சிறைவாசம், வழக்குகள் என ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, ஈழத் தமிழர்களின் நலனுக்காக உரக்க குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீமான். மக்களைவைத் தேர்தலின்போது இவர் வெளியே இருந்தால் தங்கள் வெற்றிக்கு ஆபத்து என்று அஞ்சிய ஆளும் வர்க்கம் முடிந்தவரை இவரை உள்ளே வைத்திருக்கப் பார்த்தது. அந்தளவிற்கு பேச்சாற்றலால் தமிழகத்தின் பெரும்பான்மை இளைஞர்களை வசீகரிப்பவர். தற்போது நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த் தேசிய சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரைச் சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்தான கேள்விகளோடு கீற்றிற்காக இரண்டாம் முறையாக சீமானைச் சந்தித்தோம். பேட்டியிலிருந்து...

தமிழகத்தில் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஏற்கனவே இருக்கும்போது, புதிதாக ‘நாம் தமிழர்’ அமைப்பு தொடங்கப்படுவதற்கான காரணம் என்ன?

ஈழ விடுதலை என்பது ஈழத் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டமைப்பது அல்ல; அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஓர் அரசை நிறுவுவது. 12 கோடி தமிழர்களுக்குமான ஒரு நாட்டை அமைப்பது. அப்படித்தான் தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார். அப்படிப்பட்ட ஒரு அரசை நிறுவும் போராட்டத்தை, பெரும்பான்மையான தமிழர்கள் வசிக்கும் தாய்நிலமான தமிழக அரசு அங்கீகரிக்கவில்லையென்றால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் பிற நாடுகளும் எப்படி அங்கீகரிக்கும்? அவன் கேட்க மாட்டானா – உன் சொந்த சகோதரனே உனக்கான போராட்டத்தை அங்கீகரிக்காதபோது, நாங்கள் எப்படி அங்கீகரிப்பது?

இங்கிருக்கும் தமிழக அரசு ஏன் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரலை எழுப்ப மறுக்கிறது என்றால், இது தமிழர்களுக்கான அரசு அல்ல. பச்சைத் தமிழரான காமராசர் கூட ஒரு இந்தியராகத்தான் இந்த மண்ணை ஆண்டார். அது இப்போது வரை தொடர்கிறது. தமிழர் என்ற உணர்வோடு இந்த மண்ணை ஆளவில்லை என்றால், அந்த அரசு தமிழுக்கும், தமிழர்களுக்கும் முழுப்பயனைத் தராது; இழந்த உரிமைகளை மீட்கவும் உதவாது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நல்லதோ, கெட்டதோ நடக்க வேண்டும் என்றால், அதைத் தீர்மானிக்கிற சக்தி தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே அப்படி ஒரு நல்ல தலைமையில்லாத வெற்றிடம்தான் இருக்கிறது.

நெடுமாறன் அய்யா, மணியரசன் அய்யா, தியாகு அண்ணன் இவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். ‘இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குள் நின்றுகொண்டு நாம் விரும்புகிற தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க முடியாது’ என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்; தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கிறார்கள். நான் இதில் மாறுபடுகிறேன். தேர்தல் அரசியல் திருடர் பாதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒருவன் திருடுகிறான் என்றால் அதைப் பாய்ந்து தடுக்க வேண்டும். இல்லையென்றால் திருடன் மென்மேலும் திருடுகிறவனாக மாறுவான். இந்தத் திருடர்கள் எந்த வாக்கு அரசியலை வைத்து நம்மை ஏமாற்றுகிறார்களோ, அதைக் கைப்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

நாம் தேர்தல் அரசியலை நம்பாதவர்கள் எனும்போது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசிடம் போய் நம் உரிமைகளைக் கேட்டு எப்படிப் போராட முடியும்? ‘தமிழக அரசே தலையிட்டு போரை நிறுத்து!’ என்று போராடுவது, கடவுள் நம்பிக்கையற்றவன் கடவுளிடம் முறையிடுவது போல் இல்லையா?

எனக்கும் இங்கிருக்கும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கும் நோக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ‘தமிழர்களின் நலன்’ என்ற திடலில் ஒன்றாக இருக்கிறோம். அவர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள்; நான் ஓட்டப்பயிற்சி செய்கிறேன்.

என்னதான் பெரும்பான்மை இருந்தாலும் அர்ச்சகராகும் உரிமை, இடஒதுக்கீடு என தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். நிலைமை இப்படி இருக்குபோது, இந்திய பார்ப்பனியக் கட்டமைப்புக்குள் ஜெயித்து என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இங்கு அரசை அமைத்து என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறீர்கள். ஒரு மராட்டியன் சாதிப்பதை, ஒரு மலையாளி சாதிப்பதை, ஒரு கன்னடன் சாதிப்பதை ஒரு தமிழன் சாதிக்க முடியாதா? நாம் உறுதியாக நின்று வலுவான குரலை எழுப்பினோம் என்றால் நமக்கு எதிராக எவனாவது செயல்பட முடியுமா? இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே? காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் போகாது என்று அடித்துச் சொல்ல வேண்டாமா? அவனுக்கு அவன் மக்கள், அவன் நாடு முக்கியம் என்றால் எனக்கு என் நாடு, என் மக்கள் முக்கியம் என்று ஏன் சொல்ல முடியவில்லை? இந்த இடத்தில் தமிழன் ஒருவன் தமிழர்களு க்கான அரசை நிறுவினால் இதைச் செய்யமுடியாதா? இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், நான் என் சகோதரர்களுக்கு ஆயுத ம் கொடுப்பேன் என்று அறிக்கை விடும் தைரியம் தமிழக அரசுக்கு இருந்தால் அவன் ஆயுதம் கொடுப்பானா? பதவிக்காக மத்திய அரசிடம் கூனிக் குறுகிக் கொண்டு இவர்கள் நிற்பதால்தானே அவன் ஏறி மிதித்து போய்க்கொண்டு இருக்கிறான்.

போரை நிறுத்துங்கள் என்று அழுகுரல்தான் எழுகிறதே தவிர, ‘போரை நிறுத்துடா’ என்று சொல்கிற உயரத்தில் தமிழன் இல்லையே! அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பாததால்தான் இங்கிருக்கிறவன் விஜயகாந்த் பின்னாடியும், ஜெயலலிதா பின்னாடியும் ஓடுகிறான். என்னிடம் கொள்கை என்ன கோட்பாடு என்று கேட்கிறவர்கள் விஜயகாந்திடம் கேட்டீர்களா, இதற்கு முன் ஆண்டவர்களிடம் கேட்டீர்களா? தமிழ், தமிழன் என்று ஒருவன் போராட வந்தால் லட்சம் கேள்விகள் கேட்கிறீர்கள், குறுக்கே விழுகிறீர்கள், மல்லாக்கப் படுக்கிறீர்கள். ஆனால் எளிதாக மக்களை ஏமாற்றிச் செல்பவனை கண்டுக்காமல் விட்டுவிடுகிறீர்கள்.

நானும் இதைச் செய்யவில்லை என்றால், என்பின்னால் இருக்கிற ஆயிரக்கணக்கான் தம்பிமார்கள் எங்கே போவார்கள்? எங்களை அரசியலுக்குப் போகக்கூடாது என்பவர்கள், இந்த அரசியலைக் கைப்பற்றாமல் வேறு எந்த வழியில் போராடுவது என்பதைச் சொல்லட்டும். சமூகத் தளத்தில் போராடுவதற்குத்தான் சரியான அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறதே, எல்லோரும் ஏன் அதே தளத்தில் போய் நிற்கவேண்டும்? நாம் தமிழர் என்று ஒன்றுகூடும்போது, சாதியும் மதமும் மிதிபட்டுச் சாகிறது. இந்த முழக்கத்தோடு அரசியலைக் கைப்பற்றுவோம். நமக்கான அரசை நிறுவுவோம்.

நாம் தமிழர் என்று ஒன்று கூடுவதால் சாதி ஒழியும் என்கிறீர்கள். திமுக கட்சியின் பின்னாலும் இதுமாதிரி உடன்பிறப்புகள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால் அவர்கள் மாநாடு முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது சாதிமனிதர்களாகத் தானே திரும்பச் செல்கிறார்கள்?

அவர்கள் சாதியாகத்தான் சமூகத்தைப் பார்க்கிறார்கள். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அதே சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். மாற்று சாதியினரை திமுகவோ, அதிமுகவோ என்றாவது நிறுத்தியது உண்டா? நாங்கள் ஆதிக்கசாதியினர் அதிகமாக இருக்கும் தொகுதியில் தலித் சகோதரரை நிறுத்தி, நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு செயல்படச் சொல்வோம். அப்படித்தான் இதை ஒழிக்க முடியும்.

ஆனால் தலித் சகோதரர்கள் பதவிக்கு வந்தால் அவர்களை வெட்டிக் கொல்லும் சாதி வெறிதானே இன்று சமூக நிலைமையாக இருக்கிறது?

அந்த சாதி வெறியை மழுங்கடிக்க வேண்டும். கடவுள் மறுப்பை எப்படி சட்டம்போட்டு நிலைநிறுத்த முடியாது அதுபோலத்தான் இதுவும். ஆனால் பரப்புரையால் சாதிக்க முடியும். எல்லோரையும் சொந்தமாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். அருந்ததியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் எல்லோரையும் இழுத்துவிட வேண்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா நாட்களிலும் சாதி நீடிக்கத்தான் செய்யும்.

சாதி பற்றி பேசும்போது, வேறொரு விடயத்தையும் இங்கு பேசுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அண்மையில் தேவர் சிலைக்கு நீங்கள் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்' என்று பதிலளித்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீங்கள் சொல்கிறபடி முத்துராமலிங்கம் போராளி என்றால், ராஜபட்சேவும் போராளிதானே?

தலைவர் பிரபாகரனும் அதைத்தான் சொன்னார். ராஜபட்சே அவர் இனத்திற்கு உண்மையாக இருக்கிறார் என்றும், நம் இனத்துத் தலைவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு ராஜபட்சே எவ்வளவோ பரவாயில்லை என்றும்தான் சொன்னார். அதேநேரத்தில் தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பவனையும், தன் இனத்தின் அடிமைத்தனம் நீங்குவதற்காக போராடியவரையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது. குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

ரெட்டைமலை சீனிவாசனும் இமானுவேல் சேகரனும் சமத்துவத்திற்காகப் போராடிய காலகட்டத்தில்தான் முத்துராமலிங்கம் சாதிரீதியிலான சமத்துவமின்மையை முன்னிருத்தினார். உரிமைகளுக்காகப் போராடிய இமானுவேல் சேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலித் சகோதரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சாதிவெறியை கடைசி வரைக்கும் கைக்கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை முன்னிருத்தினால் ‘நாம் தமிழர்’ என்று எப்படி ஒன்றிணைய முடியும்?

நாங்கள் முன்னிருத்தவில்லை. தவறான ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். நாங்கள் காமராஜரையும், வ.உ.சி.யையும் எங்கள் முன்னோடிகளாகக் கருதுகிறோம் என்றால், அவர்கள் தமிழ் தேசியவாதிகள் அல்ல. ஆனால் இந்த மண்ணின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள். அதுபோலத்தான் முத்துராமலிங்கத் தேவரும். அவர் தமிழ்த் தேசியவாதி இல்லையென்றாலும், இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். பெரும்பான்மை சமூகத்தின் மேன்மைக்கு உழைத்தவர். அந்த சமூகத்தையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதியைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கி வைக்கப்போகிறீர்கள்? எத்தனை காலத்திற்குத்தான் இருசமூகத்திற்கும் இடையேயான பகையை நீட்டித்து வளர்க்கப் போகிறீர்கள்? இருவருக்கும் இணக்கம் ஏற்படும் வகையில் இந்த சீமான் முயற்சி செய்தால் என்னை விமர்சனம் செய்கிறீர்கள். இப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா?

பெருவாரியான சமூகத்தை காலகாலத்திற்கும் சாதியோடு பிணைத்திருக்கும்படியான பணியைச் செய்தவர் முத்துராமலிங்கம் என்று குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருக்கிறதே?

அதை மாற்றும் வேலையை நான் செய்கிறேன் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு தேவர் சாதி தம்பிகளையும், முத்துராமலிங்கம் சிலை இருக்கும் இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு போவது இருவருக்கும் இடையேயான இணைக்கத்தை ஏற்படுத்த விரும்பும் செயல் அல்லவா? பெரியார் இறந்தபோது பார்வார்ட் பிளாக் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவில்லை என்று குற்றம் சாட்டுகிற நீங்கள், சாதியொழிப்பு, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடிய பெரியார், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்தார் என்று அந்த மக்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

பெரியார் ஒட்டுமொத்த விடுதலைக்குத்தானே பாடுபட்டார். இந்த சாதிக்கு ஒரு போராட்டம், அந்த சாதிக்கு ஒரு போராட்டம் என்று அவர் நடத்தவில்லையே?

அப்படி இல்லை. இது வெள்ளை ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்ட போராட்டம். அதை எதிர்த்து எங்கள் அய்யா என்ன செய்தார்? எல்லா இடத்திலும் விமர்சனம் இருக்கிறது. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது. இதைக் கேட்கும்போது உங்கள் மனது எப்படி காயப்படுகிறது. அதுமாதிரித்தான் நீங்கள் முத்துராமலிங்கம் மீது வைக்கிற விமர்சனமும் அந்த மக்களுக்கு காயத்தைத் தரும். நான் எல்லோருக்கும் பொதுவான பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் என்னை குறுகிய வட்டத்தில் அடைக்கிறீர்கள்? நான் செய்வது தவறு என்றால் விலகிச் செல்லலாம். நம்பிக்கையிருந்தால் என்கூட வரலாம். அதைவிட்டு விட்டு நான் இங்கு போக வேண்டும், இங்கு போகக்கூடாது என்று பிறர் சொல் கேட்டு நடப்பதற்கு, நான் என்னுடைய இயக்கியை பிறர் கையில் கொடுத்துவிட்டுச் செல்லும் ரோபோட் அல்ல. நான் சுதந்திரமான மனிதன்; பெரியாரையும், பிரபாகரனையும் நேசித்து, சிந்தித்து வளர்ந்த பிள்ளை. சாதியொழிப்பிற்குத்தான் இதை நான் செய்கிறேன். நீங்கள் சாதியக் கண்ணாடியோடு இதைப் பார்ப்பதால்தான் உங்களுக்கு சாதி தெரிகிறது. இப்படிப் பார்ப்பவர்களைத்தான் சாதிவெறியர்கள் என்று நான் சொல்வேன்.

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்குத்தான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று ஜெகத் கஸ்பர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டியதில்லை! எல்லாக் கட்சியிலேயும் தான் எனக்கு சீட் தர தயாராக இருக்கிறார்களே!! நான் ஒரு இனத்திற்கு நாடு அடையத் துடிக்கிற போராளி. எம்.பி., எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டுப் போகலாமே! இவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதே இல்லை. இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லையே. பணம், புகழ்தான் முக்கியம் என்றால் அதற்கு நான் இருக்கிற திரைத்துறையே வசதியானது. ஜெகத் கஸ்பார் குறை கூறுவதற்கு வழியே இல்லாமல், இதைக் கூறுகிறார். இதை மக்கள் யாராவது நம்புவார்களா? எம்.பி. ஆக விரும்புகிற எவனாவது தமிழ்த் தேசியம், தன் இனத்திற்கு ஒரு நாடு என்றுபேசி சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்புவானா?

தமிழ்த் தேசியம் என்று பேசும்போது மொழிச் சிறுபான்மையினருக்கான இடம் என்ன என்ற கேள்வி பொதுவாக எழுகிறதே?

எல்லாருக்குமான இடம் இங்கே இருக்கிறது. வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்று சொல்கிறோம். கேரளாவை மலையாளிகள் தவிர வேறுயாரும் ஆளவில்லை; ஆந்திராவை தெலுங்கு பேசுகிறவர்கள் தவிர வேறு யாரும் ஆண்டதில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் தவிர எல்லோரும் ஆண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாகக் கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்.

திராவிட அரசியலால்தான் கெட்டோம் என்று நீங்கள் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

திராவிடம் என்ற சொல்லாடலை நாங்கள் எதிர்த்தால், உடனே சீமான் பெரியாரை எதிர்ப்பதாகக் கூறக்கூடாது. நான் தமிழனா, திராவிடனா என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மும்பையில் பேசியபோது பால் தாக்கரேயை ‘பெருமகன்’ என்று சொல்லிவிட்டேன் என்று குதிக்கிறார்கள். ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரே பற்றிப் பேசும்போது, அவன் இவன் என்று பேசச் சொல்கிறீர்களா? இதுவா பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு? சோனியா காந்தியைப் பற்றிப்பேசும்போதுகூட மதிப்பிற்குரிய சோனியா காந்தி என்றுதான் சொல்கிறோம். ஏன், போர்ச்சூழலில்கூட அண்ணன் பிரபாகரன், ராஜபட்சேவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் என்றுதான் பேசினார். ஓரிடத்தில்கூட ‘அவன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதுதான் பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அரிப்பு இருக்கிறது பேனா இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் குதர்க்கமாக எழுதக்கூடாது.

திராவிட அரசியலை எதிர்க்கிறேன் என்று சொல்வது திமுகவையும், அதிமுகவையும்தான். திமுக ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருக்கும் மாலதி ஒரு பார்ப்பனர். திராவிடக் கட்சியின் தலைவராக அதிமுகவில் இருப்பது ஒரு பார்ப்பனர்தானே! எனவே அரசியல்தளத்தில்தான் திராவிடம் என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம். சமூகத் தளத்தில் ஆதரிக்கிறோம். சமூகத் தளத்தில் சாதியை ஒழிக்க பெரியார் திராவிடர் கழகம் போராடுகிறது. நாங்களும் அவர்களுக்குத் துணை நிற்கிறோம். ஆனால் அரசியல்தளத்தில் சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்தி திராவிடக் கட்சிகள் சாதியை வளர்க்கின்றன. பெரியாரை முழுமையாக ஏற்றுச் செயல்படும் நாங்கள், இதை எப்படி அனுமதிப்போம்? இவர்களை ஒழிக்காமல் எப்படி தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பது? திராவிடம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த இவர்களால் தமிழினத்திற்கு, மொழிக்கு என்ன பயன் வந்தது?

வார்த்தைப் பிரயோகத்தில் அண்மையில் வந்த ஒரு சர்ச்சை, ஈனசாதிப்பயலே என்று நீங்கள் கூறியது?

தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நம்மவர்களைக் கொன்று குவித்த சிங்களவனுடான கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கிற இனவுணர்வு அற்றவர்களை, இழிவான மக்கள் என்று குறிப்பதற்குத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதை சாதி வன்மத்துடன் பேசியதாகப் பார்க்கக்கூடாது. எனக்கு அத்தகைய எண்ணமும் இல்லை. எந்த நோக்கத்திற்காகப் பேசினேன் என்பதைப் பார்க்காமல், அந்த சொல்லையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

தேவர் சிலைக்கு மாலை போடப்போனபோது, அங்கே ஒரு அப்பத்தா, ‘ஐயா ராசா, உன்னை சினிமாவுலே பார்த்தது’ என்று எனக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசியது. அந்நேரம் அங்கே இருந்த ஊடகங்கள் அதைப் பதிவு பண்ணின. உடனே பெரியார் பேரன் திருநீறு பூசிக் கொண்டார் என்று அலறுகிறார்கள். அவர்கள் அன்போடு பூசும்போது, ‘சீச்சி! என்ன அசிங்கம்’ என்று அதை தட்டிவிடச் சொல்கிறார்களா? இதுவா பெரியார் நமக்கு சொல்லிக் கொடுத்த பண்பாடு? பெரியாரே குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசியபோது ஏற்றுக்கொண்டாரே! அவருக்கு ஒரு நியாயம், அவர் பேரனுக்கு ஒரு நியாயமா?

அதேபோல சே குவேராவைப் பற்றி சொன்னதும் ஒரு ஆதங்கத்தில்தான். நாம் நேசிக்கும் கியூபா, ஈழத்திற்கு எதிராக கையெழுத்திட்டபோது எழுந்த ஆதங்கத்தில் சொன்னது அது. அதற்காக சே குவேராவைத் தூக்கி எறிந்துவிட்டேனா என்ன! இதோ அலுவலகத்துச் சுவரிலெல்லாம் அவர் படம்தான் இருக்கிறது. விமர்சிக்கிறவர்கள் விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரிப்பு இருக்கிறது என்பதற்காக என்னை சொரியக்கூடாது.

திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கம் இருக்குமா அல்லது அவர்களோடு சேர்ந்து நிற்கும் சூழல் வருமா?

எனக்குப் பதவி ஆசை கிடையாது. இருபது வருடங்கள்கூட காத்திருக்கத் தயார். இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கத்தை மாற்றுவேன். நானே இறந்துவிட்டால்கூட, எனக்கு அடுத்து வரும் தம்பிமார்கள் நான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் இந்த இனத்திற்கான, மொழிக்கான ஒரு அரசை அமைப்பார்கள். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சந்திப்பு: 'கீற்று' நந்தன்

Comments

34 comments

34
K.Easwaran
Tamil Nadu can play a very big role in Eellam struggle. If Tamil Nadu allowed rice, paruppu, cement and reinforcing bars to Vanni/Jaffna, Sinhalese would be still firing artilerry and our boys still would be there listening radio inside bunkers waiting for close quarter encounter. Tamil Nadu state police allow rice to be taken to Kerala, but not to Vanni and Jaffna. You have seen how emaciated were the Vanny people when they came out in May. Sri Lanka Prime Minister, President and many higher ranking officers claimed outright that there were only 70000Tamils in Vanni and sent some food items through ICRC adequate for only about 20000 people. ICRC records are available for verification. From the total number of people dead and the living, around 450000 Tamils were in Vanni making Kanchi from the stuff for 20000people. This is where Karunanithy showed his true colour. So far no one from Tamil Nadu MLAs or MPs ever questioned the fact how 450000 was reduced to 70000. It is not the number, but the protruding bones of them that matters. It is not the bullets made them emaciated but the lack of food(read rice, paruppu and dry rations) which made it. Those would have been paid in hard cash and you could made some profit too. Tamil Nadu Police on the directive from Tamil Nadu government arrested anyone try to take anything to Vanny or Jaffna.

If Seeman would have been there as Tamil Nadu Chief Minister, you would not have seen those people with dry skin, protruding bones and the stomach capable of holding 2 or 3 litres of water if they lie down on their backs.

Yes, You, Tamil Naadu, can make a lot of difference. You keep watch that Eellam Tamils do not bring arms into your country, if you want. That is fine.

When the massacre in Vanni was in full swing, Tamil Nadu Government in consulation with the Central Government, banned fishing and made 5000 motor boats coast bound by force. Other wise atleast 100000 would have escaped with the help of Tamil Nadu fishing boats. It is not the environmental concern but the combined planning of RAW and SRI Lankan security folks with the connivance of Karunanithy made the boats coast bound.

Yes Tamil Nadu can make a lot of difference under the leadership of a person like Seeman.

Tamil Nadu can make a lot of difference, but you cannot do that with AIADMK and DMK leadership, I say leadership. Most of the DMK and AIADMK folks believe that their party helps Eellam Tamils. They are too innocent.

Even now you can do wonders. If Vaiko, Ramadas, Pandian, Nedumaran, Kollathur Manny, Seeman, Rajendar etc. temprarily get together and say we are going to contest the next, only next, Legislative assembly on Eellam issue and only on Eellam issue under a new temporary party. Issue is only Eellam issue. Even BJP would like to join. You can ask Vijaya Kanth also to join only once in this forum. Then AIADMK and DMK will think and shiver. Stay put as a block and work as a block at least once in the next Legislative assembly election.

Some say that Eellam Tamils have no number with them. The number is with the Tamils. If Pirabaharan would have created a division called Foreign legion of Tamil Eellam then a lot of non Eellam Tamils would have swelled the ranks to the fear of Sinhalese. Pirabhakaran made many mistakes but I am not going to argue with anyone who claims that he did not make mistakes.You have to work together. He stood for what he believed and died. I am not going to argue if you say he is alive. I am happy that one more committed person is there.

I also fear that Dravida concept is no more valid as more than 75% of the Dravidian stock is not interested in and in fact working against it. How can a minority convince majority when majority is dead against it. However, I leave that to you all. Please tell your police that they contributed the annihilation Eellam Tamils in a big way by not letting foot items to the starving Vanni Tamil folks.

I want to address one more think. Please expose all the actors who refuse to pair with Tamil nadu girls. Please expose the Directors who refused to agree to work with Tamil Nadu girls. Please tell our girls, our ladies and women folks that these heros and directors consider you as ugly and they do not want to pair with you or direct you. Importation of North Indian fair skin women made a lot of damage to Tamil cause. I have seen lot Tamil Nadu karuthap penngal fighting and shouting for our case. I am also very dark and I now respect Tamil Nadu ladies a lot for working for us. Thank you
Ponparappiyan
Seeman is a right person emerged in the right situation to protect the prestige and the rights of the Tamil race. As a follower of Valluvar, Periyar and Perabakaran, he will once again make the Tamils as a reputed race in the world. By removing the DMK and ANNA DMK which were/are against the Tamils and looted Tamilnadu for the past 40 years,he will form a Tamil Government for Tamils and for others,a good rule. He will form a strong base for Eezham Tamils and help them be happy with full rights and freedom.
Agilan
Tamil Nationalism has run its full course and Seeman is asking a dead-snake to hiss and show its fang. Kalaignar being a seasoned political strategist is much more clever and is avoiding this pit-fall(having burnt his fingers more than once).

As a Tamilan, I also want many things resolved. Like Cauvery, Mullai-periyar, protection for my brothers in Srilanka (also in Malaysia! why NOBODY is talking about it? may be issue is NOT suited for creating vote-banks??!!). But the solution which Seeman is proposing is close to amputating ones own leg for solving a skin bruise..!! Yes. Asking for a separate Tamil Nation in the current geo-political context is not only implausible, it is idiotic & suicidal...!!

This is the case for most states in India. With a hegemonistic China with support from Myanmar and Srilanka and a Talibanised Afghan-Pakistan which even a super-power like US is unable to deal with, we can only be pawns in the hands of these countries, if we break-away from India. Instead of reading Tamil & English, we will end up reading Chinese Mandarin or Urdu..!!
Is this what Seeman wants?

Let's be clear, the idea of India is NOT mearely a Geographic accident owing to land continuity but a Historical and Military necessity for ALL of us.!! The choice ALL states of India have is either to be part of India or CHINA or Pakistan. Logic and common sense tells me that India is a better choice.
Across the globe, even soverign Nations with historical discord like the Spain, France, Germany etc are all coming together Econmically(EU) and Militarly (NATO for eg)and here is Mr.Seeman fighting for creation of a smaller more vulenrable and dependent nation of Tamilians...!!

And how is this supposed to happen Armed resistance? economic boycott? or Political alliances?? first two options are definitely out of question owing to the sheer magnitude of effort and time to achieve any meaningful progress. Political allegiance to CHINA could help here. Atleast to destabilize India IF not achieve the Tamil Nation.
deepan
இதோ இப்போதே இவர் ஓட்டு பொறுக்க தொடங்கி விட்டார்...(தேவர் சிலைக்கு நீங்கள் மாலை போட்டதும்)....
என்னதான் வாய்கிழிய பேசினாலும் இவரும் சராசரி அரசியல்வாதி ஆகிவிட்டார்.... இதோ சீமான் இயக்கத்தில் புதிய அரசியல் தொடர் ஆரம்பம்.....
Dr. V. Pandian
அகிலனது பார்வை ஒரு அயோக்கயத்தனமான பார்வை. சீமானின் கட்சி எப்படி இயங்கப்போகிறது என்பதில் நமக்கு தௌிவான அறிகுறி இதுவரை தெரியவில்லை. எனவே அதைப்பற்றி விமர்சிக்காமல், இந்த அகிலனுடைய வாதத்திற்கு வருவோம்.

இந்தியா நம்மை முற்றாக, இவர் சொன்ன அனைத்து வகைகளிலும், ஏமாற்றிவிட்ட பிறகு நாம் அடுத்த வாய்ப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். டெல்லிக் காரனின் காலனியாய் இருப்பதில் நமக்கு மாபெரும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் தமிழரல்லாத அத்துனைபேரும் குடிவந்து நமது தாயகம் மாற்றானால், சிறிது சிறிதாக விழுங்கப் படுகிறது. கூடிய விரைவில் தமிழரின் தாயகம் நிச்சயமாக காணாமல் போகும். அகிலன் போன்ற ****** விரும்புவது அது தான். இவர் ஒரு பச்சைத் தமிழராக இருந்தால் இப்படி ஒரு கடிதம் எழுதவே மாட்டார்.

இந்தியா இறையாண்மையுடைய பல மொழியினவழி தேசங்களாகப் பிரிந்து, ஐரோப்பிய யூனியன் போன்றதொரு, "இந்திய யூனியனைக்" கட்டலாம். இம்முறையில் இங்குள்ள ஒவ்வொரு மொழியினமும் தனது நிலத்தைத் தனக்கானதாகக் காக்க முடியும். இந்த யூனியனுக்குள்ளே ஒரு பொதுப் பொருளாதார, பாதுகாப்பு உடன்படிக்கையும் செய்துகொண்டால் நாம் அமெரிக்காவுக்கும் அஞ்சவேண்டியதில்லை, சீனாவுக்கும் அஞ்சவேண்டியதில்லை. இங்குள்ள சிறபான்மை மக்களின் நல வாழ்விற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். இதில் நாம் பாகிஸதான், பாங்களாதேஷ், நேபாள், பூடான், மொரீசியஸ், ஈழம், சிரிலங்கா போன்ற தேசங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். இந்தியா இப்படியான ஒரு புதிய தீர்வுக்காக நகர்ந்தால், பாகிஸ்தான் நிச்சயமாக இதனோடு சேரும். இந்த பிராந்தியத்தில் நிச்சயமான அமைதியும், வளமும் நிலவும்.

இதற்குத் தடையாய் இருப்பவன் இந்தியப் பார்ப்பனன் தான்!!!!!!!!!!!!!!!

சொந்த நிலமற்ற பார்ப்பனரால் ஆளப்படும் இந்தியாவை, இந்த சமூகம், வௌ்ளயருக்கு "சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக", விற்றுக் கொண்டுள்ளது. இப்போதுள்ள இந்தியாவை நம்பினால், அது நம்மை, நமது தேசத்திலேயே அகதிகளாக வாழவைத்துவிடும். "வௌுத்த" பார்ப்பனீயம் யாரிடம் வேண்டுமானலும் சமரசம் செய்து கொள்ளும். "கறுத்த" தென்னிந்தியர்கள் புதிய வந்தேறிகளிடையேயும், இந்தப் பார்ப்பனீயத்திடமும் அடிமை சேவகம் தான் ஒரே கதி. நிறம் ஒரு வேற்றுமைக் கருவி என்பதை உணருங்கள் தோழர்களே!

இந்தியாவில் தொடர்வதை விட வேறு எந்தத் தீர்வும், இதைவிட ஆபத்தான தீர்வல்ல!

எனவே "தற்போதய" இந்தியாவின் குடிமக்கள் நாம் இல்லை என்ற முடிவை நாம் எடுத்தே ஆகவேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!
Natarajan
Dear Agilan,

I appreaciate your broad outlook and courage.

If I have read & understood this article correctly, Seeman doesn't talk abt breaking away Tamil Nadu from India. He is only talking abt a supportive government in Tamil Nadu (under Indian constituition), to help create Thamizh Eezhlam. Thamizl Eezhlam is what he refers to as a nation for Thamizhs.

If it is the otherway around, I assure, I would the first person to oppose.

Anyway, your feedback was pretty open and good.
Natarajan
Tamil
சீமான் மிக நேர்த்தியாக தனது அரசியல் காய்களை நகர்த்துகிறார். ஈழ மக்களுக்கான உங்கள் போராட்டம் உண்மையானது அதற்கு பின் நீங்களும் சராசரி ஒட்டு பொருக்கி அகிடீங்க.
அவருக்கு இப்பொழுது தேவை அதிகமாக இருக்கும் தேவர் ஒட்டு. தேவர் ஓட்டுக்காக பெரியாரின் பேரன் என்று தன்னை சொல்லி கொள்ளும் சீமான் இப்பொழுது பெரியாரை விமர்சிக்க துணித்துவிட்டார். பெரியாரின் பேரன் என்று சொல்லுபோது எங்கே போனது அறிவு?

"ராஜபட்சே தனது இனம் காட்க தமிழனை கொன்றான். தேவர் தனது சாதிகாட்க தலித்துக்களை கொன்றார்"

"பெரியார், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்தார் " குடிஅரசை படியுங்க சீமான் "குற்றப்பரம்பரைச் மக்களை காவல் துறை அதிகாரிகளாக ஆக்க வேண்டும்" என்று சொன்னவர் பெரியார். காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டவர்கள் காவலர்களாக வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.
" பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை" இதற்கு உங்கள் கருத்து என்ன சொல்லுங்க சீமான்?
"பெரியார் ஒட்டுமொத்த விடுதலைக்குத்தானே பாடுபட்டார். இந்த சாதிக்கு ஒரு போராட்டம், அந்த சாதிக்கு ஒரு போராட்டம் என்று அவர் நடத்தவில்லையே? " இப்படி சொன்னால் சாதிவெறியர்கள்.
தேவர்களுக்கு காவடி தூக்குவது சாதியொழிப்பு அடி .................
சீமான் உங்களுக்கு பெரியார் பேரை சொல்ல கூட யோகியதயை கிடையாது இனியும் பெரியாரின் பேரன் சொல்லி யாரையும் ஏமாற்ற வேணாம்.... பெரியாரின் பேரங்களை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு தமிழச்சி கொடுக்கும் ..... பத்தவில்லையா?
Dennis
கீற்று இணையதளத்தின் சீமானிடம் கேள்வி பேட்டியின் போது முன்வைக்கப்பட்டது.[1]

"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"

அதற்கு சீமான் சொல்கிறார்:

"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்."
SIVA
ANBIRKURIYA ANNAN SEEMAN THEVARAI EATRUKKOLVATHUTHAAN EARKAMUDIYATHU EANKIROMAY THAVIRA MUKKULATHTHORAI ALLA.... PERIYAR PORADIYATHU OTTU MOTHTHA ODUKKAPPATORUKKAGA....PERIYARAI PATRI PESM MUN AVARAI PATRI PADIPPATHU MIGA MIGA AVASIYAM
நெடுஞ்சேரி கண்ணன்
அன்புள்ள அண்ணா தேர்தல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆதிக்க சாதிகளிடம் சமரசம் செய்ய தொடங்கி விட்டிர்கள் ...தேவரை பற்றி நீங்கள் முன்பு தெரிவித்த கருத்து ...இந்த வலை தலத்தில் வந்துள்ளது அதயும் கொஞ்சம் பார்க்கவும் ... முடிந்தால் உங்களின் எந்த நிலைப்பாடு உண்மையானது என்று தெரிவிக்கவும் இன்னும் நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம் ...
Dr. V. Pandian
நேற்று எனது நன்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தினமணி படித்தீர்களா என்றார். அதில் திருமா அவர்கள் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விடுத்த அறிக்கை வந்துள்ளது என்றார். எப்படி இருந்த திருமா இப்படி ஆகிவிட்டார் பார்த்தீர்களா? இவை தேர்தல் அரசியல் செய்யும் திருவிளையாடல்கள்.

தேர்தல் அரசியலால் சீரழிவு மட்டுமே நடைமுறை எதார்த்தம்.

சமரசங்கள். ஊழல் செய்யவேண்டிய அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டிய சூழல், ஊழலை ஆதாரமாக வைத்து டெல்லி நடத்தும் மிரட்டல் அரசியல் என்று, சீமானும் இன்னொரு கருணாநிதியாகத்தான் பரிணமிக்க முடியும்.

சமூக இயக்கமாக இருந்து கொண்டே பெரியார் சாதித்தது எவ்வளவோ. சமூக இயக்கமாக இயங்கும் போது, பதவியைத் தேடி கட்சிக்குள் வரும் "தாதாக்களின்" வருகை இருக்காது.

"நாம் தமிழர்" சமூக இயக்கமாக இருந்தால் தான் நிலைத்த பயன் உண்டாகும்.
Agilan - Pidatral Pandiyan
Pandiyan...Indian Union is not like Trade union.!! You cannot just form it with 10-20 ppl agreeing
on a common agenda. You call my views as fraudulent and insincere. from your point of view it may well be. But your views i have to say are childish.

You want to create an Indian union with break-away factions of various states in India...! let's ignore the ridiculous nature of the proposition and analyze it instead for a moment.

Firstly, the broken parts will NOT be like what they are today. The idea of TN being a single
piece after breaking away is also an assumption. We will see demands for further bifurcation. Each
political family like Kalaignar's, Ramdoss and others will demand a piece for themselves. How do you suppose this will be handled? request armed assistance from Srilanka? China? or India from which TN broke away.
We hardly have any history to suggest Cheras, cholas and pandiyas co-operated, so why kid ourselves that TN will be one unified block??

Second, there hardly is any historical instance where break-away factions that declared soverneity ever worked in co-operation. S.korea/N.korea, India-pakistan, East-timor/Indonesia, France-Algeria, Russia-Chechenya
you can go on and on...what you are asking for is compounding existing problems and NOT resolving them.

Let's say we overcome all these problems in a 100 yrs, is the region even self-sufficient to cater to the needs of its ppl? we all hate the 'Delhi Karan", but majority Businesses that provide employment to our ppl are directly or indirectly owned by ppl outside TN. what is your suggestion for the ensuing Job loss?? convert them into
Govt employees? may be we can then run up the already spiralling state deficit. Is that your plan? who is going to foot the bill??

With an indepenednt TN, Karnataka or Kerala have NO duress even to respect your request for water.
what do you do? Army action against these two new "countries"? how about all refugees who are going to flee back to TN from the various states having been driven by fanatical crowds talking 'son of soil' concept stripping them of ALL fundamental rights?

Lets look at each of the issue that according to you is the reason justifying a break-away from India.

Srilankan ethnic issue:
Now you can keep repeating the lie which Seeman cleverly uses in his favor. That is, Indians don't support the Eelam cause bcos of Rajiv Gandhi's assassination. Nobody in India is against the cause of Tamil Eelam.!!
But large sections of ppl have moved away from sympathy for LTTE and its mechanics.
Seeman cried hoarse in Rameswaram that Srilankans are killing their own countrymen in a bid to
win the war. But who was conducting a Fatricidal war killing other Tamil leaders in the same cause?

who killed A.Amirthalingam & Yogeswaran of TULF? who killed RR Vasudeva of PLOTE? who killed K Padmanabha and 12 others of EPRLF in Chennai? all of this was carried out by Prabhakaran. How do we support such a Dictator-to-be who systematically quelled every opposition and left war as the ONLY option?? Who forced war on his own people?
Lies can produce sound-bytes NOT secure a future for our ppl. Pls understand this.

Cauvery and Mullai-Periyar:
The only resolution to this is to declare these regions as Union-teritories and agree on a formula for water division among states concerned. This can be easily achieved IF the 40 MPs did want a resolution. But then who in Governement wants a resolution for this. All they want is Unna-viradam and Poraattam to keep ringing their cash registers..!!

Pandiyan...stop your malicious and divisive propaganda and see what can ensure a better future to our people.

Vazga Tamizh! Valarga Tamizhan!!
SPMPIS
தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும்
வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால்
அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமாக
கேட்கும் சீமானிடம் நாமும் ஒரு கேள்வியை முன்வைக்கலாம். தீரன் சின்னமலையை, காமராஜரை
வேலுநாச்சியாரை, மருதுபாண்டியர்களை அவர்களின் சொந்த சாதிய அடையாளத்தின் கீழ்கொண்டு
வந்து அதை வாக்கு வங்கி அரசியலாக்கி பதவி பிடிக்க அலையும் கூட்டம் பேசும் நியாயத்துக்கும் உங்கள்
பேச்சுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று விளக்க முடியுமா உங்களால்?

இப்படிக்கு,
ஸ்ரீரங்கத்து பசும்பொன் முற்போக்கு பின்நவீனத்துவ இம்மானுவேல் சீமான் ரசிகர் மன்றம்
SPMPIS
முத்துராமலிங்க தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா ? மலையாளியா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பும் சீமான் அடுத்து ஏ.ராஜா, இல.கனேசன், இராமகோபாலன் எல்லாம் மலையாளியா? மார்வாடியா? தமிழர்கள்தானே என்று கேள்வி எழுப்புவார் என்றே நம்பலாம். சாதிய அமைப்பை ஒழிக்க போராடிய அம்பேத்கருக்கும், இம்மானுவேல் சேகரனுக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம் முத்துராமலிங்கத்திடம் மட்டும் ஏன் வந்து என்று அருமையாக கேள்வி எழுப்புகிறார் சீமான். சாதி ஒழிப்புக்கு பாடுபட்டவர்களுக்கும் வீரவணக்கம் சாதிய ஒடுக்குமுறைய காப்பாற்ற பாடுபட்ட நபருக்கும் வீரவணக்கம்? என்ன பெருந்ததன்மை என்ன விவேகம் சீமான் உங்களுக்கு? சாதி ஒழிப்பில் காட்டிய வீரத்துக்காக அம்பேத்கருக்கும், ரெட்டமலை
சீனிவாசனுக்கும் இம்மானுவேல் சேகரனுக்கும் வீரவணக்கம். சாதியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் வீரம்??? காட்டிய முத்துராமலிங்கத்துக்கும் வீரவணக்கம்? தயவுசெய்து இனிமேலும் பகுத்தறிவு முத்திரையை மாட்டிகொள்ளாதீர்கள் சீமான். பிரபாகரனோடு குழுக்கிய கைகளை ராஜபட்சேவோடு குழுக்கிய திருமாவளனுக்கு அடுத்த இடத்தில் நீங்களும் இடம்பெறும் நாள் வெகுதொலையில் இல்லை என்றே தோன்றுகிறது.

இப்படிக்கு

ஸ்ரீரங்கத்து பசும்பொன் முற்போக்கு பின்நவீனத்துவ இம்மானுவேல் சீமான் ரசிகர் மன்றம்
திருவாத்தான்
என் பின்னால் வந்த தேவர் தம்பிமார்கள் இம்மானுவேல் சேகரனுக்கும், பள்ளர் சமூக தம்பிமார் முத்துராமலிங்கத்துக்கும் வீரவணக்கம் செலுத்தினார்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லும் சீமான் அவர்களே அந்த தம்பிமார்களைக் கூட்டிபோகும்போதே சாதியை கேட்டுவிட்டுத்தான் கூட்டி சென்றீர்களா? பள்ளர் பறைய சக்கிலியர் நாடார் முதலியார் என்று என் முன்னால் இருப்பவர்களை பார்க்க மாட்டேன் அணைவரையும் தமிழர்களாகத்தான் பார்ப்பேன் என்று விட்டு கூட வருபவர்களின் சாதிகளைக் கேட்டு தெரிந்து கொண்டது எதற்காக? ஓட்டுபொறுக்குவதற்க்காக படம் காட்டுவதற்கா
அல்லது அவர்கள் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிச் சிறுபான்மை சாதிகளை சேர்ந்தவர்களா என்று கண்டுபிடிபதற்க்காகவா? அது சரி சீமான் அவர்களே உங்களுக்கு அதே முக்குலத்தோர் சாதிகளில் இருந்து பெரியாரின் பின்னால் வந்த இளைஞர்கள் இம்மானுவேல் கரனுக்கு மட்டுமே வீரவணக்கம் செலுத்துவது தெரியுமா? ஆதிக்கசாதி பஞ்சாயத்துக்களில் தலித்துகளுக்கு தண்டனையாக ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர்களின் கால்களில் விழவைப்பதற்கும் நீங்கள் முத்துராமலிங்கத்தின் சமாதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வீரவணக்கம் (மன்னியுங்கள் சீமான் **** என்று ஒருவார்த்தை வாயில் இருந்து கிளம்புகிறது) என்ற பெயரில் விழ வைத்ததற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? தயவு செய்து பெரியாரை கைவிட்டதுபோலவே பிரபாகரனையும் விட்டுவிடுங்கள் சீமான்... தங்களின் சுயமரியாதைக்கும் வீரத்துக்கும் சமரசமற்ற போராட்டத்துக்கும் பிரபாகரனிடம் இருந்து தமிழக இளைய சமூகம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.
திருவாத்தான்
உங்களிடம் ஒரு வேண்டுகோளும் வைக்க வேண்டி இருக்கிறது. தயவு செய்து முத்துராமலிங்கம் போன்றவர்களைக் குறிக்க போராளி என்கிற வார்த்தையை பயன்படுத்தி ஈழப்போராளிகளை அவமானப்படுத்தாதீர்கள். முக்குலத்தோருக்கு போடப்பட்ட வாய்ப்பூட்டுச்சட்டத்தை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கம், தனது சாதியை சேர்ந்தவர்களால் வாய்ப்பூட்டு போடப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக என்ன போராட்டங்களை நடத்திக் கிழித்தார்.
ஆதரவாக போராடத்தான் வேண்டாம். வாய்ப்பூட்டையும் அடிமைத்தனத்தையும் எதிர்க்க முனைந்த அந்த மக்களை ஒடுக்க அல்லவா வரிந்துகட்டிக்கொண்டு நின்றார். நீங்கள் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்வது இருக்கட்டும் ஒரு அப்பட்டமான ஒட்டுபொறுக்கி அரசியல்வாதிக்கு தேவையான எல்லா விசயங்களையும் பெற்றுக் கொண்டு வருகிறீர்கள். அது தமிழர் நலனுக்கா சொந்த நலனுக்கா என்பதையும்தான் காலம் உணர்த்தப் போகிறது.
எம் ஜி ஆர் போல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தோ அல்லது, பாராளுமன்றத்துக்கு நாற்பது உறுப்பினர்களை அனுப்பியோ நீங்கள் ஈழம் வாங்கிக் கொடுப்பீர்கள் என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா சீமான்? கனவுகளை விற்கும் உங்கள் சினிமா உலகம் அல்ல இது என்பது உங்கள் பின்னால் இருக்கும் ரசிகர்கள் வேண்டுமானால் உணராமல் இருக்கலாம். பெரும்பாலான இளைஞர்கள் தெளிவாகவே இருக்கின்றனர் எந்த விதத்தில் போராடுவது எப்படிப் போராடுவது தமிழ்ச் சமூக விடுதலைக்கு என்று. அவர்களின் எழுச்சியும் உங்கள் காலத்திலேயே நிச்சயம் நிகழத்தான் போகிறது
திருவாத்தான்
மேலும் சீமானை பற்றி படிக்க
stalinguru.blogspot.com
stalinguru
நான் எனது வலைப்பூவில் பதிந்த பதிவு இங்கே தொடர்பற்ற பெயர்களோடு பகுதி பகுதியாக வந்து கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவும்.இதற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை

ஸ்டாலின் குரு
கதிரவன்
முதலில் தனது இயக்கம் எதை எதிர்த்து அல்லது எதனை நிறைவேற்ற முன் திட்டம் இல்லாத முதன்மை குறையோடு இயங்கும் சீமானிடம் இதனை நாம் எதிர்பார்த்ததுதான். தேவர் சிலைக்கு மாலை போட்டதற்காக அவரை நாம் சாதியமனப்பாண்மையானராக ஒதுக்க முனையலாமா என சிலர் கேட்டதற்கு இப்பேட்டியில் அவர்கள்[நாம்] சந்தேகித்தது சரிதான் என சீமான் நிர்ருபித்திருக்கிறார்.

பெரியாரின் பேரன் என சொல்லிகொண்டு தேவர் சிலைக்கு மாலை போட்டதை கேட்டபோது வெகுண்டு எழுந்து தனது செயலுக்கு நியாயம் காட்ட பெரியாரின் மீது புழுதி வாரியிறைக்கத் தொடங்கிவிட்டார். இதனைத்தானே கருணாநிதி செய்கிறார்.

ஈழபோராட்டத்தில் தனது துரோகத்தை மறைக்க சகோதர யுத்தம் என்றும் பிரபாகரனின் அணுகுமுறை தவறென்றும் சொல்வதும் சீமான் இப்படி பேசுவது ஒரே விதமான அணுகுமுறைத்தானே.

அடுத்து பிரபாகரன் மீது விமர்சனம் இல்லையா என கேட்பவர்மீது நீங்கள் தொடுக்கும் விதம் கேலிகுறியதாகி வருவதை உணருங்கள். ஏனெனில் பெரியார் மீது விமர்சனமில்லாமல் இல்லை என சொல்லி அதனை விளக்க முனையும் நீங்கள் அ.மார்க்ஸ் வகையறாக்கள் புனையும் பிரபாகரன் மீதான விமர்சனங்கள் பற்றி சொல்லவேண்டியிருக்கும் செய்யப்போகிறீர்களா என்ன?

பொதுவாக தமிழ்தேசியத்தினை பேசுவோரிடமிருந்து தலித் மக்கள் சற்று தள்ளியிருக்கும் சூழலில் சீமானின் இந்த வாந்தி பேதியை அதிகப்படுத்தியிருப்பது கேவலமே.

முள்வேலி முகாமில் இன்று துயறுரும் மக்களுக்கான எவ்வித போராட்டத்தையும் முன்னெடுக்காது தமிழகத்தின் பெருநகரங்களுக்கு ஒரு கூட்டமாய் நடத்தி மே 18 ல் கட்சி ஆரம்பிப்போம் என முழங்கி கொண்டிருப்பதில் இருந்தே நன்றாக தெரியவருகிறது சீமானி நோக்கம் கட்சிதானேன்றி ஈழத்தமிழர்களின் இன்றைய சூழலை சரிப்படுத்தவது அல்ல என்று.

திராவிடத்தை விமர்சிக்கும்போது திராவிடம் எனும் வார்த்தையை எதிர்த்தும் சமூகத்தில் ஆதரவளித்தும் என குழப்புகிறார். அதே போல பெரியார் பற்றி இவரின் நிலை பெரியார் பெயரை பயன்படுத்தி அவரின் செய்ல்பாடுகளை கண்டுக்கொள்ளாமலிருப்போம் என சொல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.

தலித் சார்ந்த கேள்விகளுக்கு நேரிடையாக பதிலேதும் சொல்லாமல் தமிழர் என வந்தால் சரியாகிவிடும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. சென்ற சட்ட மன்ற தேர்தலின் போது மதுரையில் [அதிமுக கூட்டணியில் விசி இருந்தது] நடந்த கூட்டத்தில் முதலில் திருமா கலந்துகொள்வதாக இருந்தது ஆனால் அப்படி நடந்தால் தேவர் சாதி ஓட்டுக்கள் தனக்குவிழாது என திருமாவை தவிர்த்தார். அந்தளவு அங்கு இன்னும் முத்துராமலிங்க தேவர் கொளுத்தி[ப்ப்ட்ட தீ எறிந்துக்கொண்டிருக்கையில் இவர் பத்து தாழ்த்தப்பட்ட தம்பிகளை கொண்டுசென்று தேவருக்கு மாலை போட்டுவிட்டு வந்து சாதி ஒழிந்துவிட்டது என சொல்வது சினிமாத்தனமானது.
ஜெயமோகன் போன்ற பார்ப்பனிய சார்பு எழுத்தாளர்களும் தேவர் ஜெயந்திக்க்கு ஆதரவான குரல் கொடுக்கும் வேளையில் சீமான் போன்றோர்களும் அங்கு நின்று போஸ் கொடுப்பதன் பிண்ணனியில் வேறு ஏதோ பெரிய 'வலைப்பின்னல்' நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.

இவ்வளவு பேசுகிறவர்கள் சாதியை ஒழிக்க திட்டம் கொடு என சீமான் கேட்பாரென்றால் அவர் விரும்பும் இரண்டரை மணி நேரத்தில் கிளைமாக்ஸ் வரும் திட்டமெல்லாம் நம்மிடமில்லை. அது ஊர்கூடி இழுக்கவேண்டிய வேலை அதனை நம் தலைமுறையில் கொஞ்சமேனும் நகர்த்தமுயலவேண்டும். அம்பேத்கார் கொண்டு நிறுத்தியதை தேசிய அளவில் இந்த்துத்வா சக்திகள் பின்நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் பெரியார் எனும் விசை அவ்விதம் நிகழ்த்தாமல் குறைந்தபடசம் முன்னகரவில்லை என்றாலும் பரவாயில்லை பின்னகர்த்தாமல் இருக்க உதவிவருகிறார்.

சீமான் நீங்கள் பின் நகர்த்தும் வேலைதிட்டம் உள்ளவர்களின் ஒருவராகவோ அல்லது அவ்விதக்காரர்களின் நேரிடையான அல்லது மறைமுக ஆதரவாளனாகவோ ஆகிவிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் அவ்விதம் ஆகுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கதிரவன்
தலைவர் பிரபாகரனும் அதைத்தான் சொன்னார். ராஜபட்சே அவர் இனத்திற்கு உண்மையாக இருக்கிறார் என்றும், நம் இனத்துத் தலைவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு ராஜபட்சே எவ்வளவோ பரவாயில்லை என்றும்தான் சொன்னார். அதேநேரத்தில் தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பவனையும், தன் இனத்தின் அடிமைத்தனம் நீங்குவதற்காக போராடியவரையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது. குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? ///

அட கர்மத்தை. ராஜ பக்ஷே தன் இனத்திற்குகூட நன்மை ப்யப்பவனாக இல்லை என்பதை கூட புரிந்துக்கொள்ளாமல் என்னவித அரசியல் புரிதலோ..

தன் இனத்த்திற்கு எதிரான இனத்தை அழிப்பதற்கு தன் இனத்தின் பாதுகாப்பான நாட்டையே அடகு வைப்பவன் எப்படி தன் இனத்திற்கான காப்பாளானாக இருப்பான்..

பக்கத்துவீட்டு எதிரியை கொல்ல தன் வீட்டை தன் செல்வத்தை விற்பவன் எப்படி தன் வீட்டு உருப்பினர்களுக்கு உண்மையாக இருப்பவன் என சொல்லமுடியும்.

இந்த அறிவார்த்த பேட்டியை உலகமெல்லாம் வேற படிக்கபோகுது..
Dr. V. Pandian
பிதற்றல் யாருடையது என்பது அகிலனின் மடல்களையும் எனதையும் படிப்பவர்க்கு இயல்பாகவே விளங்கும் தான். அவரது மடல்கள் நாம் கண்டுவரும் வழக்கமான பார்ப்பன சிந்தனை தான். தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாடும் பிரிந்துவிடும் என்று மிரட்டுவார்கள். அப்படி நடப்பற்கு இடமில்லாமல் நமது புதிய அரசமைப்புச் சட்டம், அனைத்து மக்களின் பங்களிப்பு உள்ளவாறு வகுக்கப்படும் வகையில் இயல்பாகவே தீர்க்கப்படும். எனவே இவர்கள் ஏற்படுத்தும் பீதிக்கு அடிப்படையில்லை. இந்தியாவில் எதிர்பாரக்கப்படும் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு, (இன்னும் உண்மையாகச் சொல்லப் போனால், "நாசமாய்ப் போனதற்கு") இந்தப் பார்ப்பனீய அரசமைப்புத் தான் காரணம். அதையே தமிழகத்திலும் ஏற்றிக்கூறிக் கொண்டுள்ளனர். தனித் தமிழ்நாடு உருவாகும் போது அது ஒரு புதிய பலகையில் வண்ணமாய்த் தீட்டப்படும் அழகு ஓவியமாக மிளிரும். அப்படியும் மீறி பகுதிமக்கள் தங்களது தனித்தன்மைகளைக் காக்க வேண்டின், தமிழ்நாடே நான்கு அல்லது ஐந்து சுயாட்சி அதிகாரங்கொண்ட அமைப்புகளாகப் பிரித்து, தமிழகத்தை ஒரு கூட்டாட்சி தேசமாக்கமுடியும். அதில் தவறில்லை!

மற்றபடி இந்தப் பார்ப்பானின் அயோக்கியத்தனமான வாதங்கள் ஏதோ "குழந்தைத் தனமாக" இருக்கிறதே என்று என்னவேண்டாம். அது பார்ப்பான் ஊரை ஏய்க்கச் செய்யும் வழமையான தந்திரம் தான்.

பாகிஸ்தான்-இந்தியா, பிரான்ஸ்-அல்ஜீரியா, தென்கொரியா-வடகொரியா...... போன்ற பிதற்றல்கள் இம்மனிதர்களின், தெரிந்தே குழப்பும் குயுக்திகள் என்பது, உலக வரலாறு சிறிதாவது அறிந்தவர்கள் உணரும் விடயங்கள்.

இவை பற்றி மேலும் பிறகு ஒரு விரிவான கட்டுரையில் எழுதுவோம்.
திருவாத்தான் - stalinguru
நான் எனது வலைப்பூவில் பதிந்த பதிவு இங்கே தொடர்பற்ற பெயர்களோடு பகுதி பகுதியாக வந்து கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவும்.இதற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை

ஸ்டாலின் குரு /////

மாண்புமிகு ஸ்டாலின் குரு ..கவலை வேண்டாம் உங்கள் ஒட்டு மொத்த வலைப்பூ சுட்டி கொடுத்துவிட்டேன்.. இதற்க்காக நீங்கள் ஆர்ப்பாட்டம், மறியல், தீவைப்பு போன்றவைகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்..
tamil
seeman avarkalay.... thevarin idaththilirunthu neengal periyarai parkireerkal..... periyarin idaththilirunthu naangal thevarai parkirom... thayavu seithu unkalin vasippu AMBULI MAMAVAI thandi payanikkattum..........
prasanna
தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

** இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு தேவர் சாதி தம்பிகளையும், முத்துராமலிங்கம் சிலை இருக்கும் இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு போவது இருவருக்கும் இடையேயான இணைக்கத்தை ஏற்படுத்த விரும்பும் செயல் **

அப்படி என்றால் ஒரு தேவர் வீட்டு பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் காதல் திருமணத்தை உங்களால் நடத்தி காட்டமுடியுமா? அவர்கள் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்க முடியுமா? உண்ம்மயிலேயே நீங்கள் இணைக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் இதை வெளிபடையாக அறிவிக்க முடியுமா ? அப்போது நாம் தமிழர்கள் உங்களை நம்புகிறோம்....

உங்களை எதோ நினைத்தோம் ஆனால் நீங்களும் ஒரே குட்டையில் (சாக்கடையில்) ஊறிய மட்டை தான் என விளக்கம் கொடுத்தற்கு நன்றி......

உங்களை பற்றியும் உங்கள் இயக்கத்தை பற்றியும் என் கல்லூரி மற்றும் அலுவலக நபர்களுடன் உரையாடியவை அணைத்தும வீண்....

******************************************************
சில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும்..

மேலும் படிக்க http://www.vinavu.com/2009/11/06/caste-killing/

******************************************************
கோமான்
இவர் ஏன் வாய்கிழிய ஈழ தமிழர்கள் பற்றி பேசுகிறார்? இங்கு உள்ள எல்லா அரசியல் கட்சியிடமும் பணம் நிறைய இருக்கு அவர்களுன் போட்டிபோட்டு ஆட்சியை பிடிக்க பணம் வேண்டும்.... இவர் பேச்சை கேட்டு, புலம்பெயர் தமிழர்கள் பணம் அளிப்பார்கள்.. அப்படி இருக்குமோ இவர் எண்ணம்....
காலக்கொடுமை - tamil
seeman avarkalay.... thevarin idaththilirunthu neengal periyarai parkireerkal..... periyarin idaththilirunthu naangal thevarai parkirom... thayavu seithu unkalin vasippu AMBULI MAMAVAI thandi payanikkattum.......... /////////

ஐயோ என்ன கொடுமை. இதுக்கு சீமானே பரவாயில்லை.. படுத்துட்டு போத்துனாலும் .. போத்திட்டு படுத்தாலும் ரெண்டு ஒண்ணு தான்
ஆக மொத்தம் ரெண்டு பேரும் பெரியாரை பெரியாராக பார்க்கவில்லை... இதை எல்லாம் நல்ல வேலை பெரியார் பாக்கலை
குற்றபரம்பரை
இங்கு பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் செந்தமிழன் சீமான் பனியன் போடுவதை தாங்கிகொள்ள இயலாதவர்கள்.இனி நாங்கள் VIP, ANAND, POOMEX, போன்ற உள் பனியனை கூட போடுவதில்லை என முடிவு செய்துள்ளோம். இப்போ என்ன செய்ய போகிறீர்கள் எதிரிகளே.
பண்பொளி
எனது தந்தை காலம் சென்ற மானமிகு.இறையனார் அவர்கள் தனது நாட்குறிப்பில் சீமானைப் பற்றி இந்த தம்பி நமது இனத்திற்கு நன்கு பயன்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் போகின்ற போகின்ற போக்கைப் பார்த்தால் அவசர கோலத்தில் அள்ளி தெளிப்பதும், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திரிவதும் அவர் நம் இனத்திற்கு அல்ல அவர் குலத்திற்கே பயன்படுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வருத்தங்களுடன்,
பண்பொளி
முகமது பாருக்
தமிழகத்தை பொறுத்தவரை நாக்கை சுழட்டி சுழட்டி பேசும் மனிதர்களுக்கு என்றுமே ஒரு கூட்டம் இருக்கும்.. அவர்களின் கொள்கையை பற்றியோ நடத்தையை பற்றியோ விமர்சிக்க மாட்டோம்..

இன்று நம்மண்ணில் முளைத்துள்ள சீமான் என்ற விசக்காளான் எந்த அரசியல் புரிதலுமின்றி, சமூக அக்கறையின்றி மேடைக்கு மேடை உளறி தள்ளிகொண்டு இருக்கிறார்.. முத்துராமலிங்கம் என்ற சமூகவிரோதியை தூக்கிபிடிக்க தந்தை பெரியாரின் மேல் அவதூறை அள்ளித்தெளிக்கிறார் இந்த உளறல் பாண்டியன்..

முளையிலேயே கிள்ளி எரியவேண்டும் இந்த சீமானை
nirmalcb
சிமான் அவர்களூக்கு
According to you Who are Tamils? Please give a firm and frank answer for this question.
[email protected]
arakkonathaan
பெரியார் ஒரு வேஷிட். வேர பேசுங்க
EBU/PARIS
VELINAADUGALIL IRUKKUM EeLA THMILARGAL MATTIYEEL SEMAANUM ORU KOOLI PADAI KOOTAM THAAN!! EATHAAVATHU ORU PRIYAVALLARASU THUNAI ILLAMAL THANI EeLAM KIDAIKKAATHU. INI VARUM KAALATHIL ENNTHA NAADUM PIRIVINAIYAI AaTHARIKKAATHU. MUKKIYAMAAGA INDIA!!THANNAKKU SONTHAMILLATHA INNORU NAATTAI AaKIRAMITHU IRUPATHAAL NAATAAMAI PANNA EYALAATHU. KAASHMIR PIRACHANAI PATRI ELUTHINAAL "THESSA THUROGI""PATTAM THAAN INDIYAVIL KIDAIKKUM.
Ashwin
முதலில் சீமான் முல்லை பெரியார் விஷயத்தில் தெளிவு பெறட்டும்-"முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே". உயர்த்த கேட்பது நாம் தான். கேரளா அல்ல. இவர் விவிலியத்தின் கைக்கூலியாகத்தான் தென்படுகிறார்.
durai ilamurugu
அட சீமான் செயலலிதாவின் தைரியதை கேள்விகேக்றாரே!1
செயலலிதாவிற்கு தெரியும் உங்களைப்போன்ற்வர்களை எப்படி வாஙக வேண்டும் என்று.
சென்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வோட்டு கேட்டு பட்டு பாடியது மறந்து போச்சா?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.