‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்.

பகலவன் : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா ? படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பகிரவும்.

கொளத்தூர் மணி : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.

 பகலவன் : ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்?

கொளத்தூர் மணி : ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது.

மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் .... தமிழ்ழூ திரமிழ்ழூ திரமிழழூதிரமிடழூதிரவிடழூதிராவிட ... என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர், தங்கள் மொழி தனித்த மொழியல்ல; தங்கள் இனப் பெயர்கூட தமிழிலிருந்து வந்தது என்பதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

ஆனால், அம்மொழி பேசும் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் திராவிடப் பல்கலைக் கழகமும், திராவிட மொழியியல் ஆய்வு மையமும் அங்கே இயங்குகின்றன. மேலும் அடூர் கோபாலகிருஷ்ணன் எனும் மலையாள இலக்கியவாதி, எங்கள் மொழியின் இலக்கிய வரலாறு சிலப்பதி காரத்தில் இருந்து தொடங்குகிறது என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரியார், திராவிடர் என்ற சொல்லை, ஆரியர் அல்லாதார் என்ற பொருள் கொண்ட இடுகுறிப் பெயராகவே கையாண்டார். அதனால்தான் ஜெகஜீவன்ராம்கூட ஒருமுறை தன்னைப் பற்றி

“I am a Dravidian from Bihar” எனக் குறிப்பிட்டார்.

பகலவன் : நீங்கள் ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது?

கொளத்தூர் மணி : பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்ததுகூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல; அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேரவந்தால்கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை? அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா? என்று. கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா? ..... வேதம் உயர்ந்ததா? என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை?”.... இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரை பிற மொழியாளர் என்று கூறி விலக்கிவைக்கிறது; அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரை தமிழ் பேசுகிறார்கள் எனக்கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.

மற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள்மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்துவிடுவார்களோ என்னவோ? சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்' எப்படி ஆதரிக்க முடியும்?

இதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.