பெரியாரை 'பெரியார்' என்று அழைப்பதைத் தவிர்த்து 'ஈ.வெ.ரா' என்று அழைக்கிற இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தமிழர்களை தமிழ் இந்துக்களாக மாற்றும் உங்கள் முயற்சிக்குப் பெரியார் பெருந்தடையாக இருப்பார் என்று புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு இன்னும் கொஞ்சம் அரசியல் தெளிவு மீதமிருக்கிறது உங்களுக்கு.
உங்களிடம் சில கேள்விகள்.
பெரியார் 1973ஆம் ஆண்டோடு தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு விட்டார். அதற்குப் பிறகு அவர் பேசவோ எழுதவோ இல்லை.
ஆனால், நீங்கள் அதற்குப் பிறகும் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பெரியாரைப் புகழ்ந்து கொண்டுதான் இருந்தீர்கள். திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட போது, தமிழர் கண்ணோட்டத்தின் அட்டைப்படத்தில் பெரியாரைப் போட்டு, பெரியாரின் பெருமைகளைப் பட்டியலிட்டு மூன்று பக்கத் தலையங்கம் தீட்டினீர்கள்.
அந்நிகழ்வுக்கு எதிராக உங்கள் த.தே.பொ.க தோழர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான கதையெல்லாம் இன்னமும் நினைவிருக்கிறது எனக்கு.
நிற்க... நான் கேட்க வருவது, பெரியாரைப் படிக்காமலேயேதான் பெரியாரைப் புகழ்ந்து கொண்டிருந்தீர்களா? அதற்கும் முன்பாகவே நீண்ட காலமாக அரசியலில் பயணித்தவர்தானே நீங்கள்? தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட, கோட்பாடு சார்ந்த அரசியலில் இயங்கிய நீங்களே பெரியாரைப் படிக்காமல் எதற்காகப் புகழ்ந்தீர்கள்? நீங்கள் ஒன்றும் தனியறையில் நான்கு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கவில்லை. பொதுவெளியில் ஒரு கருத்துருவாக்கத்தை உண்டு பண்ண மக்கள் மன்றத்தில் செயல்பட்டீர்கள்.
ஆயின், நீங்கள் முழுமையாகப் படித்து முற்றாகத் தெரிந்து கொள்ளாத ஒருவரைப் பற்றி நேர்மறையாக மக்களிடம் எதற்காகப் பரப்புரை செய்தீர்கள்? அந்தத் தலையங்கத்தில் பெரியார் செய்ததாக நீங்கள் பட்டியல் இட்டீர்களே, அவை எல்லாமே பொய் என்று இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா? ஆயின், அந்தப் பொய்களைச் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன்?
ஆரியம் தலை தூக்க முயல்கிற இந்தப் பொழுதில், திடீரென்று பெரியாரை முழுமையாகப் படித்து தமிழர்களுக்கு எதிரானவராய் அவரை நிறுவ இக்காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? இனவுணர்வும் மொழிஉணர்வும் உள்ளவர்கள் பெரியாரியத் தொண்டர்கள்தான் என்பதைக் கண்டுபிடித்து அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கிற முதல் முயற்சிதானே நீங்கள் முதலில் செய்தது? பின், பெரியாருக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முழுமையான பெரியார் எதிர்ப்பை முன் வைக்கும் போது, வந்தவர்களில் பத்து சதவீதம் பேராவது நம்மிடமே தேங்கி நின்றாலும் லாபம்தானே என்கிற நப்பாசையின் நீண்ட காலத்திட்டத்தின் ஒருபகுதிதானே உங்களின் முந்தைய பெரியார் புகழுரைகள் எல்லாம்?
நல்லதுதான். ஊடுறுவிக் கெடுக்கிற இடத்திலிருந்து விலகி பெரியாரின் நேரடி எதிரியாய் வெளிப்பட்ட வரைக்கும் நன்றி.
இனி உங்களுக்கு எதிராக நீங்களே போதும். நாங்கள் தேவையில்லை.
- பழ.புகழேந்தி
(முகநூல் பக்கத்திலிருந்து)