தமிழ்நாடு அரசு ஒழுங்கமைத்து நடத்தி வரும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, ‘தமிழிலிருந்து உலகிற்கு - உலகிலிருந்து தமிழிற்கு’ என்ற முழக்கத்தின் கீழ் தமிழ் நூல்களை உலக மொழிகளுக்கும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் கொண்டு செல்வது, உலக மொழிகளில் வந்துள்ள சிறப்பான நூல்களைத் தமிழிற்குக் கொண்டு வருவது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த 2023, 2024, 2025 ஆம் ஆண்டு நிகழ்வில் என்.சி.பி.ஹெச் நிறுவனம் காத்திரமான முறையில் கலந்துகொண்டது. அதுபோல 2026 ஜனவரி 16-18 நாட்களில் நடைபெற்ற சர்வதேசப் புத்தக் கண்காட்சியிலும் என்.சி.பி.ஹெச். கலந்துகொண்டது. நிறுவனத்தின் சார்பாக ப.கு.ராஜன் முழுநேரம் கலந்துகொண்டார். என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் தலைவர் தோழர் த. ஸ்டாலின் குணசேகரன், விழாவின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்டார்.

2023 ஆம் ஆண்டு, என்.சி.பி.ஹெச். சார்பாக ஆறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழக அரசு இரண்டு நூல்களுக்கு மொழிமாற்ற உதவித் தொகை வழங்கியது. அதன்படி, சி.எஸ்.சுப்பிரமணியம், கே.முருகேசன் எழுதிய ‘சிங்காரவேலர் – தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ நூலும், சு.தமிழ்ச்செல்வி எழுதிய ‘அளம்’ எனும் நாவலும் மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தன. எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியின் நாவலான ‘அளம்’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'லவணம்' என்ற பெயரில் வெளிவந்தது. அந்த ஆண்டில் நிதி நல்கை பெற்ற ‘சிங்காரவேலர்’ 2026 ஆம் ஆண்டு பணி நிறைவடைந்து இப்போது, தமிழக அரசிடம் இறுதி ஒப்புதலுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அது வெளிவர இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு நிதி நல்கை பெற்ற திரு.இறையன்பு இ.ஆ.ப. (ஓய்வு) அவர்களின் ‘அவ்வுலகம்’ நாவலும் வெளிவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் முறையான காப்புரிமைக் கையேடு, நூல்கள் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றோடு கலந்துகொண்டோம். பத்து புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாடு அரசின் நிதி நல்கை நான்கு நூல்களுக்குக் கிடைத்தன. ஆனால் ஒரு நூலுக்குத்தான் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஆறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் ஒரு நூலுக்குத்தான் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

2023ஆம் ஆண்டில் 24 நாடுகள் பங்கு பெற்றன. சுமார் 300 புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2024ஆம் ஆண்டு சுமார் 40 நாடுகள் பங்கு பெற்றன; சுமார் 700 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2025ஆம் ஆண்டு 60 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெற்றன. சுமார் 1200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஆண்டு (2026) சுமார் 100 வெளிநாட்டுப் பதிப்பகங்கள் பங்கு பெற்றன. என்.சி.பி.ஹெச். நிறுவனம் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 பதிப்பகங்களுடன் 27 ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. புரிந்துணர் ஒப்பந்தங்கள் எல்லாம் நிதி நல்கையாக மாறிவிடாது; நிதிநல்கை வழங்கப்படுவதாலேயே நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டு விடாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இடைவிடாத பெருமுயற்சியில்தான் சிறிய பயன்களும் கிட்டும் எனத் தெரிகின்றது. அந்தப் புரிதலோடு பணியைத் தொடர வேண்டியுள்ளது.

இத்தோடு இந்த ஆண்டும் முன்பு மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்ட இப்போது முக்கண்ட நாடுகள் (Tricontinental) என அழைக்கப்படும் இலத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அதிகமாகப் பங்குபெற்றது சிறப்பு. இந்த நாடுகளிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து வந்துள்ள பதிப்பகங்கள் இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கருத்துகளைக் கொண்ட நூல்களின் கொண்டு-கொடுத்தலுக்குத் தயாராக இருப்பது நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். பல ஐரோப்பியப் பதிப்பகங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் நாட்டில் ஃபாசிசத்தின் நிழலில் இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டதும், தமிழகத்தின் ஃபாசிச எதிர்ப்பு மனநிலையை விதந்து ஓதியதும் மனதைத் தொட்டது.

இந்த ஆண்டும் நிகழ்வில் பங்கேற்ற ஏனைய மொழிப் பதிப்பகங்களில் பலவும் தங்கள் நூல்களின் தமிழ்ப் பதிப்புரிமையை விற்பனை செய்யவே வந்திருந்தன என்பதாலும், வந்தவர்களில் பெரும்பான்மையினர் புனைவிலக்கியங்களை மட்டும் பதிப்பிப்பவர்கள் என்பதாலும் என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் மரபார்ந்த பலமான அல்புனைவு (Non – Fiction) நூல்களை அதிகம் கொண்டு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் இவை நல்ல தொடக்கம் என்றுதான் கூறவேண்டும்.

அரசு, தமிழகத்தின் அல்லது இந்தியாவின் தொல் வரலாறு, இலக்கிய வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் ஆகியவை குறித்து நூல்கள் வெளியிடும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள், அவை குறித்து ஆய்வு நடத்தும் பல்கலைக் கழகங்கள், அவற்றின் பதிப்பகங்கள் ஆகியவற்றின் பங்கேற்பை அதிகரிக்கச்செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். அமெரிக்காவின் ஹார்வர்டு, ஹூஸ்டன், பெர்க்லி, சிக்காகோ, கொலம்பியா, டெக்ஸாஸ்-ஆஸ்டின், ஜப்பானின் கியொட்டோ, ஜெர்மனியின் ஹைடெல்பர்க், துபிஞ்சென், ஹாம்பர்க், கொட்டின்ஜென், மார்புர்க், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், எடின்பர்க் எஸ்.ஓ.எ.எஸ்., ஆஸ்திரியாவின் வியன்னா, நெதர்லாந்தின் லெய்டன், ஸ்வீடனின் உப்சலா, செக் நாட்டின் சார்லஸ் பல்கலைக்கழகம், கனடாவின் டொரொண்டோ முதலியவையும் அவற்றின் பதிப்பகங்களும் அணுகப்படலாம். அத்தோடு அறிவியல் தொழில்நுட்ப நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உலகிலிருந்து தமிழிற்கு வரவேண்டியதில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பது தமிழ் நவீன மொழியாவதற்கு இன்றியமையாதது என்பதை அதிகம் வலியுறுத்த வேண்டியதில்லை. இந்த நூல்களுக்கான காப்புரிமைத் தொகைகளும் அவற்றின் அச்சு எண்ணிக்கைகளும் அரசின் உதவியின்றிச் செய்வதை மிகக் கடினம் என ஆக்கியுள்ளன. எனவே அரசின் நிதி நல்கையில் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்க வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள். இவை ‘தமிழிலிருந்து உலகிற்கு – உலகிலிருந்து தமிழிற்கு’ எனும் அருமையான நோக்கத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் என நம்புகின்றோம். கடந்த 3 ஆண்டுகளில் ‘உலகிலிருந்து தமிழிற்கு’ எந்த நூலுக்கும் அரசின் நிதி நல்கை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது இதனை நிவர்த்தி செய்யவும், அறிவியல் நூல்களுக்கு இந்த நிகழ்விற்கு வெளியில் இருந்து காப்புரிமை பெற்றாலும் நிதி நல்கை வழங்குவது அறிவியல் தமிழுக்கு ஆற்றும் சேவையாக இருக்கும் என்பது எமது தாழ்மையான கருத்து.

சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் சகல நிகழ்வுகளும் – வளாகத்தில் அரங்கு ஒதுக்குவது போன்றவை அனைத்தும் - ஒற்றைச் சாளர முறையில் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுவது விருப்பமுள்ள அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க சிறப்பாக வழிவகுக்கும். பங்கெடுக்கவிருக்கும் பதிப்பகங்களைப் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே வலைதளத்தின் மூலம் கிடைத்தால், தமிழ்ப் பதிப்பகங்கள் தங்களது ஆய்வுகளை நடத்தி இலக்கான பதிப்பகங்களைத் தெரிவுசெய்துகொள்ள வழிவகுக்கும்; பங்கேற்பின் தரம் உயரும் என்றும் கருதுகிறோம்.

ப.கு.ராஜன், NCBH பதிப்பாசிரியர், எழுத்தாளர், செயல்பாட்டாளர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.