பேராசான்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848இல் வெளியிட்டனர். 178 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த நீண்ட காலப்பரப்பில், வளர்ச்சியடைந்த முதலாளித்துவமும் முதலாளித்துவ ஜனநாயகமும் கொண்ட நாடொன்றில் நடந்த புரட்சி ஜெர்மனியில் 1918-19இல் நடந்ததுதான். 1918இன் ஜெர்மனி இன்றைய ஜெர்மனியல்ல என்றாலும், உலகின் இரண்டாவது பெரும் தொழிலாற்றல். 300 ஆண்டுகால பிரிட்டன் தொழில் வளர்ச்சியை ஜெர்மனி 50 ஆண்டுகளில் பெற்றுவிட்டது. முதலாளித்துவத்திற்குத் தகவமைய பிரிட்டனுக்கு இருந்த நீண்ட காலஅவகாசம் ஜெர்மனிக்கு இல்லை.
இன்றைய முதலாளித்துவ விரைவான மாற்றத்திலுள்ள நாடுகளின் எதிர்காலம் பற்றி பரிசீலிக்க ஜெர்மன் புரட்சியின் பாடங்கள் முக்கியமானவை. ஜெர்மன் புரட்சியின் தோல்வி ஃபாசிஸத்தின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது. வெற்றிகரமான ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய சோவியத் யூனியனின் வரலாற்றுப் பாதை மீது தாக்கம் செலுத்தியது. லெனினே ‘ஜெர்மன் புரட்சி இல்லை எனில் நாம் தொலைந்தோம்’ என்று 1918 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூறியுள்ளார். அத்தகைய ஜெர்மன் புரட்சியைப் பற்றி காத்திரமான நூலேதும் தமிழில் வரவில்லை. பாட்டாளி வர்க்க வரலாற்றில் முக்கியமான அத்தியாயம் வாசிப்பில் இல்லை எனில் நமது உலகப்பார்வை முழுமையாக இருக்காது. இந்தப் போதாமையைப் போக்குவது இந்நூல்.
நூலாசிரியர்
கிரிஸ் ஹார்மன் (1942-2009), பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகியவற்றில் கல்வி கற்றவர். ‘உலக மக்கள் வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். அவர் முன்னுரையில் நான் விருப்பு வெறுப்பற்ற நூலாசிரியரல்லன்; புரட்சி வெற்றி பெறவில்லையே என்ற ஆதங்கமும் நடத்த முயன்றவர்கள் மீது அனுதாபமும் கொண்டவன்தான், என வாக்குமூலம் அளிக்கின்றார். நாம் அதனை மனதில் கொள்ள வேண்டும். அதனை மட்டுமல்ல; அவர், பிரிட்டனின் முன்னணி டிராட்ஸ்கியக் கட்சியான சோசலிஸ தொழிலாளர் கட்சியின் முக்கியமான கோட்பாட்டாளர் என்பதையும்தான். எனவே அவரது கருத்துக்களை ஒரு சிட்டிகை உப்புடன் பரிசீலிப்பது நல்லது. ஆனால் அவரைக் காட்டிலும் நடுநிலைமையாகவும், தெளிவாகவும் ஜெர்மன் புரட்சியைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதியவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
ஜெர்மனி: நாடு, அரசு, ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி
எந்தவொரு நாடுமே வரலாற்றுரீதியாக தனித்துவமான சிறப்புத் தன்மைகளுடன்தான் இருக்கும். நூலின் தொடக்கத்திலேயே ஜெர்மனியின் தனித்துவத்தை கிரிஸ் ஹார்மன் தெளிவாக்குகின்றார். முடியரசு என்றாலும் 1871 முதல் பாராளுமன்றமும் ஏராளமான கட்சிளும் இருந்தன. விதவிதமான வலதுசாரிக் கட்சிகள், தேசிய இனவெறிக் கட்சிகள் இவைதவிர இடதுசாரிக் கட்சிகளும் மார்க்சியம் பேசக்கூடிய கட்சியும் இருந்தன. தேர்தல் முறை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கொண்டது. அதனால் எப்போதும் ஒற்றைக் கட்சியினுடைய ஆட்சி அமைவது கிடையாது.
ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD -எஸ்பிடி) உலகின் பழமையான மார்க்சியக் கட்சிகளில் ஒன்று. இது இரண்டு பாட்டாளி மக்கள் கட்சிகளின் இணைப்பால் உருவானது. 1875ஆம் ஆண்டு ஜெர்மனியின் கோத்தா நகரில் இரண்டு கட்சிகளும் இனணந்தன. ஒன்றுபட்ட கட்சியினுடைய கட்சி திட்டம்தான் ‘கோத்தா வேலைத் திட்டம்’. இது குறித்த மார்க்ஸின் விமர்சனக் குறிப்புகள்தான் ‘கோத்தா வேலைத் திட்டம் குறித்த விமர்சனங்கள்’ என்ற நூல். திட்டம், பல சமரசங்களைச் செய்து இறுதி செய்யப்பட்டதால் மார்க்ஸ் பல பகுதிகளைக் கடுமையாக விமர்சிப்பார். ஆனாலும், ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்தினரின் ஒற்றுமைக்காக விமர்சனங்களோடு திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவிப்பார். மார்க்ஸின் அணுகுமுறையும் விமர்சனங்களும் மனதில் கொள்ள வேண்டியவை.
எஸ்பிடி, நடைமுறையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடக் கூடியதாகவும் பாராளுமன்றத்தில் பாட்டாளிவர்க்க நலனைப் சார்புநிலை கொள்வது செய்வதாகவும் இருந்தது. ‘புரட்சி’ நீண்டகாலக் கனவுதான். புறச்சூழலும் அதற்கேற்ப இருந்ததை ஹார்மன் விளக்குகின்றார். 1860-லிருந்து பெருவளர்ச்சி கண்ட ஜெர்மன் முதலாளித்துவம் தன்நலனுக்காக பாட்டாளி வர்க்கத்தோடு சில சமரசங்களைத் தொடர்ந்து செய்வதாக இருந்தது. ஆட்சியில் பழமைவாதக் கட்சிகள்தான் இருந்தன. எஸ்பிடி கணிசமான வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று செல்வாக்கோடு இருந்தது. ஆனாலும் முதலாளித்துவ, முடியரசு ஆதரவுக் கட்சிகள் எந்தக் கூட்டணி அரசாங்கத்திலும் எஸ்பிடியை அனுமதிக்கவில்லை.
எஸ்பிடி, அரசாங்கத்தைத் தூக்கி எறியும் வல்லமை கொண்டிருக்கவில்லை. ஆனாலும், அரசுக்குள் அரசாக இயங்கி வந்தது. 10 லட்சம் உறுப்பினர்கள், 45 லட்சம் வாக்குகள், தினசரி 90 கட்சி இதழ்கள் என்பதாக இருந்தது. தொழிற்சங்கங்கள், கலை இலக்கியச் சங்கங்கள், வெகுமக்கள் அமைப்புகள் என்று கிளை பரப்பி இலை பரப்பி, மிகுந்த மக்கள் செல்வாக்கோடு இருந்துள்ளது. சில ஆயிரம் முழுநேர ஊழியர்களோடு தேர்தலுக்குத் தேர்தல் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் கூடியதாகவும் இருந்ததையெல்லாம் ஹார்மன் நாம் வியப்பால் வாய் பிளக்கும் அளவிற்கு விவரிக்கின்றார்.
புரட்சிகர இடதுசாரிகள்
முதல் உலகப்போர் இந்த நிலைமைகளை மாற்றியது. 1914 - ஆகஸ்ட்டில் போருக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் எஸ்பிடி கட்சிக்குள்ளும் பிறகு பாராளுமன்றத்திலும் நடந்தது. கட்சியின் 104 பாராளுமன்ற உறுப்பினர்களில் 91 பேர் போருக்கான நிதிஒதுக்கீட்டை ஆதரித்தே வாக்களித்தனர். கட்சியின் பாராளுமன்றத் தலைவரான ஹூகோ ஹாஸே உட்பட 13 பேர்தான் எதிர்த்து வாக்களித்தனர். .ஆனால் இதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொழுது கட்சியின் உறுப்பினர்களில் கார்ல் லீப்நெக்ட் ஒருவர்தான் எதிர்த்து வாக்களித்தார். லெனினாலேயே மிகவும் மதிக்கப்பட்ட கார்ல் காவுட்ஸ்கியே போர் ஆதரவு நிலைபாட்டை எடுத்தார். அதனால்தான் லெனினால் ‘ஓடுகாலி காவுட்ஸ்கி’ என்று அழைக்கப்பட்டு, அந்தத் திருநாமத்தை வாழ்நாளெல்லாம் தூக்கிச் சுமந்து, இன்றைக்கும் பாவம்… அப்படியே அறியப்படுகின்றார்.
கால் லீப்நெக்ட், ரோசா லக்ஸம்பர்க் போன்றோர்கள்தான் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தனர். 1914 டிசம்பரில் கார்ல் லீப்நெக்ட் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்து, பிறகு பொதுவெளியிலும் பிரசாரம் செய்தார். அப்போதுதான் போரெதிர்ப்புப் பேச்சு சமூகத்தில் இடம்பெற்றது. அதுவரை போருக்கான வெறிக்கூச்சல்கள்தான் இருந்தன. ரோசாவும் லீப்நெக்ட்டும் சிறைப்படுத்தப்பட்டார்கள். லீப்நெக்ட் 40 வயதைக் கடந்தவரானாலும் கட்டாய ராணுவசேவைக்காக போர்முனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் கொடுமையான போர் மக்கள் நிலைப்பாட்டை வெகுசீக்கிரத்தில் மாற்றியது. 1915ஆம் ஆண்டில் இருந்தே போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அணிவகுப்புகளும் நடக்கத் தொடங்கிவிட்டன. 1916 ஜனவரியில் கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்ஸம்பர்க், மற்றும் சில இடதுசாரிகளால் ஸ்பார்ட்டகஸ் லீக் தொடங்கப்பட்டது.
ரஷ்யப் புரட்சியின் தாக்கம்
மறுபுறத்தில் 1917ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற முதலாவது ரஷ்யப் புரட்சியில் ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டதும், பின் நவம்பரில் 2ஆவது ரஷ்யப் புரட்சி நடந்து சோவியத் ஆட்சி அமைந்ததும் எல்லா சமன்பாடுகளையும் கலைத்துப் போட்டன. ஜார் மன்னரது காட்டாட்சி அபாயத்திலிருந்து ஜெர்மனி நாட்டை காப்பாற்றுவதற்காகத் தான் யுத்தம் என்ற பிரசாரம் அதற்கான அடிப்படையை இழந்தது. ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து ஜெர்மனியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய கிரிஸ் ஹார்மனின் விவரணை நம்மை மனக்கண்ணால் கால வெளி தாண்டி அங்கு நின்று அனைத்தையும் காணவைக்கின்றது. ஆனால் அதனைச் சுருக்கமாகக் கூறினாலும் ‘ஜெர்மன் புரட்சி சிறப்பிதழ்’ ஆக மாறிவிடும்.
1917 ஆம் ஆண்டில் இருந்து தொழிலாளர்கள் போர்நிறுத்தம் கோரி வேலைநிறுத்தம் செய்வது தொடங்கியது. இராணுவத்தின் பகுதிகளிலும் இது பரவியது. 1917 ஜனவரி 28 முதல் நாளுக்கு நாள் லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பவையாக வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. போராட்டம் காட்டுத்தீயாகப் பெர்லின் நகரைத் தாண்டி நாடு முழுவதும் பரவியது. போராட்டக் களத்திலேயே தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும், சோசலிசக் கட்சிகள் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. இந்தப் புரட்சிகர எழுச்சியை எவ்வாறு ஒருங்கிணைப்பது, எவ்வாறு வழிநடத்துவது, எதனை எதிர்த்து அதனை செலுத்துவது என்று அறியாதவர்களாக எஸ்பிடி கட்சியினுடைய இடதுசாரிகளே இருந்தார்கள்.
இதனால் எஸ்பிடி கட்சியின் வலதுசாரிகள் எழுச்சியை எளிதில் தடுத்து நிறுத்துவதற்கும் திசை மாற்றுவதற்கும் ஏதுவானது. குறிப்பாக, வலதுசாரித் தலைவர்களான ஃபிரெடரிக் எபர்ட், பிலிப் ஷெய்டமேன், குஸ்தவ் நாஸ்க் ஆகியோர் இந்தப் பணியைத் திறம்பட செய்தார்கள். இவர்கள் எல்லாம் பிறப்பாலும் வாழ்க்கையாலும் பாட்டாளி வர்க்கத்தினரே. இவர்கள் புரட்சிக்கும் சோசலிஸத்திற்கும் எதிரான பதாகைகளோடு களத்திற்கு வரவில்லை. தாங்கள்தான் புரட்சிக்கும் சோசலிசத்திற்கும் தலைமை தாங்குகின்றவர்கள் என்ற தோற்றத்தில் தலையிட்டார்கள். எஸ்பிடி கட்சி அணிகளிலும் கட்சிக்கு வெளியிலும் கணிசமான மக்கள் அவர்களை நம்புபவர்களாகத் தான் இருந்தார்கள்.
போரெதிர்ப்புக் காலத்தில் ஜெர்மனியின் இடதுசாரிகள்
போரெதிர்ப்பு சமூகத்தில் மேலும் பரவலாகிய போது எஸ்பிடியின் பெரும் பகுதி போரெதிர்ப்பு நிலைப்பாடுகளோடு தன்னை அடையாளம் கண்டுகொள்வதாக இருந்தது. தலைமையில் இருந்தவர்கள் தங்களது போராதரவுக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள். 1917 ஜனவரி தொடக்கத்தில் ஃபிரட்ரிக் எபர்ட் தலைமை, ஹூகோ ஹாஸே உள்ளிட்ட பலரையும் கட்சியில் இருந்து வெளியேற்றியது.
இந்தக் காரணத்தினால் அவர்கள் 1917 ஏப்ரலில் சுதந்திர சமூக ஜனநாயக கட்சி - யுஎஸ்பி என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தார்கள். போர் எதிர்ப்பைத் தவிர மற்ற கொள்கைகளில் அவர்கள் எஸ்பிடி நிலைப்பாடுகளைத்தான் கொண்டிருந்தார்கள். கார்ல் காவுட்ஸ்கி, எட்வர்ட் பெர்ன்ஸ்டைன் போன்றோர் எல்லாம் யுஎஸ்பி கட்சியில் இணைந்தார்கள். கட்சி, போருக்கெதிரான மக்களது எண்ணப் போக்கை எதிரொலிப்பதாக இருந்ததால், தொடங்கி ஆறு மாதங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகியது; அன்றைக்கு எஸ்பிடி கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையே ஒரு லட்சத்து 50 ஆயிரம் தான்.
உண்மையிலேயே புரட்சிக்கு முயன்ற ஸ்பார்ட்டகஸ் குழுவினர் போன்றோர் மிகச் சிறுபான்மையாக விளிம்புநிலைக் குறுங்குழுக்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கென்று ஒருங்கிணைக்கப்பட்ட, மையப்படுத்தப்பட்ட அமைப்பேதுமில்லை. கார்ல் லீப்னெக்ட் நாடறிந்த தலைவராக இருந்தார். ஆனால் அவர் போர்முனைக்கு அனுப்பப்பட்டு, ரோசா லக்ஸம்பர்க் சிறைப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் அளவுக்குக்கூட நாடு முழுவதும் இடதுசாரிகளை ஒருங்கிணைக்கக் கூடியவர்கள் இல்லாது போனார்கள். மறுபுறத்தில், இடதுசாரிகள் மூன்று வெவ்வேறு குழுக்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவை எதிர்ப்பதை முக்கியமான பணியாகக் கொண்டிருந்தது. 1918 வாக்கில் ஜெர்மனியில் இருந்த இந்த மூன்று அமைப்புகளிலும் சேர்ந்த புரட்சிக்காரர்கள் நான்காயிரம் பேர்தான்.
போரைத் தொடர்வது சாத்தியமில்லை என்பது 1918 ஜூலை, ஆகஸ்டில் இராணுவத் தலைமைக்குத் தெரிந்துவிட்டது. எப்படி இந்த முடிவிற்கு வந்தார்கள் என்பதை ஹார்மன் விரிவாக விளக்குகின்றார். ஜெனரல்கள் ஹிண்டன்பர்க், லுடன்டார்ஃப் ஆகிய இருவரும் இந்த முடிவுக்கு வந்ததில் முக்கியமானவர்கள். அவர்கள் 1918 செப்டம்பர் 29 அன்று சக்கரவர்த்தி 2 ஆம் கெய்ஸர் வில்ஹம் அவர்களைச் சந்தித்து, போரைத் தொடர்வது சாத்தியமில்லை என்று கூறினர். அத்தோடு கீழிருந்து எழும்பும் புரட்சியைத் தடுக்க வேண்டும் என்றால், நாம் மேலிருந்து ஒரு புரட்சியை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் எடுத்துக் கூறினர். இதன் தொடர்ச்சியாக நடந்தவற்றை ஹார்மன் தேதி வாரியாகவும் முக்கிய தினங்களில் மணி வாரியாகவும் விவரிக்கின்றார். நாம் விவரங்களுக்குள் போக இடமில்லை.
ஜெர்மனியின் நவம்பர் புரட்சி
1918 நவம்பர் 5 அன்று பல்லாயிரம் ராணுவ வீரர்களும் மாலுமிகளும் கீல் நகரத்தில் பேரணியாகச் சென்றார்கள். அவர்களோடு துறைமுகத்தின் தொழிலாளர்களும் இணைந்து கொண்டார்கள். அரசாங்கத்திற்கு விசுவாசம் கொண்டவர்களாக இருந்த படைப் பிரிவினர்களோடு மோதினார்கள். துப்பாக்கிச் சண்டை கீல் நகரத்தில் பல இடங்களில் நடந்தது. அந்த வகையில், 1918, நவம்பர் 5 அன்றுதான் ஜெர்மன் புரட்சி தொடங்கியது என்பார் கிரிஸ் ஹார்மன். கீல் நகரில் சுமார் 20 ஆயிரம் கடற்படை வீரர்கள் ஒன்று கூடி படைவீரர்கள் தொழிலாளர் கவுன்சில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதிக்குள் பிரெமன், கொலோன், மியூனிச், ஹானோவர், லீப்சிக், டிரஸ்டன்டார்ஃப், பிராங்க்பர்ட், ஸ்டுட்கார்டு என்று பெருநகரங்களில் எல்லாம் கவுன்சில்கள் அதிகாரத்திற்கு வந்தன. பெர்லின் மட்டுமே ஒரு தனித்தீவாக முடியாட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது.
ஜெர்மனியில் தலைநகரான பெர்லினில் என்று புரட்சியைத் தொடங்குவது என்று பல்வேறு புரட்சிக் குழுக்களும் முடியாத விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. எஸ்பிடி தலைவர்கள் புரட்சியை எப்படியாவது அதன் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள்.
கார்ல் லீப்நெக்ட் போன்றவர்கள், எஸ்பிடி கட்சித் தலைவர்கள் ஆட்சியில் இருந்து கொண்டு புரட்சிப் போராட்டங்களைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்புரட்சி அரசாங்கத்தை நிறுவி விடுவார்கள் என்று அஞ்சினர். இறுதியாக, 1918 நவம்பர் 9 - ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அறைகூவல் விடுக்கப்பட்டு அது எல்லாத் தொழிற்சாலைகளிலும் எதிரொலித்தது. 4 ஆண்டு போரில் கடும் துயரங்களை அனுபவித்த படை வீரர்களும் பஞ்சம் பசியில் அடிபட்ட தொழிலாளர்களும் பெரும் எண்ணிக்கையில் நகர்மையத்திற்கு வந்து கூடினார்கள். அவர்கள் ஆயுதமும் செங்கொடியும் தாங்கிய படை வீரர்களால் வழிநடத்தப்பட்டனர். முதல் நாள் சமூகத்தினுடைய விளிம்புநிலையில் சிறுபான்மையாக இருந்த புரட்சிகரத் தலைவர்கள்தான் எழுச்சிக்கும் பேரணிக்கும் தலைமை தாங்கினர். மக்கள் பேரணியாய் வந்து நகரத்தைத் தங்கள் வசமாக்கிக் கொண்டிருந்த பொழுது, வீறுகொண்டு எழுந்த புரட்சியை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக பிரதமர் இளவரசர் மேக்ஸ் பேடன், கெய்ஸர் வில்ஹம் முடி துறந்ததை அறிவித்தார். அத்தோடு தனது பதவியை எஸ்பிடி கட்சியின் தலைவரான ஃபிரெடரிக் எபர்ட் அவர்களிடம் ஒப்படைத்தார்.
எபர்ட் அவர்களுடைய சகாவான பிலிப் ஷெய்டமேனிடம் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில மணி நேரத்தில் கார்ல் லீப்நெக்ட் அவர்கள் ரஷ்ய போல்ஷ்விக் பாணியிலான சோசலிஸக் குடியரசை அறிவிக்கப் போகின்றார் என்றனர். ஒரு பால்கனிக்கு ஓடிய ஷெய்டமென் அங்கிருந்து கீழே ஆயிரக் கணக்கில் திரண்டு இருந்த தொழிலாளர்கள் படைவீரர்களுடைய பேரணியைப் பார்த்து, ‘ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டு விட்டது; வாழ்க ஜெர்மன் குடியரசு’ என்று அறிவித்தார். அத்தோடு எபர்ட் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதனையும் அறிவித்தார். தொழிலாளர் படை வீரர்களின் ஆரவாரக் கூச்சலில் பாராளுமன்றக் கட்டடம் அதிர்ந்து நின்றது.
எஸ்பிடி கட்சியினுடைய தலைவர்கள் ஷெய்டமெனின் அறிவிப்பை விரும்பவில்லை. அவர்கள் கோபம் கொண்டு அவரோடு வாதிட்டார்கள். இது நடந்து கொண்டிருந்த பொழுதே அங்கிந்து சில நூறு மீட்டர் தொலைவில் கார்ல் லீப்நெக்ட் அவர்கள் கெய்ஸர் வில்ஹம் சாதாரணமாக உரையாற்றும் ஜன்னலில் இருந்து ’விடுதலையின் தினம் வந்துவிட்டது; எல்லா ஜெர்மன் மக்களுக்கும் சோசலிசக் குடியரசு அமைந்ததை நான் பிரகடனம் செய்கின்றேன்’ என்றார். ‘நான் ஜெர்மன் மக்கள் அனைவரையும் உலகப் புரட்சியை நடத்தி முடிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன்; உலகப் புரட்சியை விரும்புபவர்கள் கை தூக்குங்கள்’ என்றார். பல்லாயிரம் கரங்கள் உயர்ந்தன.
இடதுசாரிகளின் ஆட்சி
ஜெர்மன் பேரரசும் முடியாட்சியும் கவிழ்ந்தன. பாராளுமன்றமும் அதிகாரம் செலுத்த எந்தவிதத் தார்மீக உரிமையும் கொண்டதல்ல. உண்மையில் மக்கள் தேந்தெடுத்த அமைப்புகள் என்றால் அவை, தொழிலாளர்கள், படைவீரர்கள் கவுன்ஸில்கள்தாம். அவை நாடு முழுவதும் மையப் படுத்தப்படாதவையாக இருந்தன.
எபர்ட் அரசு தன்னை முழுமையான சோசலிச அரசாங்கமாகக் கூறிக் கொண்டது. ஆனால், ஒவ்வோர் அமைச்சருக்குப் பின்னாலும் பழைய அரசில் இருந்த அதிகார வர்க்க நிர்வாகப் பிரதிநிதிகளைக் கொண்டு அரசு முன்பு போலவே தன்னுடைய இயக்கத்தைத் தொடர வழி வகுக்கப்பட்டது. இத்தகைய ’புரட்சிகர அரசு’ நவம்பர் 10 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவில் கெரன்ஸி அரசாங்கத்தின் பிறப்பிடமான குளிர்கால மாளிகை மீதான போல்ஷ்விக்குகளின் தாக்குதலை நாம் அறிவோம். ஆனால் சோசலிசக் குடியரசு அறிவித்த கார்ல் லீப்நெக்ட் அவர்கள் தலைமையில் ஸ்பார்ட்டகஸ் குழுவினரும், ஏனைய இடதுசாரிகளும் போலி சோசலிஸ்ட்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களுடைய அடுத்த நகர்வைத் தீர்மானிப்பதற்காக ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டினர். அதனை அவர்கள் தொழிலாளர்கள் படை வீரர்கள் பிரதிநிதிகளின் அவை என்று அழைத்தார்கள்.
ஆனால் கூட்டத்தை எபர்ட் குழுவினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். எஸ்பிடி தலைவர்கள் பேசுவதை ஸ்பார்டகஸ் குழுவினரோ மற்றவர்களோ தடுக்க இயலவில்லை. ஃபிரடரிக் எபர்ட் உரையாற்றி புரட்சிகரமான சோசலிச அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், அதில் யுஎஸ்பி தலைவர்களும் இணைந்து இருக்கிறார்கள் என்பதையும் கூறி மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தினார். அவரை அடுத்து யுஎஸ்பி தலைவரான ஹூகோ ஹாஸே அவர்களும் மேடை ஏறி எபர்ட் அவர்களுடைய கருத்தை வழிமொழிந்து பலத்த கைதட்டல்களைப் பெற்றார். ஒற்றுமைக்கு எதிராக அல்லது எஸ்பிடியின் வலதுசாரிப் பிரிவுகளுக்கு எதிராக யாரேனும் பேசினால் அவர்களை “ஒற்றுமையின் எதிரிகள்” என்று கூட்டம் ஆரவாரக் கூச்சலிட்டு மேடையை விட்டு இறக்கியது. கார்ல் லீப்நெக்ட் எதிர்ப்புரட்சி சக்திகள் மாநாட்டைக் கைப்பற்றி விட்டார்கள் என்றெல்லாம் பேசிய பொழுது தொழிலாளர்கள் தங்கள் கூச்சலில் அவர் பேச்சை மூழ்கடித்தனர். சில பகுதிகளிலிருந்து துப்பாக்கிகளைக் காட்டியும் அவர் மிரட்டப்பட்டார். ஆனாலும் அவர் தான் பேச வேண்டியதை உரக்க ஒலித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் புரட்சிகரமாக ஒலித்தது. அது ஜெர்மனி ஒரு சோசலிசக் குடியரசாக ஆகிவிட்டது என்று பிரகடனம் செய்தது. எல்லா அதிகாரமும் தொழிலாளர்கள் படைவீரர்களது கவுன்ஸில்களுக்கு என்று லெனின் கூறிய வார்த்தைகளை எதிரொலித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிகரமான ரஷ்யத் தொழிலாளர்கள் - படை வீரர்கள் அரசுக்கு சகோதர வாழ்த்துகளையும் பலத்த ஆரவாரத்துக்கிடையே பிரகடனம் செய்தது.
பெர்லினில் குடியரசு நிறுவப்பட்ட செய்தி ஜெர்மனி நாடு நகரமெங்கும் பரவியது. நாடெங்கும் ஊர்வலங்கள் பேரணிகள் செங்கொடியோடும் துப்பாக்கிகளோடும் நடந்தன. ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்களும் படைவீரர்களும் தாங்கள் பெர்லினில் பிரகடனம் செய்யப்பட்ட ஜெர்மன் சோசலிசக் குடியரசின் அங்கம் என்பதனை அறிவித்து இந்த அரசாங்கத்தை அங்கீகரித்தனர்.
தொழிலாளர் அதிகாரம் நிலவிய நாட்கள்
புரட்சி நடந்த தினத்திற்கு மறுநாளே நவம்பர் 10 அன்று ஃபிரடரிக் எபர்ட் அவர்களுக்கும், இராணுவத்தினுடைய உச்சபட்ச தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இராணுவத்தின் சார்பில் ஜெனரல் குரோனர், எபர்ட் அவர்களோடு பேசினார். இராணுவம் எபர்ட் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது; அதற்குக் கைமாறாக எபர்ட்டும் அவருடைய அரசாங்கமும் ஜெர்மனியின் போல்ஷ்விக்குகளுக்கு எதிராகப் போராட வேண்டும்; இராணுவமும் அதன் அதிகாரிகளும் முழு பலத்துடன் துணை இருப்பார்கள் என்று ஜெனரல் குரோனர் இராணுவத்தின் உட்ச பட்சத் தலைவர் ஹிண்டன்பர்க் சார்பாக வாக்குறுதி அளித்தார்.
அப்படியும்கூட களத்தில் இருந்த படை வீரர்கள் முழுமையாக இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் குரோனர் அவர்களோ அல்லது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று இருந்த எபர்ட் அவர்களோ விரும்பியவாறு நடக்கவில்லை. பல இடங்களிலும் புரட்சிகரமான படைவீரர்களுக்கும் விசுவாசிகளான படைகளுக்கும் இடையில் சண்டையும் சச்சரவும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன.
இந்தச் சிக்கலை விடுவிப்பதற்காக குஸ்தவ் நாஸ்க் மற்றும் அவரது நண்பர்கள் வேறு ஓர் உபாயத்தைக் கையில் எடுத்தார்கள். போரின் கடைசிக் கட்டத்தில் புயல் படையினர் என்று இராணுவத்தினுடைய உயர் அதிகாரிகளான ஹிண்டன்பர்க், லுடன்டார்ஃப் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இராணுவ வீரர்களைக்கொண்டு உருவான சுதந்திரப் படையினர் - ஃபிரீகாப்ஸ் (Friecorps) எனும் ஆயுதந்தாங்கிய வலதுசாரி வன்முறைக் கும்பலை ஊக்குவித்தனர். நாடு முழுவதிலும் வேலையற்றிருந்த வலதுசாரிப் படைவீரர்களை முடியரசிற்கு ஆதரவாகவும் முதலாளித்துவ ஆதரவாளர்களாகவும் இருந்த அதிகாரிகள் ஒன்று திரட்டி இந்த ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல்களை உருவாக்கினர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, ஆயுதங்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஊதியம் ஆகியவற்றைப் பெருமுதலாளித்துவமும் முடியரசு ஆதரவு நிலஉடைமையாளர்களும் நன்கொடையாக வழங்கினார்கள்.
ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்
நாடு திடமற்ற நிலைமையிலும் புரட்சிக் கொந்தளிப்பிலும் இருந்தாலும் கூட நாடு முழுவதும் புரட்சியை ஒருங்கிணைக்கத் தேவையான மத்தியத்துவம் கொண்ட புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லாதது பலராலும் உணரப்பட்டது. அத்தகையதொரு கட்சியாக யுஎஸ்பியை மாற்ற நடந்த முயற்சிகள் கட்சித் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டன. எனவே அத்தகைய கட்சியை உருவாக்கும் முயற்சியாக 1918 டிசம்பர் 29 அன்று நடந்த மாநாட்டில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி – கேபிடி அமைக்கப்பட்டது. அதாவது, புரட்சி வெடித்து 55 நாட்களுக்குப் பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது!
ரோசா லக்ஸம்பர்க் போன்ற மூத்த தலைவர்களின் கருத்துகளும் மாநாட்டில் பங்கு பெற்ற புதிய தோழர்களின் கருத்துகளும் ஒன்று போல இருக்க வில்லை. ரோசா லக்ஸம்பர்க் கட்சியின் திட்டத்தை அறிமுகம் செய்து பேசியபோதும் புரட்சி அதனுடைய தொடக்கக் கட்டத்தில்தான் இருக்கிறது; உடனடியாக ஆட்சியமைக்க முடியாது என்று வலியுறுத்தினார். அவரது உரை பலத்த கரகோஷத்தோடும் முழக்கங்களோடும் வரவேற்கப்பட்டது. ஆனாலும், அவரது முக்கியமான கருத்துகள் புரிந்து கொள்ளப்படவில்லை.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 19, ஜனவரி 1919 அன்று நடப்பதாக இருந்தது. ரோசா லக்ஸம்பர்க் போன்றோர் தேர்தலில் பங்கேற்று போதுமான எண்ணிக்கையில் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும்; அதன் மூலம் அரசினுடைய உண்மையான முகத்தை அம்பலப் படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தார்கள் ஆனால் கட்சியின் அதிதீவிர இடதுசாரிகள் தேர்தலில் பங்கு பெறுவதை விரும்பவில்லை. அவர்கள் இந்தப் பாராளுமன்றத்தை உடனடியாக அப்புறப்படுத்தி, தொழிலாளர் - படைவீரர்கள் கவுன்சில்களின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். அதற்கெல்லாம் இன்னும் காலம் கனியவில்லை; அதற்கு தேவைப்படும் அளவுக்கு வெகுமக்களுடைய ஆதரவு நம்மிடத்தில் இல்லை என்ற விளக்கங்களை பெரும்பாலான மாநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஸ்பார்ட்டகஸ் தினங்கள்
1919 ஆண்டின் தொடக்க நாட்களில் பெர்லின் நகரத்தில் நிலவிய சூழல் இடதுசாரிப் புரட்சியாளர்களை யாரும் தடுத்து விட முடியாது என்ற தோற்றத்தை அளிப்பதாக இருந்தது.
அரசாங்கம் இடதுசாரிகள் தலைமையில் இருந்த ஊசலாட்டம், ஒற்றுமையின்மை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டது. அவர்கள் பெர்லின் நகருக்கு வெளியே திரட்டி வைத்திருந்த வலதுசாரி சுதந்திரப் போர்வீரர்கள் - ஃபிரி கார்ப்ஸ் என்ற அரை இராணுவக் கட்டமைப்பைப் பயன்படுத்தி பெர்லின் நகரத்தின் தொழிலாளர் தலைவர்களையும் இடதுசாரிப் படை வீரர்களின் தலைவர்களையும் வேட்டையாடத் தொடங்கினர். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்கள் அரசாங்கத்தின் படைகளாலும் ஃபிரி கார்ப்ஸ் என்ற வலதுசாரி ஆயுதந் தாங்கிய குழுக்களாலும் தேடப்பட்டார்கள். லீப்நெக்ட், லக்ஸம்பர்க் போன்ற தலைவர்கள் தலைமறைவானார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படைவீரர்களால் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் எல்லாம் அரசப் படைகளாலும் ஃபிரிகார்ப்ஸ் படைகளாலும் கைப்பற்றப்பட்டு, பல நூறு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் படுகொலை ஆனார்கள்.
ஜனவரி 15ஆம் நாள் ரோஸா, லீப்நெக்ட் இருவரும் அவரவரது பதுங்கு தளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு ஃபிரீ கார்ப்ஸ் கூலிப்படையின் தலைமையகமான ஈடன் ஹோட்டல் கொண்டுவரப்பட்டனர். அங்கு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பிறகு கால் லீப்நெக்ட் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு இழுத்துச் செல்லப்படும் பொழுது பின்னால் இருந்து துப்பாக்கிக் கட்டையால் பின் மண்டையில் அடிக்கப்பட்டு அரை நினைவோடுதான் ஹோட்டலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டார். பின்பு பெர்லின் நகரின் தேர்கார்டன் என்ற பூங்கா பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உயிரற்ற உடலை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ரோசா லக்ஸம்பர்க் துப்பாக்கி கட்டைகளால் அடிக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் கட்டடத்தை விட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்டு அதே தேர்காட்டன் பகுதியில் பலமுறை சுடப்பட்டு அங்கு ஓடிய ஒரு கால்வாய் தண்ணீரில் வீசப்பட்டார். அவரது உயிரற்ற உடல் ஆறுமாதம் கழித்துதான் கிடைத்தது.
ஒரே சமயத்தில் ஜெர்மனி முழுவதும் இந்த புரட்சி நிகழ்ந்து இருந்தால் எபர்ட் அரசு புரட்சியை அடக்கி இருக்க முடியாது. ஒரே சமயத்தில் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் தன்னுடைய கூலிப்படைகளையும் விசுவாசமிக்க இராணுவப் பிரிவுகளையும் வைத்து ஒவ்வொரு பகுதியாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ‘ராஜதந்திரம்-டிப்ளமசி என்பது கல் கிடைக்கும் வரை நாயோடு பேச்சுவார்த்தை நடத்துவது’ என்பார்கள் அல்லவா, அதனை எபர்ட் அரசாங்கம் திறம்பட செய்தது.
1919 ஜனவரி 19 அன்று நடந்த தேர்தலில் எஸ்பிடி கட்சி 38% வாக்குகளையும் 165 இடங்களையும் பெற்றது. பாராளுமன்றத்தின் மொத்த இடங்கள் 423 இல் 212 இடங்கள் பெற்றால்தான் பெரும்பான்மை. கத்தோலிக்கக் கிறிஸ்துவம் பேசும் சிவிபி 91, டிடிபி என்ற தாராளவாத மைய இடதுக் கட்சி 75, டிஎன்விபி என்ற முடியரசு ஆதரவு பழமைவாதக் கட்சி 44, யுஎஸ்பி 22, டிவிபி என்ற தாராளவாதக் கட்சி 19, ஏனைய சிறு கட்சிகள் 9 என இடங்களைப் பெற்று இருந்தன. எஸ்பிடி கட்சி டிடிபி கட்சியோடு இணைந்து கூட்டு மந்திரி சபை அமைத்தது. பெர்லின் நகர் அப்போதும் இடதுசாரிகள் செல்வாக்கில் இருந்ததால் பாராளுமன்றம் வெய்மர் நகரில் ஃபிப்ரவரி 6 ஆம் தேதி கூடியது. ஃபிரெடரிக் எபர்ட் அவர்களைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பிலிப் ஷெய்டமேன் சான்ஸலரானார். பின் வெய்மர் அரசிலமைப்புச் சட்டத்தை ஆகஸ்டு 11இல் ஏற்றது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான தேர்தல் ஜூன் 1920இல் நடந்தது. எஸ்பிடி 193 இடங்களையே பெற்றது. யுஎஸ்பி 83 இடங்களைப் பெற்றது. டிஎன்விபி 71, டிவிபி 65, செண்ட்ரம் 64, டிடிபி39, கேபிடி 4, ஏனைய கட்சிகள் 30 என இடங்களைப் பிடித்தன.எஸ்பிடி கட்சி மந்திரிசபை அமைக்க ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. செண்ட்ரம், டிடிபி, டிவிபி ஆகியவை இணைந்து அமைச்சரவை அமைத்தன. 1923ஆம் ஆண்டு ஹிட்லர் முன்னணிக்கு வரும் வரை நடந்தவை பெரிய கதை. அவை தோல்வியுற்ற புரட்சியின் விளைவுகள் என்றுதான் கூற வேண்டும். கிரிஸ் ஹார்மன் அவற்றை விரிவாக எடுத்துக் கூறுகின்றார்.
தோல்விக்குக் காரணங்கள்
தோல்விக்கான காரணங்கள் இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகின்றன. சில காரணங்கள் வெளிப்படை. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் நடந்த ரஷ்யப் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்திய லெனின் போன்ற ஒரு தலைவர் ஜெர்மனியில் இல்லை. 1903ஆம் ஆண்டு முதல் லெனின் செங்கல் செங்கல்லாய்ப் பார்த்து கட்டிய போல்ஷ்விக் கட்சி போன்ற நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கட்சி ஜெர்மனியில் இல்லை; போல்ஸ்விக் கட்சி, ரஷ்யப் புரட்சிக்கு முன்பு 14 ஆண்டுகள் செயல்பட்ட அனுபவத்தோடு இருந்தது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் உருவாக்கப்பட்டது. ரோசா லக்ஸம்பர்க், லெனினுக்கு ஈடான கோட்பாட்டாளர்தான். ஆனால் ஒரு கட்சியை ஒருங்கிணைப்பது, இராணுவப் படைகளை ஒருங்கிணைப்பது, புரட்சியைத் தலைமை தாங்கி நடத்துவது ஆகியவற்றில் லெனின் அளவுக்கோ அல்லது அன்றைக்கு ரஷ்யாவில் செம்படையை உருவாக்கி உள்நாட்டுப் போரில் புரட்சியைக் காத்து நின்றவரான ட்ராட்ஸ்கியைப் போன்று ஒருங்கிணைப்புத் திறமை கொண்டவராகவோ இல்லை. லீப்நெக்ட் நாடெறிந்த தலைவராக இருந்தாலும் ஒரு திறமை வாய்ந்த பிரசாரகராக அல்லது நாடாளுமன்றப் பேச்சாளராக, பத்திரிகையாளராக இருந்தாரே ஒழிய புரட்சிக்குத் தலைமை தாங்கி புரட்சிகர சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்கான திறமைகளைக் கொண்டவராக இல்லை. இவற்றையெல்லாம் நூலாசிரியரான கிரிஸ் ஹார்மன் பல சான்றுகளின் உதவியோடு விளக்குகின்றார். ஆனாலும் கூட அவருடைய டிராட்ஸ்கியப் பின்னணியின் வறட்டுவாதம் காரணமாக சில விவரங்களைத் தரவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.
மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து போன்ற நாடுகளில் பாராளுமன்றப் பாதையின் மூலமே அமைதியான வழியிலேயே சோசலிசத்திற்கான மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகளைப் புறக்கணித்து விட முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். (எ.கா: அகிலத்தின் 1872ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில் மார்க்ஸின் உரை- மா-எ-தொ.நூ - தொகுதி 23 ப: 254) எங்கல்ஸ் தனது இறுதிக் காலத்தில் ஜெர்மனி நாட்டிலும் அதுபோல பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமே அமைதியான வழியிலேயே சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் சாத்தியப்பாடு இருப்பதைக் கூறி இருக்கின்றார். (மார்க்ஸின் ஃபிரான்ஸில் வர்க்கப் போராட்டம் நூலுக்கான முன்னுரை - மா-எ-தொ.நூ - தொகுதி 27 ப: 217)
பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தன் நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்; எதிரிதான் ஆயுதங்களைத் தீர்மானிக்கின்றான் என்பதனை மனதில் கொண்டு அதற்கு ஏற்பதான் தன்னுடைய செயல்பாட்டு வடிவங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்பதே மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோருக்கும் லெனினுக்கும் இருந்த புரிதலாகும். இது, அன்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது இந்த வரலாற்றை எழுதும் கிரிஸ் ஹார்மன் அவர்களுக்கோ இருந்ததாகத் தெரியவில்லை.
1917ஆம் ஆண்டு ரஷ்யா இருந்த நிலை என்பதும், 1918-19ஆம் ஆண்டில் ஜெர்மனி இருந்த நிலை என்பதும் ஒன்றல்ல என்பதைப் போதுமான அளவுக்கு வேறுபடுத்திக் காட்டவில்லை. எந்தவித ஜனநாயக அரசியல் உரிமையும் இல்லாத ஜார் ரஷ்யாவில் கட்சி செயல்பட்ட விதம் இயல்பாகவே இரகசியக் கட்சியாக, மிகவும் கறாராக ஒருங்கிணைக்கப்பட்ட படிநிலை அமைப்பாக மையப்படுத்தப்பட்ட விதத்தில் இயங்கியது என்பது வரலாறு. ஜெர்மனியில் கட்சி அதுபோல இல்லை; இருக்க முடியாது என்பதை லெனினே விளக்கியுள்ளார். இந்த வேறுபாடு கிரிஸ் ஹார்மனின் விளக்கத்தில் போதுமான அளவிற்கு இடம் பெறவில்லை.
முதலாளித்துவமும் முதலாளித்துவ பாராளுமன்றமும் இயங்கக்கூடிய ஒரு நாட்டில் புரட்சியை எப்படி நடத்துவது என்பதற்கு மார்க்ஸ்-எங்கல்ஸிடமோ லெனினிடமோ முழுமையான விளக்கங்கள் கொண்ட கையேடு ஏதுமில்லை; அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைக்கும் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவமும் முதலாளித்துவ பாராளுமன்றமும் இருக்கக்கூடிய ஒரு சூழலில் புரட்சியை நடத்துவது எப்படி என்பது விவாதத்திற்குரிய ஒன்றுதான். அந்த வகையில் தோல்வியில் முடிந்த ஜெர்மன் புரட்சியிடமிருந்து விலை மதிப்பில்லாத பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு, இடதுசாரிகள் பின்னடைவைச் சந்திக்கும் பொழுது அந்த நாடுகளில் வலதுசாரி அதிதீவிரவாதமும் அதனுடைய தர்க்க ரீதியான நீட்சியாக ஃபாசிஸம் அல்லது நாஜியிசம் ஆகியவை எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் ஜெர்மனியின் தோல்வியுற்ற புரட்சி என்ற இந்த நூல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வெகு விரைவில் கட்டாயமாகத் தமிழில் வரவேண்டிய நூல் என்று சொன்னால் மிகை இல்லை.
(தோல்வியில் முடிந்த ஜெர்மன் புரட்சி 1918-1923: கிரிஸ் ஹார்மன்)
- ப.கு.ராஜன்