை நாம் ஆராய வேண்டாம். ஆனால் தமிழக அரசியல் இதழில் சீமானின் பேட்டியாக வெளியான விஷயங்களும் ஆவணத்தில் உள்ள பெரியார் தூற்றல் விஷயங்களும் ஒன்றே. இந்நிலையில் சீமான் தன் பேட்டிக்கு எதிராக, "நாம் தமிழர் கட்சி பெரியாரை புகழ்பரப்புரை செய்து வருகிறது." என கூறி பேட்டியை மறுத்திருப்பது உண்மையென்றால் அவர் தன் கட்சியின் கொள்கை ஆவணத்தையே மறுக்கிறார் என்றே பொருள். நாம் தமிழர் கட்சி குழப்பநிலையில் உள்ளதா அல்லது கையும் களவுமாக பிடிபட்டபின் பிதற்றுகிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  

திராவிடத்தின் மேல் குற்றச்சாட்டுக்களை வைப்பதாகச் சொல்லி, மறைமுகமாக பெரியாரின் மேல் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டே போகிறது ஆவணம். தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார் என்பவர் தனியொரு மனிதரல்லர். அவர் ஒரு கோட்பாடு, கொள்கை, வாழ்வியல்.  பெரியாரைப் பிடிக்கவே பிடிக்காதெனினும், அவர் கொள்கைகள் எதிலுமே உங்களுக்கு உடன்பாடில்லையென்றாலும் உங்கள் பெயரின் பின்னால் நீங்கள் சாதிப்பெயர் எழுதுவதை உங்களுக்குத் தெரியாமலேயே தடுத்துவிட்டவர் பெரியார். பிற மாநிலங்களில் சாதிப்பெயர் பெருமையாகக் கருதப்படும் சூழ்நிலையில், தமிழகத்தில் அவமானகரமாகக் கருதப்படுவதற்கு காரணம் பெரியார். இப்படி தமிழக மக்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்ட பெரியாரை முன்வைக்காமல் தமிழகத்தில் அரசியல் நடத்தவோ, அரசியல்வாதியாக நடமாடவோ முடியாது.

தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் ஆந்திரா, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிவற்றை இணைத்து பெரிய மாநிலமாக நேரு அரசு உருவாக்கவிருந்தபோது தமிழர்களின் உரிமை மறுக்கப்படும் அதனால் தட்சிணப்பிரதேசத்தை அனுமதிக்கக் கூடாது என காமராசரை வலியுறுத்தி அதைத் தடுத்து நிறுத்தியவர் பெரியார். இதுபோல் பெரியாரைப் பற்றிய எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் உண்டு. இச்சூழ்நிலையில் அவரைப் பற்றிய உண்மைகளைப் பேச நேர்ந்தால் திராவிடக் கட்சிகளுக்கும், நாம்தமிழர் கட்சிக்கும் வித்தியாசம் காட்ட முடியாமல் போகும் என்ற காரணத்தால் பெரியாரின் மேல் தமிழர் விரோதக் கதைகளை இட்டுக்கட்டி இகழத் துவங்கி, அதை தன் மாற்று அரசியல்பாதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் பெரியாரின் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் இந்துத்துவ கட்சிகள், கோட்பாடுகள் நுழையவே முடியாத தமிழகத்தில், 'தமிழர் நலன்' என்ற முகமூடியுடன் இந்துத்துவ, சாதிய கோட்பாடுகளை மறைமுகமாகத் தாங்கி நுழைந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதற்கான முத்தாய்ப்பாகத்தான் நாம் இந்த ஆவணத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த பிஜேபி மாநாட்டு சுவரொட்டிகளில் "தமிழ்த்தாய் தமிழ்த்தாய்" என முழங்கியிருந்தார்கள். பிஜேபி "தமிழ் தமிழ்" என முழங்குவற்கும் 'நாம் தமிழர் கட்சி'யின் தமிழ், தமிழர் நலன் குறித்த முழக்கங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அவர்களின் கொள்கை ஆவணம் தெள்ளித்தெளிவாக பறைசாற்றுகிறது.

முடிவாக நாம் தமிழர் கட்சி, 'ஆவணம்' என்ற பேரில் ஏறி வந்த ஏணியை எட்டித்தள்ளி தன் ஆணவத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழர்களை பார்ப்பனியத்திடமிருந்து மட்டுமல்லாமல், முளைவிட்டிருக்கும் இந்த புதிய-பார்ப்பனியத்திடமிருந்தும் கவனத்துடன் காக்கவேண்டிய பொறுப்பு திராவிட இயக்கங்களுக்கு இருக்கிறது. 

Comments

31 comments

31
Guest
thanks for the article
REMO
சொல்லிடாரு திமுக ஏர வெஙாயம்
டான் அசோக்
இது பெரியாரின் வெங்காயம். காரம் அதிகம்! :-)
Udhaya Kumar K
நல்ல பதிப்பு நண்பரே!
saidai anbarasam
தங்கள் கட்டுரையை படித்தேன்.அருமை !
mahendran
வணக்கம் இந்த கட்டுரை எனக்கு சில வரலாற்று பிழையை உணர்த்தினாலும் இவைகளை தாண்டி அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செல்கிறார் . அண்ணன் திருமாவளவன் அவர்கள் சாதி ஒழிப்பு , தமிழ் தேசியம் ,பார்ப்பன எதிர்ப்பு ,இந்திய இறையான்மை எதிப்பு .தனி தமிழீழம் போன்றவற்றை எடுத்து செல்லும் அவரது அரசியல் .ஆதிக்க அதிகார வர்க்கங்களால் ஓரங்ககட்டப்படுகிறார் . அதனால் ஆதிக்க அதிகார அரசியல் களத்தில் அவர் காணும் புதிய அரசியல் உத்தியாக கருதுகிறேன் .இதனை காரணமாக காட்டி சாதி தமிழனை சாடுவது சரியில்லாதது போன்று தோன்றுகிறது . அதை தாண்டி பின்சக்தி இருப்பதாகவே உணர்கிறேன் . வேறு எதாவது தமிழின அழிப்பு துரோகத்தில் ஈடுபட்டால் சொல்லுங்கள் .
கொக்கரக்கோ சௌம்யன்
நல்ல தீர்க்கமானதொரு கட்டுரை. திடீரென்று ஈழப்போராட்ட ஆதரவு களத்தில் குதித்து, அந்த போராட்ட்திற்கு உண்மையாக உதவி செய்ய முடிந்தவர்களையோ அல்லது அப்போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்கும் இடத்தில் இருப்பவர்களையோ போராளிக் குழுக்கள் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டுவிதாதபடி, இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு எல்லையை விரிவு படுத்தியதோடு, இரு தரப்புக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் வேலையையும் கன கச்சிதமாக ஆரியர் துணை கொண்டு இந்த சீமான் செய்து முடித்ததாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுக்குள்ளாகவே அக் கட்சியின் கொள்கைகளை நேர் எதிர் திசையில் மாற்றிக் கொள்வதை வேறு எப்படி பார்க்க முடியும்?
senthilnathan
நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தை குறை சொல்லுவதியே இன்று கீற்று பெரும் பன்கு நேரத்தை செலவிடுகிறது...
Dhurairajan Senthilnathan
சாமியார்களின் காலில் விழுந்து கிடக்கும் கருணாநிதி குடும்பத்தை பற்றியோ... அந்த குடும்பம் கடைபிடிக்கின்ற திராவிட கொள்கைகள் பற்றியோ எழுதவோ.... படிக்கவோ தெரியாத டான் அசோக்...

இன்று நாம்தமிழர் கட்சியின் ஆவணத்தை படித்துவிட்டு... அங்கே சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கு மாறான திரிபுகளை வெளிபடுத்திவருகின்றார்.....

இவருக்கு ஒன்று சொல்ல வேண்டும்.... திமுகவின் கட்சி ஆவணத்தை எடுத்து எங்கே பதிவு செய்து விவாதத்திற்கு வந்தால் விவாதிக்க தயார்....
selvan
Dear Sir
Thank u very much for ur comment on Naan Tamilar Katchi souvenir.
I have not gone through that book. While i go through their articles, I will have in my mind all ur comments. Thanks for alerting us.
Kamuismail
Naam tamilar entra pairel seeman varalaru thayriyamal ullari varukirar. Oru cinimakaraneen kunam marathu. Ithil vithee vilakku MGR matumay. Ilankai tamilar urimaiku kural goduka ivar vanthatha villamparam theydathan. Seeman indhan varalaru thiravida iykam tamil tamil nadu ithu patri mulumaiya ariyamal iya Nedumaran Vaiko ivarkaleen unnaroukaluku munnal avarar kaleen kal dusikum seeman thakuthi peramattar. Satthama kathukiravan sathiyamanavanga mudiyadu. Seeman intha varisai than pol iruku. Varalatri vasithu vala kattru gollukal.
டான் அசோக்
கருத்துக்களுக்கு விளக்கமோ, மாற்றுகருத்தோ வைக்காமல் வழக்கம்போல நாம் தமிழர் தோழர்கள் தங்களின் ஒரே கொள்கையான, ஒரே செயல்திட்டமான தனிமனிததூற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். போலி தமிழ்தேசியவாதிகளை துகிலுரிக்கும் பணி தொடர்ந்து நடக்கும்! நடக்கும்! நடக்கும்! வாழ்க வசவாளர்கள்.
பெரியார் குயில்
நேக்கு என்ன தெரியறதுன்னா... நேற்று வரைக்கும் சீமானாக இருந்தவா... இன்று ”ஸ்ரீமான்” ஆயுட்டா...! இனிமே அவாளுக்கும் கவலையில்லை! இதை வைத்தே ஈழத்தின் குரல்வளையை அறுக்க நம்ம கையே எடுத்தே நம்ம கண்ணை குத்த வைச்சுட்டா...! சபாஷ்...! சபாஷ்்....! அப்படியே சுப்பிரமணியசுவாமி தமிழரையும் சேத்துகுங்க உங்க புணுால் தமிழ் கட்சியிலே! நன்னா பேஷா எல்லா அனுஷ்டானங்களையும் செய்துடுவா...! ஏன்னா..! பார்ப்பான் என்றால் நல்லவா இல்லையோ...!

ஈழத்தில் எப்பயுமே இப்படித்தான் அடிச்சுட்டு சாவா...!

அவாளுக்கு போய் நாம ஏன் போராடனும்...!

ஐஐடி-யிலும், ஏய்ம்ஸ்-லேயும், ஐஐஎம்-லேயும் நம்ம சீட்ட ரிசர்வ் பண்ணிட்டு , ப்பாரின் போகறதுதானே நமக்கு முக்கியம்! ஸ்ரீமானையும், அவா குரூப்பையும் நமக்கு பணிவிடை செய்ய ஏற்பாடு செய்யச்சொல்லுங்கோ... காஞ்சி பெரியவாளிடம் சொல்லி ஆசீர்வதிக்க சொல்லிடறேன்! பேஷ் இருக்கும் இல்லையா...!

(கீற்று நிர்வாகத்திற்கு....
பெரியார் குயில் சீமான் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவர் மட்டுமல்ல. சீமான் அமைப்பின் முதுகெழும்பாக 3-ஆண்டுகளாக திகழ்ந்த தமிழர் குறுஞ்செய்தி ஊடக வட்டத்தின் ஆசிரியர் ஆவார். தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளை கட்டியவர். நாம் தமிழரில் சீமான் அல்லாமல், பிறர் எழுதிய முதல் நுாலை எழுதியவர்( ”பாம்பாறு அணைத்திட்டமும், மலையாள அரசின் சதித்திட்டமும்”). சீமானுக்காக 3-மாதம் கோவைச்சிறையில் சீமானோடு இருந்தவர். ஆகவே, அவரை நோக்கி விமர்சனங்கள் எழுத முழுத்தகுதியும் உண்டு என்பதை அறிக!)
sendhil kumar
டான் அசோக் ,மிக அழகான பதிவு.ஆனால் இந்த கருத்துகளை உங்களை போன்றவர்கள் தி.மு.க இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முடுக்கிவிடவேண்டும்,அடுத்த தலைமுறை இளைஞர்களை சரியான அரசியல் படுத்துதல்தான் இது போன்ற கருத்து தளங்களில் இருந்து தமிழ் சமூகத்தை காக்கும்.
சம்பூகன்
நல்ல கட்டுரை.கீற்று இணையத்தளத்திற்கு எனது பாராட்டுகள்.ஜாதிகள் ஒழிந்த தமிழ்ச் சமூகத்தைப் படைக்க பணியாற்றிவரும் கீற்று,பெரியார் மீதான அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் எழுதப்படும் கட்டுரைகளுக்கு இடம் அளிப்பதை தனது கடமையாகக் கொண்டுள்ளது.இலக்கை தெளிவாக வகுத்துக்கொண்டுள்ள கீற்று பாதை மாறாமல் பயணிக்கிறது.அதற்கு ஒரு உதாரணமே இந்தக் கட்டுரை.
அருள் மாணிக்கம்
தங்கள் கட்டுரைல் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. தாங்கள் சொல்லியிருப்பது போல் ஆவணத்தில் செய்திகள் இருப்பின் அது அக்கட்சி தனது நோக்கம், கொள்கை ஆகியவற்றில் தெளிவில்லாமல் இருக்கிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது. அக்கட்சியின் ஆதரவாளர்கள் அறிவுபூர்வமான விளக்கங்கள் கொடுக்காமல் கருணாநிதியையும் தி.மு.க.வையும் இழுப்பது மிகவும் பரிதாபமாக உள்ளது.திராவிட இயக்கம் என்றால் தி.மு.க தான் என்ற எண்ணத்தில் இருப்பது நாம் தமிழர்கள் நுனிப்புல் மேய்பவர்கள் எனும் எண்ணத்தையே உறுதிப்படுத்தும். நமக்குத் தேவை ஆழ்ந்த சிந்தனை, கொள்கைத்தெளிவு, ஒருங்கிணைந்த செயல்பாடு. தனி மனித பகைமை வளர்க்கும் அரசியல் நம்மை மேலும் பாழ் படுத்தும்
Vaira Muthu
"தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது" போல தந்தை பெரியார் அவர்களின் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்தவர்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த பதிவு...
nallan
ஐயா நமக்கு சமுக நீதி காக்க ஜாதி வேணும், ஆனா அவன் தமிழனானு பாக்க என் இனமானு அறிய. ஜாதி பாக்க கூடாத??
அண்ணனுக்கு இவ்வளோ எதிர்பா?? அப்போ அவர் சரியான வழில போறருனு நினைக்கிறேன்.
இந்தியாவின் கொள்கை மக்கள் சனநாயகம், ஆன இங்க அதுவா நடக்குது...??
அண்ணனோட ஆவணத்த அவர் தயாரித்து இருக்க மாட்டார்.
இங்க நடக்குற கூத்துக்கு நண்டு கதைதான் நியாபகம் வருது.
ஒரு தமிழனும் மேல வந்துட கூடாது..
அடி... அடி.... ஒத......
(விமர்சனம் வெறும் வார்த்தைகள், கற்கள் அல்ல..)
மகேந்திரன்
வந்தவர்களையெல்லாம் வாழவைத்து வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நல்லதே நினைத்த தமிழுக்கும், தமிழ்னுக்கும் இனி புதிதாக எந்த துரோகத்தையும் யாரும் செய்வதர்க்கு இல்லை. இன்று தங்கள் சுயநலத்திற்காக துரோகம் செய்பவெர்கேல்லாம் ஒன்றை உணருங்கள் இந்த உலகை சுடுகாடாக்க அடித்தளமிடுகிரீர்கள் அது உங்களுக்கும்தான் என்பதை சிந்தியுங்கள் . மீண்டும் மீண்டும் குடித்த மார்பை அருப்பவர்களும் ,கெட்ட குடியை கெடுப்பவர்களும் பெயர் கூட சொல்ல வழியில்லாமல் தவிப்பார்கள் . இது புனிதமான தமிழ்மேல் ஆணை
இரா.அசோக்.
மச்சி சூப்பர் சாட்டை அடி : ) :-)
இரா. கிரிதரன்
இயக்குநர் சீமான் பற்றி பரவலாக பேசிக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் சீமானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சிறந்த இயக்குநர். மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி படங்களில் புரிய வைப்பவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர். தா.பாண்டியன் தலைமையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமானின் பேச்சைக் கேட்டேன். ஆவேசமாகப் பேசினார். உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலையிலேயே கட்சியின் நடைமுறை அரசியலை விமர்சனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவரது போராட்ட நடவடிக்கைகளை ஆங்காங்கே போஸ்டர்கள், தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள், ஈழத்தமிழர் பிரச்சினைக் குறித்த அறிவிப்புகள் விளம்பரங்கள், நண்பர்கள் மூலமான கேள்விப்படல்கள் போன்றவைகளின் மூலமாக அவரைப் பற்றிய ஒரு மாயை என் மனத்தில் உருவாக்கி வைத்திருந்தேன். இன்றும்கூட அந்த நல்ல மாயை என் மனத்தை விட்டு போகவில்லை. அப்படியேதான் இருக்கிறது. சினிமாவில் வருகிற திடீர் திருப்பம் போல் நடைமுறை அரசியல் வாழ்க்கையிலும் ‘நாம் தமிழர் கட்சி’ ஆவணம் அமைந்திருக்கலாம். பெரியாரிசத்திலும் மார்க்சியத்திலும் ஆழ்ந்த புலமைக் கொண்டவர்கள் பலவாறு எதிர்த்து எழுதியிருப்பதை பார்க்க முடிகிறது.

இன்றையக் காலக்கட்டத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. அப்படி தப்பி தவறி விழுந்தவர்களை பார்த்து ‘அப்பாடா நாம் எவ்வளவோ யோக்கியமானவர்கள்’ என எண்ணிவிடவும் கூடாது. ஏனெனில் நாமும் இந்தச் சமூகத்தின் அங்கம். சூழ்நிலைகள்தாம் நம்மை நிர்ணயம் செய்கின்றன. இதை புரிந்துகொண்டு விழிப்போடு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மார்க்சிய விதிப்படி முதலாளித்துவ சமூக அமைப்பில் சீமான் என்பது காலத்தின் குறி. அதன் அடிப்படையில் அவ்வவ்கால கதாநாயகர்கள் தோன்றுவதும், வீழ்வதும், நிலைபெறுவதும் மீண்டும் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருப்பதும் இயல்பே.

இரா.கிரிதரன்
8939645250
arasan
ஆமாம் .. நல்லான்(னல்லன்) அண்ணன், சரியான வழியில தான் போய்ட்டிருக்காரு.. காலைல பெரியாரு பேரன்... மதியம் பெரியாரின் பகைவன், இரவு, மூத்தவிரின் பிள்ளை, அடுத்த நாள் பெரியார் என் உயிர் நாடி, என்னை பிரசவித்தவன். கொளத்தூர் மணி, ஆகா... அண்ணன் இயக்குனர் அல்ல மிகப்பிரமாதமான நடிகர். வடிவேல் இல்லாத குறையைப்ப போக்க வந்த மாபெரும் நடிகர். உலகத்திலேயே தன் கட்சி ஆவணத்தை(ஆணவத்தை?) தானே மறுத்த தன்னிகரில்லா தலைவன். பாவம் ... நாம் (?) தமிழர் தொண்டர்கள்...
selastin
ஆமா அசோக் நல்லாதான் சொல்லியிருக்காரு ஈழ போராட்டம் நடந்தபோது இணய தளத்தில் இருப்பவர்கள் கூட ஈழ விவாகரத்தை பற்றி பேசி எழுதி கொண்டிருந்த போது ரஜினிகாந்தை பற்றி எழ்தி கொண்டிருந்த அதிமேதாவி தான் இந்த அசோக்.சீமானிடம் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஈழ விவகாரத்தில் திமுக சொம்புகள் யாரும் சீமானை விமசிக்கவேண்டாம்
Nallan
ஐயா, அரசன்.. பெரியாரிடம் பாடம் படித்த கருணா காட்டும் மஞ்சள் துண்டு பகுத்திறிவவிட... திராவிடம்னு பெயர் வேச்சா பாப்பான் வரமாட்டான் சொன்ன பெரியார் அரசியல்ல அ.தி.மு.க நிரந்தர பொதுசெயலர் ஒரு பாப்பாத்திய நுழய விட்ட உங்க திராவிட அரசியலுக்கு அண்ணனோட அரசியல் பரவா இல்ல..
எல்லா திருடன்களும் பெரியார் பிண்ணாடி ஒளிஞ்சி கோங்க..
சந்திரன்
//தி.மு.க.காரர்களின் கட்டுரைகளும் கீற்றில் வரும் என்பது இப்போது தான் தெரிகிறது. அப்படியே, நாளைக்கு ராஜபக்சேவின் சிங்கள கட்டுரையை கீற்றில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள். உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள். எல்லா ஜாதி சங்கங்கலோடும் கூட்டுறவு வைத்திருக்கும் தி.முகவை சேர்ந்த்தவன், நாம் தமிழர் கட்சியை ஜாதிக்கட்சி என்கிறான். நல்ல நகைச்சுவை./
பெரியார் பேரை சொல்லி அரசியல் நடத்துறானுங்க, ஆனால் அவர் சொன்னபடி ஒரு மசுறும் புடுங்கறதில்லை. ஒன்னரை லட்சம் மக்களை கொலை நடக்கும் போது, மானாட, மயிலாட போட்டு ஆடறானுங்க. இவனுங்களை கேட்க ஆளில்லை. எத்தனையோ தறுதலைங்க இது மாதிரி இருக்குது, அவனுங்களை எல்லாம் இவனுங்க கேள்வி மாட்டானுங்க.

ஆனால் தமிழருக்காக, ஒரு பச்சை தமிழனால் முதன்முதலாக தமிழ் பேரை வைத்து அரசியல் கட்சி நடத்து சீமான் போன்ற உணர்வாளர்களுக்கு நீ பெரியாரை கொஞ்சலை, கும்பிடலை, வம்பிழுத்துட்டு இருக்கானுங்க. டேய் முடிஞ்சா, மகிந்த, தினமலம், கருணா இவனுங்களை எல்லாம் அழிச்சிட்டு இந்த பக்கம் வா...
அருண்
ஈழ விவகாரம் என்பது அடுத்த நாடு விவகாரம் என்று சொன்னவர்தான் மு க ஸ்டாலின். முத்துக்குமார் போன்ற வீர மறவர்கள் மடிந்த பொழுது மகன் மு க அழகிரியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய கருணாவின் அடிவருடிகள் இன்று சீமானை விமர்சனம் செய்வதுதான் பார்ப்பனியமே தவிர சீமானின் கொள்கை பார்ப்பனீயம் அல்ல.
நாளையே பாபர் மசூதி இடித்தது சரிதான் என்று அறிக்கை விட்டால் வாக்குகள் நிறைய கிடைக்கும் என்றால் அதையும் செய்பவர்தான் இந்த கருணா.
தற்பொழுது அணு உலை விவகாரத்தை எடுத்து கொண்டாலே இந்த விவகாரம் புரியும்.
டான் அசோக்
மேலே இருக்கும் 26 பின்னூட்டங்களி இந்த கட்டுரைக்கு எதிராக வந்திருக்கும் ஒரு பின்னூட்டம் கூட கருத்தியல் சார்ந்து எதிர்ப்பதாக இல்லை. "ரஜினி பற்றி எழுதினான்" என இயக்குனர் நடத்தும் கட்சிக்காரர் ஒருவர் புலம்புகிறார். "இவன் திமுககாரன்" என ஒருவர் அழுகிறார்.". நேற்று முகநூலில் கீற்று தளம் பற்றி புலம்புகிறார் நாம்தமிழரின் அதிகாரபூர்வ இணையபாசறை பொறுப்பாளர் ஒருவர். வெளிப்படையாகவே நாம்தமிழர் கட்சியில் எழுத்தாளர் பஞ்சம் எனப் புரிகிறது. என்ன செய்ய! கொள்கை தெளிவில்லாதபோது கருத்தியல் சார்ந்து எப்படி எழுத முடியும்!

வெறுமனே திட்டி திட்டி திட்டி திட்டி கட்சி நடத்த 'பார்ப்பனர்கள்ver2.0'வால் மட்டுமே முடியும்!
selvakkannan
தம்பி....மிக சரியான சிறந்த பதிவு...தங்கள் பதிவு அடித்த அடியில் முகமூடி கிழித்து எறியப்பட்டது நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்களுக்கு..
rajan
திராவிடம் இட ஒதுக்கீடு வான்கிகொடுத்தது. உன்மைதான்.
அத அதோடு நிருதி இருந்தா நல்லது. அதையும் மீரி
சுடுகாடுலையும் ஒதுக்கீடு வான்கி தந்திருக்கு.
என்ன சுடு காட்டுல கூடுதலா வான்கிகுடுத்துருச்சி.

(ஈழத்துல!)
raju
சீமான் அரசியலின் பெரியப்பா பெங்களூர் குணா.. அவர் ஒரு மக்கள்விரோத, ராஜபக்சே அரசியல் பேசுபவர் என்று அம்பலப்பட்டு போனவர். இப்போது சீமானும் அதை யோசிக்காமல் எடுத்து வீசுகிறார். ராஜபக்சேவிடம் சிறுபான்மை தமிழர் உரிமை பற்றி உரத்துபேசும் சீமான் தமிழகத்தில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிராக வெறி ஏத்துவார் .. ராஜபக்சே திருப்பி கேட்டா என்ன சொல்வாரோ. அவன் சொன்ன அத்தனை தமிழர் விரோத புனைவுகளையும் தமிழகத்தில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக பேசுவாரோ?
VIJAYA SARATHY
பெரியாரை விட நல்ல தலைவன் இல்லை நம் நாட்டில் அவரை விமர்சனம் செஇவது வருதமக உல்லது .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.